தூய ஆவியானவர் பெருவிழா 4 ஜூன் 2017

ஜூன் 02, 2017

தூய ஆவியானவர் பெருவிழா 4 ஜூன் 2017

I. திருத்தூதர் பணிகள் 2:1-11       II. 1 கொரிந்தியர் 12:3-7,12-13      III. யோவான் 20:19-21

'உடல்கள் பல – உயிர் ஒன்றே'

கடந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழா நாள்களில் பள்ளி ஒன்றுக்கு கருத்தமர்வுக்குச் சென்றிருந்தேன். கருத்தமர்வின் ஒரு பகுதியாக பலூன்களைக் கொண்டு விளையாட்டு ஒன்று நடத்தினேன். எல்லாருக்கும் பழக்கமான விளையாட்டுதான் அது. ஒவ்வொருவருக்கும் காற்று நிரப்பப்பட்ட பலூன் ஒன்றைக் கொடுத்து அதை அவர்கள் தங்கள் தலைக்கு மேலே விட்டு, தங்கள் கைகளைப் பயன்படுத்தாமல், தங்கள் வாயினால் ஊதியே பலூன்களை மேலே நிற்க வைக்க வேண்டும். மாணவர்கள் மிக உற்சாகமாக விளையாடினார்கள். சிலர் தங்கள் கைகளை பின்னால் கட்டிக் கொண்டனர். சிலர் தங்கள் கைகளை பாதி உயர்த்திக் கொண்டனர். சிலரின் பார்வை தங்களுக்கு அருகில் இருப்பவர்களின் பலூன்கள் மேல் இருந்தது. விறுவிறுப்பாக விளையாட்டு நடந்து கொண்டிருந்தது. அந்நேரம் ஒரு பலூன் மட்டும் காற்று இறங்கி அப்படியே கீழே விழுந்துவிட்டது. காற்று இறங்கிவிட்ட பலூனை என்னதான் வாயால் ஊதி நிறுத்த முயன்றாலும் அது கீழேதான் விழும். இல்லையா? இதற்கிடையில் ஒரே ஒரு மாணவனின் பலூன் தவிர எல்லா பலூன்களும் தரையில் விழுந்துவிட்டன.

'பலூன் உயரத்தில் நிறுத்தப்படவேண்டுமென்றால் தொடர்ந்து அதன்மேல் ஊதிக்கொண்டே இருக்க வேண்டும். இலக்கை நாம் அடைய வேண்டுமென்றால் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்' என தத்துவம் சொன்னேன். (வாங்குற காசுக்கு இப்படி ஏதாச்சும் சொல்லணும்ல பாஸ்!)

தன் பலூன் காற்றிறங்கி தரையில் விழுந்த மாணவன் கையை உயர்த்தி, 'நான் ஊதத்தானே செய்தேன். ஆனால் என் பலூன் விழுந்துவிட்டதே. அதற்கு என்ன அர்த்தம்?' என்று கேட்டான். 

காற்றில்லாத பலூன் போல நானும் விழுந்தேன்.

நிற்க.

இன்று நாம் தூய ஆவியானவரின் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

ஒரு பலூனுக்கு உள்ளிருந்து அதற்கு உருவம் கொடுப்பதும், அந்த பலூனை அந்தரத்தில் நிற்க வைப்பதும் காற்று. நம்பிக்கை கொண்ட உங்களுக்கும், எனக்கும் உருவம் கொடுப்பதும், உங்களையும், என்னையும் நாம் இருக்கின்ற இடத்தில் நிறுத்தி வைப்பதும், இயக்குவதும் தூய ஆவி. பலூன் உருவகம் ரொம்ப சிம்ப்ளிஸ்டாக இருந்தாலும், தூய ஆவியானவர் பற்றி ஓரளவு புரிந்துகொள்ள இது உதவுகிறது. எப்படி? தொடக்கத்தில் மனிதனைப் படைத்த கடவுள், அவனை களிமண்ணால் செய்து அவனது நாசிகளில் ஊதுகின்றார். மனிதன் உயிர் பெறுகின்றானர். ஆக, மனிதனுக்குள் இருந்து மனிதம் என்ற நிலையை உருவாக்குபவர் அல்லது அந்த நிலைக்கு உருக்கொடுப்பவர் ஆவி. இயேசுவின் இறப்புக்குப் பின் யூதர்களுக்கு அஞ்சி, பூட்டிய கதவுகளுக்குப் பின் இயக்கம் இ;ல்லாமல் தேங்கிக் கிடந்தவர்கள்மேல் ஊதி, 'தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்' என்று அவர்களை இயக்குகின்றார். முதல் படைப்பில் இறைவன் தன் ஆவியினால் மனிதர்களுக்கு உரு கொடுத்தார். இரண்டாம் படைப்பாம் பெந்தகோஸ்தே நாளில் இறைவன் தன் ஆவியால் மனிதர்களுக்கு இயக்கம் கொடுத்தார்.

சொல்லாடல் விளக்கம் 1: 'பெந்தகோஸ்தே'

'பெந்தகோஸ்தே' என்ற சொல்லாடல் 'பென்ட்டா' ('ஐந்து') என்ற கிரேக்க சொல்லிலிருந்து பிறக்கிறது. 'ஐம்பதாம் நாள்.' எதனுடைய ஐம்பதாம் நாள்? யூதர்கள் கொண்டாடும் பாஸ்கா திருவிழாவிலிருந்து ஐம்பதாம் நாள். இந்த நாளில் தான் இஸ்ரயேல் மக்கள் தங்கள் அறுவடையின் முதற்கனிகளை ஆண்டவருக்கு அர்ப்பணம் செய்வார்கள். மேலும், இந்த திருநாளைக் கொண்டாட யூதர்கள் அனைவரும் எருசலேம் நகருக்குச் செல்ல வேண்டும். மேலும் இந்த திருநாள் 'சவுவோத்' ('வாரங்கள்') எனவும் அழைக்கப்பட்டது. அதாவது, ஏழு முறை ஏழு வாரங்கள் (49 நாள்கள்) திருநாள். தொடக்கத்தில் அறுவடைத்திருநாளாக இந்த விழா காலப்போக்கில், 'யாவே இறைவன் நோவா வழியாக அனைத்துலக மக்களுடன் செய்த உடன்படிக்கையின் திருநாளாகவும்,' 'மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுடன் செய்த உடன்படிக்கையின் திருநாளாகவும்' கொண்டாடப்பட்டது. ஆக, இன்றைய நாள் அறுவடையின் நாள், உடன்படிக்கையின் நாள்.

கிறிஸ்தவர்களாகிய நமக்கு இந்த நாள் உயிர்ப்புக்காலத்தின் ஐம்பதாம் நாள். அல்லது பாஸ்கா கொண்டாடி நாம் ஐம்பது நாள்களைக் கடந்திருக்கிறோம். இன்றைய நாளோடு பாஸ்கா அல்லது உயிர்ப்புக்காலம் நிறைவுக்கு வருகின்றது. இந்த நாளில்தான் பேதுருவை தலைவராகக் கொண்ட திருச்சபை பிறந்தது. இன்று பெந்தகோஸ்தே என்ற பெயரில் ஏறக்குறைய 34000 சபைகள் இருப்பதாக ஆய்வு சொல்கிறது. 1517ஆம் ஆண்டு தொடங்கிய சீர்திருத்த சபையிலிருந்து ஆண்டுதோறும், ஏன் நாள்தோறும் புதிய சபைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. ஆக, இன்று எந்த சபையின் பிறந்தநாள் என்றும் நமக்கு குழப்பமாக இருக்கிறது. 

இந்த நாளில்தான் திருத்தூதர்கள்மேலும், அவர்களோடு இறைவேண்டலில் ஒன்றித்திருந்த அன்னை மரியாள் மேலும் தூய ஆவி பொழியப்படுகிறது. திருத்தூதர்கள் கதவுகளைத் திறந்து வெளியே வந்து வாய்திறந்ததும் இந்நாளே. ஆகையால்தான் இந்நாளை நாம் 'தூய ஆவியானவர் பெருவிழா' என்று கொண்டாடுகின்றோம்.

சொல்லாடல் விளக்கம் 2: 'டைப் ஸீன்'

அது என்ன 'டைப் ஸீன்'? 'டைப் ஸீன்' என்பது ஓர் இலக்கியச் சொல்லாடல். அதாவது, ஒரே மாதிரியான வார்த்தை அல்லது வடிவ அமைப்புக்களைக் கொண்டு பல கதையாடல்களை அமைப்பது. உதாரணத்திற்கு, விவிலியத்தில் வரும் பெண் பார்க்கும் படலம். 

பெந்தகோஸ்தே நிகழ்வை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கும் போது நம் கண்முன் இரண்டு டைப்ஸீன்கள் வந்துபோகின்றன: ஒன்று, சீனாய் மலை. சீனாய் மலையில் இறைவனின் பிரசன்னம் இறங்கி வந்தபோது பேரிரைச்சல், இடி, மின்னல், நெருப்பு, காற்று போன்றவை இருந்தன. லூக்கா நற்செய்தியாளர் இந்தக் காட்சியை பின்புலமாக வைத்து 'பெந்தகோஸ்தே' நிகழ்வை எழுதியிருக்கலாம் என்பது முதல் கருத்து.

இரண்டாவதாக, பாபேல் கோபுர நிகழ்வின் (காண். தொநூ 11:1-10) தலைகீழாக்கம்தான் பெந்தகோஸ்தே. அங்கே மொழிகளில் குழப்பம் ஏற்பட்டு மக்கள் சிதறுண்டு போயினர். இங்கே 12 நாட்டவர்கள் ஒரே இடத்தில் கூடியிருந்தாலும் ஒவ்வொருவரும் தத்தம் மொழிகளில் அனைத்தையும் புரிந்துகொண்டனர். 
மூன்றாவதாக, பழைய இஸ்ரயேல் இனம் அன்றைய பெந்தகோஸ்தே நிகழ்வில் உருவானதுபோல இயேசுவை தலைவராகக் கொண்ட புதிய இஸ்ரயேல் இனம் இன்று உருவாகிறது.

சொல்லாடல் விளக்கம் 3: 'தூய ஆவி'

படைப்பின் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் மனிதன் மேல் ஊதிய ஆவியை எபிரேயத்தில் 'ருவா' என பதிவு செய்கிறார் ஆசிரியர். (இயக்கம் தருவது 'ருவா'. இன்று நம்மை இயங்க வைப்பது 'ரூவாய்'. ஏதோ தொடர்பு இருக்கோ?!). இந்த 'ருவா' மனிதனின் தொண்டையில் இருப்பதாக இஸ்ரயேல் மக்கள் நம்பினர். ஆகையால்தான் நாம் இறந்தவுடன் நம் வாய் பிளக்கிறது. நம் தொண்டை வெளியில் தெரிகிறது. இந்த 'ருவா' இல்லை என்றால், 'பஸார்' (உடல்) என்பது வெறும் இறைச்சித்துண்டுதான். இந்த முதல் ஏற்பாட்டு புரிதலில் உடல் பெரிதா அல்லது ஆவி பெரிதா என்ற குழப்பங்கள் இல்லை. 

நாள்கள் கடந்தபோது, தங்களைச் சுற்றியிருந்த மற்ற மக்களின் புரிதல்களால் தாக்கப்படுகின்றனர் இஸ்ரயேலர். அந்த நாள்களில் கிரேக்கர்கள், 'உடல்-ஆவி', 'ஊன்-ஆவி' என இருதுருவ புரிதல்களைக் கொண்டிருந்தனர். ஊன் அழியக்கூடியது. ஆவி அழியாதது. அழியக்கூடியது நிலையற்றது. அழியாதது நிலையானது. இப்படியாக அவர்களின் சிந்தனை ஓட்டம் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும், குறிப்பாக திருத்தூதர் பவுலையும் பாதித்தது. ஆகையால்தான் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில், 'ஊனியல்பு-ஆவிக்குரிய இயல்பு' என இருதுருவ போராட்டத்தைப் பற்றி எழுதுகின்றார் பவுல். இப்போது இறையயில் இன்னும் காம்ப்ளிகேடட் ஆகி, 'உடல்-உயிர்-ஆன்மா' என மூன்றாக உருவெடுத்துள்ளது.

நம் உடலில் தூய ஆவியானவர் இருக்கின்றார் என்றால் அவர் எப்படி இருக்கிறார்? உடலாகவா? உயிராகவா? அல்லது ஆன்மாவாகவா? உயிர் வாழும் அனைவருக்கும், அனைத்திற்கும் உயிர் இருக்கின்றது. அந்த உயிர்தான் தூய ஆவி என்றால் ஏன் எல்லா உயிர்களும் - மனித உயிர்களும் - ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில மனிதர்களில் தூய ஆவி தீய ஆவியாக மாறிவிடுவது ஏன்? அல்லது தூய ஆவி போல தீய ஆவியும் இருக்கின்றதா? 

தூய ஆவியானவர் ஒரே கடவுள், மூன்று ஆள்களில் மூன்றாம் நபர் என்றும், தந்தைக்கும், மகனுக்கும் இடையே இருக்கின்ற உறவின் கனியே தூய ஆவியானவர் என்றும் நம் திருஅவையின் மறைக்கல்வி போதிக்கின்றது. தூய ஆவியானர் நம் திருமுழுக்கின்போது நமக்கு அருளப்படுகிறார் என்பதும், உறுதிப்பூசுதலில் அவரில் நாம் உறுதிப்படுத்தப்படுகிறோம் என்பதும் அதன் போதனையே. குருத்துவ அருள்பொழிவில் அருள்பணியாளர்களையும், ஆயர்களையும் புனிதப்படுத்துவது இந்த ஆவியே. இப்படி இருக்க, 'நீங்கள் ஆவியின் அபிஷேகம் பெற்றுவிட்டீர்களா?' 'நீங்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டீர்களா?' என்னும் மற்றவர்களின் கேள்விகளுக்கு நாம் என்ன விடை அளிப்பது? 'இங்கே கூடியிருக்கும் அனைவர் மேலும் இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் அனைவர்மேலும் உம் ஆவியை நீர் பொழிவீராக!' என்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அழுத்திச் சொல்லும் போதகர்களின் வார்த்தைகளை நாம் எப்படி புரிந்துகொள்வது?

இந்தப் பின்புலத்தோடு இன்றைய நாளின் சிந்தனையைத் தொடங்குவோம்.

இன்றைய முதல் வாசகம் நமக்கு மிகவும் தெரிந்த வாசகம். தூய ஆவியின் வருகையை திருத்தூதர் பணிகள் நூலில் நற்செய்தியாளர் லூக்கா வர்ணனை செய்கின்றார். எருசலேமில் எல்லா மக்களும் கூடியிருக்கும் பெந்தகோஸ்தே நாளில் அந்த நிகழ்வு நிகழ்வதாகவும், எல்லா மக்கள் முன்னிலையிலும் இந்த நிகழ்வு நடந்தேறியது எனவும் பதிவு செய்கின்றார். இந்த வாசகத்தில் இரண்டு விடயங்கள் கவனிக்கத்தக்கவை: ஒன்று, தூய ஆவியானவரின் வருகை நிகழ்வு ஐந்து புலன்களையும் தழுவக்கூடியதாக இருக்கிறது: 'பெருங்காற்று' (தொடுதல்), 'இரைச்சல்' (கேட்டல்), 'நெருப்பு' (நுகர்தல்), 'பிளவுண்ட நாவுகள்' (பார்த்தல்), மற்றும் 'வௌ;வேறு மொழிகளில் பேசினர்' (பேசுதல்). இரண்டு, தூய ஆவியானவரின் வருகை நிகழ்வு சூழ்ந்திருந்தவர்கள் நடுவில் மூன்று வகையான எதிர்வினையை உருவாக்குகிறது: 'குழப்பம்,' 'மலைப்பு,' மற்றும் 'ஏளனம்.' எல்லாரும் குழப்பம் அடைகின்றனர். கொஞ்சப் பேர் மலைப்புக்குள்ளாகின்றனர். கொஞ்சப்பேர் ஏளனம் செய்கின்றனர். ஆவியின் வருகையும் அவருடைய செயல்களும் இன்றும் இந்த மூன்று எதிர்வினைகளையே உருவாக்குகின்றன.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுலடியார் ஆவியானவரின் வழங்கும் பல்வேறு கொடைகளைப் பட்டியலிட்டு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கொடையைப் பெற்றுள்ளார் எனவும், அனைத்துக் கொடைகளும் ஒருங்கே அமையப்பெறும்போது திருச்சபை வளர்கிறது எனவும், ஒவ்வொருவரும் தான் பெற்ற கொடையை ஒட்டுமொத்த திருஅவையின் வளர்ச்சிக்கும், நன்மைக்கும் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்துகின்றார் பவுல். ஆக, கொடைகளின் இருப்பு பகிரப்படுவதற்கே. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில், உயிர்ப்புக்குப் பின் தன் சீடர்களுக்குத் தோன்றும் இயேசு அவர்கள்மேல் தன் ஆவியை ஊதுகின்றார். இவ்வாறு தன் ஆவியை அவர்கள்மேல் ஊதுமுன் தன் கொடையாக 'அமைதியையும்,' தன் கட்டளையாக 'மன்னிப்பையும்' தருகின்றார்.

இந்த மூன்று வாசகங்களும் சொல்வது என்ன?

'உடல்கள் பல. ஆனால் உயிர் ஒன்று!' – திருத்தூதர்களின் உடல்கள், ஆளுமைகள், மற்றும் பின்புலங்கள் வௌ;வேறாக இருந்தாலும் அவர்கள் மேல் இறங்கியிருக்கின்ற ஆவி ஒன்றே. இவர்கள் பேசுகின்ற மொழிகள் வேறு வேறு என்றாலும், இவர்களைச் சூழ்ந்திருக்கும் மக்கள் இவர்களைப் புரிந்துகொள்கின்றனர் என்றால், இவர்களையும், அவர்களையும் இணைக்கின்ற ஆவி ஒருவரே. இரண்டாவதாக, கொரிந்து நகர திருச்சபையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொடையைப் பெற்றிருந்தாலும், அனைத்துக் கொடைகளின் ஊற்றாக இருப்பவர் ஆவியானவர். ஆக, ஆறுகள் வௌ;வேறு என்றாலும் ஊற்று ஒன்றுதான். மூன்றாவதாக, இயேசுவில் இருந்த ஆவி சீடர்கள்மேல் ஊதப்படுவதால் அவர்களும் இயேசுவின் உயிரைப் பெற்றுக்கொள்கின்றனர். இவ்வாறாக, உடல்கள் பல என்றாலும், உயிர் ஒன்றுதான். 

இன்றைய நாள் நமக்கு வைக்கும் வாழ்வியல் பாடங்கள் எவை?

1. ஆவியின் செயல்பாடு
நாம் ஒவ்வொரு முறையும் தூய ஆவியால் இயக்கப்படுகிறோம் என்பதே நான் கொண்டிருக்கின்ற அசையாத நம்பிக்கை. நான் செய்யும் நல்லதோ, கெட்டதோ அனைத்தையும் இயக்குபவர் அவரே. அதெப்படி கெட்டதை இயக்குவார் என நீங்கள் கேட்கலாம்? 'நெருப்பில் கை வைக்காதே' என்று குழந்தைக்குச் சொன்னால் அது கேட்காது. அதே குழந்தையை ஒரே ஒரு முறை நெருப்பில் கை வைக்க அனுமதித்துவிட்டால், அது அதற்குப் பின் நெருப்பைத் தொடவே தொடாது. குழந்தை நெருப்பை தொடுவது கெட்டதுதான். ஆனால், அந்தக் கெட்டதன் வழியாக குழந்தை அதிலிருந்து விலகிக்கொள்ளும் அனுபவம் பெறுவதால் அந்தக் கெட்டதும் நல்லதே. ஒவ்வொரு கட்டத்திலும் என் ஆன்மா அல்லது என் சிந்தனையும், என்னுள் குடிகொண்டிருக்கும் ஆவியின் சிந்தனையும் 'சின்க்ரொனைஸ்' ஆகி இருக்கவேண்டும். அதாவது, இரண்டும் ஒன்றிற்கொன்று முரண்படுதல் கூடாது. இந்த எண்ணம் இன்னும் கொஞ்சம் நீட்டிச் செல்ல வேண்டும். அதாவது, ஆவியானவர் எல்லார் உள்ளும் பிரசன்னமாகி இருக்கின்றார். ஆக, நான் ஒருவர் மற்றவரோடு அவர் வழியாக இணைந்திருக்கிறேன் என்ற எண்ணமும் உருவாக வேண்டும்.

2. அமைதியும், மன்னிப்பும்
இயேசு தன் ஆவியை தன் சீடர்கள்மேல் ஊதும்போது முன்வைக்கப்படும்போது அவர் மொழிகின்ற கொடைகள் இவை இரண்டே – அமைதி, மன்னிப்பும். அமைதி மற்றும் மன்னிப்பு கொண்டிருக்கின்ற உள்ளங்கள்தாம் தூய ஆவியின் இருப்பையும், இயக்கத்தையும் அனுபவிக்க முடியும். 'அமைதியற்ற எங்கள் உள்ளங்கள் உம்மை அடையும் வரை அமைதி கொள்வதில்லை' என்கிறார் புனித அகுஸ்தினார். எனக்கு அமைதி தருவது எது? என நாம் ஒவ்வொன்றாகக் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தால், படைப்புப் பொருள்கள் எவையும் தருவதில்லை. ஏனெனில் தன்னிலே குறையுள்ள பொருள் எப்படி அமைதி தர முடியும்? தன்னிலே குறைவாக உள்ள பாத்திரம் அடுத்த பாத்திரத்தை எப்படி முழுமையாக நிரப்ப முடியும்? மேலும், மன்னிப்பு என்பது ஒருவர் மற்றவரின் தவறுகளை மன்னிப்பது அல்ல. மன்னிப்பிற்கு முதல் படி ஏற்றுக்கொள்ளுதல். அதாவது, என்னை நான் இருப்பதுபோல ஏற்றுக்கொண்டால் மட்டுமே என்னை நான் மன்னிக்க முடியும். அடுத்தவரை மன்னிப்பதிலும் அதே நிலைதான். ஆக, என்னை ஏற்றுக்கொள்ளும்போது நான் என்னிலேயே, எனக்குள்ளேயே சண்டை இட்டுக்கொள்வதை நிறுத்தி என் மனம் சமநிலை பெறுகிறது. இயல்பாக அமைதி உருவாகிறது. அந்த அமைதி என்னும் சலனமற்ற நிலையில் தூய ஆவி அசைந்தாடுவதை என்னால் உணர முடியும்.

3. உடல் பல – உயிர் ஒன்று
நமது குடும்ப வாழ்விற்கும், திருஅவை மற்றும் சமூக உறவு வாழ்வுக்கும் இந்த நிலை மிக முக்கியமானது. நாம் பேசுகின்ற மொழி, செய்கின்ற வேலை, வந்திருக்கின்ற பின்புலம் ஒன்றொக்கொன்று மாறுபட்டதாக இருந்தாலும், நம் அனைத்து உடல்களையும் இணைக்கின்ற ஆவியானவர் ஒருவரே என்று நான் உணரும்போது, என்னை அறியாமலேயே ஒருவர் மற்றவரோடு என்னையே இணைத்துக்கொள்கிறேன். எனக்கு அடுத்திருப்பவரை எனது நீட்சியாக நான் பார்க்கத் தொடங்கினால், நான் அடுத்தவரை எனது போட்டியாளராக அல்ல. மாறாக, எனது அடுத்த பாகமாக எடுத்துக்கொள்ள முடியும். பெந்தகோஸ்தே அனுபவம் சீடர்களுக்குத் தந்த மிகப்பெரிய படிப்பினை இதுதான். ஆகையால்தான் தூய ஆவியைப் பெற்றுக்கொண்ட திருத்தூதர்கள் எல்லா மக்களையும் நோக்கி பயணம் செய்ய முடிந்தது.

'தூய ஆவி என்ற ஒன்று இருப்பதாகக்கூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே!' (காண். திப 19:2) என்று வியந்த எபேசு நகர மக்களைப் போல இல்லாமல், நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் நமக்கு இருப்பை, இயக்கத்தைக் கொடுக்கும் தூய ஆவியின் துணைகொண்டு நகர்வோம்!

Fr. Yesu Karunanidhi

உங்கள் கருத்துகள் எழுத

அனைத்து கருத்துகள்

!No Comments
சமீபத்திய கட்டுரை
பொதுக்காலம் 23ஆம் வாரம் (10.09.2017)
பெருமழையால் பாதிக்கப்பட்டோரின் அருகாமையில் திருத்தந்தை
பொதுக்காலம் 21ஆம் வாரம்  (27.08.2017)  ஆண்டு - A
திருவழிபாடு - பொதுக்காலம் 19ஆம் வாரம் (13.08.2017)
திருத்தந்தை பிரான்சிஸ் பொதுமக்களை சந்திக்கும் காணொளி - 2017.08.02
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter