திருவழிபாடு Readings, Introduction, Prayer Intentions - (06.08.2017) 

ஆகஸ்ட் 02, 2017

திருவழிபாடு Readings, Introduction, Prayer Intentions 
பொதுக்காலம் 18ஆம் வாரம் 
(06.08.2017) 

 

திருப்பலி முன்னுரை

உருமாற அழைக்கப்பட்டவர்களே, ஆண்டவர் இயேசு தனது மாட்சிமையை தான் தேர்ந்தெடுத்த சீடர்களுக்கு வெளிப்படுத்திய திருவிழாவை கொண்டாட இன்று ஒரே குடும்பமாக கூடியுள்ளோம். மண்ணகத்தில் வாழும் நாங்கள் கிறீஸ்துவை பின்பற்றி விண்ணகத்தின் சாயலை அணிந்து கொள்ள நாம் அழைக்கப்பட்டுள்ளோம். தொன்மை வாய்ந்த இறைவனின் முன்னிலையின் பொதுத்தீர்வுக்கு எம்மை இன்று முதல் தயார்படுத்துவோம். பாவத்தைகளைந்து ஆண்டவர் இயேசுவில் மறுபடியும் நாம் பிறக்கும் போது, நாம் எமது மீட்பராம் இயேசுவின் சாயலை அணிந்து கொள்கின்றோம். "இவர் எனது அன்பான சீடர்" என்று இயேசு எம்மைக் குறித்து தந்தையின் முன் சாட்சி சொல்ல, எம்மை இன்று முதல் அர்ப்பணித்துவாழ திடம் கொண்டவர்களாக, தொடரும் திருப்பலியில் பக்தியுடன் பங்கெடுப்போம்.


முதல்வாசகம்
அவருடைய ஆடை வெண்பனி போல இருந்தது
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10,13-14

நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. இரவில் நான் கண்ட காட்சியாவது; வானத்தின் மேகங்களின் மீது மானிடமகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டுவரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்துபோகாது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு 
இறைவா உமக்கு நன்றி


பதிலுரைப்பாடல் 
உலகனைத்தையும் ஆளும் உன்னதராம் ஆண்டவர் ஆட்சி செய்கின்றார். 
திருப்பாடல் 97: 1-2. 5-6. 9

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! 2 மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம் பல்லவி

ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன. 6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன பல்லவி

ஏனெனில், ஆண்டவரே! உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர் நீரே!பல்லவி 

 

இரண்டாம் வாசகம் 
விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம்.
திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 16-19

சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவித்தபோது சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை. நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள். ``என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்'' என்று மாட்சிமிகு விண்ணகத்திலிருந்து அவரைப் பற்றிய குரல் ஒலித்தபோது, தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும் மாட்சியும் பெற்றார். தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம். எனவே, இறைவாக்கினர் கூறியது இன்னும் உறுதியாயிற்று. அவர்கள் கூறியதை நீங்கள் கருத்திற் கொள்வது நல்லது; ஏனெனில் பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும் வரை அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு 
இறைவா உமக்கு நன்றி 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் அல்லேலூயா


நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-9

அக்காலத்தில் இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளி போன்று வெண்மையாயின. இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தனர். பேதுரு இயேசுவைப் பார்த்து, ``ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?'' என்றார். அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த போது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள் மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, ``என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்'' என்று ஒரு குரல் ஒலித்தது. அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, ``எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்'' என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்த போது இயேசு, ``மானிடமகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும் வரை இக்காட்சியைப் பற்றி எவருக்கும் சொல்லக் கூடாது'' என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

-இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 
-கிறிஸ்துவே உமக்கு புகழ்


விசுவாசிகள் மன்றாட்டுகள்:

விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன். 

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


திருச்சபையின் தலைவராம் இயேசுவே! 
எமது திருச்சபைக்காக உம்மை நோக்கிப்பார்க்கின்றோம். எமது திருச்சபையை வழிநடத்தும் திரு அவையை பாதுகாத்து வழிநடத்தும். திரு அவையில் பணி புரியும் ஒவ்வொருவரையும் உமது ஆவியினால் நிறைத்திட வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம். 

எல்லா இனத்தவர் மேலும் நாடுகளின் மேலும் ஆட்சி உரிமையை உடைய இறைவா! 
எமது தேசங்களை ஆளும் ஒவ்வொரு தலைவர்களையும் ஆசீர்வத்தித்து வழி நடத்தும். எல்லா அதிகாரமும் உம்மிடமிருந்தே வருகின்றது என்பதை அறிந்து, உமது சித்தத்தை அவர்கள் நிறைவேற்ற வரமருள வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம். 

தந்தையினால் மாட்சிமைபடுத்தப்பட்ட இயேசுவே! 
நாங்கள் இவ்வுலக வாழ்வில் உமக்காக வாழ்ந்து தந்தையின் முன் உம்மால் மாட்சிப்படுத்தப்பட வரமருள வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம். 

"எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்" என்று சொன்ன இயேசுவே! 
நாங்கள் இவ்வுலகில் வரும் துன்பங்களுக்கும் வேதனைகளுக்கும் சோர்ந்து போகாமல், உம்மை பின்பற்றி வாழ எமக்கு உமது தூய ஆவியின் வரங்களை பொழிந்திடவேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம். 

வாழ்வளிக்கும் தந்தையே இறைவா! 
உலக நாடுகளிலே உணவின்றியும், போதிய மருத்துவ வசதியின்றியும் அல்லலுறும் அனைவரையும் காத்து, அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றாகிய இறைவா! 
ஆதரவற்றோர், கைவிடப்பட்டோர், நோயுற்றோர் மற்றும் வறுமையில் வாடுவோர் அனைவரும் உமது பாதுகாப்பையும், பராமரிப்பையும் பெற்று மகிழ்ந்திட வேண்டுமென்றும், உடலின் உயிர்ப்பினால் மாட்சிபெற்ற உம் திருமகனைப் போன்று, உள்ளத்தின் உயிர்ப்பினால் உமது மாட்சியில் பங்குபெறும் தகுதி அடையுமாறு எம் நாட்டினர் அனைவருடைய வாழ்வையும் புதுப்பிக்க வேண்டுமென்றும், உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். 

கரிசனை அன்பு கொண்ட எம் இறைவா! 
உமது பிள்ளைகள் எழுந்து ஒளிவிசிட மது என்னும் தடை உலகம் எங்கும் நிறைந்து சிறுகுழந்தைகள் தொடங்கி சமுதாயத்தின் அனைத்து மக்களை ஆட்டிப்படைக்கும் வேளையில், தங்கள் வாழ்க்கையில் நிலை தடுமாறும் இன்றைய இளைய சமுதாயம் காப்பாற்றப்படவும், அவர்கள் உமது நேரிய இறையரசு பாதையில் பயணித்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம். 


 

இன்றைய சிந்தனை

''ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது'' (மத்தேயு 17:1-2) 

இயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சியை மாற்கு, மத்தேயு, லூக்கா ஆகிய மூவரும் விவரிக்கின்றனர். இந்நிகழ்ச்சியை விவரிப்பதில் பழைய ஏற்பாட்டு உருவகங்கள் பல பயன்படுத்தப்பட்டுள்ளன. மலை, கதிரவனைப்போல் ஒளிரும் முகம், ஒளிமயமான மேகம், மேகத்திலிருந்து வரும் குரல், மோசேயும் எலியாவும் தோன்றுதல் போன்ற உருவகங்கள் ஆழ்ந்த பொருளை உணர்த்துகின்றன. அதாவது மோசே சீனாய் மலையில் ஏறிய போது கடவுள் அவரோடு பேசிய நிகழ்ச்சியின் எதிரொலிப்பு இங்கே உள்ளது. மேகம் என்பது கடவுளின் உடனிருப்பைக் குறிக்கும் அடையாளம். மோசே திருச்சட்டத்தையும் எலியா இறைவாக்கையும் குறிக்கின்றார்கள். இயேசு ''திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் அழிக்கவல்ல, அவற்றை நிறைவேற்றவே வந்தார்'' என்னும் செய்தியை மத்தேயு ஏற்கெனவே அறிவித்தார் (காண்க: மத் 5:17). வானிலிருந்து வந்த குரல் இயேசுவைக் கடவுளின் மகன் என அடையாளம் காட்டுகிறது (மத் 17:6). இயேசு வானகத் தந்தையின் ''அன்பார்ந்த மகன்''. நாம் அவருக்குச் செவிசாய்க்க வேண்டும் (மத் 17:6). 

இயேசுவின் தோற்றம் மாறியதையும் வானிலிருந்து குரல் எழுந்து இயேசுவைக் கடவுளின் மகன் என அடையாளம் காட்டியதையும் கண்டு, கேட்டு அனுபவித்த சீடர்கள் அதன் விளைவாக முகங்குப்புற விழுகிறார்கள். அவர்களை அச்சம் மேற்கொள்கிறது. அப்போது ''இயேசு அவர்களிடம் வந்து, அவர்களைத் தொட்டு, 'எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்' என்றார்'' (மத் 17:7). கடவுள் நம்மைத் தம்மிடம் ஈர்க்கின்ற சக்தி கொண்டவர்; நம் உள்ளம் அவரை நாடித் தேடுகிறது. அதே நேரத்தில் கடவுளின் பிரசன்னத்தில் நாம் அஞ்சி நடுங்குகிறோம். ஆனால் இயேசு நாம் அஞ்சவேண்டியதில்லை என நமக்கு உறுதியளிக்கிறார். அவரோடு நாம் இருக்கும்போது நம் வாழ்வில் அச்சம் நீங்கும்; நம் உள்ளத்தில் உறுதி பிறக்கும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் குரலுக்கு நாங்கள் செவிமடுத்து, அவர் காட்டும் வழியில் நடக்க அருள்தாரும்.

புனித சனி – திருவிழிப்பு (15.04.2017) ஆண்டு - A 

ஏப்ரல் 15, 2017

புனித சனி – திருவிழிப்பு (15.04.2017) ஆண்டு - A 
(இன்றைய வாசகங்கள்: தொடக்க நூலிலிருந்து வாசகம்: 1:1-2:2,                                          
விடுதலைப் பயனம் 15:1-2, 3-4, 5-6, 17-18 ,தொடக்க நூல் 22: 1-18,                                                மத்தேயு நற்செய்தியிலிருந்து வாசகம் 28:1-10) 

 

திருப்பலி முன்னுரை    இறைமகன் இயேசுவில் அன்பு நிறை அருட்தந்தை! (அருட்தந்தையர்களே) அன்புநிறை சகோதர்களே! சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம். 
நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக. 
இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல் வாழ்த்துக்கள். இன்று புனித சனி. திருவிழிப்பு வழிபாட்டிற்காக ஒன்று கூடியுள்ளோம். தொடக்கத்திலிருந்தே இறைவன் தன் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கோடு தனது மக்கள் மத்தியில் செயற்படுத்திய அவரின் வியத்தகு செயல்களை நாம் இன்று நினைவு கூருகின்றோம். அடிமைத்தன வாழ்விலிருந்த மக்களை அற்புதமாக இறைவன் மீட்ட செயல் நமக்கு புதிய நம்பிக்கையை ஊட்டுவதாய் அமைகின்றது. இருளிலிருந்து ஒளிக்கும், சாவிலிருந்த வாழ்வுக்கும் இறைவன் நம்மை அழைத்துச் செல்கிறார். முழுமையான விடுதலை இறைவனிடமிருந்தே வருகின்றது. இந்த உண்மைகளை இன்றைய நாள் நமக்கு ஆழமாக எடுத்துக்கூறுகின்றது. உயிர்ப்பின் மகிமையில் நாமும் பங்குபெற அழைக்கப்படுகின்றோம் என்பதை உணர்ந்து பெரு மகிழ்ச்சியுடனும், நன்றி உணர்வுடனும் பாஸ்காத் திருவிழிப்பு சடங்கினில் பங்கேற்போம்.

முதல்வாசகம் கடவுள் அது நல்லது என்று கண்டார் தொடக்க நூலிலிருந்து வாசகம்: 1:1-2:2

தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. அப்பொழுது கடவுள், "ஒளி தோன்றுக!" என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். கடவுள் ஒளிக்குப் பகல் என்றும் இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், "நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்" என்றார். கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் வானத்திற்கு "விண்ணுலகம் என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், "விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் உலர்ந்த தரைக்கு நிலம் என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் கடல் என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவுள், "புற்ப+ண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. புற்ப+ண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், "பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக! அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார். கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்; பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், "திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!" என்றார். இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி "பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்" என்றுரைத்தார். மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது. அப்பொழுது கடவுள், "கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக" என்றார். கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்" என்றார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார். அப்பொழுது கடவுள், "மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது. விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின. மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு 
இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப்பாடல் 
பல்லவி: ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்
விடுதலைப் பயனம் 15:1-2, 3-4, 5-6, 17-18

ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்; குதிரையையும், குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார். ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந்தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப்போற்றுவேன். பல்லவி

போரில் வல்லவர் ஆண்டவர்; "ஆண்டவர்" என்பது அவர் பெயராம். பார்வோனின் தேர்களையும் படையையும் அவர் கடலில் தள்ளிவிட்டார்; அவனுடைய சிறந்த படைத்தலைவர்கள் செங்கடலில் அமிழ்த்தப்பட்டனர். பல்லவி

ஆழங்களில் அவர்கள் கல்லைப்போல் மூழ்கிப் போயினர்; ஆழங்கள் அவர்களை மூடிக்கொண்டன. ஆண்டவரே, உம் வலக்கை வலிமையில் மாண்புற்றது; ஆண்டவரே, உமது வலக்கை பகைவரைச் சிதறடிக்கின்றது. பல்லவி

ஆண்டவரே, எம் தலைவரே! நீர் ஏற்படுத்திய உமது உறைவிடமும், உம் கைகள் உருவாக்கிய திருத்தலமும் அமைந்துள்ள உம் உரிமைச் சொத்தான மலைக்கு அவர்களைக் கொண்டு சென்று நிலைநாட்டினீர். ஆண்டவர் என்றென்றும் அரசாள்வார். பல்லவி 

இரண்டாம் வாசகம் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர் தொடக்க நூல் 22: 1-18

இந்நிகழ்ச்சிகளுக்குப் பின், கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ஆபிரகாம்! என, அவரும் "இதோ! அடியேன் " என்றார். "அவர், "உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக் கொண்டு, மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிடவேண்டும்" என்றார்." அவ்வாறே ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து தமது கழுதைக்குச் சேணமிட்டு, தம் வேலைக்காரருள் இருவரையும் தம் மகன் ஈசாக்கையும் அழைத்துக் கொண்டு, எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை வெட்டிய பின், கடவுள் தமக்குக் குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். மூன்றாம் நாள் ஆபிரகாம் கண்களை உயர்த்தி அந்த இடத்தைத் தூரத்திலிருந்து பார்த்தார். "உடனே ஆபிரகாம் தம் வேலைக்காரர்களை நோக்கி, " நீங்கள் கழுதையோடு இங்கேயே காத்திருங்கள். நானும், பையனும் அவனிடம் சென்று வழிபாடு செய்தபின் உங்களிடம் திரும்பி வருவோம்" என்றார்." பின் ஆபிரகாம் எரி பலிக்கு வேண்டிய விறகுக் கட்டைகளை எடுத்துத் தம் மகன் ஈசாக்கின் மீது வைத்தார். நெருப்பையும் கத்தியையும் தம் கையில் எடுத்துக் கொண்டார். இவ்வாறு இருவரும் சேர்ந்து சென்றனர். "அப்பொழுது, ஈசாக்கு தன் தந்தையாகிய ஆபிரகாமை நோக்கி, "அப்பா! " என, அவர், "என்ன? மகனே! " என்று கேட்டார். அதற்கு அவன், "இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?" என்று வினவினான்." "அதற்கு ஆபிரகாம், "எரிபலிக்கான ஆட்டுக் குட்டியைப் பொறுத்த மட்டில், கடவுளே பார்த்துக்கொள்வார் மகனே" "என்றார். இருவரும் சேர்ந்து தொடர்ந்து நடந்தனர்." ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின் மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று "ஆபிரகாம்! ஆபிரகாம் " என்று கூப்பிட, அவர் "இதோ! அடியேன் " என்றார். "அவர், "பையன்மேல் கை வைக்காதே: அவனுக்கு எதுவும் செய்யாதே: உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்து கொண்டேன்" என்றார்." அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடிகளில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரி பலியாக்கினார். எனவே, ஆபிரகாம் அந்த இடத்திற்கு "யாவேயிரே " என்று பெயரிட்டார். ஆதலால்தான் "மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார் " என்று இன்றுவரை வழங்கி வருகிறது. ஆண்டவரின் தூதர் ஆபிரகாமை வானத்தினின்று மீண்டும் அழைத்து, ""ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய்." ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர். "மேலும், நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்" என்றார்."

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு 
இறைவா உமக்கு நன்றி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி  ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! நற்செய்தி வாசகம் மத்தேயு நற்செய்தியிலிருந்து வாசகம் 28:1-10

ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார். அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது. அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர். அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, ' நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். நீங்கள் விரைந்து சென்று, ' இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் ' எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன் ' என்றார். அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள். திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப் பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், ' அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் ' என்றார். - இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 
-கிறிஸ்துவே உமக்கு புகழ்

விசுவாசிகள் மன்றாட்டுகள்: விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன். பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
வாழ்வின் நாயகனே இறைவா! 
நீர் சாவினை வென்று, பாவத்தை அழித்து, இருளை அகற்றி வெற்றி வீரராய் உயிர்த்தது போல, நாங்களும் எங்கள் வாழ்வில் ஏற்படுகின்ற சோதனைகளில் வெற்றி பெற்று உயிர்ப்பின் மக்களாய் வாழ, உம் வழியில் வெற்றி நடை போடத் தேவையான வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஒளியின் பிறப்பிடமே இறைவா! 
இஸ்ரயேல் மக்கள் வேதனைகளையும், இன்னல்களையும் கடந்து பாஸ்காவிழாவைக் கொண்டாடியதுபோல, உமது உடலாகிய எம் திருச்சபையும் அனைத்து எதிர்ப்புகளையும், முரண்பாடுகளையும் கடந்து இந்த உயிர்ப்பின் விழாவினைக் கொண்டாடிடவும், பாஸ்கா விழாவின் கனிகளை நிரம்பப் பெற்று வாழ்ந்திடவும், வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

அன்புத் தந்தையே இறைவா! 
உம் திருமகன் இயேசுவே உலகின் மீட்பர் என்பதை உலகம் எல்லாம் கண்டுணரவும் விடுதலையின் பாதையில் இயேசுவின் உயிர்ப்பின் ஆற்றலை அனைவரும் அனுபவமாய் பெற்றிட வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

உலகின் மீட்பரே! 
உம்முடைய உயிர்ப்பு விழாவைக் கொண்டாடும் என் பங்கு மக்கள் அனைவருக்காகவும் வேண்டுகிறோம். இறைமக்கள் அனைவரும் உம்முடைய உயிர்ப்பின் ஒளியைப் பெற்று, திருச்சபையின் உண்மையான உறுப்பினர்களாக வாழத் தேவையான அருளைத்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே! 
நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
இன்றைய சிந்தனை

''திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்'' (மாற்கு 16:6) 

இயேசு சிலுவையில் தொங்கி இறந்தார். அவருடைய உடலைச் சிலுவையிலிருந்து இறக்கி, ஒரு கல்லறையில் அடக்கம் செய்தார்கள். ஓய்வுநாளும் வந்தது. அதற்கு அடுத்த நாள் காலையில் இயேசுவின் உடலில் பூசுவதற்காக நறுமணத் தைலங்களை எடுத்துக்கொண்டு மகதலா மரியாவோடு பிற பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள். அங்கே இயேசுவின் உடலைக் காணவில்லை. கல்லறை வெறுமையாக இருந்தது. அப்போது அப்பெண்களுக்கு வழங்கப்பட்ட செய்தி ஓர் இறைவெளிப்பாடு போல் அமைந்துள்ளது. இயேசுவின் உடலைக் காணவில்லையே என அவர்கள் அஞ்சவேண்டிய தேவையில்லை என்பது அச்செய்தியின் முதல் பகுதி. பின்னர், ''நாசரேத்து இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார்'' என்னும் அதிர்ச்சிதரும் செய்தி வழங்கப்படுகிறது. இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்னும் செய்தி உண்மையிலேயே அதிர்ச்சி தருவதுதான். அவர் இறந்ததைப் பலர் கண்டார்கள்; ஆனால் அவர் உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியைக் கண்டவர் யாரும் இல்லை. எனவே, இயேசுவின் உடலைத் தேடிவந்தோருக்குத் தெரிவிக்கப்பட்ட செய்தி உண்மையிலேயே அச்சம் தருவதாக இருந்தது. 
இயேசு உயிர்பெற்று எழுந்தார் என்றால் அவர் ஒரு புதிய நிலைக்குக் கடந்துசென்றுவிட்டார் என்பது முதல் பொருள். இயேசு நமக்கு ''ஆண்டவராக'' ஏற்படுத்தப்பட்டார் என நற்செய்தி நூல்களும் தூய பவுலும் குறிப்பிடுவது இந்த உண்மையைத்தான். அதே நேரத்தில் இயேசுவின் உயிர்த்தெழுதல் நமது உயிர்த்தெழுதலுக்கு வழியாயிற்று. இறந்த நிலையைத் தாண்டிச் சென்று நாமும் புதுவாழ்வு பெற இயேசு வழிவகுத்தார். முதலில் நாம் பாவத்திற்கு அடிமைகளாகி இறந்தநிலையில் இருப்பதை ஏற்க வேண்டும். அப்போது நாம் புதிய நிலையை அடைவதற்கான தேவை உள்ளது என நாம் ஏற்போம். இவ்வாறு புது வாழ்வு பெற நாம் கடவுளை அணுகும்போது அவர் இயேசுவின் வழியாக நம்மைத் தம்மோடு இணைத்துக்கொள்வார். இயேசுவே நமக்குப் புதுவாழ்வில் பங்களிக்கிறார். இப்புதிய வாழ்வைப் பெறுகின்ற நாம் ஒரு புதிய வாழ்க்கை முறையைப் பின்பற்ற அழைக்கப்படுகிறோம். கடவுளின் அன்பால் பிணைக்கப்பட்டு, பிறரையும் அந்த அன்பு அரவணைப்பில் நாம் கொணரும்போது நம்மில் கிறிஸ்துவின் புது வாழ்வு துலங்கி மிளிர்கிறது என்பது பொருள்.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்குப் புது வாழ்வு அளித்ததற்கு நன்றி!


 

ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு 09-04-2017

ஏப்ரல் 08, 2017

ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு
திருவழிபாடு ஆண்டு A

இன்றைய வாசகங்கள்: எசாயா 50: 4-7, திபா 22:7-8, 16-17, 18-19, 22-23, 
பிலிப்பியர் 2: 6-11, மத்தேயு 26:14 - 27: 66 
திருப்பலி முன்னுரை: கிறிஸ்துவுக்குரியவர்களே, நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு திருவழிபாட்டு நிகழ்வுகளுக்கு உங்களை வரவேற்கின்றோம். "தாவீதின் மகனுக்கு ஓசன்னா!" - "ஆண்டவரே எங்களை விடுவித்தருளும்!" என்ற ஆர்ப்பரிப்போடு தொடங்கிய இயேசுவின் எருசலேம் பயணம், "பிறரை விடுவித்தான் தன்னையே விடுவிக்க இயலவில்லை" என்ற ஏளனப் பேச்சோடு முடிவுக்கு வந்ததை இன்று நாம் தியானிக்க இருக்கிறோம். அமைதியின் அரசராய் கழுதை மீது பவனி வந்த இயேசு, கடவுளின் ஆட்டுக்குட்டியாய் கல்வாரியில் தம்மை பலியாக்குவதை காண்கிறோம். மரக்கிளைகளை வெட்டிப்போட்டு, தங்கள் மேலாடைகளை வழியில் விரித்து இயேசுவை வரவேற்ற அதே இஸ்ரயேல் மக்கள், அவரது ஆடைகளைக் களைந்து சிலுவை மரத்தில் தொங்கவிட்ட கொடூரக் காட்சியை நினைவுக்கு கொண்டு வருகிறோம். இறைத்தந்தையின் திட்டப்படி இறைவாக்கினர் உரைத்தது நிறைவேறுமாறு, நமது பாவங்களுக்காக இறைமகன் இயேசு மரணம் வரை கீழ்ப்படிந்தார். கடவுளின் திட்டத்தை செயல்படுத்த நம்மை முழு மனதோடு அர்ப்பணிக்கும் வரம் கேட்டு, இந்த திருவழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்போம்.
முதல் வாசகம் அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன் இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 4-7 
நலிந்தவனை நல் வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார் காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார் கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார். நான் கிளர்ந்தெழவில்லை. விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார் நான் அவமானம் அடையேன் என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன் இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன். 
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. - இறைவா உமக்கு நன்றி 
பதிலுரைப் பாடல் பல்லவி: என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? திபா 22:7-8, 16-17, 18-19, 22-23 
என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர் உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து, ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும் தாம் அன்புகூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்' என்கின்றனர். - பல்லவி
தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள் என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள். என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம். - பல்லவி 
என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக்கொள்கின்றனர் என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலையில் போய் விடாதேயும் என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். - பல்லவி 
உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன் சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். ஆண்டவருக்கு அஞ்சுவோNர் அவரைப் புகழுங்கள் யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள் இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள். - பல்லவி 
இரண்டாம் வாசகம் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-11 
கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து, கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர் தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக ஹஇயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும். 
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு - இறைவா உமக்கு நன்றி 
நற்செய்திக்கு முன் வசனம் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். 
நற்செய்தி வாசகம் மத்தேயு எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 26:14 - 27:66 வாசிப்பவர் : பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, 
யூதாஸ்: இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?" 
வாசிப்பவர் : என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான். புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, 
சீடர்கள்: "நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" வாசிப்பவர் : என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம், 
இயேசு: "நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், "எனது நேரம் நெருங்கி வந்து விட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப் போகிறேன்" எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள் "
வாசிப்பவர் : என்றார். இயேசு தங்களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர், 
இயேசு: "உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" 
வாசிப்பவர் : என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், 
சீடர்கள்: "ஆண்டவரே, அது நானோ?" வாசிப்பவர் : என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு அவர், 
இயேசு: "என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான். மானிட மகன், தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும்" 
வாசிப்பவர் : என்றார். அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் 
யூதாஸ்: "ரபி, நானோ?" 
வாசிப்பவர் : என அவரிடம் கேட்க இயேசு, இயேசு: "நீயே சொல்லிவிட்டாய்" 
வாசிப்பவர் : என்றார். அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, 
இயேசு: "இதைப் பெற்று உண்ணுங்கள் இது எனது உடல்" 
வாசிப்பவர் : என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, 
இயேசு: "இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள் ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம் பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன் அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" 
வாசிப்பவர்: என்றார். அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள். அதன்பின்பு இயேசு அவர்களிடம், 
இயேசு: "இன்றிரவு நீங்கள் அனைவரும் என்னை விட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில் "ஆயரை வெட்டுவேன், அப்போது மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும்" என்று மறைநூலில் எழுதியுள்ளது. நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன்" வாசிப்பவர் : என்றார். அதற்குப் பேதுரு அவரிடம், 
பேதுரு:: "எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும் நான் ஒரு போதும் ஓடிப்போக மாட்டேன்" 
வாசிப்பவர் : என்றார். இயேசு அவரிடம், 
இயேசு: "இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்" வாசிப்பவர் : என்றார். பேதுரு அவரிடம், 
பேதுரு:: "நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்" 
வாசிப்பவர் : என்றார். அவ்வாறே சீடர்கள் அனைவரும் சொன்னார்கள். பின்னர் இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர், 
இயேசு: "நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள்" 
வாசிப்பவர் : என்று அவர்களிடம் கூறி, பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர், 
இயேசு: "எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள்" 
வாசிப்பவர் : என்று அவர்களிடம் கூறினார். பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, 
இயேசு: "என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்" 
வாசிப்பவர் : என்று கூறி இறைவனிடம் வேண்டினார். அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், 
இயேசு: "ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையதுதான் ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்" 
வாசிப்பவர் : என்றார். மீண்டும் சென்று, 
இயேசு: "என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும்" 
வாசிப்பவர் : என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார். அவர் திரும்பவும் வந்தபோது சீடர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவர் அவர்களை விட்டு மீண்டும் சென்று மறுபடியும் அதே வார்த்தைகளைச் சொல்லி மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார். பிறகு சீடர்களிடம் வந்து, 
இயேசு: "இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது. மானிட மகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார். எழுந்திருங்கள், போவோம். இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்து விட்டான்" 
வாசிப்பவர் : என்று கூறினார். இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான். அவனோடு குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்நது. அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவன், "நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள் ; என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் நேராக இயேசுவிடம் சென்று, யூதாஸ்: "ரபி வாழ்க" 
வாசிப்பவர் : எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். இயேசு அவனிடம், இயேசு: "தோழா, எதற்காக வந்தாய்?" 
வாசிப்பவர் : என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப்பிடித்துக் கைதுசெய்தனர். உடனே இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குரவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். அப்பொழுது இயேசு அவரிடம், 
இயேசு: "உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர். நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே. அப்படியானால் இவ்வாறு நிகழவேண்டும் என்ற மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்?" 
வாசிப்பவர் : என்றார். அவ்வேளையில் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, 
இயேசு: "கள்வனைப் பிடிக்க வருவதுபோல் வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைதுசெய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் அமர்ந்து கற்பித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; இறைவாக்கினர் எழுதியவை நிறைவேறவே இவையனைத்தும் நிகழ்கின்றன" 
வாசிப்பவர்: என்றார்.அப்பொழுது சீடர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள். இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மறைநூல் அறிஞரும், மூப்பர்களும் கூடி வந்தார்கள். பேதுரு தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து வழக்கின் முடிவைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருந்தார். தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர். பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர். அவர்கள், 
இருவர்: "இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான்" 
வாசிப்பவர் : என்று கூறினார்கள். அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவரிடம், 
தலைமைக்குரு: "இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட்டாயா?" 
வாசிப்பவர் : என்று கேட்டார். ஆனால் இயேசு பேசாதிருந்தார். மேலும் தலைமைக் குரு அவரிடம், தலைமைக்குரு: "நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன்" வாசிப்பவர் : என்றார். அதற்கு இயேசு, 
இயேசு: "நீரே சொல்லுகிறீர் மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்" 
வாசிப்பவர் : என்றார். உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு, 
தலைமைக்குரு: "இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" 
வாசிப்பவர் : என்று கேட்டார். அதற்கு அவர்கள், 
மக்கள்: "இவன் சாக வேண்டியவன்" 
வாசிப்பவர் : எனப் பதிலளித்தார்கள். பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து, 
மக்கள்: "இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்? சொல்" 
வாசிப்பவர் : என்று கேட்டனர். பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். பணிப்பெண் ஒருவர் அவரிடம் வந்து, பணிப்பெண்: "நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே" 
வாசிப்பவர் : என்றார். அவரோ, 
பேதுரு: "நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை" 
வாசிப்பவர் : என்று அவர்கள் அனைவர் முன்னிலையிலும் மறுதலித்தார். அவர் வெளியே வாயிலருகே சென்றபோது வேறொரு பணிப்பெண் அவரைக் கண்டு, 
பணிப்பெண்: "இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்" 
வாசிப்பவர் : என்று அங்கிருந்தோரிடம் சொன்னார். ஆனால் பேதுரு, 
பேதுரு:: "இம்மனிதனை எனக்குத் தெரியாது" 
வாசிப்பவர் : என ஆணையிட்டு மீண்டும் மறுதலித்தார். சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, 
சிலர்: "உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே; ஏனெனில் உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது" 
வாசிப்பவர் : என்று கூறினார்கள். அப்பொழுது அவர், 
பேதுரு: "இந்த மனிதனை எனக்குத் தெரியாது" 
வாசிப்பவர்: என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே சேவல் கூவிற்று. அப்பொழுது, "சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார். பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர். அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர். அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து,
யூதாஸ்: "பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்" 
வாசிப்பவர் : என்றான். அதற்கு அவர்கள், 
குருக்கள்,மூப்பர்: "அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள்" 
வாசிப்பவர் : என்றார்கள். தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து, 
தலைமைக் குருக்கள்: "இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல" 
வாசிப்பவர் : என்று சொல்லி, கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள். இதனால்தான் அந்நிலம் "இரத்த நிலம்" என இன்றுவரை அழைக்கப்படுகிறது. "இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள்" என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது. இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி, 
பிலாத்து: "நீ யூதரின் அரசனா?" 
வாசிப்பவர் : என்று கேட்டான். அதற்கு இயேசு, 
இயேசு: "அவ்வாறு நீர் சொல்கிறீர்" 
வாசிப்பவர் : என்று கூறினார். மேலும் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் அவர்மீதும் குற்றம் சுமத்தியபோது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை. பின்பு பிலாத்து அவரிடம், 
பிலாத்து: "உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா?" 
வாசிப்பவர் : என்றான். அவரோ ஒரு சொல்கூட அவனுக்கு மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே ஆளுநன் மிகவும் வியப்புற்றான். மக்கள் விரும்பிக் கேட்கும் ஒரு கைதியை அவர்களுக்காக, விழாவின் போது ஆளுநன் விடுதலை செய்வது வழக்கம். அந்நாளில் பரபா என்னும் பேர்போன கைதி ஒருவன் இருந்தான். மக்கள் ஒன்றுகூடி வந்திருந்தபோது பிலாத்து அவர்களிடம், 
பிலாத்து: "நான் யாரை விடுதலை செய்யவேண்டும் என விரும்புகிறீர்கள்? பரபாவையா? அல்லது மெசியா என்னும் இயேசுவையா?" 
வாசிப்பவர் : என்று கேட்டான். ஏனெனில் அவர்கள் பொறாமையால்தான் இயேசுவைத் தன்னிடம் ஒப்புவித்திருந்தார்கள் என்பது அவனுக்குத் தெரியும். பிலாத்து நடுவர் இருக்கைமீது அமர்த்திருந்தபொழுது அவனுடைய மனைவி அவனிடம் ஆளனுப்பி, பிலாத்துவின் 
மனைவி: "அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில் அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்" 
வாசிப்பவர் : என்று கூறினார். ஆனால் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் பரபாவை விடுதலை செய்யக் கேட்கவும் இயேசுவைத் தீர்த்துக்கட்டவும் கூட்டத்தினரைத் தூண்டி விட்டார்கள். ஆளுநன் அவர்களைப் பார்த்து, 
பிலாத்து: "இவ்விருவரில் யாரை விடுதலை செய்யவேண்டும்? உங்கள் விருப்பம் என்ன?" 
வாசிப்பவர் : எனக் கேட்டான். அதற்கு அவர்கள் மக்கள்: "பரபாவை" என்றார்கள். பிலாத்து அவர்களிடம், 
பிலாத்து: "அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?" 
வாசிப்பவர் : என்று கேட்டான். அனைவரும், 
மக்கள்: "சிலுவையில் அறையும்" 
வாசிப்பவர் : என்று பதிலளித்தனர். அதற்கு அவன், 
பிலாத்து:: "இவன் செய்த குற்றம் என்ன?" என்று கேட்டான். அவர்களோ, 
மக்கள்: "சிலுவையில் அறையும்" 
வாசிப்பவர் : என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள். பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை, மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு, கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீரை எடுத்து, 
பிலாத்து: "இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்" 
வாசிப்பவர் : என்று கூறித் தன் கைகளைக் கழுவினான். அதற்கு மக்கள் அனைவரும், 
மக்கள்: "இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும்" 
வாசிப்பவர் : என்று பதில் கூறினர். அப்போது அவர் பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான் இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான். ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்று கூட்டினர் அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, 
படைவீரர்: "யூதரின் அரசரே, வாழ்க!" 
வாசிப்பவர்: என்று சொல்லி ஏளனம் செய்தனர் அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர் அவரை ஏளனம் செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர். அவர்கள் வெளியே சென்ற போது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள் இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். "மண்டையோட்டு இடம்" என்று பொருள்படும் "கொல்கொதா "வுக்கு வந்தார்கள் இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவை பார்த்தபின் குடிக்க விரும்பவில்லை. அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு குலுக்கல் முறையில் அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள் பின்பு அங்கே உட்கார்ந்து காவல் காத்தார்கள் அவரது தலைக்கு மேல் அவரது மரணதண்டனைக்கான காரணத்தை எழுதி வைத்தார்கள். அதில் "இவன் யூதரின் அரசனாகிய இயேசு" என்று எழுதப்பட்டிருந்தது. அதன்பின் அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள். அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, 
மக்கள்: "கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, உன்னையே விடுவித்துக்கொள். நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா" 
வாசிப்பவர் : என்று அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும் மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்தனர். அவர்கள், மறைநூல் அறிஞர், 
முப்பர்கள்: "பிறரை விடுவித்தான் தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம். கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். "நான் இறைமகன்" என்றானே!" 
வாசிப்பவர் : என்று கூறினார்கள். அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள். நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. மூன்று மணியளவில் இயேசு, இயேசு: "ஏலி, ஏலி லெமா சபக்தானி?" அதாவது, "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" 
வாசிப்பவர் : என்று உரத்த குரலில் கத்தினார். அங்கே நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, சிலர்: "இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்" 
வாசிப்பவர் : என்றனர். உடனே அவர்களுள் ஒருவர் ஓடிச் சென்று, கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து அதைக் கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார். மற்றவர்களோ,
மற்றவர்கள்: "பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம்" 
வாசிப்பவர் : என்றார்கள். இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார். (அனைவரும் சிறிது நேரம் முழந்தாள் படியிட்டு ஜெபிப்போம்) 
வாசிப்பவர் : அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன. கல்லறைகள் திறந்தன் இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள். நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, 
காவலர்கள்: "இவர் உண்மையாகவே இறைமகன்" 
வாசிப்பவர் : என்றார்கள். கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த பல பெண்களும் அங்கிருந்தார்கள். அவர்கள் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடையே மகதலா மரியாவும் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் இருந்தார்கள். மாலை வேளையானதும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்னும் பெயர் கொண்ட செல்வர் ஒருவர் அங்கே வந்தார். அவரும் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார். அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதைக் கொடுத்துவிடக் கட்டளையிட்டான். யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி, தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார் அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார். அப்பொழுது மகதலா மரியாவும் வேறோரு மரியாவும் அங்கே கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தனர். மறுநாள், அதாவது ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் பிலாத்திடம் கூடி வந்தார்கள். அவர்கள், 
தலைமைக்குரு, பரிசேயர்: "ஐயா, அந்த எத்தன் உயிருடன் இருந்தபொழுது "மூன்று நாளுக்குப் பின்பு நான் உயிருடன் எழுப்பப்படுவேன்" என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது. ஆகையால் மூன்று நாள்வரை கல்லறையைக் கருத்தாய்க் காவல் செய்யக் கட்டளையிடும். இல்லையெனில் அவருடைய சீடர்கள் ஒருவேளை வந்து அவன் உடலைத் திருடிச் சென்றுவிட்டு, "இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்" என்று மக்களிடம் சொல்ல நேரிடும். அப்பொழுது முந்தின ஏமாற்று வேலையைவிடப் பிந்தினது மிகுந்த கேடு விளைவிக்கும்" 
வாசிப்பவர் : என்றனர். அதற்குப் பிலாத்து அவர்களிடம், 
பிலாத்து: "உங்களிடம் காவல் வீரர்கள் இருக்கிறார்கள். நீங்களே போய் உங்களுக்குத் தெரிந்தபடி கருத்தாய்க் காவல் செய்யுங்கள்" 
வாசிப்பவர் : என்றார். அவர்கள் போய்க் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள். 
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி. - கிறிஸ்துவே உமக்கு புகழ். 
விசுவாசிகள் மன்றாட்டுகள்: விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன். பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். 
1. மாட்சி அளிப்பவரே இறைவா, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் உமது திருவுளத்தை கீழ்ப்படிதலுடன் நிறைவேற்றி சான்றுபகரும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 
2. நிறைவு தருபவரே இறைவா, சிலுவையில் தம்மையே பலியாக்கிய கிறிஸ்து இயேசுவில் உமது திட்டத்தின் நிறைவினைக் கண்டுணர, உலக மக்கள் அனைவருக்கும் ஞானமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 
3. இரக்கத்தின் தந்தையே இறைவா! துன்பங்கள் வழியாகத் தூய்மை அடைந்து, மீட்பின் திட்டத்தில் பங்குபெறுகிறோம் என்பதை, திருச்சபையின் மக்கள் அனைவரும் உணர்ந்து நற்செய்தியின் மதிப்பீடுகளின்படி வாழ்ந்திட வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
4. இரக்கம் காட்டுபவரே இறைவா, எம்மை குணப்படுத்துவதற்காக காயப்பட்ட இயேசுவின் பாடுகள் வழியாக, எங்கள் உடல், உள்ள, ஆன்ம நோய்களை குணப்படுத்தி புது வாழ்வருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 
5. ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றாகிய இறைவா! ஆதரவற்றோர், கைவிடப்பட்டோர், நோயுற்றோர் மற்றும் வறுமையில் வாடுவோர் அனைவரும் உமது பாதுகாப்பையும், பராமரிப்பையும் பெற்று மகிழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
6. நிலைவாழ்வுத் தரும் ஊற்றாகிய எம் இறைவா! சமாரியப் பெண் உம்மை மீட்பர், நிலைவாழ்வுத் தரும் ஊற்று என்பதைக் கண்டு கொண்டு மற்றவர்களுக்கும் உம்மை அறிவித்தது போல நாங்களும் உமது இரக்கத்தையும், அன்பையும் இத்தவக்காலத்தில் உய்த்துணர்ந்து, உம் சீடர்கள் என்ற உணர்வைப் பெற்றுச் செபம், தவம், தர்மம் ஆகியவற்றின் மூலம் இறையரசை அறிவிக்க இணைந்துச் செயல்பட வேண்டிய வரங்களை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்... 
7. நிலைவாழ்வுத் தரும் ஊற்றாகிய எம் இறைவா! வேதனை நிறைந்த எங்கள் மனங்களில் எதிர்கால வாழ்வை நினைத்து, கிடைத்த வாழ்வை, பெற்ற மகிழ்ச்சியை, உறவுகளை இழக்காமல் எம் குடும்பங்களில் ஒற்றுமையையும், மற்றவாகளை மன்னித்து எம் சகோதரச் சகோதரிகளாய் பாவித்துச் சாமாரியப் பெண்ணைப் போல எங்கள் தவறுகளை ஏற்று அனைவரையும் அன்புப் பாரட்ட வேண்டிய மனஉறுதியையும், அவற்றைச் செயலில் காட்டு விவேகத்தையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
இன்றைய சிந்தனை "காட்டிக்கொடுத்தால் என்ன தருவீர்கள்?" யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து "இயேசுவை உங்களுக்குக் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?" என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான். இந்த நிகழ்வை இன்று நாம் தியானிப்போம். "எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்புகொள்வார், அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது" (லூக் 16: 13) என்ற இயேசுவின் சொற்கள் இந்த நிகழ்விலே நிறைவேறுவதைப் பார்க்கிறோம். யூதாசு ஒப்பற்ற செல்வமாகிய இயேசுவைப் புறக்கணித்து, முப்பது வெள்ளிக் காசுகளுக்கு ஆசைப்பட்டு, அடிமையாகிவிட்டான். பணத்துக்காக இயேசுவையும், இயேசுவின் மதிப்பீடுகளையும் காட்டிக்கொடுப்பவர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம். எப்பொழுதெல்லாம் பணத்தின்மீது அதிக ஆசை கொள்கிறோமோ, பணத்துக்காக பாவத்தை, குற்றங்களை, லஞ்ச ஊழல்களைச் செய்கிறோமோ, அப்பொழுதெல்லாம் நாம் இயேசுவைக் காட்டிக்கொடுக்கிறோம். இதில் ஐயமில்லை. பணத்தைப் போலவே, உலக இன்பங்கள், கேளிக்கைகள், பொழுதுபோக்குகள்...போன்றவை இயேசுவின் இடத்தை எடுத்துக்கொள்ளும்போதெல்லாம், நாம் இயேசுவைக் காட்டிக்கொடுக்கிறோம். பணம் வந்தவுடன் இயேசுவைக் காட்டிக்கொடுக்க யூதாசு வாய்ப்பு தேடியதைப் போல, பணமும், பதவியும், பெருமையும், ஆள்பலமும் வரும்போது, இயேசுவைக் காட்டிக்கொடுக்க வாய்ப்பு தேடுகிறோமா? 
மன்றாட்டு: சீடரால் காட்டிக்கொடுக்கப்பட்ட இயேசுவே இறைவா, பணத்துக்காக, உலக இன்பங்களுக்காக நாங்கள் உம்மைக் காட்டிக்கொடுக்கும் அவல நிலையிலிருந்து எங்களைக் காத்துக்கொள்வீராக. அனைத்திற்கும் மேலாக உம்மை அன்புசெய்யும் வரத்தை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
 

பொதுக்காலம் 6ம் ஞாயிறு (12.02.2017)

ஆண்டின் பொதுக்காலம் 6 ஆம் ஞாயிறு
திருவழிபாடு ஆண்டு யு
இன்றைய வாசகங்கள்: சீராக் 15:15-20, கொரிந்தியர் 2:6-10, திருப்பாடல்: 119, மத்தேயு 5:17-37 
திருப்பலி முன்னுரை: கடவுளுக்குரியவர்களே, பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். கொலை, விபசாரம், பொய்யாணை போன்ற திருச்சட்டத்துக்கு எதிரான தீமைகளில் இருந்து விலகி வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. தம் சகோதரரையோ சகோதரியையோ 'அறிவிலியே' என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார் என்று இயேசு எச்சரிக்கை விடுக்கிறார். உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதை விட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது என கடுமையான அறிவுரையை அவர் நமக்கு வழங்குகிறார். எதன் மீதும் ஆணையிட வேண்டாம் என்றும் நாம் அறிவுறுத்தப்படுகிறோம். 'ஆம்” என்றால் 'ஆம்” எனவும், 'இல்லை” என்றால் 'இல்லை” எனவும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையுடன் வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம். 
முதல் வாசகம் இறைப்பற்றின்றி இருக்க, ஆண்டவர் யாருக்கும் கற்பிக்கவில்லை. சீராக்கின் ஞான நூலிருந்து வாசகம்.15:15-20 
நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி: பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது. உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார்: உன் கையை நீட்டி உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள்.மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும்.ஆண்டவரின் ஞானம் பெரிது. அவர் ஆற்றல் மிக்கவர்: அனைத்தையும் அவர் காண்கிறார்.ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் மீது அவரது பார்வை இருக்கும்: மனிதரின் செயல்கள் அனைத்தையும் அவர் அறிவார்.இறைப்பற்றின்றி இருக்க யாருக்கும் ஆண்டவர் கட்டளையிட்டமில்லை: பாவம் செய்ய எவருக்கும் அவர் அனுமதி கொடுத்ததும் இல்லை. 
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. - இறைவா உமக்கு நன்றி   
பதிலுரைப் பாடல் திருப்பாடல்: 119: 1-2,4-5, 17-18, 33-34 பல்லவி : ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். 
மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர். ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர். முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். பல்லவி
ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர். அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடை ப்பிடிக்க வேண்டும் என்றீர். உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்! பல்லவி 
உம் அடியானுக்கு நன்மை செய்யும். அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடி த்து வாழ்வேன். உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும். பல்லவி 
ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியை எனக்குக் கற்றுத்தாரும். நான் அவற்றை இறுதிவரை கடைப்பிடிப்பேன். உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வுதாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். பல்லவி 
இரண்டாம் வாசகம் உலகம் தோன்றும் முன்பே ஞானம் கடவுளின் திட்டத்தில் இருந்தது. திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2:6-10 
சகோதர சகோதரிகளே, முதிர்ச்சி பெற்றவர்களோடு நாங்கள் ஞானத்தைப்பற்றிப் பேசுகிறோம். ஆனால் இது உலக ஞானம் அல்ல: உலகத் தலைவர்களின் ஞானமும் அல்ல. அவர்கள் அழிவுக்குரியவர்கள். வளிப்படுத்தப்படாமல் மறைபொருளாய் இருக்கும் இறை ஞானத்தைப்பற்றியே நாங்கள் பேசுகிறோம். அது நாம் மேன்மை பெற வேண்டும் என்னும் நோக்குடன் உலகம் தோன்றும் முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்தது. இவ்வுலகத் தலைவர்கள் எவரும் அதை அறிந்து கொள்ளவில்லை. அறிந்திருந்தால், அவர்கள் மாட்சிக்குரிய ஆண்டவரைச் சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள்.ஆனால் மறைநூலில் எழுதியுள்ளவாறு, "தம்மிடம் அன்பு கொள்ளுகிறவர்களுக்கென்று கடவுள் ஏற்பாடு செய்தவை கண்ணுக்குப் புலப்படவில்லை: செவிக்கு எட்டவில்லை: மனித உள்ளமும் அதை அறியவில்லை. "இதைக் கடவுள் தூய ஆவியாரின் வழியாக நமக்கு வெளிப்படுத்தினார். தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்: கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார். 
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு - இறைவா உமக்கு நன்றி 
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி அல்லேலூயா, அல்லேலூயா! 'தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா 
நற்செய்தி வாசகம் மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். 5:17-37 
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்: அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். 'விண்ணும் மண்ணும் ஒழியாதவரை, திருச் சட்டத்திலுள்ள அனைத்தும் நிறைவேறாதவரை, அச்சட்டத்தின் மிகச்சிறியதோர் எழுத்தோ அல்லது எழுத்தின் ஒரு கொம்போ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவயைனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார். மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன். " கொலை செய்யாதே: கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர் " என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: "தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்: தம் சகோதரரையோ சகோதரியையோ "முட்டாளே " என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்: "அறிவிலியே " என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார். ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும் போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன். ' விபசாரம் செய்யாதே" எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்." ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று. உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. " தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும் " எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர். " மேலும், " பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர் " என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்: ஏனென்றால் அது கடவுளின் அரியணை. மண்ணுலகின் மேலும் வேண்டாம்: ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்: ஏனெனில் அது பேரரசரின் நகரம். உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்: ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது. ஆகவே நீங்கள் பேசும்போது "ஆம் " என்றால் "ஆம் " எனவும் "இல்லை " என்றால் " இல்லை " எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.
-இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி   -கிறிஸ்துவே உமக்கு புகழ்
விசுவாசிகள் மன்றாட்டுகள்: விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன். 
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஞானத்தின் ஊற்றே இறைவா, 
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் இறை ஞானத்துடன், உமது மீட்புத் திட்டத்தை உலக மக்களிடையே கொண்டு சேர்க்க உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
நன்மையின் ஊற்றே இறைவா, 
உலகில் வாழும் மக்கள் அனைவரும் நல்லவற்றை விரும்பித் தேடவும், தீயவற்றை துணிவோடு எதிர்த்துப் போராடவும் தேவையான ஞானத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
உண்மையின் உறைவிடமே இறைவா, 
உலக ஞானத்தின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அழிவுக்குரிய நெறிகளைப் பின்பற்றி வாழும் எம் நாட்டவர் அனைவரும், உம்மிடம் மனந்திரும்பி வர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 

வாழ்வின் வழியே இறைவா, 
கொலை, விபசாரம் போன்ற தீமைகளின் பிடியில் சிக்கி உமது திட்டத்துக்கு எதிராக செயல்படுவோர் அனைவருக்கும், தூய வாழ்வுக்கான வழியைக் காட்ட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 
உலகின் ஒளியான தந்தையே இறைவா! 
எமது இளைஞர்களுக்கு நீரே அனைத்து வழிகளிலும் தெளிவையும், நல்ல பண்புகளையும் கொடுத்து, அவர்கள் என்றும் உமக்குரியவர்களாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து ஆசீர்வதித்து வழிநடாத்திட வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கும் தந்தையே இறைவா! 
பல்வேறு விதமான நோய்களால் பாதிக்கப்பட்டு வேதனையோடும், கவலையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரையும் ஆசீர்வதித்து அவர்களைக் குணப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
வளங்களின் நிறைவே எம் இறைவா! 
எம் பங்கைச் சார்ந்த அனைத்து மக்களையும் ஆண்டுப் பராமரித்து, நற்சுகமும், வளமும் பொழிந்து அனைவரின் குடும்பங்களும் உமது பேரன்பை நிறைவாய் பெற்று உம் அன்னையைப் போல உம் சீடர்களாய் வாழ்ந்திடவும், திருமுழுக்கின்போது நாங்கள் பெற்றுக் கொண்ட உப்பையும் ஒளியையும் நாங்கள் வாழும் இடங்களில் மற்றவர்களுக்கு வழங்கிடத் தேவையாக வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.
இன்றைய சிந்தனை
'இயேசு, 'திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்' என்றார்’’ (மத்தேயு 5:17) 
திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ அழிக்க வரவில்லை என இயேசு கூறியபோது யூத மரபில் தாம் வேரூயஅp;ன்றியிருப்பதை அவர் காட்டினார். திருச்சட்டம் என்பது யூத மக்களுக்கு மோசே வழியாக வழங்கப்பட்டது. இறைவாக்கு என்பது கடவுளின் திட்டத்தை மக்களுக்குக் கடவுளின் பெயரால் எடுத்துரைத்த இறைவாக்கினரின் போதனையைக் குறிக்கும். யூத மக்களின் சமய நூலில் காணப்படுகின்ற போதனைகள் முழுவதையும் ''திருச்சட்டமும் இறைவாக்குகளும்'' என்னும் சொல்வழக்கு உள்ளடக்கும். எனவே, இயேசு யூத சமயப் போதனைகளைத் தாம் அழிக்க வரவில்லை என்றும், அவற்றை ''நிறைவேற்ற'' வந்ததாகவும் கூறுகிறார். இங்கே ஒரு முரண்பாடு உள்ளதுபோலத் தோன்றலாம். அதாவது, இயேசு பல தருணங்களில் யூத சமயப் பழக்கங்களைக் கடுமையாக விமரிசத்தது உண்டு. சமயச் சடங்குகளுக்கு முன்னிடம் கொடுத்து, உள்ளத்தின் ஆழத்தில் நேர்மையின்றி நடந்தோரை இயேசு கடிந்தது உண்டு. அதே நேரத்தில் அவர் திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் நிறைவேற்ற வந்ததாகவும் கூறுகிறார். இங்கே இரு முக்கியமான உண்மைகளைக் காண்கின்றோம். இயேசு பழைய ஏற்பாட்டு மரபைப் புறக்கணிக்கவில்லை என்பது முதல் உண்மை. கடவுள் யூத மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தி, அவர்களுக்கு ஒரு வாழ்க்கை முறையை அளித்து வழிநடத்தியதை இயேசு ஏற்கிறார். யூத சமயத்தில் வழக்கிலிருந்த ஆன்மீக நெறியே இயேசுவின் வாழ்க்கைக்கு ஒளியாக இருந்தது. இரண்டாவது உண்மை இயேசு ஆற்றிய பணி பற்றியது. இயேசு பழைய ஏற்பாட்டு நெறியை ''நிறைவு'' செய்தது அந்த நெறியை அழிக்காமல் அதன் அடித்தளத்தில் ஒரு புதிய நெறியை அறிவித்தது ஆகும். 
இயேசு வழங்கிய புதிய நெறி அன்புக் கட்டளை ஆகும். பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்ற இக்கட்டளைக்கு இயேசு புதிய அர்த்தம் அளித்தார். கடவுளின் அன்பை மக்களுக்கு எடுத்துக்காட்டி அதை அவர்களோடு பகிர்வதே தம் பணி என இயேசு போதித்தார். கடவுளின் உள் இயல்பு அன்புதான். அக்கடவுள் நமக்குத் தந்தையாக இருந்து நம்மைப் பேணுகின்றவர். அவர் அனுப்பிய மீட்பராக வந்த இயேசு கடவுளின் அன்பு வெளிப்பாடாகத் தம்மை அடையாளம் காட்டியதோடு கடவுளின் ஆவியால் நம்மைத் தொடர்ந்து வழிநடத்துகிறார். இவ்வாறு இயேசு திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் நிறைவேற்றினார். இயேசுவைப் பின்செல்வோர் அவருடைய பணியைத் தொடர்ந்து ஆற்ற அழைக்கப்படுகிறார்கள்.
மன்றாட்டு:
இறைவா, உம் திருமகனின் பணியை நாங்கள் மனமுவந்து ஆற்றிட அருள்தாரும்.

ஆண்டின் பொதுக்காலம் 5 ஆம் ஞாயிறு 05-02-2017

ஆண்டின் பொதுக்காலம் 5 ஆம் ஞாயிறு
திருவழிபாடு ஆண்டு A

இன்றைய வாசகங்கள்: எசாயர் 58:7-10, திருப்பாடல்: 112: 4-9
கொரிந்தியர் 2:1-5, மத்தேயு 5:13-16

திருப்பலி முன்னுரை: அன்பர்களே, பொதுக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். கிறிஸ்து இயேசுவின் சீடர்களான நாம் ஒவ்வொருவரும் உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. உப்பைப் போன்று நாமும் மற்றவர்களின் வாழ்வில் சுவையூட்டுபவர்களாக திகழ இயேசு நம்மை அழைக்கிறார். இருளின் பிடியில் சிக்கித் தவிப்போருக்கு ஒளியாக சுடர நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். பிறரது வாழ்வில் சுவை தரும் உப்பாகவும், சுடர் விடும் ஒளியாகவும் வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம். 
முதல் வாசகம் உன் ஒளி விடியல் போல் எழும். இறைவாக்கினர் எசாயா நூலிருந்து வாசகம். 58: 7-10 
பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர் களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளா திருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு! அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும். விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும். உன் நேர்மை உனக்கு முன் செல்லும். ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும். அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய். அவர் உனக்குப் பதிலளிப்பார். நீ கூக்குரல் இடுவாய். அவர் இதோ! நான் என மறுமொழி தருவார். உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதை யும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு,பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும். இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும். 
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. - இறைவா உமக்கு நன்றி 
பதிலுரைப் பாடல் திருப்பாடல்: 112: 4-9 பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சுவோர் இருளில் ஒளியென மிளிர்வர். 
இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர். அருளும் இரக்க மும் நீதியும் உள்ளோராய் இருப்பர்.மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர். அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். பல்லவி 
எந்நாளும் அவர்கள் அசைவுறார். நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ் வர். தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது. ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும். பல்லவி
அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும். அவர்களை அச்சம் மேற்கொள்ளாது. அவர் கள் வாரி வழங்கினர். ஏழைகளுக்கு ஈந்தனர். அவர்களது நீதி என்றென்றும் நிலைத் திருக்கும். அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். பல்லவி 

இரண்டாம் வாசகம் கடவுளைப் பற்றிய மறைபொருளை உங்களுக்கு அறிவித்தேன். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2:1-5
சகோதர சகோதரிகளே,கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை. நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத்தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை. நான் உங்கள் நடுவில், வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோடும் இருந்தேன். நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூயஆவியின் வல்லமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளில் வல்லமையே. 
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு - இறைவா உமக்கு நன்றி 
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே. என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட் டார்: வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார். அல்லேலூயா
நற்செய்தி வாசகம் மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம். 5:13-16 
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: 'நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர் கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடி யும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும். வேறு ஒன்றுக்கும் உத வாது. நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிரு க்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை. மாறாக விள க்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற் செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். 
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி. - கிறிஸ்துவே உமக்கு புகழ். 
விசுவாசிகள் மன்றாட்டுகள்: விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன். பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். 
1. ஞானத்தின் ஊற்றே இறைவா, திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், மனித ஞானத்தின் மீது ஆர்வம் காட்டாமல் உமது தூய ஆவியின் வல்லமையில் நம்பிக்கை வைத்து நற்செய்தி பணியாற்றத் தூண்டுமாறு உம்மை மன்றாடுகிறோம். 
2. வழிகாட்டும் ஒளியே இறைவா, உலகெங்கும் வாழும் பிற சமய மக்களிடம் உமது நற்செய்தியின் ஒளியை எடுத்துச் செல்லும் தூதுவர்களாக செயல்படும் ஆவலை கிறிஸ்தவர்கள் அனைவரது உள்ளத்திலும் தூண்டுமாறு உம்மை மன்றாடுகிறோம். 
3. சுவையூட்டும் உப்பே இறைவா, எம் நாட்டில் உம்மைப் புறக்கணித்து சுவையற்ற வாழ்வு வாழும் மக்களிடையே உமது நற்செய்தியை சுவையைப் பரப்பும் உப்பாக செயல்படும் ஆர்வத்தை கிறிஸ்தவர்களிடம் தூண்டுமாறு உம்மை மன்றாடுகிறோம். 
4. வல்லமையின் தந்தையே இறைவா! பல்வேறு பணிப்பெறுப்புக்களைப் பெற்றுள்ள நாம் அவற்றின் மேன்மையை உணர்ந்து, தாழ்ச்சியோடும், பொது நலத்தையும், இறை மகிமையையும் கருத்திற்கொண்டு தூய உள்ளத்தோடு பணியாற்றுவதற்கு வேண்டிய நல்லுள்ளத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
5. உலகின் ஒளியான தந்தையே இறைவா! எமது இளைஞர்களுக்கு நீரே அனைத்து வழிகளிலும் தெளிவையும், நல்ல பண்புகளையும் கொடுத்து, அவர்கள் என்றும் உமக்குரியவர்களாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து ஆசீர்வதித்து வழிநடாத்திட வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
6. நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கும் தந்தையே இறைவா! பல்வேறு விதமான நோய்களால் பாதிக்கப்பட்டு வேதனையோடும், கவலையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரையும் ஆசீர்வதித்து அவர்களைக் குணப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
7. துன்புறுவோரின் துணையாளரே எம் இறைவா! உலகில் நிலவும் ஏழ்மை, வறுமை, இல்லாமை என்ற நிலைகள் மாறி இருப்பவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப, சேமித்து அளவுக்கு அதிகமான பொருட்களை, சொத்துக்களைச் சேமிக்காமல் எழைகளோடு பகிர்ந்து கொண்டு உண்மையான கிறிஸ்தவ, ஆதிதிருச்சபை கொண்டு வந்த அர்த்தமுள்ள, கிறிஸ்தவ வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
இன்றைய சிந்தனை 'இயேசு, 'நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாக இருக்கிறீர்கள்... நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்' என்றார்'' (மத்தேயு 5:13-14) ''மலைப் பொழிவு'' என்னும் பகுதி மத்தேயு நற்செய்தியில் வருகின்ற இயேசு ஆற்றிய ஐந்து பெரிய போதனைப் பகுதிகளில் முதலாவதாகும் (அதி. 5-7). எஞ்சிய நான்கும் முறையே திருத்தூதுப் பொழிவு (அதி. 10), உவமைப் பொழிவு (அதி. 13), திருச்சபைப் பொழிவு (அதி. 18), நிறைவுகாலப் பொழிவு (அதி. 24-25) என அழைக்கப்படுகின்றன. இயேசு கடவுளாட்சி பற்றி வழங்கிய போதனைகளை மத்தேயு இவ்வாறு தொகுத்து வழங்கியுள்ளார். மலைப் பொழிவின்போது இயேசு தம் சீடரை நோக்கி, ''நீங்கள் மண்ணுலகிற்கு உப்பு...நீங்கள் உலகிற்கு ஒளி'' (மத் 5:13-14) என்று கூறுகிறார். ''உப்பில்லாப் பண்டம் குப்பையிலே'' என்னும் பழமொழிக்கு ஏற்ப, உப்பு உணவுக்குச் சுவை சேர்க்கிறது. பொருள்கள் கெட்டுவிடாமல் பாதுகாக்கவும், தூய்மையாய் இருக்கவும் உப்பு பயன்படுகிறது (காண்க: யோபு 6:6; சிஞா 39:26; 2 அர 2:19-22). இஸ்ரயேல் மக்கள் நடுவே உடன்படிக்கை செய்யப்பட்டபோது உப்பு பயன்பட்டது (எண் 18:19; 2 குறி 13:5). வழிபாட்டின்போதும் உப்பு இடம்பெற்றது (விப 30:35; லேவி 2:13; எசே 43:24; எஸ் 4:14; திப 1:4). நிலம் செழிப்பாக இருக்க உப்பு அதில் உப்பு இருக்க வேண்டும். இயேசு உப்பு என்னும் உருவகத்தை எப்பொருளில் பயன்படுத்தினார்? சீடர்கள் உப்பைப் போல இந்த உலகிற்குச் சுவை கூட்ட வேண்டும். இவ்வாறு மக்கள் கடவுளின் அன்பைச் சுவைக்க முடியும். சீடர்கள் இவ்வுலகைத் தூய்மைப்படுத்தி, அது கெட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டும். உப்பு தன் காரத்தை இழந்துவிடக் கூடாது. அதுபோல சீடர்களும் துன்பங்களுக்கு நடுவே தங்கள் உள உறுதியை இழந்துவிடலாகாது (மத் 5:11-12). சீடர்கள் ''உலகுக்கு ஒளி'' என இயேசு கூறுகிறார் (மத் 5:14). உரோமைப் பேரரசு தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்திய காலத்தில் உரோமை நகரம் ''உலகின் ஒளி'' என்று போற்றப்பட்டது. ஆனால் இயேசு தம் சீடர்கள் ஏழையரின் உள்ளத்தவராய், இரக்கப் பண்பு நிறைந்தவராய், பிறருக்கு உதவுகின்ற வேளையில் உலகுக்கு ஒளியாக விளங்குவார்கள் என்று போதிக்கிறார். இத்தகைய ஒளி பிறருடைய வாழ்வை ஒளிமயமானதாக மாற்றும் பிறரை அடக்கி ஆளுகின்ற போக்கு அங்கே இராது. இவ்வாறு, இயேசு தம் சீடர்கள் ''உலகுக்கு உப்பாகவும் ஒளியாகவும்'' இருக்கும்படி அழைக்கிறார். உப்பும் ஒளியும் பிறருக்குப் பயன்படுகின்றன. உணவில் சேர்க்கப்படுகின்ற உப்பு உணவுக்குச் சுவையூட்டும், ஆனால் தன்னையே கரைத்துவிடும். அதுபோல, விளக்குத் தண்டில் வைக்கப்பட்ட விளக்கு வீட்டிலிருக்கின்ற பொருள்கள் தெரியும் விதத்தில் ஒளிபரப்பும், ஆனால் தன்னை வெளிச்சமிட்டுக் காட்டாது. இவ்வாறு சீடர்களும் தாங்கள் புரிகின்ற நற்செயல்கள் வழியாகக் கடவுளுக்குப் பெருமை சேர்க்கவேண்டுமே ஒழிய, தம்மையே முன்னிறுத்தக் கூடாது. இயேசுவின் நம்பிக்கை கொண்டு வாழ்கின்ற சீடர்கள் இன்றைய உலகம் கடவுளின் அன்பைச் சுவைக்க உதவுகின்ற 'உப்பாக' மாற வேண்டும் உலக மக்கள் கடவுளை நோக்கி நடந்து செல்ல வழிகாட்டுகின்ற 'ஒளியாக' விளங்க வேண்டும். 
மன்றாட்டு: இறைவா, உம் ஒளியால் நாங்களும் ஒளிர்ந்திட அருள்தாரும். 
 

சமீபத்திய கட்டுரை
பொதுக்காலம் 23ஆம் வாரம் (10.09.2017)
பெருமழையால் பாதிக்கப்பட்டோரின் அருகாமையில் திருத்தந்தை
பொதுக்காலம் 21ஆம் வாரம்  (27.08.2017)  ஆண்டு - A
திருவழிபாடு - பொதுக்காலம் 19ஆம் வாரம் (13.08.2017)
திருத்தந்தை பிரான்சிஸ் பொதுமக்களை சந்திக்கும் காணொளி - 2017.08.02
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter