ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா 28-05-2017

மே 27, 2017

உயிர்ப்பு காலத்தின் ஏழாம் ஞாயிறு
ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா
திருவழிபாடு ஆண்டு A


இன்றைய வாசகங்கள்: திருத்தூதர் பணிகள் 1: 1-11, திருப்பாடல் 7: 1-2. 5-6. 7-8, 
எபேசியர் 1: 17-23, மத்தேயு 28: 16-20 
திருப்பலி முன்னுரை: இறைவனில் இனியவர்களே, ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்வு அடைகிறோம். மரணத்தை வெற்றி கொண்டு உயிர்த்தெழுந்த இறைமகன் இயேசு, நாற்பது நாட்கள் தனது சீடர்களை சந்தித்து உறுதிபடுத்திய பின்பு விண்ணேற்றம் அடைந்து தந்தையாம் இறைவனின் வலது பக்கத்தில் அமர்கிறார். உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்கவும், அரும் அடையாளங்களைச் செய்யவும் நம் ஆண்டவர் நமக்கு அதிகாரம் தந்துவிட்டு சென்றிருக்கிறார். அவர் தந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, இயேசுவின் உண்மையுள்ள சாட்சிகளாக வாழ, இத்திருப்பலியில் நாம் உருக்கமாக மன்றாடுவோம். 
முதல் வாசகம் யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாள்களில் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்'' என்று கூறினார். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 1-11 
தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்யவேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார்.விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன்.இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்: பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார். அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், "நீங்கள் எருசலேமை விட்டு நீங்கவேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாட்களில் தூய ஆவியால் திருமுழுக்கு பெறுவீர்கள் " என்று கூறினார். பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், "ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ? " என்று கேட்டார்கள். அதற்கு அவர், "என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல: ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் " என்றார். இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவி"ட்டது. அவர் செல்லும் போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, "கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார் " என்றனர். 
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. - இறைவா உமக்கு நன்றி 
பதிலுரைப் பாடல் பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். திருப்பாடல் 7: 1-2. 5-6. 7-8 1 
மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள் ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர் உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. -பல்லவி 
5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள் எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். 6 பாடுங்கள் கடவுளுக்குப் புகழ் பாடுங்கள் பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். -பல்லவி 
7 ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர் அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். 8 கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார் அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். -பல்லவி 
இரண்டாம் வாசகம் கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சிமிக்கது திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-23 
சகோதரர், சகோதரிகளே! நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சி மிகு தந்தையுமானவர் அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வராக! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சி மிக்கது என்றும், அவர்மீது நம்பிக்கை கொள்பவர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வு அற்றது, மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! கடவுள் வலிமை மிக்க தம் ஆற்றலை, கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்ந்தினார். அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை உடையோர், தலைமை தாங்குவோர் ஆகிய அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்: இவ்வுலகில் மட்டும் அல்ல: வரும் உலகிலும் வேறு எப்பெயர் கொண்டோயிருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச்செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது. 
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு - இறைவா உமக்கு நன்றி 
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா 
நற்செய்தி வாசகம் மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 16-20 
அக்காலத்தில் பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள். இயேசு அவர்களை அணுகி, "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினார். 
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி. - கிறிஸ்துவே உமக்கு புகழ். 
விசுவாசிகள் மன்றாட்டுகள்: விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன். பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். 
1. அன்புத் தந்தையே இறைவா! உமது திருமகனின் உயிர்ப்பு, விண்ணேற்றம் ஆகிய மறைபொருட்களின் அடிப்படையில் தோன்றி வளர்ந்த திருச்சபையின் நம்பிக்கை வாழ்வு சிறக்க பணியாற்றுமாறு, திருத் தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் தேவையான ஞானத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 
2. விண்ணில் வாழ்பவராம் இறைவா, இவ்வுலகின் சுகங்களை நாடி உம்மைப் புறக்கணித்து வாழும் மக்கள் அனைவரும், விண்ணக வாழ்வைப் பற்றி சிந்திக்கவும், நீர் காண்பித்த அன்பு வழியில் நடந்து விண்ணக வாழ்வை உரிமையாக்கிக்கொள்ளவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 
3. புதுமைகளின் நாயகராம் இறைவா, பேய்களை ஒட்டவும் நோய்களை நீக்கவும் இறைமகன் இயேசு அளித்த அதிகாரம் எம்மில் செயல்படவும், எங்கள் நம்பிக்கையால் உலகெங்கும் நற்செய்தியைப் பறை சாற்றி, உமது அரசை நிறுவவும் ஆற்றல் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 
4. அமைதி தருபவரே இறைவா, உலகெங்கும் நோய், பசி, வறுமை, அடக்குமுறை போன்றவற்றால் மனக்கலக்கம் அடைந்து வருந்துகின்ற அனைவருக்கும், உமது அன்பின் அரவணைப்பில் அமைதியை அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். 
5. உன்னதரான தந்தையே! உலகில் ஏற்படும் மாற்றங்கள் எங்கள் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து, எங்கள் உள்ளங்களைக் கலக்கமடையச் செய்கின்றபோது நாம் நிலை குலைந்து போகாமல், உமது வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
இன்றைய சிந்தனை 
எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் மார்ச் 20, 2008 தினமலர் செய்தி : தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும், ' டூம்ஸ் டே' என்ற வழிபாட்டு அமைப்பு, ரஷ்யாவில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், வரும் மே மாதத்துடன் உலகம் அழியப் போவதாகவும், அதுவரை அவர்கள் தனிமையில் பிரார்த்தனை மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்காக கடந்த அக்டோபரில் இருந்து ரஷ்யாவின் பென்சா மலைப் பகுதியில் ஒரு குகையில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அவர்கள் உலகம் அழியும் வரை, இந்த குகையில் இருந்து வெளியே வர மாட்டோம் என மறுத்து வருகின்றனர். இவர்களை வெளியே கொண்டு வர, துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணேற்பு இப்படி தவறாக புறிந்துகொள்ளப்பட்டுள்ளது. விண்ணேற்படைந்த இயேசுவின் கடைசி வேண்டுகோளை ஆழ்ந்து தியானிப்போம். "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள் தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்." அனைத்து அதிகாரத்தையும் பயன்படுத்தி, நாம் வாழும் இப்பூமியை, அதன் மனிதர்களோடு, அவர்களின் கலாச்சாரத்தோடு, புதிய வானமாக, புதிய பூமியாக, புதிய எருசலேமாக மாற்றி, புதுப்படைப்பாக்க வேண்டும் மூவொரு இறைவன் பெயரால் திருநிலைப்படுத்தப்பட்ட இச் சீடர்கள் இப்பணியை இவ்வுலகில் உலகம் முடியும் வரை தொடர்ந்து ஆற்ற வேண்டும். "உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்ற நற்கருணை தெய்வம், அன்புச் சமூகம் உருவாக்கும் பணியைச் செய்ய நம்மை அழைக்கிறார். அதுவே அனைவரின் விண்ணேற்பு. 
மன்றாட்டு: இறைவா, உம் அன்புக்கு நாங்கள் சாட்சி பகர எங்களுக்கு அருள்தாரும். 
 

பாஸ்கா காலம் ஆறாம் வாரம் 21-05-2017

மே 20, 2017

பாஸ்கா காலம் ஆறாம் வாரம் 21-05-2017

திருப்பலி முன்னுரை
"என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார்."

ஆண்டவருக்குரியவர்களே,

இறைமகன் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். நாம் இயேசுவுக்குள்ளும் அவர் நமக்குள்ளும் இருக்கின்ற உண்மையை உணர்ந்து வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நம்மோடு என்றும் இருக்கும்படியாக தூய ஆவியார் என்ற துணையாளரை இயேசு நமக்கு அளித்துள்ளார். தூய ஆவியாரால் வழிநடத்தப்படும் கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்குள் வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த அழைப்புக்கு ஏற்ப இயேசுவின் கட்டளைகளை கடைப்பிடித்து, கடவுளை அன்பு செய்கிறவர்களாக வாழ வரம் வேண்டி இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம்
பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள்மீது வைக்கவே அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள் 
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்: 8:5-8,14-17
அந்நாட்களில், பிலிப்பு சமாரியா நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு மெசியாவைப்பற்றி அறிவித்தார். பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒரு மனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர். ஏனெனில் பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் அவர்களிடமிருந்து உரத்தக் குரலுடன் கூச்சலிட்டுக் கொண்டே வெளியேறின. முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணம் பெற்றனர். இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று. சமாரியர் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டனர் என்பதை எருசலேமிலுள்ள திருத்தூதர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சென்று சமாரியர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுமாறு இறைவனிடம் வேண்டினார்கள். ஏனெனில் அதுவரை அவர்களுள் யாருக்கும் தூய ஆவி அருளப்படவில்லை. ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் அவர்கள் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள். பின்பு பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள்மீது வைக்கவே அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி


பதிலுரைப் பாடல்
பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! 
திருப்பாடல் 6: 1-7. 16,20
அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி, `உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை' என்று சொல்லுங்கள். -பல்லவி 

`அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்' என்று சொல்லுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. -பல்லவி 

கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! -பல்லவி 

கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! -பல்லவி

இரண்டாம் வாசகம்
தீமை செய்து துன்புறுவதை விட, கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல்
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 15-18
அன்புக்குரியவர்களே! உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள். நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள். ஆனால், பணிவோடும் மரியாதையோடும் விடை அளியுங்கள். உங்கள் மனச்சான்றும் குற்றமற்றதாயிருக்கட்டும். அப்பொழுது உங்கள் கிறிஸ்தவ நன்னடத்தையைப் பழிக்கிறவர்கள் உங்களை இழிவாகப் பேசியதைக் குறித்து வெட்கப்படுவார்கள். ஏனெனில், தீமை செய்து துன்புறுவதை விட, கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல். கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார். நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடிருந்த அவர் இறந்தாரெனினும் ஆவிக்குரிய இயல்புடையவராய் உயிர் பெற்றெழுந்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
- இறைவா உமக்கு நன்றி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா 

நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 14:15-21
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்: உங்களுக்குள்ளும் இருக்கிறார்.நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன். இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் வாழ்கிறேன்: நீங்களும் வாழ்வீர்கள்.நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர் மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர் மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.


விசுவாசிகள் மன்றாட்டுகள்:

விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன். 


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். 

1. அன்புத் தந்தையே இறைவா!
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகியோரின் வழியாக உமது அன்பின் நற்செய்தி விரைந்து பரவவும், மக்கள் அனைவர் மீதும் தூய ஆவியார் பொழியப்படவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

2. மனமாற்றத்தை விரும்பும் எம் அன்புத் தந்தையே இறைவா!
எம் குடும்பத்தில் நிகழவிருக்கும் பலவேறு மாற்றங்களான எங்கள் பணிமாற்றம், இடமாற்றம், பாடசாலை மாற்றங்கள், திருமணங்கள் போன்ற மாற்றங்களைச் சந்திக்கத் தூயஆவின் கொடைகளாம் உறுதி, துணிவு, ஞானம் ஆகியவற்றைத் தந்து எங்கள் குடும்பங்கள் மகிழ்வுட பயணிக்கச் சரியான வழியை, சரியான திசையை எமக்குக் காட்ட வேண்டும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்பு பொழிபவரே இறைவா,
உலகில் பசி, நோய், வறுமை, அடக்குமுறை போன்றவற்றால் துயருறும் மக்கள் அனைவரும், உமது அன்பின் அரவணைப்பில் புதிய விடியலைக் காண உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

4. உம் அன்பால் எம்மை ஒன்றிணைக்கும் இறைவா!
அனல் பறக்கும் இவ்வெயில் காலத்தில் இவ்வையகமும், நாங்களும் சிந்தைக் குளிர்ந்திட, வறட்சியும் வறுமையும் நீக்கிட, வெயிலின் தாக்கத்தால் துன்புறும் எம் முதியோர், நோயுற்றோர், குழந்தைகள் அனைவரின் நலம் காக்கப்பட எங்களுக்கு உமது இரக்கத்தை அருள்மாரிப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எமக்கு நல்வழிக் காட்டும் எம் இறைவா!
எம் குடும்பங்களில் பல இளையோர் தங்கள் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, அல்லது கல்லூரிப் படிப்பை முடித்து விட்டுத் தங்கள் தொடர் கல்வியை, பணியை, அல்லது வாழ்வைத் தீர்மானிக்கும் நேரத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் இயேசு கூறும் "வழியும், உண்மையும், வாழ்வும் நானே" என்ற வார்த்தைகள் அவர்களை நல் வழிக்கு, ஒளிமிக்க, உண்மையான வாழ்வுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று இறைவா உமை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை
அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்.

வாழ்க்கைத் துணைவி, வாழ்வோடு வரும் நட்பு, இரத்தத்தில் பிறந்து வளரும் உறவு உங்களோடு தங்கியிருந்தால், உங்களுக்குள் இருந்தால், ஆகா எப்படி இருக்கும்! இறைவனின் தூய ஆவி இதைச் செய்வதாக இயேசு சொல்லுகிறார். "உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரைக்"(யோவான் 14:16) கேட்பேன். "அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்."(யோவா 14:17) அவர் நம்மோடு தங்கியிருந்தால் - சக்கேயு வீட்டில் தங்கியபோது அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆசீர்வாதம், (லூக்19:5) அந்திரேயா திருத்தூதர் பெற்ற இறை அனுபவம்,(யோவான் 1:38) எம்மாவு சீடர்கள் பெற்ற மகிழ்ச்சி (லூக்24:29) நமக்குக் கிடைக்கும். அவர் நமக்குள் இருந்தால் - உடலும் உயிர் பெறும்(உரோ8:11), உரிமை வாழ்வு வாழ்வோம்(உரோ 8:17) தெய்வீக மாட்சியில் வாழ்வோம். ஏனென்றால் "தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும்"(உரோ 8:10). இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும் போது, இறைவனின் தூய ஆவி இன்றும் நம்மில் தங்கியிருக்கிறார்; நமக்குள் இருக்கிறார். நமது வாழ்க்கைத் துணையின், நண்பர்களின், உறவின் வடிவில் நம்மோடு அவரே இறைவனின் தூய ஆவியே நம்மோடு நமக்குள் தங்கியிருந்து நமக்கு நல் வாழ்வைத் தந்து கொண்டிருக்கிறார். இவர் வழியாக நீங்கள் அனுபவிக்கும் அனைத்திலும் அவர்கள் வழியாக இறைவனின் தூய ஆவியே செயல்படுகிறார். ஆகவே நம் இறைவன் நம்மைத் திக்கற்றவர்களாக விடமாட்டார். நம்மோடு தங்கி நம்மை வழிநடத்துவார்.

மன்றாட்டு:
இறைவா, எங்களை எதிர்க்கின்ற சக்திகளைக் கண்டு நாங்கள் துவண்டுவிடாதிருக்க அருள்தாரும்.

உயிர்ப்பு காலத்தின் மூன்றாம் ஞாயிறு 30-04-2017

ஏப்ரல் 29, 2017

உயிர்ப்பு காலத்தின் மூன்றாம் ஞாயிறு
திருவழிபாடு ஆண்டு A


இன்றைய வாசகங்கள்: திருத்தூதர் பணிகள்; 2: 14, 22-33, திருப்பாடல் 16:1-2, 5-6, 7-8, 9-10, 
தூய பேதுரு 1: 17-21, லூக்கர் 24: 13-35) 
திருப்பலி முன்னுரை: எங்களோடு தங்கும் ஆண்டவரே! வழிப்போக்கர்களே, உயிர்த்தெழுந்த நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால், உயிர்ப்பு காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். இருள் சூழும் நேரத்தில் நாம் நடந்து செல்லும்போது, இயேசு நமக்கு வழித்துணையாக வருகிறார் என்பதை உணர்ந்துகொள்ள இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவின் இறப்பால் மனம் உடைந்து போயிருந்த சீடர்கள் இருவர் எம்மாவு செல்லும் வழியில், ஆண்டவர் உடன் நடப்பதைக் காண்கிறோம். அவர்களின் அவநம்பிக்கையைப் போக்கும் விதமாக மறைநூலின் இறைவாக்குகள் மூலம் தமது உயிர்ப்பை விளக்கி கூறுகிறார். இயேசு அப்பத்தைப் பிட்டபோது, சீடர்கள் அவரைக் கண்டு கொண்டார்கள். நற்கருணையில் நம்மோடு உடனிருக்கும் ஆண்டவர் இயேசுவை, நமது விசுவாசப் பயணத்தில் வழித் துணையாக கொண்டு வாழும் வரம்வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம் நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 14, 22-33 
அப்பொழுது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்தக் குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார் "யூத மக்களே, எருசலேமில் வாழும் மக்களே, இதைத் தெரிந்துக்கொள்ளுங்கள். எனது சொற்களைக் கவனித்துக் கேளுங்கள். இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்.கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்லசெயல்களையும் அருஞ்செயல்களையும் அடையாளங்களையும் செய்து, அவரை இன்னாரென்று உறுதியாகக்காண்பித்தார். இது நீ;ங்கள் அறிந்ததே. கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின்படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். நீ;ங்கள் திருச்சட்டம் அறியாதார் மூலம் அவரைச் சிலுவையில் அறைந்துக்கொன்றீர்கள். ஆனால் கடவுள் அவரை மரணவேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச்செய்தார். ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை. தாவீது அவரைக்குறித்துக் கூறியது; 'நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன் அவர் என் வலப்பக்கம் உள்ளார் எனவே நான் அசைவுறேன். இதனால் என் இதயம் பேறுவகைகொள்கின்றது; என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும். ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுக்குழியைக் காணவிடமாட்டீர். வாழ்வின்வழியை நான் அறியச்செய்வீர் உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு.' ";சகோதர சகோதரிகளே, நமது குல முதல்வராகிய தாவீதைக் குறித்து நான் சொல்வதை மறுக்கமாட்டீர்கள். அவர் காலமாகி அடக்கம் செய்யப்பட்டார். அவர் கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கிறது. அவர் இறைவாக்கினர் என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணையில் வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிட்டுக் கூறியதை அறிந்திருந்தார். அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்து, 'அவரைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர் அவரது உடல் படுகுழியைக் காணவிடமாட்டீர்' என்று கூறியிருக்கிறார். கடவுள் இந்த இயேசுவை உயிhத்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள். அவர் கடவுளின் வலதுப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுப் பொழிந்தருளினார். நீங்கள் காண்பதும் கேட்பதும் இதுதான். 
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. - இறைவா உமக்கு நன்றி 
பதிலுரைப் பாடல் ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! திருப்பாடல் 16:1-2, 5-6, 7-8, 9-10 இறைவா, என்னைக் காத்தருளும் உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர் உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன். - பல்லவி 
ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம் எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே இனிமையான நிலங்கள் எனக்குப் பாகமாகக் கிடைத்தன் உண்மையாகவே என் உரிமைச் சொத்து வளமானதே. - பல்லவி 
எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன் இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன் அவர் என் வலப்பக்கம் உள்ளார் எனவே, நான் அசைவுறேன். - பல்லவி 
என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர் உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர் - பல்லவி 
இரண்டாம் வாசகம் நீங்கள் "தந்தையே" என அழைத்து மன்றாடுபவர், ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின் படியே தீர்ப்பு வழங்குகிறார். தூய பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-21 
நீங்கள் "தந்தையே" என அழைத்து மன்றாடுபவர், ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின் படியே தீர்ப்பு வழங்குகிறார். ஆகையால் இவ்வுலகில் நீங்கள் அன்னியராய் வாழும் காலமெல்லாம் அவருக்கு அஞ்சி வாழுங்கள் உங்கள் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும் வெள்ளியும் போன்று அழிவுக்குட்பட்டது அல்ல் மாறாக, மாசு மறுவற்ற ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர்மதிப்புள்ள இரத்தமாகும் உலகம் தோன்றுமுன்னரே முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக் கடைசிக் காலத்தில் உங்களுக்காக வெளிப்படுத்தப்பட்டார். அவர் வழியாகத்தான் நீங்கள் கடவுள்மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்கள். இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து பெருமைப்படுத்தியுள்ளார். இதனால் நீங்கள் கடவுளிடம் நம்பிக்கை கொண்டு அவரை எதிர்நோக்கி இருக்கவே இவ்வாறு செய்தார். 
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு - இறைவா உமக்கு நன்றி 
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி அல்லேலூயா, அல்லேலூயா! வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா. அல்லேலூயா 
நற்செய்தி வாசகம் லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 13-35 
வாரத்தின் முதல் நாள் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டே சென்றார்கள். இப்படி அவர்கள் உரையாடிக்கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கிவந்து அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. அவர் அவர்களை நோக்கி, வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?' என்று கேட்டார். அவர்கள் முக வாட்டத்தோடு நின்றார்கள். அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!'என்றார். அதற்கு அவர் அவர்களிடம், என்ன நிகழ்ந்தது?' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர் அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள் அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை' என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி, ஹஹஅறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சியடைவதற்குமுன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா!' என்றார். மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார். அவர்கள் தாங்கள் போகவேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர்போலக் காட்டிக்கொண்டார். அவர்கள் அவரிடம், எங்களோடு தங்கும் ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று' என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, ஹஹவழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?' என்று பேசிக்கொண்டார்கள். அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள். அங்கிருந்தவர்கள், ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்' என்று சொன்னார்கள். அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக்கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். 
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி. - கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்: விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன். பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. வாழ்வின் வழித்துணையே இறைவா, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உம்மையே வழித் துணையாக கொண்டு விசுவாச வாழ்வில் நடை பயிலவும், உம் மக்களை வழிநடத்தவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம். 
2. மூவுலக அரசரே இறைவா, உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் நற்கருணையில் உம் திருமகனின் உடனிருப்பை உணரவும், பிற சமயத்தினர் முன்னிலையில் உமக்கு சான்று பகரவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம். 
3. இரக்கத்தின் ஊற்றே இறைவா, உலகத்தின் கவலைகளுக்கும், துன்பங்களுக்கும் தீர்வு தேடி அலையும் மக்கள் அனைவரும், உம் வழியாக அமைதி காணவும், நீரே உண்மையான கடவுள் என்பதை உணரவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம். 
4. அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா! எங்களை பராமரித்து பாதுகாத்த எம் பெரியவர்கள் இன்று ஆதரவின்றி, அனாதைகளாக்கப்பட்டு, தெரு ஒரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் முதியோர் இல்லங்களிலும் தனித்து விடப்பட்டு, அவர்கள் படும் வேதனைகள் தொடர் நிகழ்வாகவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எனவே அவர்கள் உம் இறை இரக்கத்தினால், பாதுகாப்புடன் வாழ, இத்தலைமுறையினர் பெரியவர்கள் மேன்மையை உணர்ந்து அவர்களை பாதுகாக்க தேவையான அருளை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 5. என்றுமே மாறாத அன்பு கொண்ட எம் இறைவா, இன்றையச் சூழலில் நாங்கள் எங்கள் குடும்பத்தில் நல்ல தலைவர்களாகவும், சமுதாயத்தில் நல்ல வழிகாட்டிகளாகவும், தடுமாறுகிறவர்களுக்குப் புதிய பாதையாகவும், வாழ்வை இழந்தவர்களுக்கு வாழ்வாகவும் எம் ஆயனாம் இயேசுவின் பாதையில் தடம் மாறாது பயணம் செல்ல தேவையான அருள் வரங்களை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 
இன்றைய சிந்தனை "எங்களோடு தங்கும்" நம் தேவன் நம்மோடு தங்க வேண்டும். எந்த தலைவரும் பெரிய மனிதரும் தரும் மகிழ்ச்சியை விட பல பல மடங்கு பெரிதல்லவா. ஒப்பிட முடியா அனுபவம் அது. இயேசுவோடு தங்கும் நபராக, குடும்பமாக நீங்களும் உங்கள் குடும்பமும் இருக்கட்டும். உங்களுக்கு எதுவும் குறையிருக்காது; எல்லாம் நிறைவாக இருக்கும். ஒன்றில் இயேசு உங்களோடு தங்க வேண்டும் அல்லது நீங்கள் இயேசுவோடு தங்கவேண்டும். எம்மாவு சீடரோடு இயேசு தங்கியதால் அவர்கள் கண்கள் - அகக்கண்கள், அறிவுக்கண்கள், சமூகப் பார்வைகள்- திறக்கப்பட்டது. பயம் நீங்கியது. நம்பிக்கை புதுப்பிக்கப்பட்டது. அன்பால், ஆர்வத்தால் பற்றி எரியும் இதயம் பெற்றவராயினர்.புதிய வலிமை பெற்றனர். தங்கள் வாழ்க்கையில் புது நிறைவைக் கண்டனர். "சக்கேயு,இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்" என்று சொல்லி இயேசு அவரது வீட்டில் தங்கி விருந்துண்டார். சக்கேயுவின் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது? அவரது வீடு ஆண்டவரின் ஆசீர்வாதத்தை முழுமையாகப் பெற்றுள்ளதல்லவா. அவரது உள்ளத்து மகிழ்ச்சி அவரது மன மாற்றத்தில் வெளிப்படுகிறதல்லவா. திருத்தூதர் அந்திரேயா இயேசுவோடுள்ள நெருக்கத்தை அவரோடு தங்கியபோது பெறுகிறார்." ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?"(யோவா 1:38) என்று விவரங்கள் கேட்டு, மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.(யோவா 1:39) அன்று அவருக்கு அளவில்லா மகிழ்ச்சி. வாழ்க்கையில் காணாத எதையோ கண்ட நிறைவு. நிம்மதி. ஓடிப்போய் பேதுருவிடம் சொல்லுகிறார். இதுதான் இயேசு நம்மோடு தங்குவதிலும் நாம் இயேசுவோடு தங்குவதிலும் உள்ள பலன். ஆகவே இயேசுவோடு தங்கும் பெரும் பாக்கியத்தை உருவாக்கிக் கொள்ளுவோம். ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வாக இருக்கும். 
மன்றாட்டு: இறைவா, உம் மகன் இயேசுவை நாங்கள் ஆண்டவராக ஏற்று அவருக்குச் சான்று பகர எங்களைத் திடப்படுத்தியரும். 
 

பாஸ்க்கா காலம் 2வது வாரம் வெள்ளிக்கிழமை 28-04-2017

ஏப்ரல் 27, 2017

பாஸ்க்கா காலம் 2வது வாரம் வெள்ளிக்கிழமை 28-04-2017

முதல் வாசகம்
இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால், மகிழ்ச்சியோடு வெளியே சென்றார்கள். 
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 34-42
அந்நாள்களில் கமாலியேல் என்னும் பெயருடைய பரிசேயர் ஒருவர் தலைமைச் சங்கத்தில் எழுந்து நின்றார். இவர் மக்கள் அனைவராலும் மதிக்கப்பட்ட திருச்சட்ட ஆசிரியர். திருத்தூதரைச் சிறிது நேரம் வெளியே போகும்படி ஆணையிட்டு, அவர் சங்கத்தாரை நோக்கிக் கூறியது: ``இஸ்ரயேல் மக்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்ய எண்ணியுள்ளதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். சிறிது காலத்திற்கு முன்பு தெயுதா என்பவன் தோன்றி, தான் பெரியவன் என்று கூறிக்கொண்டு, ஏறத்தாழ நானூறு பேரைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டான். ஆனால், அவன் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறிப் போகவே, அந்த இயக்கம் ஒன்றுமில்லாமல் போயிற்று. இவற்றுக்குப் பின்பு மக்கள் தொகை கணக்கிடப்பட்ட நாள்களில் கலிலேயனான யூதா என்பவன் தோன்றித் தன்னோடு சேர்ந்து கிளர்ச்சி செய்யும்படி மக்களைத் தூண்டினான். அவனும் அழிந்தான்; அவனைப் பின்பற்றிய மக்கள் அனைவரும் சிதறிப்போயினர். ஆகவே இப்போது நீங்கள் இம்மனிதர்களை விட்டுவிடுங்கள் என நான் உங்களுக்குக் கூறுகிறேன். இவர்கள் காரியத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது; நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்.'' அவர் கூறியதைச் சங்கத்தார் ஏற்றுக்கொண்டனர். பின்பு அவர்கள் திருத்தூதர்களை அழைத்து அவர்களை நையப் புடைத்து, இயேசுவைப் பற்றிப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு விடுதலை செய்தனர். இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள். அவர்கள் நாள்தோறும் கோவிலிலும் வீடுகளிலும் தொடர்ந்து கற்பித்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து வந்தார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்
ஆண்டவரின் இல்லத்தில் நான் குடியிருக்க வேண்டும். 
திருப்பாடல் 27: 1. 4. 13-14
1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி 

4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும்; ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். பல்லவி 

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் அல்லேலூயா 

நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-15
அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடலைக் கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, ``இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?'' என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். பிலிப்பு மறுமொழியாக, ``இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே'' என்றார். அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, ``இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?'' என்றார். இயேசு, ``மக்களை அமரச் செய்யுங்கள்'' என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக் குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், ``ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்'' என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், ``உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே'' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்'' (யோவான் 6:13)

அப்பம் பலுகிய நிகழ்ச்சிக்கும் நற்கருணையை இயேசு ஏற்படுத்தியதற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளதையும் யோவான் காட்டுகிறார். ''இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், 'ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்' என்று தம் சீடரிடம் கூறினார்'' (யோவா 6:11-12) என்று யோவான் குறிப்பிடுகிறார். இங்கே இயேசு அப்பத்தை ''எடுத்தார்'' எனவும், கடவுளுக்கு ''நன்றிசெலுத்தினார்'' எனவும், ''பகிர்ந்தளித்தார்'' எனவும், மக்களுக்கு ''வேண்டிய மட்டும் இருந்தது'' எனவும், ''எஞ்சிய துண்டுகள் சேர்த்துவைக்கப்பட்டன'' எனவும் வருகின்ற சொற்றொடர்களை நாம் கருதலாம். இச்சொற்றொடர்கள் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய பிற நற்செய்தி நூல்களில் இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்ச்சி தொடர்பாக வருகின்ற தகவல்களை உள்ளடக்கியவை என நாம் அறிகிறோம். 

உணவு உண்ணும்போது தட்டிலோ இலையிலோ மீதி வைக்கக் கூடாது எனவும் உணவை வீணடிக்கக் கூடாது எனவும் குழந்தைகளுக்குப் பெற்றோர் கற்றுக்கொடுப்பர். ஆனால் இன்றும் பல இடங்களில் பலர் உணவைத் தூர எறிந்து வீணடிப்பது வழக்கமாயுள்ளது. இயேசு ஐயாயிரத்திற்கு மேலான மக்களுக்கு அதிசயமான விதத்தில் உணவளித்தபின் ''பன்னிரு கூடை'' நிறைய அப்பம் எஞ்சியது. பன்னிரண்டு என்னும் எண் பன்னிரு குலங்களை உள்ளடக்கிய இஸ்ரயேல் மக்களைக் குறித்ததால் இங்கே எல்லா மக்களுக்கும் பயன்படும் வண்ணம் உணவு சேமிக்கப்படுவதை யோவான் குறிப்பிடுகிறார். எஞ்சியிருந்த அப்பம் ஏழைகளுக்கு உணவாக மாறும். நாம் உண்டோம், நிறைவடைந்தோம் என்றிராமல் பிறருடைய பசியை ஆற்றுவதற்கு நாம் அப்பத்தைச் சேர்க்க வேண்டும். கடவுள் தருகின்ற எந்தக் கொடையும் மக்களின் பயன்பாட்டுக்கு உரியதே ஒழிய வீணடிக்கப்படுவதற்கு அல்ல. இயேசு தம்மையே உணவாகத் தருகின்ற நற்கருணையும் இந்த உலகத்தின் பசியைப் போக்க நமக்குத் தூண்டுதலாக அமைய வேண்டும். 

மன்றாட்டு:
இறைவா, மக்களின் பசியை ஆற்றிட நீர் வழங்கும் கொடைகளை நாங்கள் வீணடிக்காமல் பயன்படுத்த அருள்தாரும்.

பாஸ்க்கா காலம் 2வது வாரம் வியாழக்கிழமை 27-04-2017

ஏப்ரல் 26, 2017

பாஸ்க்கா காலம் 2வது வாரம் வியாழக்கிழமை 27-04-2017

முதல் வாசகம்
நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். 
திருத்தூதர்பணி நூலிலிருந்து வாசகம் 5:27-33
27 அழைத்து வந்தவர்களை அவர்கள் யூதத் தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். தலைமைக் குரு அவர்களை நோக்கி, 28 "நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக் கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப் பார்க்கிறீர்களே!" என்றார். 29 அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, "மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? 30 நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். 31 இஸ்ரயேல் மக்களுக்கு மனம் மாற்றத்தையும் பாவமன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். 32 இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்" என்றனர். 33 இவற்றைக் கேட்ட தலைமைச் சங்கத்தார் கொதித்தெழுந்து, திருத்தூதர்களைக் கொல்லத் திட்டமிட்டனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்
இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார் 
திருப்பாடல்கள் 34:2,9:17-20
2 நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். 9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது. 

17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். 18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். 19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். 20 அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தை மகன் மேல் அன்பு கூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். அல்லேலூயா 

நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3:31-36
31 மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர். மண்ணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர். மண்ணுலகு சார்ந்தவை பற்றியே அவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து வருபவர், அனைவருக்கும் மேலானவர். 32 தாம் கண்டதையும் கேட்டதையும்பற்றியே அவர் சான்று பகர்கிறார். எனினும் அவர் தரும் சான்றை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. 33 அவர் தரும் சான்றை ஏற்றுக் கொள்பவர் கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார். 34 கடவுளால் அனுப்பப் பெற்றவர் கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார். கடவுள் அவருக்குத் தம் ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிக் கொடுக்கிறார். 35 தந்தை மகன் மேல் அன்பு கூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். 36 மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
"நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர்"

ஐயோ பாவம்; கை இல்லையே என்று கவலைப்படுவோர் தங்களிடம் 'நம்பிக்கை' இ;ல்லை என்று அல்லவா கவலைப்பட வேண்டும். நம்பிக்கை, கையைவிட மிகவும் அவசியமானது. அதிலும் ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டோருக்கு எந்த குறையுமிருக்காது. தன்மீது நம்பிக்கைக் கொண்டோரை அவர் கைவிடுவதில்லை. 

கூரையைப் பிறித்து இறக்கிய முடக்குவாதமுற்ற மனிதனைக் குணப்படுத்தியது அவர்களின் நம்பிக்கை. பார்வையற்ற இருவரும் மீண்டும் பார்வை பெற்றது அவர்களது நம்பிக்கையாலே.(மத் 9:28) " நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்" (மாற்9:23) நம்பிக்கையின் வலிமைக்கு இயேசு தரும் சாட்சியம். நம் இறைவன் இயேசுவை நம்புகிறவர்களுக்கு எந்த நன்மைகளுக்கும் குறையிருக்காது. நிலையான வாழ்வைப் பெறுவார்கள். எல்லா நலன்களும் அவர்களுக்குக் கிடைக்கும். செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்கள். 

கடவுள் மீது நம்பிக்கை இழந்தோர் வாழ்வை இழப்பது உறுதி. வாழ்கைச் சிக்கலில் இறைவன் இயேசுவின் மீது நம்பிக்கை இழந்த காரணத்தால் தன்னம்பிக்கையை இழக்கின்றனர். தொடர்ந்து பொன் பொருளை இழக்கின்றனர். பணம் கரைந்ததும் நட்பும் உறவும் ஓடிவிடும். எல்லாம் இழந்த நிலையில் தன் உயிரையும் இழப்பதற்கு தயாராகிறான். ஆனால் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வோம் இச்சூழலிலும் வானிலிருந்து உதவியைப் பெறுவர். அவர்கள் வாழ்வு பெறுவர்.

மன்றாட்டு:
இறைவா, உம் திருமகனை நம்பிக்கையோடு ஏற்றிட எங்களுக்கு அருள்தாரும்.

சமீபத்திய கட்டுரை
பொதுக்காலம் 23ஆம் வாரம் (10.09.2017)
பெருமழையால் பாதிக்கப்பட்டோரின் அருகாமையில் திருத்தந்தை
பொதுக்காலம் 21ஆம் வாரம்  (27.08.2017)  ஆண்டு - A
திருவழிபாடு - பொதுக்காலம் 19ஆம் வாரம் (13.08.2017)
திருத்தந்தை பிரான்சிஸ் பொதுமக்களை சந்திக்கும் காணொளி - 2017.08.02
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனை பாடல்கள் 00:00 - 01:00
ஆராதனை பாடல்கள்01:00 - 02:00
வானோர் கீதங்கள் 02:00 - 03:00
அருங்கொடை பாடல்கள் 03:00 - 04:00
பக்தி பாடல்கள் 04:00 - 05:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 05:00 - 06:00
மாதா பாடல்கள் 06:00 - 07:00
உலக செய்திகள் 07:00 - 07.10
திருச்சபை செய்திகள் 07:10 - 07:20
விழிப்புணர்வு பாடல்கள்07:10 - 07:30
ஆண்டவரைப் போற்றுவோம் 07.30 - 08:00
ஆராதனை நேரம் 08:00 - 09:00
இறை இரக்க ஜெபமாலை 09:00 - 09:30
வானோர் கீதங்கள் 09:30 - 10:30
இலக்கிய விருந்து 10.30 - 10.45
வெற்றி முரசு 10.45 - 11.00
சாந்தோம் பாடல்கள் 11.00 - 12.00
உலக செய்திகள் 12:00 - 12.10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
விழிப்புணர்வு பாடல்கள் 12:20 - 12.30
இறையும் இயற்கையும் 12:30 - 13:00
கட்சியும் கருத்தும் 13:00 - 13:15
சாந்தோம் பாடல்கள் 13.15 - 14:00
ஒளியைத் தேடி 14:00 - 14:15
பக்தி பாடல்கள் 14:15 - 15:00
ஆராதனை நேரம் 15.00 - 16:00
அருள் அலைகள் 16:00 - 16:30
இறைவனின் குடும்பம் 16.30 - 17.00
மாதா பாடல்கள் 17.00 - 17.30
பேசும் பொம்மைகள் 17.30 - 18.00
தாத்தாவின் கதைகள் 18.00 - 18.30
எங்கே போகிறோம் 18.30 - 18.45
இலக்கிய விருந்து 18.45 - 19.00
நிலா முற்றம் 19.00 - 19.30
இறைவனின் குடும்பம் 19.30 - 20.00
உலக செய்திகள் 20.00 - 20.10
திருச்சபை செய்திகள்20.10 - 20.20
விழிப்புணர்வு பாடல்கள் 20.20 - 20.30
வில்லுப்பாட்டு 20.30 - 20.45
சங்கே முழங்கு 20.45 - 21.00
உறவுப்பாலம் 21.00 - 21.30
ஆண்டவரைப்போற்றுவோம்21.30 - 22.00
அருள் அலைகள் 22.00 - 22.30
இறையும் இயற்கையும் 22.30 - 23.00
ஆராதனை நேரம் 23.00 - 24.00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter