உறவுகள் மேம்பட பகுதி - 6 (தன்னைக் ஏற்றுக்கொள்ளுதல் பகுதி - 3)

நவம்பர் 22, 2016

தாழ்வு மனம் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டிருப்போரை எப்படி அடையாளம் காண்பது? அவர்களிடம் காணப்படும் அடையாளங்கள் தான் என்ன?

 

1. இவர்கள் அளவுக்கு மீறி வெட்கப்படுபவர்களாக, கூச்சப்படுபவர்களாக இருப்பார்கள் (shyness). கூட்டத்தில் வாயைத் திறக்கவே அஞ்சுவார்கள். பெரிய அதிகாரிகளிடமோ அல்லது சக ஊழியர்களிடமோ அல்லது தனக்குக் கீழ் பணிபுரிந்து வருபவர்களிடமோ கூட இவர்களால் தைரியமாகவும் அழுத்தமாகவும் பேசமுடியாது. தான் சந்திக்கும் அனைவரும் தங்களைவிட திறமைசாலிகளாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பதாக இவர்களுக்குப்படும்.

 

தங்களிடம் நல்ல யோசனைகள் இருந்தாலும், தங்களுடைய யோசனைகள் ஒருவேளை மடத்தனமாகவோ அல்லது மற்றவர்களால் ஏற்கத் தகாததாகவோ அல்லது மற்றவர்களின் நகைப்புக்கு உரியதாகவோ இருந்துவிடுமோ என்று பயந்துக்கொண்டு தானாக முன்வந்து வாய்திறந்து தங்களுடைய யோசனைகளைக் கூற மாட்டார்கள். இவர்களிடம் அவை அச்சம் (stage fear) அதிகமாக இருக்கும், மேடைக்கு ஏறி மைக்கைப் பிடித்தாலே கைகால் உதற ஆரம்பித்துவிடும். வேர்த்து விறுவிறுத்துப் போய்விடும். நன்கு தயாரித்திருந்தாலும், நல்ல ஆழமான கருத்துக்கள் இருந்தாலும் பயத்தின் காரணமாக மறந்து விடுவார்கள். பாதியிலேயே பேச்சை முடித்துக்கொள்வார்கள்.

 

2. எளிதாக எல்லோரிடமும் பழகமாட்டார்கள். எப்போதும் தனித்திருக்க, ஒதுங்கியிருக்க விரும்புவார்கள். இவர்களுக்கு நண்பர்கள் அதிகம் இருக்கமாட்டார்கள். கூட்டம் நிறைந்த இடங்களை இவர்கள் வெறுப்பார்கள். மற்றவர்களுடன் சேர்ந்து, சிரித்து, மகிழ்ச்சியுடன் வாழ இவர்களுக்குத் தெரியாது. இனிய நிகழ்ச்சிகளை, சிரிப்பைத் தரும் (சினிமா) திரைப்படம், நாடகம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளை ரசிக்கும் மனநிலை இவர்களிடம் இருக்காது. இவர்கள் பெரும்பாலும் புத்தகப்புழுக்களாக (Book Worms) மாறிவிடுவார்கள்.

 

3. இவர்களிடம் தோல்வி மனப்பான்மை அதிகமாக தலைநிமிர்ந்து நிற்கும். ஆனால் வெற்றி மனப்பான்மை சிறிதளவும் இருக்காது. இவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பே தோற்றுவிடுவோமோ என்று பயப்படுவார்கள். சொல்லப்போனால், ஒருவிதத்தில் தேர்வுக்கு முன்பே தோற்றுப் போய்விடுவார்கள்.

 

4. இவர்களுக்கு தற்கொலை எண்ணம் அடிக்கடி வரும். வாழ்க்கை இவர்களுக்கு நரகமாக காட்சியளிப்பதால், இவர்கள் தனிமையில் இருக்கும்போது அடிக்கடி தற்கொலையைப் பற்றி நினைத்துக்கொண்டிருப்பார்கள். தன்னம்பிக்கைக் குறைவாக இருப்பதால் முயற்சிகள் அதிகம் எடுக்கமாட்டார்கள். ஒரு தடவை தோல்வியைச் சந்தித்தால் வாழ்வே தோல்வி என நினைப்பார்கள். சீக்கிரத்தில் விரக்தியடைவார்கள்.  

 

5. எதிலும் முன்னுக்கு வரமாட்டார்கள் மாறாக, பின்னுக்கு இருப்பார்கள். ஏதாவது ஒரு பொறுப்பைக் கொடுத்தால் அதனை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுப்பார்கள். இதற்குக் காரணம் இவர்களது தாராள மனம் அல்ல மாறக இவர்களிடம் இருக்கும் தாழ்வு மனம். இவர்களிடம் போட்டி போடும் மனப்பான்மை பெரும்பாலும் இருக்காது.

 

6. இவர்களிடம் எல்லாவற்றிலுமே ஒரு தயக்கம் இருக்கும். இவர்களால் சீக்கிரம் முடிவு எடுக்க இயலாது. ஒரு சிறியக் காரியத்தைக் குறித்து முடிவு எடுப்பதற்கும் மிகவும் யோசிப்பார்கள், அளவுக்கு அதிகமாக தயங்குவார்கள்.

 

7. எதற்கெடுத்தாலும்  அறிவார்ந்த விளக்கம் தர முயற்சி செய்வார்கள்  (Rationalization). நீ ஏன் கணிதப் பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாய் என்று  கேட்டால், ஆசிரியர் சரிவர சொல்லித்தரவில்லை. தேர்வு எழுதுவதற்க்கான பென்ஞ் சரியாக அமையவில்லை என்று, ஏதாவது சப்பைக்கட்டு கட்ட முயலுவர். தங்களது தவற்றை ஒப்புக்கொள்ள மறுப்பர்.

 

8.  இவர்கள் தங்களை பிறரோடு ஓப்பிடவோ, திறனாய்வு செய்யவோ அனுமதிக்கமாட்டார்கள். அப்படியே திறனாய்வு செய்து அவர்களது குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

 

9.  இவர்கள் பிறருடைய குற்றங்களையும், குறைகளையும் கண்டுபிடிப்பதிலேயே காலத்தைக் கழிப்பர் (self projection), தங்களதுக் குற்றங்களை மற்றவர்கள்மேல் சுமத்திப் பார்க்கும் மனப்பான்மையுடையவர்கள். இதனால், எல்லாவற்றிலும், எல்லாரிலும் இருக்கும் குறைகளையேச் சுட்டிக்காட்டுவர்,ஆனால் நிறைகள் அவர்களது கண்களுக்குத் தெரியாது.

 

10. இவர்கள் எல்லாவற்றிலும் "ஆமா சாமி" போடுபவர்களாக இருப்பார்கள். பெரியவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள், எதைச் சொன்னாலும் அது தங்களுக்குப் பிடிக்காத, ஏற்றுக்கொள்ளவியலாதக் கருத்தாக இருந்தாலும், பெரியவர்களை திருப்திப்படுத்துவதற்காக சரி, ஆமாம், நன்றி என்று தலையாட்டுவார்கள். தங்களதுக் கருத்தை துணிந்து, வெளிப்படையாக பெரியவர்களிடமோ, அதிகாரிகளிடமோ சொல்ல முன்வரமாட்டார்கள். நமக்கு ஏன் வம்பு என்று இருந்து விடுவார்கள் அல்லது பெரியவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக அவர்கள் அப்படி நடந்துக்கொள்ளுவார்கள்.

 

11. இவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரிந்ததாகக் காட்டிக்கொள்வதோடு, தங்களைப்பற்றி மிகைப்படுத்தியும் காட்டிக்கொள்வார்கள். தங்களுக்கு தெரியவில்லையென்றால் தெரியவில்லை என்று சொல்லமாட்டார்கள். தாங்கள் படித்தது வெறும் BA-வாக இருக்கும் ஆனால் MA படித்ததாகப் பெருமையடித்துக் கொள்வர். கடன் வாங்கியாவது கல்யாணத்தை மிகப்பெரிய டாம்பீகமாக நடத்தி, தாங்கள் பெரியவர்கள் என்றுக் காட்டிக் கொள்வர்.

 

12. பிறருடைய கவனத்தை ஈர்ப்பதற்காக, இவர்கள் பல உளவியல் விளையாட்டுகளை விளையாடுவார்கள். அடிக்கடி உடல்நிலை சரியில்லை என்று படுத்துக்கொள்வார்கள். சில சமயங்களில் உண்மையிலேயே நோய்வாய்பட்டிருப்பார்கள். ஆனால் அநேக சமயங்களில் தனது பெற்றோர்களின் கவனத்தை தம் பக்கம் ஈர்க்கவோ, தமது மனைவியின் கவனத்தை தம்பக்கம் ஈர்க்கவோ, தமது சக ஊழியர்களின் கவனத்தை தம் பக்கம் ஈர்க்கவோ இவ்வாறு செய்வார்கள். சில சமயங்களில் பல முகமூடிகளை அணிந்துக் கொள்வார்கள். மிக நல்லவர்களாக, நேர்மையானவர்களாக, பொதுத்தொண்டர்களாக, தியாகிகளாக நடிப்பார்கள். இவர்களிடம் போலித்தன்மை அதிகம் தலைத்தூக்கும்.

 

13. இவர்கள் பகல் கனவு காண்பவர்களாக இருப்பார்கள். எனக்கு ஒரு கோடி ரூபாய் லாட்டரி சீட்டிலே விழுந்தால், எனது வாழ்க்கை எப்படி இருக்கும். எனக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைத்தால் எப்படி இருக்கும். சினிமாவிலே நடிக்க வாய்ப்புக்கு கிடைச்சா எப்படி இருக்கும். இவ்வாறாக தங்களது நிஜ வாழ்க்கைக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத கனவுகளைக் கண்டுகொண்டு காலத்தை வீணடிப்பர்.

 

14. இவர்களிடம் அதிகமாக தலைமை வழிபாடு இருக்கும். இவர்கள் யாரவது ஒரு தலைவரையோ, நடிகரையோ, விளையாட்டு வீரனையோ தங்களை அறியாமலேயே பின்பற்றுவர். இவர்கள் எப்போதுமே யாரையாவது சார்ந்த்திருப்பர். சுயமாகச் சிந்திக்கத் தெரியாது, திட்டமிட தெரியாது, முடிவு எடுக்கத் தெரியாது.

 

தாழ்வு மனப்பான்மை தேவையற்றது. அது அருவருக்கத்தக்கது. இந்த நோயை ஒருவன் தன் அறியாமையின் காரணமாக வரவழைத்துக்கொண்டு வருகிறான். ஒருவன் சாதனைகளைப் படைக்க வேண்டுமென்றால், அவன் இந்த நோயைக் கட்டாயம் தம்மிடமிருந்து விரட்டியடிக்க வேண்டும். இந்த நோய் ஒருவனை தொற்றிக்கொண்டுவிட்டாலும், முயற்சி செய்தால் கட்டாயம் இதிலிருந்து விடுதலைப் பெற்று, வாழ்க்கையை வெற்றியோடு, மகிழ்ச்சியோடு அனுபவித்து வாழ முடியும். 

 

-அருட்பணி. அ.சிங்கராயன்

 

உறவுகள் மேம்பட பகுதி - 5 (தன்னைக் ஏற்றுக்கொள்ளுதல் பகுதி - 2)

செப்டம்பர் 29, 2016

தாழ்வு மனம் எப்படி உண்டாகிறது

 

ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ( Recognition ) தேடுகிறான். இந்த ஏக்கம் எல்லா மனிதர்களிடமும் இருக்கும். இதனை குழந்தைப் பருவத்தில் நமது பெற்றோரிடத்தில் தேடுவோம். பெற்றோரிடமிருந்து இந்த அங்கீகாரம், மதிப்பு, ஏற்பு, அன்பு போன்றவை கிடைக்காவிட்டால் இதனை வேறு இடத்தில் தேடுவோம். அதற்காக மிகவும் கடினப்பட்டு முயற்சிகள் பலவும் மேற்கொள்ளுவோம். எப்படியாவது அங்கீகாரம் கிடைக்காதா என்று ஏங்கி சில உபாயங்களை செய்வோம் அல்லது சில உளவியல் விளையாட்டுகளிலே ஈடுபடுவோம். இது எதற்காகவென்றால் மற்றவர்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக உதாரணமாக, இதுவரை தான் மட்டுமே செல்லப்பிள்ளையாக இருந்த குடும்பத்தில், புதிதாக ஒரு குழந்தைப் பிறந்து, பெற்றோர்களின் அன்பும் கவனமும் புதியதாகப் பிறந்துள்ள குழந்தையின் பக்கம் திரும்புவதைக் கண்ணுறும் மூத்தக் குழந்தை தன் மீது பெற்றோர்களின் அக்கறை குறைந்துவிட்டதை அறிந்து வருத்தப்படும். தனது அன்பை பங்குப்போட வந்த பிஞ்சுக்குழந்தையை யாருக்கும் தெரியாமல் கிள்ளிவிடவும் செய்யும்.

 

மொத்தத்தில் தாழ்வு மனம் அநேகமாக குழந்தைப் பருவத்திலிருந்து உருவாகிறது. குழந்தைகளின் பிறப்பு, வளர்ப்பு, சூழ்நிலை இதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உடல், உருவம், நிறம் ஆகியவற்றிலுள்ள குறைகளும், மேலும் ஆண் பெண் என்று வேறுபாடுகளும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

 

உதாரணமாக, பெற்றோர்கள் ஆண் குழந்தையை எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால் பெண் குழந்தைப் பிறந்திருக்கும். ஏற்கெனவே முன்று பொண்ணு, இன்னும் ஒரு பொண்ணா என்று பெற்றோர்கள், குழந்தைப் பிறந்த உடனேயே முகத்தைச் சுழித்திருப்பார்கள். இது குழந்தையின் உள்ளத்திலே, தான் தேவையற்றவள், மதிப்புக்குரியவள் அல்ல என்ற தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும்.

 

சில குழந்தைகள் பிறக்கும்போதே அங்க பலவீனத்தோடு பிறந்திருந்தால் அல்லது நல்ல நிறமற்று கருப்பாகப் பிறந்திருந்தால், குறிப்பாக பெண்களை இது பெரிதும் பாதிக்கும்.

 

குழந்தை சிறுவயதில் தமது விரலை சூப்பியதற்காக, படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக, ஒரு சிறுபொருளைத் திருடியதற்காக கடுமையாகத் தண்டிக்கப்பட்டால் அந்தக் குழந்தை தன்னை தரங்கெட்டவன், மோசமானவன், வேண்டாதவன் என நினைத்துவிடும். இது குழந்தையினுடைய சுதந்திரத்தைப் பறிப்பதால் அது தன்னம்பிக்கையை இழந்துவிடும். இதனால் எப்போதும் யாரையாவது சார்ந்தே நிற்கும். எதைச் செய்யவும் மிகவும் பயப்படும்.

 

மேலும் குழந்தைகளை மிகவும் மட்டம் தட்டி அவமானப்படுத்தி பேசினாலும், அல்லது மற்றவர்களோடு ஓப்பிட்டு, நீ மற்றவர்களை போல் பாடுவதில்லை, படிப்பதில்லை, விளையாடுவதில்லை என்றுக் குறைகூறும்போதும் அந்த குழந்தைகளிடம் தாழ்வுமனப்பான்மை உருவாகும்.

 

குழந்தைப்பருவத்தில் உண்டாகும் தாழ்வு மனப்பான்மை என்ற நோய், எவ்வாறு உடலிலேயும் சில சிக்கல்களை உருவாக்கும் என்பதனை ஓர் உண்மை நிகழ்ச்சியின் வழியாக உங்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

 

ஓர் இளம் பெண் தமது 16 வயதிலும், தூங்கும்போது படுக்கையில் சிறுநீர் கழித்து விடுவதை வழக்கமாகிக் கொண்டிருந்தாள், பெற்றோர்கள் அவளை ஒரு ஆற்றுபடுத்துனரிடம் அழைத்துச் சென்றார்கள். அந்தப் பெண் மிகவும் கருப்பாக இருந்தாள். இந்தப் பெண் தாம் கருப்பாக இருப்பதை ஏற்றுக்கொள்ளாததே  இதற்குக் காரணம் என்பதை அறிந்தார். அவளோடுப்  பிறந்த மற்ற முன்று பேரும் ஆண்கள். அவர்கள் அனைவருமே மிகவும் சிவந்த மேனியை உடையவர்கள். இவள் மட்டுமே கருப்பு. எனவே, இவளுடைய பெற்றோர்கள் உட்பட அனைவருமே கருப்பாயி என்றே அவளை அழைத்தனர். பள்ளிக்கூடத்திலும் இவளை கருப்பாயி என்றே அழைப்பர். மேலும், பள்ளிக்கூட விழா கலைநிகழ்ச்சிகளிலே, இவள் கருப்பாக இருப்பதனால் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க வாய்ப்பு தரமாட்டார்கள். இதனால், இவள் மிகவும் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகி, அதுவே படுக்கையை  சிறுநீரால் நினைக்கும் நோய்க்கு இட்டுச் சென்றிருக்கிறது. அந்த இளம் பெண், தாம் கருப்பாக இருந்தாலும், அழகானவள், திறமைகள் உடையவள், எல்லோருடைய மதிப்புக்கும் உரியவள் என்று தம்மையே ஏற்றுக்கொள்ள வைத்தப்பிறகு படுக்கையை நினைக்கும் நோயிலிருந்து விடுதலைப் பெற்றாள். 
 

 

-அருட்பணி. அ.சிங்கராயன்

உறவுகள் மேம்பட பகுதி - 4 (தன்னைக் ஏற்றுக்கொள்ளுதல் பகுதி-1)

செப்டம்பர் 23, 2016

தன்னைக் ஏற்றுக்கொள்ளுதல்
(self-acceptance)


தன் அன்பும் சுயமதிப்பும் உள்ளவன் தன்னை ஏற்றுக்கொள்வான். தன்னை ஏற்றுக்கொள்ளுதல் என்றால் தன்னுடைய குறைகளோடும், நிறைகளோடும் தம்மை, தமது உடலை, தமது திறமையை, தமது ஆளுமைத்தன்மையை இருக்கிற நிலையோடு அப்படியே ஏற்றுக்கொள்ளுதல். தம்மை ஏற்றுக்கொள்கிறவன்  தமது உடலைப் பற்றி, நிறத்தைப் பற்றி, தமது திறமைகளைப்  பற்றி, தம்மிடம் உள்ள பண்புகளைப்  பற்றி, தாம் பிறந்த சூழ்நிலையைப் பற்றி பெருமிதம் கொள்வான். இவன் தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்க்கமாட்டான்.

 

 

 

 

 

 

 

 

ஆனால் தன்னை ஏற்றுக்கொள்ளாதவன் நான் அவனைப்போல் அழகாக இல்லை, சிவப்பாய் இல்லை, நான் திறமையற்றவன், நான் எதற்கும் உதவாதவன், ஒன்றுக்கும் லாயக்கற்றவன் என்று தன்னையே தாழ்வாக நினைப்பவன், தாழ்வாக மதிப்பவன். இதனைத்தான் தாழ்வு மனப்பான்மை (inferiority complex ) என்று அழைக்கிறோம்.

 

தாழ்வு மனப்பான்மை என்பது தாங்கமுடியாத வேதனையைத் தரும் ஒரு கொடிய மனநோய். தாழ்வு மனப்பான்மை தரும் வேதனையைப் பொறுக்க முடியாமல் நிறையபேர் தற்கொலை செய்து தங்களது வாழ்வை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் அநேகம் பேர் நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மிகக் கொடிய நோய்கள் தரும் வேதனையைப் போன்றே. தாழ்வு மனப்பான்மையும் தாங்க முடியாத வேதனையைத் தரும்.

 

தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள், ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பின்தங்கிய நாடுகளைச் சேர்ந்தவர்களை மட்டும்தான் இந்நோய் தாக்கும் என்றுச் சொல்ல முடியாது, அது மனதைச் செம்மைப்படுத்தத் தெரியாத அனைவரையும் தாக்கவல்லது. பெரிய பெரிய தலைவர்களையும், அதிகாரிகளையும், தொழிலதிபர்களையும், பெரிய கோடீஸ்வரர்களையும் தாக்கியிருக்கிறது. அதே நேரத்தில் ஏழைகளும் தாழ்வு மனப்பான்மையால் நரகவேதனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

இந்த நோய் யாரையும் விட்டு வைப்பதில்லை. இந்த உலகில் உள்ள எல்லோரையுமே, ஏதாவது ஒரு சமயத்தில் இது தாக்க வல்லதாக இருக்கிறது. தாழ்வு மனப்பான்மையால் அவதிப்படாதவர்கள் இந்த உலகில் யாருமே இல்லை என்று அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த உலகில் உள்ள மக்களில் பாதிப்பேருக்கு மேல் இந்த நோயினால் அவதிப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

 

பிரபல உளவியலார் ஆட்லரின் (Adler ) கருத்துப்படி எல்லோரிடமும் தாழ்வு மனம் இருக்கிறது. ஆனால் அதன் அளவு தான் ஒவ்வொருவரிலும் வித்தியாசப்படுகிறது. ஓர் அளவுக்கு மேல் அது நம்மிடம் இருந்தால் அது நம்மை ஆட்கொள்ளும், அடிமைப்படுத்தும், பாதிக்கும் வேதனையை உண்டு பண்ணும் நோயாக மாறும்.

 

பொறாமை மற்றும் பய உணர்வுகள் அதிகம் உள்ள மனதில் தாழ்வு மனப்பான்மை சுலபமாக நுழைந்துவிடுகிறது. தைரியமும் நம்பிக்கையும் இல்லாத உள்ளங்களில் தாழ்வு மனப்பான்மை தங்கிவிடுகிறது.

 

பிறரைத் தன்னோடு ஒப்பிட்டுப் பார்க்கின்ற ஒரு தீயப் பழக்கம், நம்முடைய தனித்தன்மையை அழித்துவிடுகிறது. நம்முடைய திறமைகளை, ஆற்றல்களை, மகிழ்ச்சிகளை ஏற்றுக்கொள்ளத் தடைச்சுவராக நிற்கிறது.

-அருட்பணி. அ.சிங்கராயன்

உறவுகள் மேம்பட பகுதி-2

செப்டம்பர் 08, 2016

தன்னோடு உறவு - தன்னன்பு

 

மனித வாழ்க்கை என்பது உறவுகளின் சங்கமம்.

மனித வாழ்க்கை என்பது உறவுகளின் சோலை

மனித வாழ்க்கை என்பது உறவுகளின் ஓர் வலைப்பின்னலே.

தன்னைப்படைத்த ஆண்டவனோடு உறவு

தன்னோடு உறவு, அயலாரோடு உறவு

அகில உலகத்தோடு உறவு

இயற்கையோடு உறவு - என்று

உறவுகளின் தொகுப்பே வாழ்க்கை.

 

உறவு, நட்பு, தொடர்பு - இதுவே மனிதனது இயல்பு.

அன்பு, அமைதி, மகிழ்ச்சி இதுவே உள்ளத்தின் நாட்டம்

இதனைப்பெற மனிதனுக்கு உறவு , தொடர்பு, நட்பு தேவைப்படுகிறது

ஆண்டவனோடு உறவுக்கொள்ள

அயலாரோடு உறவுக்கொள்ள

அகில உலகத்தோடு உறவுக்கொள்ள

இயற்கையோடு உறவுக்கொள்ள

அடிப்படையாக அமைவது தன்னோடு உறவு.

 

தன்னோடு உறவு என்றால் என்ன?

 

தன்னையே அறிந்துக் கொள்ளுதல்

தன்னையே அன்பு செய்தல்

தன்னையே ஏற்றுக்கொள்ளுதல்

தன்னையே மதித்தல்

தன்னையே பாராட்டுதல்

தன்னையே மன்னித்தல்

எதை எதையோ அறிந்துக்கொள்ள முற்படும் மனிதன். அவைகளைப் பற்றி அறிந்து கொள்வதிலே வெற்றியும் பெற்றுவிடுகிறான். ஆனால், அவன் தன்னை அறிந்து கொள்வதிலே அதிகம் அக்கறைக் காட்டத் தயங்குகிறான். "உன்னையே நீ அறிந்துக்கொள்" என்று அறைகூவல் விடுத்தார் சாக்ரடீஸ் என்ற தத்துவஞானி. ஆனால் நான் யார்? ஒரு மறைபொருள். நான் நானாகவே என்னை அறிந்துக்கொள்ள முடியாது. ஒரே நாளிலே என்னை முழுவதும் அறிந்துவிடவும் முடியாது. ஆகவே தான் ஒரு யூதப் பழமொழி சொல்லுகிறது.

 

"ஒரு மனிதனைத் தெரிந்துக்கொள்வதிலும் பத்து நாடுகளைத் தெரிந்துக் கொள்வது எளிது"  என்று. நான் என்னையே அறிந்துக் கொள்வது மிகக்கடினம். மேலும், நான் என்னையே தெரிந்துக் கொள்ளவும் விருப்பம் கொள்வதில்லை. ஆர்வம் கொள்வதில்லை. என்னைப்பற்றி நான் முழுமையாகத் தெரிந்துக்கொள்ள எனக்கு பயம்.

 

நான் யார் என்று மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தவும் பயம், வெட்கம், கூச்சம். நான் என்னை யாரென்று மற்றவர்களுக்குக் காட்டிவிட்டால் மற்றவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்களோ என்ற பயம். அன்பு, மகிழ்ச்சி, வளர்ச்சி இவைகளுக்குத் தடையாக இருப்பது இத்தகையத் தேவையற்ற பயங்களும் அச்சங்களுமே.

 

நான் என்னையே முழுமையாக வெளிப்படுத்தப் பயம் கொள்வதினால் நான் பல முகமூடிகளை அணிந்துக்கொண்டு, பல மாறுவேடங்களோடு, காட்சியளிக்க முற்படுகிறேன். எனது வாழ்க்கையே ஒரு போலி வாழ்க்கையாகிவிடுகிறது. எனது வாழ்க்கையையே ஒரு ஏமாற்று வித்தையாகிவிடுகிறது.

 

அடிப்படையில் நான் யார்? நான் அன்பார்ந்தவன், அன்புக்கு உரியவன், அன்பு செய்யப்பட்டவன், அன்பு செய்யப்படுபவன், அன்பு செய்யப்படத் தகுதியுள்ளவன். இறைவன் என்னை அன்பு செய்கிறார், இறைவனின் அன்பும், அருளும் எனக்கு எப்போதும் உண்டு.

 

இன்று எனக்குத் தேவைப்படுவது உண்மையான தன்னன்பு, மற்றவர்கள் என்னை அன்பு செய்வதற்கு முன்னதாக நான் என்னையே அன்பு செய்ய வேண்டும்.

 

தன்னன்பு என்றால் என்ன? என்னையே மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளுதல், என்னையே நான் மதித்தல், நான் அடிப்படையில் நல்லவன், நான் நல்லவனாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று திருப்தி அடைதல்.

 

நம்மை நாம் ஏற்றுக்கொள்ளுதலும், நம்மைப் பற்றி நாம் மகிழ்ச்சியும், பெருமையும்  கொள்ளாததும், நாம் வளர்க்காத பண்புகள். ஏனென்றால், தன்னன்பிற்கும் தன்னலம் அல்லது சுயநலத்திற்கும் நமக்கு வித்தியாசம் தெரிவதில்லை. தன் மதிப்பிற்கும், தற்பெருமைக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. தன்னன்பு வேறு தன்னலம் வேறு. தன்னலம், வீண்பெருமை, இறுமாப்பு இவை மூன்றும் தன்னன்பு, தன்னை ஏற்றுக்கொள்ளுதல், தன் மகிழ்வு இவை மூன்றின் எதிர்மறைச் சொற்கள் என்கிறார் எரிக் ப்ராம் என்ற உளவியல் அறிஞர். தன்னன்பு, தன்மதிப்பு, தாழ்ச்சி என்பவைகள் தன்னலம், தற்பெருமை, தாழ்வு மனப்பான்மை ஆகியவைகளும் எதிர்மறையானவைகளே.

 

தன்னிடம் இல்லாததை இருப்பதாகச் சொல்லி பெருமையடித்துக் கொள்வதும், தம்மிடம் உள்ள சிறியதை மிகைப்படுத்திக் காட்டுவதும் தற்பெருமை, தன்னலம். தம்மிடம் உள்ளதை உள்ளவாறு ஏற்றுக்கொள்வது தன்னன்பு.

 

தன்னலம் ஒருவகை பேராசை. திருப்தியற்ற வாழ்வே இதன் கூலி. தன்னலக்காரன் தன் தேவைகளை நிறைவேற்ற எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும், நிம்மதி அடைவதில்லை. தன்னை பற்றிய அளவுக்கு அதிகமான கவலை, எதுக்கெடுத்தாலும் பதட்டம் அடைவது, போதுமானது கிடைக்கவில்லை என்னும்  நிறைவின்மை, எதையும் யாருக்கும் கொடுக்க விரும்பாமை, எல்லாம் எனக்கே வேண்டும் என்று நினைப்பது, தன்னை விட மற்றவர்கள் யாரவது அதிகமாக வைத்திருந்தால் அதைக் கண்டு பொறாமைப்படுவது. இவன்தான் தன்னலக்காரன், சுயநலக்காரன். இவன் தன்னை அன்பு செய்யாதவன், தன்னை விரும்பாதவன், தன்னை விரும்பாமையால் உருவாகும் தீயசக்தியே தன்னலம்.

 

நோயாளிகள் தங்களிடம் உள்ள நல்லவைகளைக் கண்டுபிடிக்க உதவுவதுதான் எங்கள் மருத்துவமனையின் மிக முக்கியமான பணி. நோயாளிகள் தங்களிடம் உள்ள நல்லவைகளைக் கண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டால், தங்களையே விரும்ப ஆரம்பித்து விடுகின்றனர். தங்களை விரும்ப ஆரம்பித்து விட்டால் குணம் பெற்றுவிடுகின்றனர் என்று ஒரு மருத்துவர் சொல்லுகிறார். தன்னன்பே ஒருவனை மனிதனாக்கி மகிழச் செய்கிறது என்று தமது ஆராய்ச்சியின் முடிவாக வலியுறுத்துகிறார் கார்ல் யுங் என்ற உளவியலாளர்..

 

பசியாய் இருக்கிறது என்று உணவுக்கான எனது வீட்டின் கதவுகளைத்  தட்டுவோருக்கு உடனேயே விரைந்து உணவு கொடுக்க முயல்கிறேன். என்னை இகழந்தவர்களை மன்னிக்க முற்படுகிறேன். என் பகைவர்களுக்கு அன்பு செய்யவும் நான் தயங்குவதில்லை.

 

இவ்வளவு நற்பண்புகள் என்னிடத்தில் இருக்கின்றன. ஆனால் எல்லாரையும் விடவும் கடையன், சிறியவன், ஏழைகளில் ஏழை, குற்றவாளி, பகைவன் யாரென்றுத் தேடினால் இவர்கள் எல்லாரும் எனக்குள்ளேயே மறைந்திருப்பதை காணலாம்.

 

மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுவதற்கு முன்னர், நான் எனக்கே இரக்கம் காட்டவேண்டிய நிலையில் இருக்கிறேன்.

நான் மற்றவர்களுக்கு அன்பு காட்டும் முன் நான் எனக்கே அன்பு காட்ட வேண்டிய நிலையில் இருக்கிறேன்.

நான் எனது பகைவர்களை மன்னிப்பதற்கு முன் என்னையே மன்னிக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன்.

 

மனிதன் தன்னைப்பற்றி கொண்டிருக்கும் ஐயமும் தன்மீதுக் கொண்டிருக்கும் வெறுப்பும்தான் மனித சமுதாயத்தைக் கொன்று கொண்டிருக்கும் புற்றுநோய்கள். இவைகள் இரண்டும்தான் சமூக உறவையும், சமூகத்தின் நம்பிக்கையும் அழிக்கும் எலும்புருக்கிகள்.

சட்டியில் இருந்தால்தானே அகப்பையிலே வரும். நான் என்னையே அன்பு செய்தால் தானே மற்றவர்களை அன்பு செய்ய முடியும். தன்னன்பும் பிறரன்பும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போன்றது. எங்கு தன்னன்பு இல்லையோ அங்கே சமுதாய நோய்கள் மலிந்துக் கிடைக்கும்.

-அருட்பணி. அ.சிங்கராயன் 

உறவுகள் மேம்பட பகுதி-3 (தன்மதிப்பு)

செப்டம்பர் 12, 2016

தன்மதிப்பு (Self Esteem )

 

வாழ்க்கை என்பது உறவுகளின் வலை பின்னல்

வாழ்க்கை என்பது ஓர் உறவுச்சோலை

உறவுகளில் அடிப்படையான உறவு தன்னோடு உறவு

 

தன்னோடு உறவு என்றால்

தன்னை அன்பு செய்தல்(Self love )

தன்னை மதித்தல் (Self Esteem )

தன்னை ஏற்றுக்கொள்ளுதல் ( Self acceptance )

தன்னை (போற்றுதல்) பாராட்டுதல் (Self appreciation )

தன்மதிப்பு என்பது  எனக்குள் நான் அனுபவிக்கும் ஒரு ஆழமான அனுபவம். மற்றவர்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைவிட நான் என்னைப்பற்றி என்ன நினைக்கிறேன்? நான் என்னைப்பற்றி பெருமிதம்கொள்வது தன்மதிப்பு. மற்றவர்கள் என்னை மதித்தாலும் மதிக்காவிட்டாலும் நான் என்னையே மதிப்பது, நான் மதிப்புக்குரியவன் என்று உணர்வதுதான் தன்மதிப்பு. என்னைப்பற்றி  கூறப்படும் தீர்ப்புகளிலே மிகவும் முக்கியமானது நான் என்னைப் பற்றி என்ன தீர்ப்பிடுகிறேன் என்பதுதான்.

 

நான் என்னைப்பற்றி எப்பேர்ப்பட்ட  உயர்வான எண்ணம் கொண்டிருக்கின்றேனோ அதற்கேற்றாற்போல்  எனது நடை, உடை, பாவனை மட்டுமல்லாமல் எனது அனைத்து செயல்பாடுகளுமே  அமைகின்றன.

 

நான் என்னைப்பற்றி உயர்வான எண்ணம் கொண்டிருந்தால் அதற்கேற்றால்போல் எனது செயல்பாடுகளும் உயர்ந்தவையாகவே அமைகின்றன. நான் என்னைப்பற்றி தாழ்வான எண்ணம் கொண்டிருந்தால் அதற்கேற்றாற்போல் எனது செயல்பாடுகளும் மிகவும் தாழ்வானதாகவே அமைகின்றன.

 

ஒரு மனிதனுடைய வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயிப்பதே அவனுடைய தன்மதிப்புதான். தன்மதிப்பு அதிகம் உள்ளவர்கள் (வாழ்க்கையில்) பல சாதனைகளைப் படைத்து சரித்திரத்தில் தடம் பதிப்பார்கள். தன்மதிப்பு குறைவாக உள்ளவர்கள் சரித்திரத்தில் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள் . நம்முடைய இந்திய வரலாற்றிலும் , உலக வரலாற்றிலும் சாதனைகளைப் படைத்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சற்று ஆழமாக அலசிப்பார்த்தால் இவர்கள் அனைவருமே தன்மதிப்பு அதிகம் உள்ளவர்களாவே இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியும்.

 

நம்மில் அநேகம்பேர் என்னிடம் போதுமானத் திறமைகள் இல்லை. என்னால் எதுவுமே முடியாது, நான் நல்லவன் அல்ல, நான் பாராட்டுதல்களுக்கும் மரியாதைக்கும் உரியவன் அல்ல என்ற எதிர்மறை எண்ணங்களையும், சந்தேக எண்ணங்களையும், குற்றப்பழி உணர்வுகளையும் கொண்டிருக்கின்றனர். இதற்கு அடிப்படையானக் காரணம் இவர்களிடம் போதுமான தன்மதிப்பு இல்லாததே ஆகும். 

 

தங்களைப்பற்றி இத்தகைய தாழ்வு எண்ணங்களையும், எதிர்மறை எண்ணங்களையும், சந்தேக எண்ணங்களையும், குற்ற எண்ணங்களையும் கொண்டிருப்போர், தங்களிடம் இத்தகைய எண்ணங்கள் இருப்பதை அறிந்துக் கொள்வதும் ஏற்றுக்கொள்வதும் மிகக் கடினம்.

 

நான் எனது குடும்பத்தால், சக ஊழியர்களால், சக மனிதர்களால், எனது நண்பர்களால் அன்புச் செய்யப்பட்டாலும், என்னிடம் தன்மதிப்பு இல்லையென்றால் நான் என்னையே அன்பு செய்யாமல் போகலாம். அதனால் பல்வேறு பாதிப்புகளுக்கும் உள்ளாக வேண்டியிருக்கும். மற்றவர்களின் ஏக்கங்களையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவுச் செய்யலாம். (தன்மதிப்பு இல்லையேல்) ஆனால் உனது எதிர்பார்ப்புகளை  நிறைவு செய்வதில் தோல்வி அடைய வேண்டியிருக்கும்.

 

ஆயிரக்கணக்கானோர் என்னுடையத் திறமைகளையும், சாதனைகளையும்  பாராட்டலாம். ஆனால், என்னிடம் எதனையும் சாதிக்கவில்லையே, மற்றவர்களின் பாராட்டுதல்களுக்கும் போற்றுதல்களுக்கும் உரிய திறமைகளோ, பண்புகளோ, குணங்களோ எதுவுமே என்னிடம் இல்லையே என்ற விரக்திக்கும், தன் வெறுப்புக்கும் உள்ளாக வேண்டியிருக்கும்.

 

மற்றவர்கள் தரும் பாராட்டுதல்களும், மகிமையும், பெருமையும், நான் கொஞ்சநேரம் பெருமிதத்தோடும், நிம்மதியோடும் இருப்பதற்கு உதவி செய்தாலும், உண்மையிலேயே நான் எனது அறிவையும், திறமைகளையும்  வளர்த்துக்கொள்ளவோ, சாதனைகளைப் படைக்கவோ, சரித்திரத்தில் தடம் பதிக்கவோ உதவிச் செய்யாது. மாறாக தன்மதிப்பு மட்டுமே இதற்கு உதவிச் செய்ய இயலும்.

 

மனிதர்கள் தரும் மதிப்பும், மரியாதையும், மகிமையும், பெருமையும், பாராட்டுதல்களும் நிரந்தரமானதல்ல. நீடித்த ஒன்று அல்ல. மனிதர்கள் தரும் மதிப்பு காலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்றவாறு மாறக்கூடியது. ஆனால் தன்மதிப்பு மட்டுமே மாறாதது. நீடித்தது, நிலையானது, தன் நம்பிக்கையும், சுயமரியாதையும்தான், தன் மதிப்பைத் தூக்கி நிறுத்தும் இருதூண்கள்.

 

இயற்கையாகவே எல்லா மனிதரிடத்திலும்  தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் ஓரளவுக்கு இருக்கிறது. ஒரு சிலர் மட்டுமே அதனை மேன்மேலும் வளர்த்து வரலாற்றில் தடம் பதிகின்றனர்.

 

தன்மதிப்பு அதிகரிக்கும்போது

 

செத்துக் கொண்டிருக்கும் உறவுகள்

புத்துயிர் பெற்று செழித்து வளரும்.

புதிய உறவுகள் முளைத்துக் கிளம்பும்.

மற்றவர்களை ஒரு அச்சுறுத்தலாகவோ, அந்நியராகவோ பார்க்கமாட்டோம்.

தன்மதிப்பு அதிகரிக்கும்போது, மாறாக மற்றவர்களை மரியாதையோடும், மதிப்போடும் நடத்துவோம்.

 

நாம் நமதுப் பணிகளில் புதிய புதிய யுக்திகளைக் கையாள, புதுமைகளைப் புகுத்த, புதிய உணர்வுகள் பிறக்கும். இதன் விளைவாக வெற்றிக்கனிகளைப் பறிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

தன்மதிப்பு வாழ்க்கையில் கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும், சாதனைகளைப் படைக்கக் கிடைத்த அரியதோர் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும். தன்மதிப்பு என்பது மற்றவர்களோடு போட்டிப்போடுவதும் இல்லை. மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதும் இல்லை.

 

தன்மதிப்பில் வளருவது என்பது, (நான்) முன்னேறுவதற்கான திறமைகள் என்னிடம் இருக்கின்றன. (நான்) வெற்றிக்கனிகளைப் பறிப்பதற்கான திறமைகள் என்னிடம் இருக்கின்றன. மகிழ்ச்சியாய் இருப்பதற்கான வாய்ப்புகள் ஏராளமாக எனக்கு கிடைத்திருக்கின்றன என்ற நம்பிக்கையின் ஒளிக்கீற்றை வீச செய்வதாகும். எனக்காக, என் தாயோ, தந்தையோ, உறவினர்களோ, நண்பர்களோ சுவாசிக்க முடியாது. அதேபோன்று, தன்னன்பையும், தன் மதிப்பையும், சுயமரியாதையையும் மற்றவர்கள் என்னில் வளரச்  செய்ய இயலாது. தாயும், பிள்ளையும் ஒன்றாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு இல்லையா? தன்னன்பு, தன் மதிப்பு, சுயமரியாதை இவைகளை நாம்தான் வளர்த்துக்கொள்ளவேண்டும்.

-அருட்பணி. அ.சிங்கராயன்

சமீபத்திய கட்டுரை
ROMAN CATHOLIC CHURCHES IN TAMIL NADU - INDIA
Health or Appearance : Should one be fat at all ?
கலை விழா 2017
Who Killed Anitha
யார் இந்த திருமுருகன் காந்தி ?
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter