பொதுக்காலம் 23ஆம் வாரம் (10.09.2017)

செப்டம்பர் 09, 2017

திருவழிபாடு Readings, Introduction, Prayer Intentions 

பொதுக்காலம் 23ஆம் வாரம் 
(10.09.2017) 

ஆண்டு - A 

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 33: 7-9,திபா 95: 1-2. 6-7. 8-9,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13: 8-10 ,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 15-20) 

 

திருப்பலி முன்னுரை

நன்மைக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்துமூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். பிறரது குற்றங்களைச் சுட்டிக்காட்டி, அவர்களை நல்வழிப்படுத்த இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமக்கு எதிராக ஒருவர் குற்றம் செய்தால், அவருடன் தனியாக இருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுமாறு இயேசு கூறுகிறார். கிறிஸ்தவர்கள் இடையே எழும் பிரச்சனைகளை திருச்சபைக்குள்ளே தீர்த்துக்கொள்ள வேண்டுமென நமக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. மேலும் ஒரு நற்காரியத்துக்காக இருவர் மனமொத்து வேண்டினால், கடவுள் நமக்கு தருவார் என்ற உறுதியை இன்றைய நற்செய்தி தருகிறது. கிறிஸ்து இயேசுவின் பெயரால் ஒன்றிணைந்து ஆண்டவரின் மாட்சியைக் காண வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.


 

முதல்வாசகம்
தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில், அவர்களது இரத்தப்பழியை உன் மேல் சுமத்துவேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 33: 7-9

ஆண்டவர் கூறியது: மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்கும் காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன். என் வாயினின்று வரும் வாக்கைக் கேட்கும் போதெல்லாம் நீ என் பொருட்டு அவர்களை எச்சரிக்க வேண்டும். தீயோரிடம் நான், ` ஓ தீயோரே! நீங்கள் உறுதியாகச் சாவீர்கள்' என்று சொல்ல, அத்தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில், அத்தீயோர் தம் குற்றத்திலேயே சாவர்; ஆனால், அவர்களது இரத்தப் பழியை உன் மேலேயே சுமத்துவேன். ஆனால் தீயோரை அவர்கள் தம் வழியிலிருந்து திரும்ப வேண்டுமென்று நீ எச்சரித்தும் அவர்கள் தம் வழியிலிருந்து திரும்பாவிட்டால், அவர்கள் தம் குற்றத்திலேயே சாவர். நீயோ, உன் உயிரைக் காத்துக் கொள்வாய்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு 
இறைவா உமக்கு நன்றி


 

பதிலுரைப்பாடல் 
உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
திபா 95: 1-2. 6-7. 8-9

வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம் பல்லவி

வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக் காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! பல்லவி

அன்று மெரிபாவிலும், பாலைநிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர் பல்லவி 

 

இரண்டாம் வாசகம் 
அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13: 8-10

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும். பிறரிடத்தில் அன்புகூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவார். ஏனெனில், ``விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பிறருக்குரியதைக் கவர்ந்திட விரும்பாதே'' என்னும் கட்டளைகளும், பிற கட்டளைகளும், ``உன்மீது அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக'' என்னும் கட்டளையில் அடங்கியுள்ளன. அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு 
இறைவா உமக்கு நன்றி 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் உலகினரைக் கிறிஸ்துவின் வாயிலாகத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 15-20

அக்காலத்தில் இயேசு சீடர்களிடம் கூறியது: ``உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் `இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்' என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும். மண்ணுலகில் நீங்கள் தடை செய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடை செய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

-இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 
-கிறிஸ்துவே உமக்கு புகழ்


 

விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன். 
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


நல்லாயராம் இறைவா, 
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், தீய வழியில் செல்லும் மக்களை எச்சரித்து நல்வழியில் நடத்துவர்களாய் திகழ வரம் அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

நன்மருத்துவராம் இறைவா, 
உலகெங்கும் நிகழும் போர்கள், வன்முறைகள், அடக்குமுறைகள் போன்ற தீமைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் உமது பாதுகாப்பினை வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

உலகினரைக் கிறிஸ்துவின் வாயிலாத் உம்மோடு ஒப்புரவாக்கிய தந்தையே! 
பிரிவினைகளோடும், கசப்புணர்வுகளோடும், பழிவாங்கும் மனநிலையோடும், வாழும் அனைவரும் ஒருவரோடொருவர் ஒப்புரவாகி, ஒருவரையொரவர் அன்பு செய்து வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

துன்பங்களை வென்ற நாயகனே, எம் இறைவா! 
துன்பங்களை நாம் கண்டு துவண்டுவிடாமல் அதளை மேற்கொள்ளத் தனிமனித முயற்சியோடு உம் இறைநம்பிக்கை அதிக முக்கியம் என்பதனை உணர்ந்து நாங்கள் துன்பப்படுவோர்க்கு, எப்போதும் உதவிகரம் கொடுக்கக் கூடிய நல்மனதையும் கடவுளுக்க ஏற்புடைய நற்காரியங்களை மேற்கொள்ளத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

அருள்கொடையின் நாயகனே எம் இறைவா! 
இக்காலத்தில் இளையோர், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் அறிவியலின் வளர்ச்சித் தான் மிகச் சிறந்தது என்று நினைக்காமல் இறைஞானமே எல்லாவற்றிலும் தலைசிறந்தது என்ற புரிந்துகொள்ளவும், காலங்களையும், யுகங்களையும் கடந்த கடவுள் நம்மோடு நம்மில் செயலாற்றுகிறார் என்பதைப் புரிந்து, இறைவார்த்தையின் ஆழத்தை அதிகமாக அறிந்துச் சொல்லாலும் செயலாலும் சான்றுபகரும் வாழ்வு வாழத் தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை அன்புடன் வேண்டுகிறோம்.

நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா! 
எங்கள் குடும்பங்களில் உள்ள அனைவரும் தங்கள் உள்ளத்தில் இயேசுவே ஆண்டவர் என்று சான்றுப் பகிரவும், குடும்பம் என்ற கூடாரம் சுயநலத்தால் சிதறிபோகாமல் இருக்க உறுதியான பாசப்பிணைப்பைத் தந்து எங்களுக்குத் தந்து இவ்வுலகை வென்று நிலைவாழ்வுப் பெற்றுக் கொள்ளத் தேவையான வரங்கள் தர வேண்டுமென்று இறைவா உம்மை அன்புடன் வேண்டுகிறோம்.

ஆதரித்தாளும் எம் இறைவா, 
எம் இளையோர் அனைவரையும் பாகுபாடுயின்றித் திரு அவையில் பல்வேறு மேய்ப்புப் பணியில் ஈடுபடுத்தி, அதனால் அவர்களின் ஆன்மீக வாழ்வில் வளம் பெற்றுத் தங்கள் சொல்லாலும் செயலாலும் சான்றுப் பகரும் வாழ்வை வாழ்ந்திடத் தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


 

இன்றைய சிந்தனை

''உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள்'' (மத்தேயு 18:15) கிறிஸ்து வழங்கிய அன்புக் கட்டளைக்கு இரு பக்கங்கள் உண்டு. ஒன்று, நாம் கடவுளை அன்புசெய்வது, மற்றொன்று நாம் பிறர் மட்டில் அன்புகாட்டுவது. இந்த இரு பக்கங்களும் ஒரே அன்புக் கட்டளையின் இணைபிரியா அம்சங்கள். ஆனால், பிறரை அன்புசெய்ய வேண்டும் என்னும் கட்டளையை நடைமுறையில் கடைப்பிடிப்பது எப்படி? அன்பின் வடிவங்கள் பல. அவற்றுள் ஒன்றுதான் பிறர் குற்றம் செய்யும்போது அவர்களைத் திருத்துவதற்காக நாம் எடுக்கும் முயற்சி. பிறரிடம் குற்றம் காண்பதையே தங்கள் வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொள்வோர் சிலர் உண்டு. இவர்கள் தங்களுடைய குறைகளைப் பற்றிக் கவலைப்படாமல் பிறரைத் திருத்துவதிலேயே கருத்தாயிருப்பார்கள். இது இயேசுவின் அணுகுமுறை அல்ல. நம்மிடம் காணப்படுகின்ற குறைகளை நாம் களைந்துவிட்டு, அதன் பின்னர் பிறரிடம் உள்ள குற்றங்களைச் சுட்டிக்காட்டுவதே முறை. ஆனால், குற்றம் காண்பதிலும் பல வகைகள் உண்டு. பிறரைக் குறைகூறுவதற்கென்றே குற்றம் காண்பது உண்மையான அன்பு அல்ல. மாறாக, பிறர் நல்வழிக்குத் திரும்ப வேண்டும் என்னும் நல்லெண்ணத்தோடு பிறருடைய குற்றங்களைத் திருத்துவதற்கு நாம் முயன்றால் அதுவே பிறரன்பின் சிறந்த வெளிப்பாடாக அமையும். பிறரைத் திருத்த நாம் முனையும்போது முதல்முதலில் அவர்களோடு தனித்துப் பேசி அக்குறையைச் சரிப்படுத்த வேண்டும் என்பது இயேசு வழங்குகின்ற வழிமுறை. இயேசு இவ்வாறு ஏன் கூறுகிறார் என்றொரு கேள்வியை நாம் கேட்கலாம். இயேசுவின் பார்வையில் எந்த ஒரு மனிதரும் தம்மைக் குற்றமற்றவர் எனக் கூறிட இயலாது. கடவுளின் முன்னிலையில் நாம் அனைவருமே குறையுள்ளவர்கள்தாம். கடவுளின் இரக்கமும் மன்னிப்பும் நம் அனைவருக்கும் தேவையானதே. அப்படியிருக்க, நம் சகோதரர் சகோதரிகளிடம் மட்டும் குற்றம் இருப்பதாக எண்ணி நாம் செயல்படுவதற்கு மாறாக, நமக்குக் கடவுளின் மன்னிப்பு அருளப்படுவதுபோல பிறரும் அதே அன்பு அனுபவத்தை நம் செயல்கள் வழியாகப் பெற்றிட நாம் வழிவகுக்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம்மிடமிருந்து நாங்கள் பெறுகின்ற மன்னிப்பு அனுபவத்தால் ஊக்கம் பெற்று எங்களை அடுத்திருப்போரையும் அன்போடு நெறிப்படுத்த எங்களுக்கு அருள்தாரும்.

பொதுக்காலம் 21ஆம் வாரம்  (27.08.2017)  ஆண்டு - A

ஆகஸ்ட் 25, 2017

திருவழிபாடு Readings, Introduction, Prayer Intentions 

பொதுக்காலம் 21ஆம் வாரம் 
(27.08.2017) 
ஆண்டு - A

 
(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 22: 19-23,பதிலுரைப்பாடல்: திபா: 138: 1-3. 6,8 ,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11: 33-36,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16:13-20) 

 

திருப்பலி முன்னுரை

ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன். தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன். நாம் மன்றாடும் நாளில் நமக்குச் செவிசாய்த்து. நம் மனத்திற்கு வலிமை அளிக்கும் நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி உங்கள் அனைவரையும் அன்புடன் இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வரவேற்று நிற்கின்றோம். இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் இருபத்தோராம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம். கடவுளின் அருள் செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! என்னும் இறைவார்த்தைகள் கடவுளையும், ஆன்மிகத்தையும் ஒதுக்கிவிட்டு மனித அறிவு, பொருளாதார, தொழில் நுட்ப வளர்ச்சி மாத்திரமே தமக்குத் தேவையென்று வாழுவோருக்கு சவாலாக அமைவதையும், நமது நாளாந்த விசுவாச வாழ்வை சீர்தூக்கிப் பார்க்க அழைப்பதையும் நாம் கண்டுகொள்கின்றோம். எனவே நாம் ஒவ்வொருவரும் பேதுருவைப்போல, 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று அறிக்கையிட்டு இயேசுவை முழுமனதுடன் ஏற்று வாழ இத்திருப்பலியில் வரம் கேட்டுச் செபிப்போம்.


 

முதல்வாசகம்
தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின் மேல் வைப்பேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 22: 19-23

உன்னை உன் பதவியிலிருந்து இறக்கிவிடுவேன்: உன் நிலையிலிருந்து கவிழ்த்து விடுவேன்.அந்நாளில் இலக்கியாவின் மகனும் என் ஊழியனுமாகிய எலியாக்கிமை நான் அழைத்து, உன் அங்கியை அவனுக்கு உடுத்தி, உன் கச்சையை அவன் இடுப்பில் கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்பேன். எருசலேமில் குடியிருப்போருக்கும் யூதா குடும்பத்தாருக்கும் அவன் தந்தையாவான்.அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின் மேல் வைப்பேன். அவன் திறப்பான்: எவனும் பூட்டமாட்டான். அவன் பூட்டுவான்: எவனும் திறக்கமாட்டான்.உறுதியான இடத்தில் அவனை முளைபோல அடித்து வைப்பேன்: அவன் தன் தந்தையின் குடும்பத்தாருக்கு மேன்மையுள்ள அரியணையாக இருப்பான்:

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு 
இறைவா உமக்கு நன்றி


 

பதிலுரைப்பாடல் 
பல்லவி:ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு:
பதிலுரைப்பாடல்: திபா: 138: 1-3. 6,8

ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்: தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன்: பல்லவி

உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்: ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்: என் மனத்திற்கு வலிமை அளித்தீர். பல்லவி

ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்: எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்: ஆனால், செருக்குற்றோரைத் தொலையிலிருந்தே அறிந்து கொள்கின்றீர். ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு: உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். பல்லவி 

 

இரண்டாம் வாசகம் 
அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன: அவராலேயே உண்டாயின: அவருக்காவே இருக்கின்றன,
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11: 33-36

சகோதரர் சகோதரிகளே! கடவுளின் அருள் செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! "ஏனெனில் ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாளராய் இருப்பவர் யார்? தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் என முன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்? "அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன: அவராலேயே உண்டாயின: அவருக்காவே இருக்கின்றன, அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு 
இறைவா உமக்கு நன்றி 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 
அல்லேலூயா, அல்லேலூயா! உன் பெயர் பேதுரு: இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16:13-20

அக்காலத்தில் இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, "மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்" என்றார்கள். "ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று உரைத்தார். அதற்கு இயேசு," யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை: மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு: இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்றார். பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.

-இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 
-கிறிஸ்துவே உமக்கு புகழ்


 

விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன். 
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


ஆழமான ஞானமும் அறிவும் நிறைந்த தந்தையே இறைவா! 
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் நீர் கொடுக்கும் ஆழமான ஞானத்திலும், அறிவிலும் ஆர்வமுடையவர்களாய் உம்மிடமிருந்து கற்றுக்கொண்டு சிறப்பாகப் பணியாற்றிட நிறையருளை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எம் மனத்திற்கு வலிமை அளிக்கும் தந்தையே இறைவா! 
துன்பங்களும், துயரங்களும், நோய்களும், சவால்களும் எம்மைத் தாக்குகின்றபோது நாம் நிலைகுலைந்து போகாமல் உமது அருட்துணையில் என்றும் நம்பிக்கைகொண்டு மனவலிமையோடு செயற்பட எமக்கு சக்தி அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.v

நலிந்தோரைக் கண்ணோக்குகின்ற தந்தையே இறைவா! 
இரக்கமற்ற மனிதர்களாக, நீதியோடு, நேர்மையோடு நடந்துகொள்ளாமல், எம் சக மனிதர்களைத் துன்புறுத்தி, வேதனைப்படுத்தி, இன்பம் காணும் எல்லா மனிதர்களதும் கடின இதயங்களை மாற்றி இரக்கம் அவர்களில் ஊற்றெடுக்கச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா! 
உமது அன்பையும், இரக்கத்தையும் பெற்று மகிழும் எம் இளைஞர்கள் உம்மை தங்கள் சொந்த வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் உமது அருட்பிரசன்னத்தை கண்டுணர்ந்து, தாங்கள் பெற்றுக்கொண்ட இறையனுபவத்தை மற்றவர்களோடு பகிர்ந்து உமது சாட்சிகளாய் வாழ அருள் தந்து ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மிகுதியான அருள் செல்வத்தையும், ஆழமான ஞானத்தையும், அறிவையும் கொண்டவரான தந்தையே! 
நாங்கள் ஒவ்வொருவரும் எங்களைத் தாழ்த்திக்கொண்டு உம்முடைய அருள் நலன்களிலும், ஞானத்திலும் நம்பிக்கை கொண்டு நேர்மையான மனத்தோடும், தியாக உள்ளத்தோடும் பணியாற்றுவதற்கு வேண்டிய ஆற்றலை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குழந்தைகள் விண்ணரசின் சொந்தங்கள் என்று மொழிந்த எம் இறைவா, 
எம் குழந்தைகள், இளமையில் அதிகமாக உம்மைத் தேடவும்., உம் வர்த்தைகளை வாழ்வாக்கி, தம் சொல்லாலும் திருஅவைக்கும், மனிதகுலச் சமுதாயத்திற்கும். சான்றுப் பகரும் வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.. 

நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா! 
கானானியப் பெண்ணின் மகளைப்போல் இன்று தங்கள் பிள்ளைகள் பலர் இவ்வுலகின் தீய சக்திகளிடம் மாட்டிக்கொண்டு இறைவனின் பாதையிலிருந்து விலகியிருப்பதைக் கண்டு தங்கள் பிள்ளைகளுக்கு விடுதலை வேண்டிக் கண்ணீர் விட்டுச் செபிக்கும் பெற்றோர்க்களின் செபத்தைக் கேட்டு அவர் தம் பிள்ளைகள் மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மனம் உருகி வேண்டுகிறோம். 


 

இன்றைய சிந்தனை

''இயேசு தம் சீடரை நோக்கி, 'நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்' என்று உரைத்தார்'' (மத்தேயு 16:15-16) கடவுளின் ஆட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்துக்கொண்டே செல்கிறார் இயேசு. அப்போது மக்கள் அவரைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். ''யார் இவர்?'' என்னும் கேள்வி அவர்கள் உள்ளத்தில் எழுகிறது. அதற்கு ஒவ்வொருவரும் ஓரொரு பதில் கொடுக்கின்றனர். இதை இயேசு தம் சீடர்களிடம் கேட்டு அறிந்துகொள்கிறார். ஆனால் இயேசுவைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தவிர அவருடைய சீடர்களே அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய அவருக்கு விருப்பம். தம் சீடர்கள் தம்மைச் சரியாகப் புரிந்துகொண்டுள்ளார்களா என்பதை அறிய விழைந்த இயேசு அவர்களிடம், ''நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்கிறார் (மத் 16:15). வழக்கம்போல சீமோன் பேதுரு இயேசுவின் கேள்விக்குப் பதில் தருகிறார். அதாவது இயேசு ''மெசியா''; ''வாழும் கடவுளின் மகன்''. மெசியா மக்களைத் தேடி வந்து, அவர்களை உரோமை ஆதிக்கத்திலிருந்து விடுவித்து அவர்களுச் சுதந்திரம் நல்குவார் என்னும் நம்பிக்கை யூத மக்களிடையே நிலவியது. பேதுரு அதையே இயேசுவிடம் சொல்கிறார். அதே நேரத்தில் மாட்சியுடன் வருகின்ற மெசியா ''கடவுளின் மகனாகவும்'' இருப்பதை சீமோன் வெளிப்படுத்துகிறார். தம்மை மெசியா என அழைத்த சீமோன் பேதுருவுக்கு இயேசுவும் ஒரு புதிய பெயர் அளிக்கின்றார். அதாவது, இனிமேல் அவர் ''பேதுரு'' என அழைக்கப்படுவார். அதற்கு, பாறை, கல் என்று பொருள். அந்த உறுதியான கல்லின்மீது திருச்சபை கட்டி எழுப்பப்படும். இதன் பொருள் என்ன? பேதுரு திருச்சபையில் ஒரு முக்கிய பொறுப்பு வகிக்கிறார். பன்னிரு திருத்தூதர்கள் நடுவே பேதுருவை முதல்வராக ஏற்படுத்திய இயேசு தாம் உருவாக்கிய திருச்சபையை அன்புச் சமூகமாக வழிநடத்தும் பொறுப்பையும் அவர்களிடம் கொடுக்கிறார். இருப்பினும், திருச்சபை என்பது இயேசுவின் பெயரால் கூடி வருகின்ற அன்புச் சமூகம். சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த இயேசுவின் ஆவியானவர் திருச்சபையின் உயிர்மூச்சாக இருக்கின்றார். அவருடைய தூண்டுதலுக்கு நாம் செவிமடுக்க வேண்டும்; நம் நடுவே உயிருடன் இருந்து செயலாற்றும் அவருடைய துணையோடு ''இயேசு யார்'' என்னும் கேள்விக்குப் பதில் இறுக்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்பை எந்நாளும் துய்த்து வாழ்ந்திட அருள்தாரும்.

திருவழிபாடு - பொதுக்காலம் 19ஆம் வாரம் (13.08.2017)

ஆகஸ்ட் 10, 2017

இன்றைய வாசகங்கள்: அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம். 19:9, 11-13,திருப்பாடல்: 85: 8-13,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 9: 1-5,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 22-33) 

 

திருப்பலி முன்னுரை

ஆண்டவரே, உம் பேரன்பையும், மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். கிறிஸ்து இயேசுவில் அன்புமிக்க சகோதர சகோதரிகளே, நல்லதையே அனைவருக்கும் அருள்பவராகிய நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி உங்கள் அனைவரையும் அன்புடன் இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வரவேற்று நிற்கின்றோம். இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் பத்தொன்பதாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம். கடவுளின் வார்த்தையைக் கேட்டு நம்பிக்கையோடு செயல்படுகின்றவரைக் கடவுள் கரம் நீட்டிக் காத்துக்கொள்வார் என்னும் நம்பிக்கையோடு வாழ்கின்ற மனிதர்களிடம், புயல்போன்ற துன்பங்களும், துயரங்களும், வருத்தங்களும், வியாதிகளும் வந்தாலும் கடவுள் கைவிடமாட்டார் என்னும் உறுதியான செய்தி இன்றைய இறைவார்த்தைகள் வழியாக தெளிவாக உணர்த்தப்படுகின்றது. இச் செய்திகளை நம் உள்ளத்தில் ஆழப் பதித்தவர்களாக, கடவுளின் வார்த்தையில் நம்பிக்கை கொண்டு செயல்படுகின்ற மக்களாக வாழ இத் திருப்பலியில் வரம் கேட் டுச் செபிப்போம்.


 

முதல்வாசகம்
மலை மேல் என் திருமுன் வந்து நில்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம். 19:9, 11-13

எலியா ஒரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தபின் அங்கிருந்த குகைக்கு வந்து, அதில் இரவைக் கழித்தார். அப்போது ஆண்டவர், "வெளியே வா: மலைமேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்லவிருக்கிறேன் " என்றார். உடனே ஆண்டவர் திருமுன் பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச் சிதறடித்தது. ஆனால் ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை. காற்றுக்குப் பின் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திலும் ஆண்டவர் இருக்கவில்லை. நிலநடுக்கத்திற்குப் பின் தீ கிளம்பிற்று. தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது. அதை எலியா கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு 
இறைவா உமக்கு நன்றி


 

பதிலுரைப்பாடல் 
பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பையும் மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
திருப்பாடல்: 85: 8-13

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன். தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார். அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி. நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும் பல்லவி

பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும். நீதியும் நிறைவாழ்வும் ஒன்றை யொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும். விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி

நல்லதையே ஆண்டவர் அருள்வார். நல்விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும். அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். பல்லவி 

 

இரண்டாம் வாசகம் 
என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 9: 1-5

சகோதரர் சகோதரிகளே! கிறிஸ்துவைச் சார்ந்த நான் சொல்வது உண்மை, பொய்யல்ல. தூய ஆவியால் தூண்டப்படும் என் மனச்சான்றே நான் சொல்வதற்குச் சாட்சி. உள்ளத்தில் உனக்குப் பெருந்துயரமும் இடைவிடாத வேதனையும் உண்டு. என் சொந்த இனத்தைச் சேர்ந்த என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன். அவர்கள்தாம் இஸ்ரயேல் மக்கள்: அவர்களையே கடவுள் தம் மக்களாக ஏற்றுக் கொண்டார். அவர்கள் நடுவில்தான் கடவுள் தம் மாட்சியை விளங்கச் செய்தார். உடன்படிக்கைகளும் திருச்சட்டமும் திருவழிபாடும் வாக்குறுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. குலமுதல்வர்களின் வழிவந்தவர்கள் அவர்கள்: மனிதர் என்னும் முறையில் கிறிஸ்துவும் அவர்களிடமிருந்தே தோன்றினார். இவரே எல்லாவற்றுக்கும் மேலான கடவுள்: என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு 
இறைவா உமக்கு நன்றி 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக் கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 22-33

அக்காலத்தில் இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார். மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்.அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக் கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது.இரவின் நான்காம் காவல்வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, " ஐயோ, பேய் " என அச்சத்தினால் அலறினர்.உடனே இயேசு அவர்களிடம் பேசினார். " துணிவோடிருங்கள் : நான்தான், அஞ்சாதீர்கள் " என்றார். பேதுரு அவருக்கு மறுமொழியாக, " ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும் " என்றார். அவர், "வா " என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, " ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும் " என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, " நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்? " என்றார். அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது.படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, " உண்மையாகவே நீர் இறைமகன் " என்றனர்.

-இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 
-கிறிஸ்துவே உமக்கு புகழ்


 

விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன். 
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


நிறைவாழ்வை வாக்களிக்கும் தந்தையே இறைவா! 
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் ஆகியோர், இன்றைய நாட்களில் நடைபெறும் நிகழ்வுகளின் வழியாக ஆண்டவராம் இறைவனாகிய நீர் உரைக்கும் செய்தியை சரியான விதத்தில் புரிந்து கொண்டு பணியாற்றிட வேண்டிய ஞானத்தை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

நல்லதையே அருள்கின்ற தந்தையே இறைவா! 
இறையரசின் மக்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும்: நல்லதையே நினைக்கவும், நல்லதையே செய்யவும், அதன் மூலமாக இறையரசைப் பரப்பும் சீடர்களாக மாறவும் வேண்டிய அருள்வரத்தை எமக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருளிரக்கம் உடையவரான தந்தையே இறைவா! 
வறுமையில் வாடுவோர், பட்டினியால் துன்பப்படுவோர், உண்மை அன்பின்றிப் பரிதவிப்போர் ஆகியோரைத் தேற்றி, தூய்மையான உம் பேரன்பையும் மீட்பையும் அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

விசுவசிப்போருக்கு வாழ்வாகிய எம் இறைவா! 
பூமியில் நிலவும் மிக உயர்ந்த அழுத்தம், மிக அதிகமான வெப்பநிலை ஆகியவற்றைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு, வைரமாக மாறிடும் நிலக்கரிபோல் எம் இளையோர்கள் இவ்வுலகம் தரும் அழுத்ததாலும், வெப்பத்தாலும் திட்டப்பட்டு உம் மணிமுடியில் மின்னிடும் வைரமாய்த் திகழ்ந்திட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்

படைப்பின் நாயகனே எம் இறைவா! 
இவ்வுலகம் உம் இறைவெளிப்பாடு என்பதனை நாங்கள் அனைவரும் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் உதவிப் புரியவும், இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழவும், அன்பு, மகிழ்ச்சி. பரிவு இவை இன்று மனிதசமுதாயத்தில் நலிவடையாமல் பிறருக்கு உதவிபுரியவும் எடுத்துக்காட்டான வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

குழந்தைகள் விண்ணரசின் சொந்தங்கள் என்று மொழிந்த எம் இறைவா, 
எம் குழந்தைகள், இளமையில் அதிகமாக உம்மைத் தேடவும்., உம் வர்த்தைகளை வாழ்வாக்கி, தம் சொல்லாலும் திருஅவைக்கும், மனிதகுலச் சமுதாயத்திற்கும். சான்றுப் பகரும் வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்..

இளைஞனே எழுந்திரு, எழுந்து ஒளி வீசு என்றவரே! எம் இறைவா! 
இவ்வலகத் தலைவர்கள் தங்கள் வாழ்வால் எடுத்துக்காட்டான வாழ்வை, பெரும்பாலும் அவர்களால் கொடுக்க முடிவதில்லை. நீரோ, உம் சொல்லும், செயலும் விண்ணகத் தந்தையோடு இணைந்திருந்தது போல, எம் இளையோர் அனைவரும் உம் வார்த்தையை வாழ்வாக்கி, உப்பாக உலகிற்கு ஒளியாகத் திகழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

இன்றைய சிந்தனை

''இயேசு கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, 'ஐயோ, பேய்' என அச்சத்தினால் அலறினர்'' (மத்தேயு 14:26) 

இயேசு கடல்மீது நடந்த நிகழ்ச்சியை மத்தேயு, மாற்கு, யோவான் ஆகிய நற்செய்தியாளர் குறித்துள்ளனர். மத்தேயு இந்நிகழ்ச்சியை விவரிக்கும்போது இயேசுவிடம் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்னும் பாடத்தைப் புகட்டுகிறார். கடல்மீது நடப்பது இயற்பு விதிகளின்படி இயலாத காரியம். ஆனால் இயேசுவின் வல்லமைக்கு முன்னால் இயற்பு விதிகள் கூட பணிந்துவிடும் என்பது மத்தேயு தரும் கருத்து. என்றாலும், சீடர்கள் இதைப் புரிந்துகொள்ளவில்லை. இயேசு உண்மையிலேயே யார் என்பதை அவர்கள் படிப்படியாகத்தான் உணர்ந்துகொண்டார்கள். அதுவும், இயேசு சிலுவையில் தொங்கி உயிர்விட்டு, கல்லறையிலிருந்து உயிர்பெற்றெழுந்து அவர்களுக்குத் தோன்றி அவர்களைத் திடப்படுத்திய பிறகே அவர்கள் இயேசுவிடத்தில் கொண்ட ''நம்பிக்கை'' முழுமையானதாக மாறிற்று. நம்மை அச்சுறுத்துகின்ற சக்திகள் பல இவ்வுலகில் உள்ளன. பசி, பிணி, நோய், சாவு ஆகிய இன்னல்கள் ஒரு புறம், மனித உறவுகளில் ஏற்படுகின்ற விரிசல்கள் மறுபுறம் என்று மனித வாழ்க்கையில் ஏற்படுகின்ற சிக்கல்களுக்கும் அழுத்தங்களுக்கும் எல்லையில்லை. அவ்வேளைகளில் நாம் கடவுளின் உடனிருப்பை உணரத் தவறிவிடுவதுண்டு. ஏன், கடவுளையும் அவர் நமது மீட்பராக அனுப்பிய இயேசுவையும் அடையாளம் காணாமல் பேயோ பூதமோ நம்மை நெருங்கி வருகிறதோ என்று தப்புக் கணக்குப் போட்டு, நாம் தத்தளிப்பதும் உண்டு. 
நாம் அச்சத்தினால் அலறுகின்ற வேளைகளில் இயேசுவிடமிருந்து பிறக்கின்ற ஆறுதலான சொற்கள் நம் உள்ளத்தில் அமைதி கொணர வேண்டும். ''துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்'' என இயேசு சீடரைப் பார்த்துக் கூறியதுபோல இன்றைக்கும் நம்மைப் பார்த்துக் கூறுகிறார். புயல் மறைந்தது; காற்று அடங்கியது. சீடரின் அச்சமும் பறந்தோடியது. அந்த அமைதியான நேரத்தில் சீடர் இயேசுவிடம் தாம் கொண்ட நம்பிக்கையை அறிக்கையிடுகின்றனர்: ''உண்மையாகவே நீர் இறைமகன்''. இந்த நம்பிக்கை நமது நம்பிக்கையாக வெளிப்படும்போது இயேசு ஒருபோதும் நம்மைவிட்டு அகன்றிருக்கவில்லை என்னும் உண்மை நம் உள்ளத்தில் மிளிர்ந்து ஒளிவீசும்.

மன்றாட்டு:

இறைவா, கவலைகள் நடுவிலும் உம் உடனிருப்பு எங்களை விட்டு மறைவதில்லை என நாங்கள் உணர்ந்து வாழ அருள்தாரும்.


 

தூய ஆவியானவர் பெருவிழா 4 ஜூன் 2017

ஜூன் 02, 2017

தூய ஆவியானவர் பெருவிழா 4 ஜூன் 2017

I. திருத்தூதர் பணிகள் 2:1-11       II. 1 கொரிந்தியர் 12:3-7,12-13      III. யோவான் 20:19-21

'உடல்கள் பல – உயிர் ஒன்றே'

கடந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழா நாள்களில் பள்ளி ஒன்றுக்கு கருத்தமர்வுக்குச் சென்றிருந்தேன். கருத்தமர்வின் ஒரு பகுதியாக பலூன்களைக் கொண்டு விளையாட்டு ஒன்று நடத்தினேன். எல்லாருக்கும் பழக்கமான விளையாட்டுதான் அது. ஒவ்வொருவருக்கும் காற்று நிரப்பப்பட்ட பலூன் ஒன்றைக் கொடுத்து அதை அவர்கள் தங்கள் தலைக்கு மேலே விட்டு, தங்கள் கைகளைப் பயன்படுத்தாமல், தங்கள் வாயினால் ஊதியே பலூன்களை மேலே நிற்க வைக்க வேண்டும். மாணவர்கள் மிக உற்சாகமாக விளையாடினார்கள். சிலர் தங்கள் கைகளை பின்னால் கட்டிக் கொண்டனர். சிலர் தங்கள் கைகளை பாதி உயர்த்திக் கொண்டனர். சிலரின் பார்வை தங்களுக்கு அருகில் இருப்பவர்களின் பலூன்கள் மேல் இருந்தது. விறுவிறுப்பாக விளையாட்டு நடந்து கொண்டிருந்தது. அந்நேரம் ஒரு பலூன் மட்டும் காற்று இறங்கி அப்படியே கீழே விழுந்துவிட்டது. காற்று இறங்கிவிட்ட பலூனை என்னதான் வாயால் ஊதி நிறுத்த முயன்றாலும் அது கீழேதான் விழும். இல்லையா? இதற்கிடையில் ஒரே ஒரு மாணவனின் பலூன் தவிர எல்லா பலூன்களும் தரையில் விழுந்துவிட்டன.

'பலூன் உயரத்தில் நிறுத்தப்படவேண்டுமென்றால் தொடர்ந்து அதன்மேல் ஊதிக்கொண்டே இருக்க வேண்டும். இலக்கை நாம் அடைய வேண்டுமென்றால் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்' என தத்துவம் சொன்னேன். (வாங்குற காசுக்கு இப்படி ஏதாச்சும் சொல்லணும்ல பாஸ்!)

தன் பலூன் காற்றிறங்கி தரையில் விழுந்த மாணவன் கையை உயர்த்தி, 'நான் ஊதத்தானே செய்தேன். ஆனால் என் பலூன் விழுந்துவிட்டதே. அதற்கு என்ன அர்த்தம்?' என்று கேட்டான். 

காற்றில்லாத பலூன் போல நானும் விழுந்தேன்.

நிற்க.

இன்று நாம் தூய ஆவியானவரின் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

ஒரு பலூனுக்கு உள்ளிருந்து அதற்கு உருவம் கொடுப்பதும், அந்த பலூனை அந்தரத்தில் நிற்க வைப்பதும் காற்று. நம்பிக்கை கொண்ட உங்களுக்கும், எனக்கும் உருவம் கொடுப்பதும், உங்களையும், என்னையும் நாம் இருக்கின்ற இடத்தில் நிறுத்தி வைப்பதும், இயக்குவதும் தூய ஆவி. பலூன் உருவகம் ரொம்ப சிம்ப்ளிஸ்டாக இருந்தாலும், தூய ஆவியானவர் பற்றி ஓரளவு புரிந்துகொள்ள இது உதவுகிறது. எப்படி? தொடக்கத்தில் மனிதனைப் படைத்த கடவுள், அவனை களிமண்ணால் செய்து அவனது நாசிகளில் ஊதுகின்றார். மனிதன் உயிர் பெறுகின்றானர். ஆக, மனிதனுக்குள் இருந்து மனிதம் என்ற நிலையை உருவாக்குபவர் அல்லது அந்த நிலைக்கு உருக்கொடுப்பவர் ஆவி. இயேசுவின் இறப்புக்குப் பின் யூதர்களுக்கு அஞ்சி, பூட்டிய கதவுகளுக்குப் பின் இயக்கம் இ;ல்லாமல் தேங்கிக் கிடந்தவர்கள்மேல் ஊதி, 'தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்' என்று அவர்களை இயக்குகின்றார். முதல் படைப்பில் இறைவன் தன் ஆவியினால் மனிதர்களுக்கு உரு கொடுத்தார். இரண்டாம் படைப்பாம் பெந்தகோஸ்தே நாளில் இறைவன் தன் ஆவியால் மனிதர்களுக்கு இயக்கம் கொடுத்தார்.

சொல்லாடல் விளக்கம் 1: 'பெந்தகோஸ்தே'

'பெந்தகோஸ்தே' என்ற சொல்லாடல் 'பென்ட்டா' ('ஐந்து') என்ற கிரேக்க சொல்லிலிருந்து பிறக்கிறது. 'ஐம்பதாம் நாள்.' எதனுடைய ஐம்பதாம் நாள்? யூதர்கள் கொண்டாடும் பாஸ்கா திருவிழாவிலிருந்து ஐம்பதாம் நாள். இந்த நாளில் தான் இஸ்ரயேல் மக்கள் தங்கள் அறுவடையின் முதற்கனிகளை ஆண்டவருக்கு அர்ப்பணம் செய்வார்கள். மேலும், இந்த திருநாளைக் கொண்டாட யூதர்கள் அனைவரும் எருசலேம் நகருக்குச் செல்ல வேண்டும். மேலும் இந்த திருநாள் 'சவுவோத்' ('வாரங்கள்') எனவும் அழைக்கப்பட்டது. அதாவது, ஏழு முறை ஏழு வாரங்கள் (49 நாள்கள்) திருநாள். தொடக்கத்தில் அறுவடைத்திருநாளாக இந்த விழா காலப்போக்கில், 'யாவே இறைவன் நோவா வழியாக அனைத்துலக மக்களுடன் செய்த உடன்படிக்கையின் திருநாளாகவும்,' 'மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுடன் செய்த உடன்படிக்கையின் திருநாளாகவும்' கொண்டாடப்பட்டது. ஆக, இன்றைய நாள் அறுவடையின் நாள், உடன்படிக்கையின் நாள்.

கிறிஸ்தவர்களாகிய நமக்கு இந்த நாள் உயிர்ப்புக்காலத்தின் ஐம்பதாம் நாள். அல்லது பாஸ்கா கொண்டாடி நாம் ஐம்பது நாள்களைக் கடந்திருக்கிறோம். இன்றைய நாளோடு பாஸ்கா அல்லது உயிர்ப்புக்காலம் நிறைவுக்கு வருகின்றது. இந்த நாளில்தான் பேதுருவை தலைவராகக் கொண்ட திருச்சபை பிறந்தது. இன்று பெந்தகோஸ்தே என்ற பெயரில் ஏறக்குறைய 34000 சபைகள் இருப்பதாக ஆய்வு சொல்கிறது. 1517ஆம் ஆண்டு தொடங்கிய சீர்திருத்த சபையிலிருந்து ஆண்டுதோறும், ஏன் நாள்தோறும் புதிய சபைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. ஆக, இன்று எந்த சபையின் பிறந்தநாள் என்றும் நமக்கு குழப்பமாக இருக்கிறது. 

இந்த நாளில்தான் திருத்தூதர்கள்மேலும், அவர்களோடு இறைவேண்டலில் ஒன்றித்திருந்த அன்னை மரியாள் மேலும் தூய ஆவி பொழியப்படுகிறது. திருத்தூதர்கள் கதவுகளைத் திறந்து வெளியே வந்து வாய்திறந்ததும் இந்நாளே. ஆகையால்தான் இந்நாளை நாம் 'தூய ஆவியானவர் பெருவிழா' என்று கொண்டாடுகின்றோம்.

சொல்லாடல் விளக்கம் 2: 'டைப் ஸீன்'

அது என்ன 'டைப் ஸீன்'? 'டைப் ஸீன்' என்பது ஓர் இலக்கியச் சொல்லாடல். அதாவது, ஒரே மாதிரியான வார்த்தை அல்லது வடிவ அமைப்புக்களைக் கொண்டு பல கதையாடல்களை அமைப்பது. உதாரணத்திற்கு, விவிலியத்தில் வரும் பெண் பார்க்கும் படலம். 

பெந்தகோஸ்தே நிகழ்வை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கும் போது நம் கண்முன் இரண்டு டைப்ஸீன்கள் வந்துபோகின்றன: ஒன்று, சீனாய் மலை. சீனாய் மலையில் இறைவனின் பிரசன்னம் இறங்கி வந்தபோது பேரிரைச்சல், இடி, மின்னல், நெருப்பு, காற்று போன்றவை இருந்தன. லூக்கா நற்செய்தியாளர் இந்தக் காட்சியை பின்புலமாக வைத்து 'பெந்தகோஸ்தே' நிகழ்வை எழுதியிருக்கலாம் என்பது முதல் கருத்து.

இரண்டாவதாக, பாபேல் கோபுர நிகழ்வின் (காண். தொநூ 11:1-10) தலைகீழாக்கம்தான் பெந்தகோஸ்தே. அங்கே மொழிகளில் குழப்பம் ஏற்பட்டு மக்கள் சிதறுண்டு போயினர். இங்கே 12 நாட்டவர்கள் ஒரே இடத்தில் கூடியிருந்தாலும் ஒவ்வொருவரும் தத்தம் மொழிகளில் அனைத்தையும் புரிந்துகொண்டனர். 
மூன்றாவதாக, பழைய இஸ்ரயேல் இனம் அன்றைய பெந்தகோஸ்தே நிகழ்வில் உருவானதுபோல இயேசுவை தலைவராகக் கொண்ட புதிய இஸ்ரயேல் இனம் இன்று உருவாகிறது.

சொல்லாடல் விளக்கம் 3: 'தூய ஆவி'

படைப்பின் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் மனிதன் மேல் ஊதிய ஆவியை எபிரேயத்தில் 'ருவா' என பதிவு செய்கிறார் ஆசிரியர். (இயக்கம் தருவது 'ருவா'. இன்று நம்மை இயங்க வைப்பது 'ரூவாய்'. ஏதோ தொடர்பு இருக்கோ?!). இந்த 'ருவா' மனிதனின் தொண்டையில் இருப்பதாக இஸ்ரயேல் மக்கள் நம்பினர். ஆகையால்தான் நாம் இறந்தவுடன் நம் வாய் பிளக்கிறது. நம் தொண்டை வெளியில் தெரிகிறது. இந்த 'ருவா' இல்லை என்றால், 'பஸார்' (உடல்) என்பது வெறும் இறைச்சித்துண்டுதான். இந்த முதல் ஏற்பாட்டு புரிதலில் உடல் பெரிதா அல்லது ஆவி பெரிதா என்ற குழப்பங்கள் இல்லை. 

நாள்கள் கடந்தபோது, தங்களைச் சுற்றியிருந்த மற்ற மக்களின் புரிதல்களால் தாக்கப்படுகின்றனர் இஸ்ரயேலர். அந்த நாள்களில் கிரேக்கர்கள், 'உடல்-ஆவி', 'ஊன்-ஆவி' என இருதுருவ புரிதல்களைக் கொண்டிருந்தனர். ஊன் அழியக்கூடியது. ஆவி அழியாதது. அழியக்கூடியது நிலையற்றது. அழியாதது நிலையானது. இப்படியாக அவர்களின் சிந்தனை ஓட்டம் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும், குறிப்பாக திருத்தூதர் பவுலையும் பாதித்தது. ஆகையால்தான் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில், 'ஊனியல்பு-ஆவிக்குரிய இயல்பு' என இருதுருவ போராட்டத்தைப் பற்றி எழுதுகின்றார் பவுல். இப்போது இறையயில் இன்னும் காம்ப்ளிகேடட் ஆகி, 'உடல்-உயிர்-ஆன்மா' என மூன்றாக உருவெடுத்துள்ளது.

நம் உடலில் தூய ஆவியானவர் இருக்கின்றார் என்றால் அவர் எப்படி இருக்கிறார்? உடலாகவா? உயிராகவா? அல்லது ஆன்மாவாகவா? உயிர் வாழும் அனைவருக்கும், அனைத்திற்கும் உயிர் இருக்கின்றது. அந்த உயிர்தான் தூய ஆவி என்றால் ஏன் எல்லா உயிர்களும் - மனித உயிர்களும் - ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில மனிதர்களில் தூய ஆவி தீய ஆவியாக மாறிவிடுவது ஏன்? அல்லது தூய ஆவி போல தீய ஆவியும் இருக்கின்றதா? 

தூய ஆவியானவர் ஒரே கடவுள், மூன்று ஆள்களில் மூன்றாம் நபர் என்றும், தந்தைக்கும், மகனுக்கும் இடையே இருக்கின்ற உறவின் கனியே தூய ஆவியானவர் என்றும் நம் திருஅவையின் மறைக்கல்வி போதிக்கின்றது. தூய ஆவியானர் நம் திருமுழுக்கின்போது நமக்கு அருளப்படுகிறார் என்பதும், உறுதிப்பூசுதலில் அவரில் நாம் உறுதிப்படுத்தப்படுகிறோம் என்பதும் அதன் போதனையே. குருத்துவ அருள்பொழிவில் அருள்பணியாளர்களையும், ஆயர்களையும் புனிதப்படுத்துவது இந்த ஆவியே. இப்படி இருக்க, 'நீங்கள் ஆவியின் அபிஷேகம் பெற்றுவிட்டீர்களா?' 'நீங்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டீர்களா?' என்னும் மற்றவர்களின் கேள்விகளுக்கு நாம் என்ன விடை அளிப்பது? 'இங்கே கூடியிருக்கும் அனைவர் மேலும் இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் அனைவர்மேலும் உம் ஆவியை நீர் பொழிவீராக!' என்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அழுத்திச் சொல்லும் போதகர்களின் வார்த்தைகளை நாம் எப்படி புரிந்துகொள்வது?

இந்தப் பின்புலத்தோடு இன்றைய நாளின் சிந்தனையைத் தொடங்குவோம்.

இன்றைய முதல் வாசகம் நமக்கு மிகவும் தெரிந்த வாசகம். தூய ஆவியின் வருகையை திருத்தூதர் பணிகள் நூலில் நற்செய்தியாளர் லூக்கா வர்ணனை செய்கின்றார். எருசலேமில் எல்லா மக்களும் கூடியிருக்கும் பெந்தகோஸ்தே நாளில் அந்த நிகழ்வு நிகழ்வதாகவும், எல்லா மக்கள் முன்னிலையிலும் இந்த நிகழ்வு நடந்தேறியது எனவும் பதிவு செய்கின்றார். இந்த வாசகத்தில் இரண்டு விடயங்கள் கவனிக்கத்தக்கவை: ஒன்று, தூய ஆவியானவரின் வருகை நிகழ்வு ஐந்து புலன்களையும் தழுவக்கூடியதாக இருக்கிறது: 'பெருங்காற்று' (தொடுதல்), 'இரைச்சல்' (கேட்டல்), 'நெருப்பு' (நுகர்தல்), 'பிளவுண்ட நாவுகள்' (பார்த்தல்), மற்றும் 'வௌ;வேறு மொழிகளில் பேசினர்' (பேசுதல்). இரண்டு, தூய ஆவியானவரின் வருகை நிகழ்வு சூழ்ந்திருந்தவர்கள் நடுவில் மூன்று வகையான எதிர்வினையை உருவாக்குகிறது: 'குழப்பம்,' 'மலைப்பு,' மற்றும் 'ஏளனம்.' எல்லாரும் குழப்பம் அடைகின்றனர். கொஞ்சப் பேர் மலைப்புக்குள்ளாகின்றனர். கொஞ்சப்பேர் ஏளனம் செய்கின்றனர். ஆவியின் வருகையும் அவருடைய செயல்களும் இன்றும் இந்த மூன்று எதிர்வினைகளையே உருவாக்குகின்றன.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுலடியார் ஆவியானவரின் வழங்கும் பல்வேறு கொடைகளைப் பட்டியலிட்டு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கொடையைப் பெற்றுள்ளார் எனவும், அனைத்துக் கொடைகளும் ஒருங்கே அமையப்பெறும்போது திருச்சபை வளர்கிறது எனவும், ஒவ்வொருவரும் தான் பெற்ற கொடையை ஒட்டுமொத்த திருஅவையின் வளர்ச்சிக்கும், நன்மைக்கும் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்துகின்றார் பவுல். ஆக, கொடைகளின் இருப்பு பகிரப்படுவதற்கே. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில், உயிர்ப்புக்குப் பின் தன் சீடர்களுக்குத் தோன்றும் இயேசு அவர்கள்மேல் தன் ஆவியை ஊதுகின்றார். இவ்வாறு தன் ஆவியை அவர்கள்மேல் ஊதுமுன் தன் கொடையாக 'அமைதியையும்,' தன் கட்டளையாக 'மன்னிப்பையும்' தருகின்றார்.

இந்த மூன்று வாசகங்களும் சொல்வது என்ன?

'உடல்கள் பல. ஆனால் உயிர் ஒன்று!' – திருத்தூதர்களின் உடல்கள், ஆளுமைகள், மற்றும் பின்புலங்கள் வௌ;வேறாக இருந்தாலும் அவர்கள் மேல் இறங்கியிருக்கின்ற ஆவி ஒன்றே. இவர்கள் பேசுகின்ற மொழிகள் வேறு வேறு என்றாலும், இவர்களைச் சூழ்ந்திருக்கும் மக்கள் இவர்களைப் புரிந்துகொள்கின்றனர் என்றால், இவர்களையும், அவர்களையும் இணைக்கின்ற ஆவி ஒருவரே. இரண்டாவதாக, கொரிந்து நகர திருச்சபையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொடையைப் பெற்றிருந்தாலும், அனைத்துக் கொடைகளின் ஊற்றாக இருப்பவர் ஆவியானவர். ஆக, ஆறுகள் வௌ;வேறு என்றாலும் ஊற்று ஒன்றுதான். மூன்றாவதாக, இயேசுவில் இருந்த ஆவி சீடர்கள்மேல் ஊதப்படுவதால் அவர்களும் இயேசுவின் உயிரைப் பெற்றுக்கொள்கின்றனர். இவ்வாறாக, உடல்கள் பல என்றாலும், உயிர் ஒன்றுதான். 

இன்றைய நாள் நமக்கு வைக்கும் வாழ்வியல் பாடங்கள் எவை?

1. ஆவியின் செயல்பாடு
நாம் ஒவ்வொரு முறையும் தூய ஆவியால் இயக்கப்படுகிறோம் என்பதே நான் கொண்டிருக்கின்ற அசையாத நம்பிக்கை. நான் செய்யும் நல்லதோ, கெட்டதோ அனைத்தையும் இயக்குபவர் அவரே. அதெப்படி கெட்டதை இயக்குவார் என நீங்கள் கேட்கலாம்? 'நெருப்பில் கை வைக்காதே' என்று குழந்தைக்குச் சொன்னால் அது கேட்காது. அதே குழந்தையை ஒரே ஒரு முறை நெருப்பில் கை வைக்க அனுமதித்துவிட்டால், அது அதற்குப் பின் நெருப்பைத் தொடவே தொடாது. குழந்தை நெருப்பை தொடுவது கெட்டதுதான். ஆனால், அந்தக் கெட்டதன் வழியாக குழந்தை அதிலிருந்து விலகிக்கொள்ளும் அனுபவம் பெறுவதால் அந்தக் கெட்டதும் நல்லதே. ஒவ்வொரு கட்டத்திலும் என் ஆன்மா அல்லது என் சிந்தனையும், என்னுள் குடிகொண்டிருக்கும் ஆவியின் சிந்தனையும் 'சின்க்ரொனைஸ்' ஆகி இருக்கவேண்டும். அதாவது, இரண்டும் ஒன்றிற்கொன்று முரண்படுதல் கூடாது. இந்த எண்ணம் இன்னும் கொஞ்சம் நீட்டிச் செல்ல வேண்டும். அதாவது, ஆவியானவர் எல்லார் உள்ளும் பிரசன்னமாகி இருக்கின்றார். ஆக, நான் ஒருவர் மற்றவரோடு அவர் வழியாக இணைந்திருக்கிறேன் என்ற எண்ணமும் உருவாக வேண்டும்.

2. அமைதியும், மன்னிப்பும்
இயேசு தன் ஆவியை தன் சீடர்கள்மேல் ஊதும்போது முன்வைக்கப்படும்போது அவர் மொழிகின்ற கொடைகள் இவை இரண்டே – அமைதி, மன்னிப்பும். அமைதி மற்றும் மன்னிப்பு கொண்டிருக்கின்ற உள்ளங்கள்தாம் தூய ஆவியின் இருப்பையும், இயக்கத்தையும் அனுபவிக்க முடியும். 'அமைதியற்ற எங்கள் உள்ளங்கள் உம்மை அடையும் வரை அமைதி கொள்வதில்லை' என்கிறார் புனித அகுஸ்தினார். எனக்கு அமைதி தருவது எது? என நாம் ஒவ்வொன்றாகக் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தால், படைப்புப் பொருள்கள் எவையும் தருவதில்லை. ஏனெனில் தன்னிலே குறையுள்ள பொருள் எப்படி அமைதி தர முடியும்? தன்னிலே குறைவாக உள்ள பாத்திரம் அடுத்த பாத்திரத்தை எப்படி முழுமையாக நிரப்ப முடியும்? மேலும், மன்னிப்பு என்பது ஒருவர் மற்றவரின் தவறுகளை மன்னிப்பது அல்ல. மன்னிப்பிற்கு முதல் படி ஏற்றுக்கொள்ளுதல். அதாவது, என்னை நான் இருப்பதுபோல ஏற்றுக்கொண்டால் மட்டுமே என்னை நான் மன்னிக்க முடியும். அடுத்தவரை மன்னிப்பதிலும் அதே நிலைதான். ஆக, என்னை ஏற்றுக்கொள்ளும்போது நான் என்னிலேயே, எனக்குள்ளேயே சண்டை இட்டுக்கொள்வதை நிறுத்தி என் மனம் சமநிலை பெறுகிறது. இயல்பாக அமைதி உருவாகிறது. அந்த அமைதி என்னும் சலனமற்ற நிலையில் தூய ஆவி அசைந்தாடுவதை என்னால் உணர முடியும்.

3. உடல் பல – உயிர் ஒன்று
நமது குடும்ப வாழ்விற்கும், திருஅவை மற்றும் சமூக உறவு வாழ்வுக்கும் இந்த நிலை மிக முக்கியமானது. நாம் பேசுகின்ற மொழி, செய்கின்ற வேலை, வந்திருக்கின்ற பின்புலம் ஒன்றொக்கொன்று மாறுபட்டதாக இருந்தாலும், நம் அனைத்து உடல்களையும் இணைக்கின்ற ஆவியானவர் ஒருவரே என்று நான் உணரும்போது, என்னை அறியாமலேயே ஒருவர் மற்றவரோடு என்னையே இணைத்துக்கொள்கிறேன். எனக்கு அடுத்திருப்பவரை எனது நீட்சியாக நான் பார்க்கத் தொடங்கினால், நான் அடுத்தவரை எனது போட்டியாளராக அல்ல. மாறாக, எனது அடுத்த பாகமாக எடுத்துக்கொள்ள முடியும். பெந்தகோஸ்தே அனுபவம் சீடர்களுக்குத் தந்த மிகப்பெரிய படிப்பினை இதுதான். ஆகையால்தான் தூய ஆவியைப் பெற்றுக்கொண்ட திருத்தூதர்கள் எல்லா மக்களையும் நோக்கி பயணம் செய்ய முடிந்தது.

'தூய ஆவி என்ற ஒன்று இருப்பதாகக்கூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே!' (காண். திப 19:2) என்று வியந்த எபேசு நகர மக்களைப் போல இல்லாமல், நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் நமக்கு இருப்பை, இயக்கத்தைக் கொடுக்கும் தூய ஆவியின் துணைகொண்டு நகர்வோம்!

Fr. Yesu Karunanidhi

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 28 மே 2017

மே 27, 2017

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 28 மே 2017

I. திருத்தூதர் பணிகள் 11:1-11   II. எபேசியர் 1:17-23   III. மத்தேயு 28:16-20 

மறைதலே இறைமை

'ஆண்டவராகிய இயேசு, மகிமையின் மன்னர்,

பாவத்தையும் இறப்பையும் தோற்கடித்த வெற்றி வீரர்,

வானதூதர் வியப்புற வானங்களின் உச்சிக்கு ஏறிச் சென்றார்.

இவ்வாறு அவர் சென்றது

எங்கள் தாழ்நிலையை விட்டு அகல வேண்டும் என்பதற்காக அன்று.

மாறாக, எங்கள் தலைவரும் முதல்வருமாகிய அவர்

முன்னரே சென்ற அவ்விடத்திற்கு

அவர் உறுப்பினர்களாகிய நாங்களும்

அவரைப் பின் தொடர்ந்து செல்வோம் என்று 

நம்பிக்கை கொள்வதற்காகவே'

இன்றைய திருப்பலியின் தொடக்கவுரையில் நாம் காணும் தூய அகுஸ்தினாரின் இவ்வார்த்தைகள் இன்றைய நாளின் பொருளை மிக நேர்த்தியாக நமக்கு எடுத்துரைக்கின்றன.

'இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து...' (9:51) என லூக்கா இயேசுவின் பயணத்தை முன்கூட்டியே தொடங்கி வைக்கிறார். இயேசுவின் வாழ்வில் நிறைவு அவரின் விண்ணேற்றம். லூக்காவின் இந்தப் புரிதலுக்கு மூன்று பின்புலங்கள் இருந்தன:

பின்புலம் 1: இருதுருவ சிந்தனை

ஒளி-இருள், பகல்-இரவு, நன்மை-தீமை என இருதுருவ சிந்தனைக்குப் பழக்கப்பட்டது மனித மனம். இந்த இருதுருவ சிந்தனையின் படி, இறங்கி வரும் யாரும் ஏறிச் செல்ல வேண்டும். ஆக, இறங்குதல்-ஏறுதல் அவசியம். இயேசு, கடவுளின் மகன், பிறந்து, இறங்கி வந்தார் என்றால், அவர் இறந்து, ஏறிச் செல்ல வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை வட்டம் முழுமை அடையும்.

பின்புலம் 2: அடுக்கு உலக சிந்தனை 

கிரேக்க சிந்தனையாளர் பிளேட்டோ தொடங்கி காலங்காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது 'அடுக்கு உலகம்.' அது என்ன அடுக்கு உலகம்? இந்த உலகத்தில் மூன்று அடுக்குகள் உள்ளன. மேல் அடுக்கு வானம், நடு அடுக்கு பூமி, கீழ் அடுக்கு பாதாளம். கடவுளர்கள், குட்டிக் கடவுளர்கள், தூதர்கள் ஆகியோரின் உறைவிடம் மேல் அடுக்கு. தீயவர்கள், கொடியவர்கள், தீமை இவர்களின் உறைவிடம் கீழ் அடுக்கு. இந்த இரண்டிற்கு நடுவில் உள்ள அடுக்கில் இருப்பவர்கள் இரண்டு பண்புகளையும் தங்களுக்குள் கொண்டிருப்பவர்கள். ஆனால் இந்த அடுக்கு ஒரு நிழல் அடுக்கு. இங்கு காணும் எல்லாம் மேல் மற்றும் கீழ் அடுக்குகளின் ஜெராக்ஸ் பிரதிகள். மேல் அடுக்கிலிருந்து நடு அடுக்கிற்கு வந்த இயேசு, தன் இறப்பால் கீழ் அடுக்கையும் சந்தித்துவிட்டு, மீண்டும் மேல் அடுக்கிற்கு ஏறிச் செல்கின்றார். நடு அல்லது கீழ் அடுக்கு அவரைத் தன்னகத்தே வைத்துக்கொள்ள இயலாது. ஏனெனில் அவர் மேலடுக்கைச் சார்ந்தவர்.

பின்புலம் 3: மறைதல்-நிறைதல் சிந்தனை

லூக்கா ஒரு மருத்துவர். மருத்துவத்தின் முக்கியமான கூறு 'மறைதல்-நிறைதல்.' புரியலையா? நமக்கு வரும் நோய்களுக்கு காரணம் என்ன? 'இருக்க வேண்டிய ஒன்று மறைந்தால்' (எ.கா. இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல்) 'இருக்கக் கூடாத ஒன்று நிறைந்தால்' (எ.கா. இரத்தத்தில் சர்க்கரை நிறைதல்) அது நோய். மருத்துவரின் பணி என்ன? 'குறையை நிறைவு செய்வது,' 'நிறைதலை கரைத்துக் குறைப்பது.' அதிகம் மறைந்தாலும் ஆபத்து. அதிகம் நிறைந்தாலும் ஆபத்து. இயேசு மறைய வேண்டும். சீடர்கள் நிறைய வேண்டும். ஆனால், இயேசுவும் முழுமையாக மறைந்துவிடக் கூடாது. சீடர்களும் முழுமையாக நிறைந்துவிடக் கூடாது. இந்த இரண்டையும் சமன்படுத்த லூக்கா கையில் எடுக்கும் இறையியல்கூறுதான் விண்ணேற்றம். ஒரு சின்ன அறையில் லேன் நெட்வொர்க் கனெக்ஷன் வழியாக இயேசுவை சீடர்களோடு இணைத்து வைத்திருந்த லூக்கா, அவரை அப்படியே தூக்கி உயரமான ஒரு வைஃபை ரவுட்டராக மாற்றிவிடுகின்றார். இப்போது இயேசுவோடு யாரும் தங்களை இணைத்துக் கொள்ள முடியும். தேவையானதெல்லாம் 'நம்பிக்கை' என்ற ஐந்தெழுத்து பாஸ்கோட் மட்டுமே.

இந்த மூன்றும் விண்ணேற்றம் என்பதைப் புரிந்து கொள்ள நமக்குப் பின்புலமாக இருந்தாலும், விண்ணேற்றத்தை ஏற்றுக்கொள்ளவும், நம்பவும், புரிந்து கொள்ளவும் மூன்று கூறுகள் தடைகளாக நிற்கின்றன:

தடை 1: இயேசுவின் உடல்

மனித உடல் அல்லது உரு ஏற்றதால் இயேசு பிறந்தார். வளர்ந்தார். சாப்பிட்டார். காணாமல் போனார். கிடைத்தார். நடந்தார். பேசினார். சிரித்தார். அழுதார். இறந்தார். எப்படியோ உயிர்த்தும் விட்டார். உயிர்த்தவர் வெறும் ஆவியாக வராமல் உடலோடு வந்தார். சீடர்களுக்குத் தோன்றினார். தன் உடலைத் தொட்டுப் பார்க்கச் சொன்னார். சாப்பிட்டார். வழிநடந்தார். அப்பம் பிட்டார். இதுவரைக்கும் சரி. ஆனால், விண்ணேற்றம் அடையும்போது அவர் உடலோடு மேலே சென்றாரா? ஆம் என்று சொல்கிறது எருசலேம் விண்ணேற்ற ஆலயம். அங்கே இயேசுவின் இரண்டு அகன்ற பாதத்தடங்கள் இருக்கின்றன. ஒரு ராக்கெட் மேலெழும்பி செல்வதுபோல, புவிஈர்ப்பு விசையை வென்று, புவிஈர்ப்பு மண்டலத்தைக் கடந்து அவர் மேலே சென்றிருக்க வேண்டும். சரி போய்விட்டார். ஆனால், மனித உடலை வைத்து அவர் அங்கே என்ன செய்வார்? தந்தைக்கு உடல் இல்லை. தூய ஆவியானவருக்கு உடல் இல்லை. இவருக்கு மட்டும் உடல் இருக்குமா? இன்னும் அந்த உடலில் காயங்கள் இருக்குமா? (இருக்க வேண்டும் - ஏனெனில் மாறாதவராக இருந்தால்தானே அவர் கடவுள்!) உடல் என்று ஒன்று இருந்தால் உடை என்ற ஒன்றும் இருக்க வேண்டும். உடை இல்லாத மனித உடலை அதுவும் கடவுள்-மனிதனின் உடலை நாம் நினைத்துப் பார்க்கவும் முடியுமா? மாற்று உடைக்கு இயேசு என்ன செய்வார்? அல்லது பாதி வழி சென்ற இயேசுவின் உடல் மறைந்து ஆவியாக மாறிவிட்டதா? மனித உடலோடு இயேசு சென்றார் என்று நாம் சொல்வதே, மற்ற விலங்குகள், பறவைகள், தாவரங்களின் உடலுக்கு நாம் இழைக்கும் தீங்கு இல்லையா? மனித உடலே சிறந்தது என ஹோமோ ஸேபியன்ஸ் ஸேபியன்ஸ் தற்பெருமை கொள்வது முறையா? இயேசுவின் உடல் அவரின் விண்ணேற்றத்தை நாம் புரிந்து கொள்ள தடையாக இருக்கிறது.

தடை 2: காலம்-இடம்; கூறு

மாற்கு நற்செய்தியாளர் இயேசுவின் விண்ணேற்றம் பற்றி எழுதும்போது, 'இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்' (16:19) என எழுதிவிட்டு, உடனே, 'ஆண்டவரும் திருத்தூதர்களோடு உடனிருந்தார்' (16:20) என முரண்படுகின்றார். காலத்தையும், இடத்தையும் கடந்து கடவுளோடு வலப்புறம் அமர்ந்திருக்கும் ஒருவர், காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்ட திருத்தூதர்களோடு எப்படி உடனிருக்க முடியும்? உண்மையாகவே உடனிருந்தாரா? அல்லது உடனிருப்பு என்பது திருத்தூதர்களின் ஒரு உள்ளுணர்வு போல இருந்ததா? அதாவது, இறந்து போன என் அப்பா என்னுடன் இருக்கிறார் என்று நான் சொல்கிறேன் என்றால், 'என் கம்ப்யூட்டர் என்னுடன் இருக்கிறது' என்பது போன்ற 'இருப்பு' அல்ல அது. மாறாக, அது ஒரு உள்ளுணர்வு. ஆக, காலமும்-இடமும் இயேசுவின் உடலை ஒட்டிய இரண்டாம் தடை.

தடை 3: பார்த்தவர்கள் எழுதவில்லை, எழுதியவர்கள் பார்க்கவில்லை

இயேசுவின் விண்ணேற்றம் பற்றி மாற்கும், லூக்காவும் மட்டுமே எழுதுகின்றனர். மத்தேயுவின் இயேசு இம்மானுவேலன் ('கடவுள் நம்மோடு') என்பதால், மத்தேயு இயேசுவை நம்மோடு தங்க வைத்து விடுகிறார். மத்தேயுவின் இயேசு விண்ணேற்றம் அடைவதில்லை (காண். மத் 28:20). விண்ணேற்றத்தைப் பார்த்த திருத்தூதரும் நற்செய்தியாளரும் இயேசு அன்பு செய்த சீடருமான யோவான் இந்த மாபெரும் நிகழ்வு குறித்து மௌனம் காக்கின்றார். 'பிள்ளைகளே சாப்பிட வாருங்கள்' என்று இயேசு அழைத்தார் என சின்ன சின்ன உரையாடலையும் பதிவு செய்த யோவான் இதைப் பற்றி ஏன் எழுதவில்லை? அல்லது இயேசு விண்ணேறிச் செல்லவில்லையா? மேலும், இந்த நிகழ்வை தன் நற்செய்தியிலும் (24:50-53), தன் திருத்தூதர் பணிகளிலும் (1:6-11) பதிவு செய்யும் லூக்கா, இந்த நிகழ்வு நடந்த நேரத்தை முரண்டுபட்டு எழுதுகின்றார்: இந்த நிகழ்வு இயேசுவின் உயிர்ப்பு நாள் அன்று நடந்ததாக நற்செய்தியிலும் (24:51), நாற்பது நாட்களுக்குப் பின் நடந்ததாக திருத்தூதர் பணிகளிலும் (1:9-11) எழுதுகின்றார்.

இந்தத் தடைகளை ஒட்டி ஒரு வார்த்தைச் சிக்கலும் இருக்கிறது: 'விண்ணேற்றமா?' (ascension) அல்லது 'விண்ணேற்பா?' (assumption)

முதல் ஏற்பாட்டில் ஏனோக்கு (தொநூ 5:24) மற்றும் இறைவாக்கினர் எலியாவும் (2 அர 2:2), இரண்டாம் ஏற்பாட்டில் இயேசுவும் விண்ணேற்றம் அடைந்தனர் என்றும், திருத்தந்தை 12ஆம் பயஸ் அவர்களின் 1950 நவம்பர் 1 பிரகடனத்தின்படி அன்னை மரியாள் விண்ணேற்பு அடைந்தார் என்றும் கூறுகின்றோம். இங்கே 'விண்ணேற்றம்' என்பது செய்வினை (active voice). 'விண்ணேற்பு' என்பது செயப்பாட்டுவினை (passive voice). விண்ணேற்றம் அடைந்தவர்கள் தாங்களாகவே, தங்களின் ஆற்றலால் ஏறிச் செல்கின்றனர். இவர்களுக்கு மற்றவர்களின் துணை தேவையில்லை. ஆனால் மரியாவோ கடவுளால் அல்லது தூதர்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றார். அவர் ஏறிச் செல்ல மற்றவர்களின் துணை தேவைப்படுகிறது. முன்னவர்கள் ஆண்கள் என்பதால் தாங்களாகவே ஏறிச்சென்றார்களோ? ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்த வார்த்தை மாற்றங்களோ? தெரியவில்லை!

ஆனால், லூக்கா நற்செய்தியில் 'அனாஃபெரோ' என்ற வினைச்சொல் செயப்பாட்டுவினையிலும் ('அனஃபெரெட்டோ'), திருத்தூதர் பணிகளில் 'எபைரோ' என்ற வினைச்சொல் செயப்பாட்டுவினையிலும் ('எபெர்தெ') உள்ளது. மேலும், ஒரே நிகழ்வைக் குறிக்க லூக்கா வௌ;வேறு வினைச்சொற்களைப் பயன்படுத்துவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வார்த்தைகளை நாம் உள்ளபடி மொழிபெயர்த்தால், 'அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்' என்றும் 'அவர் எடுத்துக்கொள்ளப்பட்டார்' என்றும் சொல்ல வேண்டும். ஆக, 'இயேசு விண்ணேற்றம் அடைந்தார்' என்பது நம் புரிதலுக்கான மொழிபெயர்ப்பே அன்றி, பாட மொழிபெயர்ப்பு அல்ல.

இவ்வளவு தடைகளும், மொழியியல் சிக்கல்களும் இருக்க, இயேசுவின் விண்ணேற்றத்தை எப்படி புரிந்து கொள்வது?

கேள்வியை மாற்றிக் கேட்டால், பிரச்சினை தீர்ந்துவிடும்.

எப்படி விண்ணேற்பு? என்று கேட்பதை விடுத்து, ஏன் விண்ணேற்பு? என்று கேட்டால் விண்ணேற்பின் பொருள் தெரிந்துவிடும்.

விண்ணேற்றம் இயேசுவின் வாழ்வில் மூன்று நிலைகளில் அர்த்தம் பெறுகின்றது:

1. தன் மண்ணக பணிவாழ்வு முடிந்து, இன்று தன் தந்தையின் இல்லம் திரும்புகின்றார் (காண். பிலி 2:3-6).

2. தன் சீடர்களிடம் தன் பணியை ஒப்புவிக்கின்றார். தன் இறையரசுப் பணியைத் தொடர்ந்தாற்ற அவர்களுக்குக் கட்டளையிடுகின்றார். விண்ணேற்றம் ஒரு பிரியாவிடை நிகழ்வு. விவிலியத்தில் உள்ள பிரியாவிடை நிகழ்வுகளில் மூன்று மட்டுமே மிக நீளமானவை: இஸ்ரயேலின் குலமுதல்வர் யாக்கோபு (தொநூ 49-50), திருச்சட்டம் வழங்கிய மோசே (இச 33-34), புதிய இஸ்ரயேலின் நம்பிக்கை மற்றும் திருச்சட்டத்தின் நிறைவாம் இயேசு (திப 1:1-11). இந்த மூன்று பிரியாவிடைகளும் நான்கு கூறுகளைக் கொண்டுள்ளன: அ) ஆசியுரை, ஆ) பிரிவு, இ) பார்த்தவர்களின் பதில் மற்றும் ஈ) கீழ்ப்படிதல் அறிக்கை. இயேசு கைகளை உயர்த்தி ஆசீர் அளிக்கும் நிகழ்வும் முதல் ஏற்பாட்டு நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகவே அமைகின்றது (லேவி 9:22, சீஞா 50:20-21). ஆசியளித்தல் தரும் மகிழ்ச்சி லூக்கா நற்செய்தியின் முதல் மற்றும் இறுதி நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது (1:56, 2:20,43,45, 24:9,33, 8:13, 15:7,10). இயேசுவின் சீடர்கள் மகிழ்ச்சியோடு ஆலயம் திரும்பி இறைவனைப் புகழ்கின்றனர்.

3. துணையாளராம் தூய ஆவியானவரை அவர்கள்மேல் அனுப்புவதாக வாக்குறுதி தருகின்றார் (திப 1:4-5).

இயேசுவின் உயிர்ப்பைப் போலவே, அவரின் விண்ணேற்றமும் ஒரு நம்பிக்கையின் மறைபொருளே. 'நம்பிக்கை' என்ற இந்த ஒற்றைச் சொல்லை நீக்கிவிட்டால், இந்த நிகழ்விற்கும் நமக்கும் தொடர்பே இல்லை. 'விண்ணேற்றம் என்னும் நம்பிக்கையை' நாம் எப்படி வாழ்வாக்குவது? விண்ணேற்றம் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?

பாடம் 1: மறைதலே இறைமை

இயேசுவை மனிதனாக்க அவருக்கு மனுவுருவாதல் தேவைப்பட்டதுபோல, அவரை இறைவனாக்க அவருக்கு விண்ணேற்றம் தேவை. 'தேவை' என்பதால் இவை உருவாக்கப்பட்டவை என்று பொருள் கொள்ளக் கூடாது. மறைந்திருக்கும் வரைதான் அவன் பெயர் மறையவன் அல்லது இறைவன். ஆகையால்தான் இறைவனைப் பற்றிய அறிவை மறை-கல்வி என்கிறோம். தெரிந்துவிட்டால் அவர் இறைவன் அல்ல. கண்களுக்குத் தெரியாததால் அவர் இல்லை என்பதும் அல்ல. கண்களுக்குத் தெரியக்கூடியவை எல்லாம் மாறக்கூடியவை. மாறாதவைகள் கண்களுக்குப் புலனாவதில்லை. நம் உடலின் கண்களை மறைக்கும் அளவுக்கு நம் கன்னம் வீங்கிவிட்டது என வைத்துக்கொள்வோம். நம்மால் எதையும் பார்க்க முடியாது. என்னால் பார்க்க முடியவில்லை என்பதற்காக என் முன் இருப்பவை எல்லாம், இல்லாதவை என ஆகிவிடுமா? ஒருபோதும் இல்லை. 'ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம். ஆனால் அப்போது நேரில் காண்போம்' (1 கொரி 13:12).  இயேசு விண்ணேற்றத்தின்போதுதான் இறைவனாகின்றார். மறையும்போதுதான் இறைவனாகின்றார். இதை இன்றைய இரண்டாம் வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும் பார்க்கின்றோம். இரண்டாம் வாசகத்தில் இயேசுவை புதிய உடன்படிக்கையின் தலைமைக்குருவாக உருவக்கின்ற எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், 'அதனால்தான் கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்ட இவ்வலகின் தூயகத்திற்குள் நுழையாமல், விண்ணகத்திற்குள்ளேயே நுழைந்திருக்கிறார்' (9:24) என்றும், 'அவர் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி' (10:20) என்றும் எழுதுகின்றார். நற்செய்தி வாசகத்தில் இயேசு 'ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்' (24:51) என எழுதுகின்றார் லூக்கா. 'ஆசி வழங்குதல்' என்பது தலைமைக்குருவின் பணி மற்றும் உரிமை. இயேசு மேலே ஏறிச்சென்றவுடன், சீடர்கள் 'நெடுஞ்சாண்கிடையாக' விழுகின்றனர் ('ப்ரோஸ்குனேயோ'). இது கடவுள் முன்  மட்டுமே மனிதர்கள் செய்யும் செயல். ஆக, சீடர்கள் இங்கே இயேசுவை இறைவனாக ஏற்றுக் கொள்வதன் வெளி அடையாளமே இந்த நெடுஞ்சாண்கிடை வணங்குதல். 'கடவுள் நம்மோடு' என இறங்கி வந்தவர், 'கடவுள் நமக்காக' என ஏறிச் செல்கின்றார்.

பாடம் 2: சீடர்களின் பணி

இன்றைய நற்செய்தி வாசகத்தில் தன் சீடர்களின் பணி என இயேசு குறிப்பிடுவது மூன்று: ஒன்று,  'சீடராக்குங்கள்.' இரண்டு, 'திருமுழுக்கு கொடுங்கள்.' மூன்று, 'கற்பியுங்கள்.' 

சீடராக்குங்கள்: சீடராக்குவது வேறு, பக்தர்களாக்குவது வேறு. இயேசு தனக்கென பக்தர்களை விரும்பவில்லை. மாறாக, சீடர்களையே விரும்பினார். சீடர்களாக இருப்பதை விட பக்தர்களாக இருப்பது எளிதாக இருப்பதால் நாம் அப்படியே இருந்துவிடுகிறோம். அவரை ஒரு பீடத்தில் ஏற்றி வைத்துவிட்டு, 'என் ஆண்டவரே, என் கடவுளே' என நாம் தள்ளி நின்றுகொள்கின்றோம். மற்றவர்களையும் இப்படி நிற்கச் செய்துவிடுகின்றோம். மற்றொரு பக்கம், இயேசுவை நாம் நம் வாழ்வின் நோய், பிரச்சினை, காயம் போன்றவற்றுக்கான தீர்வாக பார்க்கின்றோம். இயேசு இவற்றுக்கு தீர்வுகள் தருபவர் அல்லர். பிரச்சினைகளே வேண்டாம் என அவர் நினைத்திருந்தால் ஒரு நொடியில் பரிசேயர், சதுசேயர், பிலாத்து, ஏரோது, யூதாசு என அனைவரையும் ஒரே நொடியில் இல்லாமல் செய்திருக்கலாம் அல்லவா! நம்மைப்போல பிறந்த அவர் நம்மைப்போல எல்லாவற்றிலும் பங்குகொண்டார். அப்படி என்றால் நமக்கும் இன்று எல்லா நோய், பிரச்சினைகளும் வரும். ஆனால், அவர் கொண்டிருந்த மனநிலையைக் கொண்டிருந்ததே சீடத்துவம்.

திருமுழுக்கு கொடுங்கள்: யார் பெயரால்? 'தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால்.' 'கழுவுங்கள்' என்பதுதான் இங்கே சொல்லப்படும் வார்த்தை. திருமுழுக்கு என்று சொல்வது நமக்கு இறையியல் பிரச்சினைகளை எழுப்புகிறது. குழந்தை திருமுழுக்கா? வயது வந்தபின் திருமுழுக்கா? தண்ணீர் ஊற்றி திருமுழுக்கா? தண்ணீரில் அமிழ்த்தி திருமுழுக்கா? ஆசை திருமுழுக்கா? இரத்த திருமுழுக்கா? என நிறைய கேள்விகளை எழுப்புகிறது. இதைத் தவிர்க்க, 'கழுவுதல்' என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். 'கழுவுதல்' என்பது நாம் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் சாதாரண ஒரு பழக்கச் சொல். கழுவுதலில் என்ன நடக்கிறது என்றால், முந்தையது மறைந்து புதிய நிலை பிறக்கிறது. அழுக்கு மறைந்து தூய்மை பிறக்கிறது. ஆக, தன்மையம் என்ற முந்தைய நிலையிலிருந்து, 'தந்தை, மகன், தூய ஆவி' என்னும் இறைமையம் நோக்கி நகர்வதே கழுவுதல்.

கற்பியுங்கள்: எவற்றை? 'நான் உங்களுக்குக் கட்டளையிட்டவற்றை.' அவர் எவற்றைக் கட்டளையிட்டார்? அன்பு ஒன்றையே. ஆக, அன்பு என்பது வெறும் சொல் அல்ல. மாறாக, ஒரு செயல். இயேசுவிடமிருந்து புறப்படும் சீடர்கள் அனைவரும் அன்பு ஒன்றை வாழ்பவர்களாகவும், கற்பிக்கிறவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

பாடம் 3: எதிர்நோக்கு

'அவர் மீண்டும் வருவார்' (திப 1:11) என்ற வார்த்தைகள்தாம் நாம் காத்திருப்பதற்கான எதிர்நோக்கை நமக்குத் தருகின்றன. எதிர்நோக்கில் தயக்கம் அறவே கூடாது (எபி 10:23). நம் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் உந்தித் தள்வது எதிர்நோக்கே. காலையில் எழுவோம் என்ற எதிர்நோக்கு இருப்பதால் தான் இரவு தூங்கச் செல்லுமுன் 'வேக்அப் கால்' வைக்கின்றோம். படிப்பது, பயணம் செய்வது, வேலை தேடுவது, தேடிய வேலையில் சம்பாதிப்பது, திருமணம் முடிப்பது, அருள்நிலை வாக்குறுதி கொடுப்பது என எல்லா வாழ்க்கை நிகழ்வுகளிலும், நிழல்களிலும் எதிர்நோக்கி இழையோடியிருக்கின்றது. இந்த எதிர்நோக்குகளுக்கெல்லாம் தாயாக இருப்பது, 'அவர் மீண்டும் வருவார்' என்ற எதிர்நோக்கும், 'நாமும் அங்கு செல்வோம்' என்ற எதிர்நோக்கும்தான். வெறும் மண்ணோடு மண்ணாக முடியப்போகும் வாழ்க்கைக்கா நாம் இவ்வளவு மெனக்கெடுகிறோம்? நாம் மண்ணைச் சார்ந்தவர்கள் அல்லர். விண்ணைச் சார்ந்தவர்கள். ஆக, எதிர்நோக்கு என்னும் விளக்கு எந்நேரமும் எரிந்துகொண்டிருக்கட்டும். மேலும், நாம் விண்ணைச் சார்ந்தவர்கள் என்பதால் நம் எண்ணங்களும் உயர்ந்த எண்ணங்களாகவே இருக்கட்டும் (காண். கொலோ 3:1).

பாடம் 4: அண்ணாந்து பார்க்காதீங்க!

'கலிலேயரே, ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள்?' (திப 1:11) என்ற கேள்வி நம்மைப் பார்த்தும் கேட்கப்படுகிறது. அண்ணாந்து பார்க்கும் ஆன்மீகம் வேண்டாம். குனிந்து வாழ்வைப் பார்க்கும் ஆன்மீகம் அவசியம். 'அவர் வருகிறார்!' என்பதற்காக அவரைத் தேடி வீட்டைவிட்டு ஓட வேண்டாம். அண்ணாந்து பார்க்க வேண்டாம். சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து சாப்பிடுங்கள். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்களா. தொடர்ந்து செய்யுங்கள். பஸ்ஸில் இருக்கிறீர்களா, தொடர்ந்து பயணம் செய்யுங்கள். ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறீர்களா, தொடர்ந்து நில்லுங்கள். நோயுற்ற ஒரு நபரோடு மருத்துவமனையில் பேசிக்கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து பேசுங்கள். டிவி பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து பாருங்கள். விளையாடிக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து விளையாடுங்கள். ஏனெனில், அவர் இவற்றிலும் வருகின்றார். எல்லாவற்றிலும் அவரால் வர முடியும்.

பாடம் 5: மகிழ்ச்சி

இயேசுவின் பிரிவை அனுபவிக்கும் சீடர்களின் முதல் உணர்வு 'பெருமகிழ்ச்சி' ('காராஸ் மெகாலெஸ்') என்று பதிவு செய்கின்றார் லூக்கா (லூக் 24:52). இந்தச் சொல்லாடலை மீண்டும் ஒருமுறை வானதூதரின் வார்த்தையாகப் பதிவு செய்கின்றார்: 'அஞ்சாதீர்கள். இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்' (லூக் 2:10). இயேசுவின் பிறப்பு, பணி, உயிர்ப்பு, விண்ணேற்றம் என அவரின் வாழ்வு நமக்குத் தருவது மகிழ்ச்சி ஒன்றே. இந்த மகிழ்ச்சி நம் உள்ளத்திலும், இல்லத்திலும் நிறைவாக இருந்து, நாம் செய்வது அனைத்திலும் வெற்றி கண்டு, வளமோடும், நலமோடும் வாழ்தலே அவருக்கு மாட்சி.

இன்றைய நற்செய்தியில் மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் விண்ணேற்றம் பற்றி பதிவு செய்கின்றனர். ஆனால், மத்தேயு அப்படி பதிவு செய்தாலும் இயேசுவை விண்ணேற்றாமல் அப்படியே விட்டுவிடுகின்றார். 'இம்மானுவேல்' - 'கடவுள் நம்மோடு' என இறங்கி வந்தவர் இனி ஏறச் செல்ல முடியாது. அவர் 'உலகம் முடியும் வரை, அதாவது எந்நாளும், நம்மோடு இருந்துவிடுகின்றார்.' இயேசுவின் இந்த ஒற்றை வாக்குறுதியே நம் மகிழ்வின் ஊற்றாக அமைய வேண்டும்.

'நம்மேல் கொண்ட பரிவினால் அவர் விண்ணிலிருந்து இறங்கி வந்தார்.

இன்று அவர் தனியே விண்ணேறிச் சென்றாலும், அவரோடு நாமும் உடன் செல்கிறோம்.

ஏனெனில் அருளால் நாமும் அவரோடு இணைந்துள்ளோம்!'

(தூய அகுஸ்தினார்)

விண்ணேற்றப் பெருநாள் வாழ்த்துக்களும், செபங்களும்!

Fr. Yesu Karunanidhi

சமீபத்திய கட்டுரை
பொதுக்காலம் 23ஆம் வாரம் (10.09.2017)
பெருமழையால் பாதிக்கப்பட்டோரின் அருகாமையில் திருத்தந்தை
பொதுக்காலம் 21ஆம் வாரம்  (27.08.2017)  ஆண்டு - A
திருவழிபாடு - பொதுக்காலம் 19ஆம் வாரம் (13.08.2017)
திருத்தந்தை பிரான்சிஸ் பொதுமக்களை சந்திக்கும் காணொளி - 2017.08.02
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter