உயிர்ப்புக் காலம் மூன்றாம் ஞாயிறு 30 ஏப்ரல் 2017

ஏப்ரல் 27, 2017

உயிர்ப்புக் காலம் மூன்றாம் ஞாயிறு 30 ஏப்ரல் 2017

I. திப 2:14, 22-33     II. 1 பேதுரு 1:17-21    III. லூக் 24:13-35

என் வாழ்வின் எம்மாவு

'வாரத்தின் முதல் நாள் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அந்த ஊரின் பெயர் எம்மாவு' எனத் தொடங்குகிறது இன்றைய நற்செய்தி. இந்தச் சீடர்கள் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்கள் அல்லர். ஒருவேளை இயேசு தனக்கு முன் இருவர் இருவராய் அனுப்பிய 72 அல்லது 70 சீடர்களில் இருவராக இவர்கள் இருக்கலாம். அல்லது இயேசுவின் போதனைகளைக் கேட்டு அவரை மனதளவில் ஏற்றுக்கொண்ட நிக்கதேம், அரிமத்தியா நகர் யோசேப்பு போன்றவர்களாக இருக்கலாம். இந்த இருவரில் ஒருவர் பெயரை மட்டும் கிளயோப்பா என பதிவு செய்கிறார் லூக்கா. இருவர்தாம் சென்றார்களா அல்லது இருவர் சாட்சிக்குத் தேவை என்பதால் இருவரை லூக்கா தேர்ந்தெடுக்கிறாரா என்பது பற்றிய தெளிவு இல்லை.

ஆனால், ஒன்று மட்டும் தெளிவாக இருக்கின்றது. தங்கள் சொந்த ஊரான எருசலேமை விட்டு அகன்று 11 கிமீ தூரமுள்ள எம்மாவு நோக்கி வேகமாக செல்கின்றனர். வாரத்தின் முதல் நாள் காலையில் கல்லறைக்குச் சென்ற பெண்கள் திரும்பி வந்து கல்லறையில் இயேசு இல்லை என்ற செய்தியைச் சொல்கின்றனர். இந்த செய்தி படிப்படியாகப் பரவி இவர்கள் காதுக்கு வர எப்படியும் காலை 8 அல்லது 9 மணி ஆகியிருக்கும். அப்போது எருசலேமை விட்டு புறப்படுகிறார்கள். மாலை 6 மணிக்கு எம்மாவு வந்துவிடுகிறார்கள். 9 மணி நேரத்திற்குள் 11 கிமீ தூரத்தைக் கடக்கிறார்கள் என்றால் அவர்கள் வேகமாகவும், பதற்றமாகவும் நடந்திருப்பார்கள் என்பதை நாம் ஊகிக்க முடிகிறது. ஏன் இந்த வேகம்? ஏன் இந்த பதற்றம்? ஏன் இந்த கலக்கம்?

தங்கள் சொந்த ஊரை, எருசலேமை, இவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை? தங்கள் தலைவரை அது சிலுவையில் அறைந்து கொன்றதலா? அல்லது தங்களையும் தேடி அது வருவதாலா? அல்லது உயிர்ப்பு பற்றிய செய்தியை ஏற்றுக்கொள்வதில் தயக்கமா? 

இவை எல்லாம்கூட காரணமாக இருந்திருக்கலாம். 

நம் வாழ்விலும் சில நேரங்களில் நாம் நம் வாழ்வின் எருசலேமை நோக்கி தப்பி ஓடுகிறோம். எம்மாவு என்பது ஒரு தற்காலிக ஆறுதல். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்ற நேரத்தில் மொபைல், டிவி என எல்லாவற்றையும் அணைத்தவிட்டு தலையனையை நனைத்துக்கொண்டே அல்லது தலையணையை இறுக்கிப் பிடித்துக்கொண்டே தூங்கத் துணியும் தருணம்தான் எம்மாவு. 

வேகமாக நடந்து செல்லும் இந்த இரு இளவல்களும் தங்களுக்குள் ரொம்ப சீரியஸா ஏதோ பேசிக்கொண்டே செல்கிறார்கள். இவர்களின் பயணம் இலகுவாக அமைய ஒருவர் மற்றவரின் உடனிருப்பும் இவர்களுக்கு உதவியிருக்கும். வாழ்க்கை என்ற பயணத்திலும் ஒருவர் மற்றவரின் துணை அவசியம் என்பதற்காகத்தான் சபை உரையாளரும், 'ஒருவர் தனியாக இருப்பதைவிட இன்னொருவரோடு சேர்ந்திருப்பது நல்லது' என்று சொல்கிறார். இவர்கள் எந்த அளவிற்கு தங்கள் உரையாடலில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்றால், அருகில் ஒருவர் நடந்து வருவதைக்கூட அவர்கள் கவனிக்கவே இல்லை.

நம் வாழ்க்கையிலும் அப்படித்தான். அன்றாட கவலைகளில் மூழ்கியிருக்கும் நாம் அந்த நேரங்களில் கடவுள் நம்மோடு வருகிறார் என்பதைக்கூட பார்க்கத் தவறிவிடுகிறோம். 'வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?' எனக் கேட்கின்றார் இயேசு என்ற மூன்றாம் நபர். இயேசுவின் உரையாடல் ரொம்ப நேரிடையாக இருக்கிறது. 'நீங்க யாரு? என்ன? எங்க போறீங்க? எங்கிருந்த வர்றீங்க?' என்ற எந்த ஃபார்மாலிட்டியும் இல்லாம, 'நேரிடையாக' இருக்கிறது இயேசுவின் கேள்வி. 'நாங்க என்ன பேசினா உனக்க என்ன?' என்று சொல்லியிருக்கலாம் அவர்கள். ஆனால், தங்கள் துன்பத்தை யாரிடமாவது பகிர்ந்து கொண்டால் நலமாக இருக்கும் என எண்ணியதால் அவர்கள் இயேசுவிடம் மனம் திறந்து பேசுகின்றனர்.

சில நேரங்களில் சிலர் நம்மிடம் தங்கள் மனத்தைத் திறந்து பேசுவார்கள். ஆச்சர்யமாக இருக்கும். முன்பின் தெரியதா என்னிடம் அவர்கள் ஏன் இதைச் சொல்கிறார்கள்? என்று நினைப்போம். ஆனால், சில நேரங்களில் நாம் முன்பின் தெரியாத நபராவது நாம் சொல்வதைக் கேட்கமாட்டாரா என நினைத்து அவர்களிடம் மனம் திறக்கிறோம்.

அந்த இரு சீடர்களின் உள்ளுணர்வுகளை மூன்று வார்த்தைகளில் பதிவு செய்கின்றார் லூக்கா:

அ. முகவாட்டம்

ஆ. ஏமாற்றம்

இ. மலைப்பு அல்லது வியப்பு

அ. முகவாட்டம்

தன் சகோதரன் ஆபேலின் காணிக்கை ஏற்கப்பட்டு, தன் காணிக்கை நிராகரிக்கப்பட்டபோது முகவாட்டத்தோடு நிற்கிறார் காயின். மனதின் சோகத்தின் காணக்கூடிய வடிவம் முகவாட்டம். மனதின் கவலை, இயலாமை முகவாட்டமாக வெளிப்படுகிறது. முகவாட்டத்தின் எதிர்ப்பதம் முகமலர்ச்சி. நிறைவு இருக்கும் போது முகம் மலர்கிறது. குறை இருக்கும் போது முகம் வாடுகிறது. தாவரம் போலத்தான் மனமும். தண்ணீர் நிறைவாக இருந்தால் மலரும் செடி, தண்ணீர் குறையும் போது வாடுகிறது. எம்மாவு இளவல்களின் வாழ்வில் நம்பிக்கை தந்த இயேசு இன்று குறைந்துவிட்டதால் இவர்கள் முகம் வாடிவிடுகிறது.

ஆ. ஏமாற்றம்

'அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும், ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்து சிலுவையில் அறைந்தார்கள்.' அவர் அப்படி இருப்பார், இப்படி இருப்பார், அப்படி வருவார், இப்படி வருவார் என எதிர்பார்த்தோம். ஆனால் இப்படி ஒரு தோல்வியாக இறந்துவிட்டாரே என ஏமாந்துவிட்டனர் சீடர்கள். திருவிளையாடல் ஸ்டைலில், 'பிரிக்க முடியாதது எது?' என்று கேட்டால், 'எதிர்பார்ப்பு - ஏமாற்றம்' எனச் சொல்லிவிடலாம்.

இ. மலைப்பு

'ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர். அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள். அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை' என ஒரே மூச்சில் சொல்லி முடிக்கின்றார் கிளயோப்பா. செய்வதற்கு நம் முன் நிறைய வேலைகள் கிடந்தால், அல்லது நெடுந்தூர பயணத்திற்கு தயாரிக்க வேண்டியிருந்தால், அல்லது ஒரு வீட்டைக் காலி செய்து அடுத்து வீட்டிற்கு இடமாற்றம் செய்வதாக இருந்தால் நம்மில் எழும் உணர்வு மலைப்பு. இயேசு உயிர்த்துவிட்டதைக்கூட நம்பிவிடலாம். ஆனால், பெண்கள் சொல்லி நம்புவதா என்பதுதான் சீடர்களுக்கு மலைப்பாக இருக்கின்றது.

இந்த மூன்று உணர்வுகளையும் கொண்டிருந்த சீடர்கள் மேல் பரிதாபப்படாமல், 'அறிவிலிகளே' எனச் சாடுகின்றார் இயேசு. நம்ம வீட்டிற்கு வருகிற ஒருவர், நம் சோகக் கதைகளை எல்லாம் கேட்டுவிட்டு, 'நீ ஒரு முட்டாள்' என்று நம்மிடம் சொன்னால் நமக்கு எவ்வளவு கோபம் வரும்? இயேசு அவர்களின் அறியாமையை எடுத்துச் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், மறைநூல் (சட்டநூல்கள் மற்றும் இறைவாக்கு நூல்களின் துணைகொண்டு) மெசியா நிலை பற்றிய விளக்கமும் தருகிறார்.

இப்படி விளக்கிச் சொன்ன இயேசுவை இருவருக்கும் ரொம்ப பிடித்துவிடுகிறது: 'எங்களோடு தங்கும். ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று. பொழுதும் போயிற்று' என்று கூறி கட்டாயப்படுத்தி இணங்க வைக்கின்றனர்.

'எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்கு மட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!' என வியக்கின்ற சீடர்கள், 'எம்மாவிலும் எங்களோடு தங்கும்!' எனச் சொல்கின்றனர். அதாவது, எங்கள் துன்பத்தில் எங்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைத் தந்த நீர் இப்போது இந்த ஆறுதலான இடத்திலும் தங்கும் எனச் சொல்கின்றனர்.

இங்கே லூக்காவின் இலக்கியத்திறத்தைப் பாராட்ட வேண்டும். ஏன்?

இயேசு தன்னை அப்பம் பிட்குதலில் வெளிப்படுத்தியவுடன், இச்சீடர்கள் திரும்பவும் எருசலேம் நோக்கி புறப்படுகின்றனர். தன் சக வழிப்போக்கனிடம், 'ஐயோ, போகாதீங்க, இருட்டாயிடுச்சு, பொழுது சாஞ்சிடுச்சு' என்று தடுத்தவர்கள் தாங்களே இரவோடு இரவாக புறப்பட்டுச் செல்கின்றனர். இப்படியாக ஒரே நாளில் ஏறக்குறைய 20 மணி நேரங்கள் நடக்கின்றனர்.

இவர்களுக்கு இனி இரவு பற்றிய பயம் இல்லை.

மேலும், அவர்கள் எருசலேம் நோக்கி மீண்டும் செல்கின்றனர். அப்படி என்றால் எருசேலம் பற்றியும், எருசலேம் தரும் துன்பம் மற்றும் கொடுமை பற்றியும் இவர்களுக்குப் பயமில்லை.

இயேசுவை இவர்கள் எப்படி கண்டுகொள்கின்றனர்?

'அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்' - இந்த மூன்று வார்த்தைகளைக் கொண்டுதான் லூக்கா நற்செய்தியாளர் இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்வை வர்ணிக்கின்றார். இயேசு இறுதி இராவுணவில் - வியாழன் அன்று - நற்கருணையை ஏற்படுத்தியது எல்லா சீடர்கள் மத்தியிலும் வேகமாக பரவி இருக்கின்றது. ஆகையால்தான், 'அப்பம் எடுத்தல், கடவுளைப் போற்றுதல், அவர்களுக்குக் கொடுத்தல்' என்னும் செயல்களை இயேசுவோடு பொருத்திப்பார்க்கின்றனர். இச்சீடர்கள் அறிவிலிகள் அல்லர். மாறாக, இயேசு என்றால் யார்? அவர் என்ன செய்தார்? அவர் எப்படி நினைவுகூறப்படுகின்றார்? என எல்லாவற்றையும் அறிந்திருக்கின்றனர்.

அவர்களின் கண்கள் திறந்தவுடன் அவர் மறைந்துவிடுகின்றார். இதுதான் கடவுளின் திருவிளையாடல். அவர் இன்னும் கண்களுக்குப் புலப்பட்டுக்கொண்டிருந்தால் அவர் கடவுள் அல்லர். காண்பவை எல்லாம் மனிதநிலை சார்ந்தவை. காணாதவை அனைத்தும் இறையியல்பு சார்ந்தவை. ஆகையால்தான், காண்பவற்றைவிட காணாதவற்றை நம் மனதில் பதிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றார் தூய பவுல்.

இச்சீடர்கள் தாங்கள் சொந்த ஊர் திரும்பியது மட்டுமல்லாமல் தங்களுக்கு நிகழ்ந்ததை அடுத்தவர்முன் எடுத்துரைக்கிறார்கள். இயேசுவின் உயிர்ப்புக்கு சான்றும் பகர்கின்றனர்.

முகவாட்டம், ஏமாற்றம், மலைப்பு என இருந்தவர்கள் இப்போது சான்று பகரும் துணிச்சல் பெறுகின்றனர். 

இவர்கள் பெற்ற உயிர்ப்பு அனுபவமே இவர்களின் இந்த மாற்றத்திற்குக் காரணமாக இருக்கிறது. இப்படிப்பட்ட உயிர்ப்பு அனுபவம் பெற்ற பேதுரு எருசலேமில் துணிந்து நின்று, எருசலேம் மக்களை நோக்கிப் பேசுவதை இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 2:14, 22-33) வாசிக்கின்றோம்.

தாவீதின் கல்லறை மற்றும் இயேசுவின் கல்லறை ஆகியவற்றை ஒப்பீடு செய்து, தாவீதின் கல்லறை இன்றுவரை நம்மிடம் இருக்கிறது. அவருடைய உடல் பாதாளத்தின் அழிவைக் கண்டது. ஆனால், இயேசுவின் கல்லறை வெற்றுக் கல்லறையாக இருந்துது. அவருடைய உடல் பாதாளத்தின் அழிவைக் காணவில்லை. 

உயிர்ப்புக்கு பெரிய சான்று சீடர்களின் மாறிய வாழ்வு மட்டுமே.

ஆக, உயிர்ப்பை நாம் ஓர் அனுபவமாக மட்டுமே பார்க்க வேண்டும். உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்தவர்களும், உயிர்ப்பு அனுபவம் பெற்றவர்கள் முன்மாதிரியே இருக்க முடியாது. அவர்கள் மாறித்தான் ஆகவேண்டும். அப்படி மாறாமல் இருக்கிறவர்கள் உயிர்ப்பு அனுபவம் பெறவில்லை என்றே பொருள். ஆகையால்தான், தூய பவுலடியார், 'கிறிஸ்துவையும் அவரின் உயிர்ப்பின் ஆற்றலையும் நான் அறிய விரும்புகிறேன்' (பிலி 3:10) என்கிறார். 

இந்த அனுபவத்தையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 பேதுரு 1:17-21) பதிவு செய்யும் பேதுரு, 'இறந்த அவரை கடவுள் உயிர்த்தெழச் செய்து பெருமைப்படுத்தியுள்ளார். இதனால் நீங்கள் கடவுளிடம் நம்பிக்கை கொண்டு அவரை எதிர்நோக்கி இருக்கவே இவ்வாறு செய்தார்' என எழுதுகின்றார். ஆக, இயேசுவின் உயிர்ப்பு மற்றவர்களின் நம்பிக்கைக்கு விதையாகவும் அமைகின்றது.

மொத்தத்தில், உயிர்ப்பு என்பது ஒரு அனுபவம். அதை அனுபவிப்பவரின் வாழ்வில் அது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எருசலேமிலிருந்து தப்பித்து எம்மாவு சென்ற சீடர்கள் மீண்டும் எருசேலம் திரும்புகின்றனர். யூதர்களுக்கு அஞ்சி அறையில் ஒடுங்கிக் கிடந்த பேதுருவும் உடன் திருத்தூதர்களும் தெருக்களில் வந்து போதிக்கின்றனர். திருத்தூதர்கள் வழியாக இயேசுவைப் பற்றி அறிந்துகொண்டவர்கள் அவர்மேல் நம்பிக்கை கொண்டு கடவுளை நோக்கி திரும்பி வருகின்றனர். 

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால்கள் மூன்று:

1. வழியில் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?

லூக்கா நற்செய்தியாளரின் இயேசு 'வழியில்' நடக்கின்றார். லூக்கா நற்செய்தி எருசலேமில் தொடங்கி எருசலேமில் முடிகிறது. லூக்கா நற்செய்தியாளரில் வரும் அனைவருமே பயணம் செய்கின்றனர்: சக்கரியா, எலிசபெத்து, மரியா, இயேசு, நல்ல சமாரியன், ஊதாரி மகன். இன்று நாம் காணும் எம்மாவு சீடர்களும் வழியில் தான் இயேசுவைச் சந்திக்கின்றனர். வழி எதைக் குறிக்கிறது? வழி வாழ்க்கைக்கான ஒரு உருவகம். வாழ்வில் நாம் பயணியர்கள், வழிப்போக்கர்கள். எந்நேரமும் நாம் எதையாவது ஒன்றை நோக்கிச் சென்று கொண்டே இருக்கின்றோம். எருசலேமிலிருந்து எம்மாவு நோக்கிச் செல்கின்றனர் சீடர்கள். எருசலேம் துன்பத்தின் உருவகம். தன் தலைவர் அழிக்கப்பட்டுவிட்டார், தங்களையும் அழித்து விடுவார்கள் என்று பயந்து ஓடுகின்றனரா? அல்லது 'எல்லாம் முடிந்து விட்டது. இனி ஒன்றும் இல்லை' என விரக்தியில் நடக்கிறார்களா? விரக்தியில் நடக்கும் போது நம்மையறியாமலேயே நம் நடை சுருங்கி விடுகிறது. இந்தச் சீடர்களும் அப்படித்தான் சுருங்க நடந்திருக்க வேண்டும். விரக்தி, பயம், குழப்பம், கவலை. இனி என்ன நடக்கும்? இயேசு உயிர்த்துவிட்டாரா? பெண்கள் சொல்வதை நம்பலாமா? இப்படிக் கேள்விகளோடும், ஆச்சர்யங்களோடும் நடந்தவர்களைச் சந்திக்கின்றார் இயேசு ஒரு வழிப்போக்கன் போல. நம் வாழ்விலும் கேள்விகள், ஆச்சர்யங்கள் வரும்போது அங்கேயும் இயேசு ஒரு வழிப்போக்கனாக நடந்து வருகிறார். இயேசு சீடர்களைப் பார்த்துக் கேட்கும் கேள்வி: 'நீங்கள் ஒருவரோடு ஒருவர் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?' இதற்கு விடையாக சீடர்கள் எருசலேமில் நடந்தவற்றையெல்லாம் சொல்கின்றனர். இயேசுவும் அவர்களுக்கு இறைவாக்குகளை எடுத்துரைக்கின்றார். 

இந்தக் கேள்விக்கு மூன்று பரிமாணங்கள் உண்டு: (அ) நீங்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? (ஆ) அவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? (இ) அவர் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்?

நாம் வாழும் இந்தச் செல்லுலார் உலகத்தில் அன்றாடம் 'பேச்சு' வழியாக பல டேட்டாக்கள் பரிமாறப்படுகின்றன. இந்த நொடி எவ்வளவோ பேர் பேசிக்கொண்டிருப்பார்கள்: தொலைபேசிப் பேச்சு, நேருக்கு நேர் பேச்சு, நமக்குள் நாமே பேசும் மொளனப் பேச்சு, வலியின் முணகல், போரின் சத்தம், அலைகளின் சத்தம், மேடைப் பேச்சு, சினிமா, பாடல் என நம்மைச் சுற்றி பேச்சு இருந்து கொண்டே இருக்கின்றது. முதலில் நாம் கேட்க வேண்டியது: 'அவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள்?' அதாவது இன்று உலகம் என்ன பேசிக் கொண்டிருக்கிறது. பேஸ்புக், ஸ்கைப், டுவிட்டர், வாட்ஸ்ஆப் என எல்லாத் தளங்களிலும் மக்கள் இன்று பேசிக்கொள்கிறார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள்? நாம் டிவியை ஆன் செய்தால் யார் யாரோ வந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாம் பார்க்கும் விளம்பரங்கள், சினிமாக்கள், மெகாசீரியல்கள் என எல்லாவற்றிலும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இன்று அவர்கள் நமக்குச் சொல்வது என்ன? இன்றைய உலகம் கருத்தடை, கருக்கலைப்பு, பிளாஸ்டிக், புவிவெப்பமயம், நாகரீகம் பற்றிப் பேசுகின்றது. கடவுள் இல்லை எனவும் 'நம்மால் எல்லாம் முடியும்!' என்று சொல்கின்றது. இன்றைய உலகம் பேசும் பல நம் செவிகளுக்கு இனிமையாய் இருக்கின்றன. ஆனால் அவற்றால் காலப்போக்கில் நமக்குத் துன்பமும், விரக்தியுமே மிஞ்சுகின்றது. இரண்டாவதாக, சீடர்களாகிய நாம் இன்று எதைப் பேசிக் கொண்டிருக்கிறோம்? நம் பேச்சு உலகின் பேச்சு போலவே இருக்கின்றதா? நம் பேச்சு உலகின் பேச்சுக்கு நடுவில் மறைந்து போகின்றதா? இன்று நம் கண்முன் அநீதி, வன்முறை, ஏற்றத்தாழ்வு இருக்கும்போது அதை எதிர்த்து நம்மால் பேச முடிகிறதா? நாம் பேசுவதற்குத் தடையாக இருப்பது என்ன? நம் பயமா? நம் கவலையா? நம் விரக்தியா? நம் நடையும் சுருங்கிப் போய் இருக்கின்றதா? மூன்றாவதாக, அவர் இன்று என்ன பேசுகிறார்? இயேசு எதைப் பற்றி நம்மிடம் உரையாடுகின்றார்? இயேசுவின் உரையாடல் எப்போதும் நம்பிக்கை தருவதாகவே இருக்கின்றது. நம் அறியாமையைக் கண்டு சில நேரங்களில் 'மந்தப் புத்தி உள்ளவர்களே!' என்று இயேசு நம்மையும் சாடுகின்றார். துன்பங்கள் வழியே மீட்பு எனச் சொல்கின்றார் இயேசு. 'கண்களுக்குக்        களிப்பூட்டுவதாகவும், செவிகளுக்கு இனிமையாய் இருப்பவை எல்லாம் நல்லது என நினைத்து விடாதீர்கள்' என்கிறார்.

2. இல்லாமையே இறைமை

இயேசு இன்னும் நடப்பது போல காட்டிக் கொள்கின்றார். 'எங்களோடு தங்கும்!' என்கின்றனர் சீடர்கள். முன்பின் தெரியாத ஒருவரைத் தங்களோடு தங்கிக் கொள்! என்று சொல்லும் சீடர்கள் மிக எளிமையானவர்கள். தாராள உள்ளத்தினர். இந்தத் தாராள உள்ளம் நம்மிடம் இருக்கின்றதா? நாம் யாரையாவது சந்திக்கும்போது, 'இவன் எப்படா போவான்?' என நினைக்கிறோம். பிறரை நம் தனித்தன்மைக்கு எதிரானவர்களாகப் பார்க்கிறோம். கடவுளையும் சில நேரங்களில் எதிரியாகப் பார்க்கத் தொடங்கி விடுகிறோம். அப்பம் பிட்குதலில் இயேசுவைக் காண்கின்றனர் சீடர்கள். அவர் மறைந்தவுடன் தான் அவர் யார் எனத் தெரிகின்றது அவர்களுக்கு. கடவுளின் 'இல்லாமையே' அவரின் இருத்தலை நமக்குக் காட்டுகின்றது. இறைவார்த்தையிலும், இறைவுணவிலும் இன்றும் இயேசு நம்மோடு வருகின்றார். அவர் பேசுவதை நாம் கேட்போம். அவர் நம்மோடு தங்கட்டும். அவரைச் சந்தித்தபின் எந்த எருசலேமும் நமக்குத் துன்பமில்லை. எந்த நிலையிலும் நமக்கு இறப்பில்லை, விரக்தியில்லை, பயமில்லை, கவலையில்லை.

3. என் வாழ்வின் எம்மாவு எது?

என் வாழ்வில் இன்று நான் அனுபவிக்கும் எருசலேம் எது? என் வாழ்வில் முகவாட்டம், ஏமாற்றம், மலைப்பு தருவது எது? எம்மாவு சீடர்களின் வாழ்வு நமக்கு ஒரு அழகிய இறைத்தேடலை முன்வைக்கின்றது. எந்த அளவிற்கு இயேசுவை இவர்களுக்குப் பிடித்திருந்தால் அவர்கள் இவ்வளவு சோகமாக மாறியிருப்பார்கள்? 'என் இறைவன் என்னோடு இல்லை' என்ற உணர்வு அவர்களை இந்த நிலைக்குத் தள்ளிவிடுகிறது. இறைவன் என்னோடு இல்லாத நேரத்தை நான் எப்படி உணர்கிறேன்? இறைவனை நான் வேண்டுமென்றே என் வாழ்வை விட்டு வெளியேற்றிவிடுகிறேனா?

இறுதியாக, என் வாழ்வின் எருசலேம் எது? நான் எதிலிருந்து தப்பி ஓட நினைக்கிறேன்.

தற்காலிகமான ஆறுதல் எம்மாவு கூட இயேசுவின் பிரசன்னத்தால் நிரந்த ஆறுதலாகிறது. ஏனெனில் அவர் நிரந்தரமானவர். 

நம்மோடு வழிநடக்கும் இறைவனைக் கண்டுகொள்தலே ஆறுதல் - அதுவே என் வாழ்வின் எம்மாவு!

- Yesu Karunanidhi

உயிர்ப்புக் காலம் இரண்டாம் ஞாயிறு 23 ஏப்ரல் 2017

ஏப்ரல் 21, 2017

உயிர்ப்புக் காலம் இரண்டாம் ஞாயிறு 23 ஏப்ரல் 2017

I. திருத்தூதர்பணிகள் 2:42-47     II. 1 பேதுரு 1:3-9     III. யோவான் 20:19-31   

தோமா அவர்களோடு இல்லை!

உயிர்ப்புக் காலத்தில் நாம் வாசிக்கும் நற்செய்தி பகுதிகளில் வரும் கதைமாந்தர்களில் என் இதயம் தொட்டவர்கள் இரண்டு பேர்: ஒன்று, மகதலா மரியா. இரண்டு, தோமா. உயிர்த்த ஆண்டவரை இறுகப் பற்றி கட்டி அணைத்துக் கொண்டவர் மகதலா மரியா. உயிர்த்த இயேசுவின் உடலைத் தன் கையால் ஊடுருவியவர் தோமா. உயிர்த்த ஆண்டவர் வெறும் ஆவி அல்லர் என்பதற்கும், அவருக்கென உடல் இருந்தது என நிரூபிப்பதற்குமாக என இவர்களின் செயல்களால் நம் நம்பிக்கை இன்னும் வலுப்பெறுகிறது.

தோமா என்ற கதைமாந்தரை நன் இன்றைய சிந்தனைப் பொருளாக எடுத்துக்கொள்வோம்.

ஆங்கிலத்தில், 'டவுட்டிங் தாமஸ்' என்ற ஒரு சொலவடை உண்டு. அதாவது, எதையும் எளிதாக நம்பாமல் ஐயம் கொண்டிருக்கும் மனநிலை தான் 'டவுட்டிங் தாமஸ்.' நாம் எல்லாரும் தோமையாரை 'டவுட்டிங் தாமஸ்' என சொல்லிவிடுகிறோம். ஆனால், நம் ஒவ்வொருவருள்ளும் நிறைய டவுட்டிங் தாமஸ் இருக்கிறார்கள்: 'அலார்ம் கரெக்ட்டான நேரத்திற்கு அடிக்குமா?' 'நாம் அன்பு செய்பவர் நம்மோடு என்றும் இருப்பாரா?' 'கடவுள் என் செபத்தை கேட்பாரா?' 'இன்றைக்கு கடன் வாங்கினால் நாளைக்கு திரும்ப அடைச்சுடலாமா?' 'மாத்திரை எடுத்தால் காய்ச்சல் சரியாகுமா?' 'இது நடக்குமா?' 'அது நடக்காதா?' என நிறைய ஐயங்கள் நம் ஒவ்வொருவரிடமும் வரும்போதெல்லாம் நம்மில் ஒரு தாமஸ் தோன்றி மறைகிறார்.

ஆனால், தோமையாருக்கு மறுமுகம் ஒன்று உண்டு என்பதை நாம் மறந்துவிடுகின்றோம்.

திருத்தூதர் தோமா பேசிய வார்த்தைகளைப் பதிவு செய்தவர் யோவான் நற்செய்தியாளர் மட்டுமே. மற்ற நற்செய்தியாளர்கள் 'தோமா' என்ற பெயரை மட்டுமே பதிவு செய்கின்றனர். ஆனால், யோவான் அவரை உரையாடுபவராகப் பதிவு செய்கிறார். மேலும், 'தோமா' என்று வரும் இடத்தில் எல்லாம், 'திதிமு என்னும் தோமா' என்று பதிவு செய்கின்றார். 'திதிமு' என்றால் 'இரட்டை' என்று பொருள்.

'இரட்டை' என்னும் இந்த அடைமொழி தோமாவுக்கு பொருந்துவதுபோல நிகழ்வுகளைப் பதிவு செய்கிறார் யோவான்.

யோவான் நற்செய்தியில் தோமா நான்கு முறை பேசுகிறார்.

திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம், 'நாமும் செல்வோம். அவரோடு இறப்போம்' என்றார். (11:16)

தோமா இயேசுவிடம், 'ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படி தெரிந்துகொள்ள இயலும்?' என்றார். (14:5)

தோமா மற்ற சீடர்களிடம், 'அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்' என்றார். (14:25)

தோமா இயேசுவைப் பார்த்து, 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!' என்றார். (14:28)

இந்த நான்கு முறைகளில், தோமாவின் பேச்சு இரண்டு முறை சீடர்களை நோக்கியும், இரண்டு முறை இயேசுவை நோக்கியும் இருக்கிறது. 

இந்த நான்கு முறைகளில், தோமா இயேசுவை இரண்டு முறை 'அவர்' எனவும், இரண்டு முறை 'ஆண்டவரே' எனவும் விளிக்கின்றார்.

இந்த நான்கு முறைகளில், முதல் இரண்டு முறை தோமா தன்னை மற்ற சீடர்களோடு இணைத்துக்கொண்டு, 'நாம்' என்கிறார். மற்ற இரண்டு முறைகளில், தன்னையே அவர்களிடமிருந்து தள்ளி வைத்துக்கொண்டு, 'நான்,' 'என்' எனச் சொல்கின்றார்.

இந்த நான்கு முறைகளில், தோமா தன் உடன் சீடர்களிடம் பேசும் பேச்சுக்கு அவர்கள் எதுவும் மறுமொழி சொல்லவில்லை. ஆனால், தோமா இயேசுவிடம் பேசும்போதெல்லாம் இயேசுவும் பதில் பேசுகின்றார்.

மொத்தத்தில், அவர்களோடு (சீடர்களோடு) இருப்பவராகவும், அவரோடு (இயேசுவோடு) இருப்பவராகவும், அவர்களோடு இல்லாதவராகவும், அவரோடு இல்லாதவராகவும் முன்நிறுத்தப்படுகிறார் தோமா.

இதுதான் இவரது இரட்டைத்தன்மை.

ஆகையால்தான், இவரது பெயர் 'திதிம்' (இரட்டை).

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் (காண். யோவா 20:19-31) 'இரட்டை' என்ற நிலை தனித்துக் காணப்படுகிறது. எப்படி?

இயேசு இரண்டு முறை தன் சீடர்களைச் சந்திக்கின்றார். தோமா இல்லாமல் ஒருமுறை. தோமாவோடு மறுமுறை.

இரண்டுமுறை, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!' என்று சொல்கின்றார்.

இரண்டுமுறை தன் கைகளையும், விலாவையும் காட்டுகின்றார்.

'நான் உங்களை அனுப்புகிறேன்,' 'நான் உங்களுக்கு பாவம் மன்னிக்க அதிகாரம் அளிக்கிறேன்' என்று இரண்டு உடனிருப்பு செய்திகளைத் தருகின்றார்.

தோமா இரண்டு வார்த்தைகளால் தன் நம்பிக்கையை அறிக்கையிடுகின்றார்: 'ஆண்டவரே,' 'கடவுளே.'

சீடர்களின் உள்ளத்து உணர்வு இரண்டாக இருக்கின்றது: 'நம்பிக்கை,' 'மகிழ்ச்சி.'

இந்நூலில் பல எழுதப்பட்டிருக்கின்றன. சில எழுதப்படாமல் இருக்கின்றன.

இந்நூலை வாசிப்பவர்கள் இயேசுவைப் பற்றி, 'இறைமகன்,' 'மெசியா' என இரட்டை அறிக்கை செய்ய வேண்டும்.

இந்நூலை எழுத இரட்டை நோக்கம் இருக்கிறது: 'நீங்கள் நம்பவும்,' 'நீங்கள் வாழ்வு பெறவும்.'

மேலும், யோவான் பதிவு செய்யும் இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வுக்கும் (காண். யோவா 20:1-18) இன்றைய நற்செய்திப் பகுதிக்கும் சில 'இரட்டை' வேறுபாடுகள் உள்ளன:

அது 'முதல் நாள் காலை'. இது 'முதல் நாள் மாலை.'

அங்கு 'கல்லறை காலியாக இருக்கிறது.' இங்கு 'வீடு நிறைந்திருக்கிறது.'

அங்கே 'கல் திறந்திருக்கிறது.' இங்கே 'கதவு மூடியிருக்கின்றது.'

அங்கே 'மரியா அச்சமின்றி இருக்கின்றார்.' இங்கே சீடர்கள் 'அச்சத்தோடு இருக்கின்றனர்.'

அங்கே 'என் ஆண்டவரைக் கண்டேன்' என மரியா உரிமை கொண்டாடுகின்றார். இங்கே 'ஆண்டவரைக் கண்டோம்' என பொத்தாம் பொதுவாகச் சொல்கின்றனர் சீடர்கள்.

இந்த இரண்டு மேடைகளுக்கு நடுவே மூன்றாவது மேடையில் தோமா இருக்கின்றார்.

'தோமா அவர்களோடு இல்லை' என பதிவு செய்கிறார் யோவான்.

ஆக, தோமாவின் இருப்பை, 'அவர்களோடு தோமா,' 'அவரோடு தோமா' என இரண்டு நிலைகளாகப் பிரிக்கலாம்.

அ. அவர்களோடு தோமா

'தோமா அவர்களோடு இல்லை.' ஒருவேளை தோமா அவர்களோடு இருந்தால் அன்று என்ன நடந்திருக்கும்? இயேசுவைக் கண்டவுடன் நம்பியிருப்பாரா? அல்லது மற்ற சீடர்களைப் போல அச்சத்தால் உறைந்து போயிருப்பாரா? அச்சம் ஒரு கொடுமையான உணர்வு. அது தன்னைக் கொண்டிருப்பவரை மட்டுமல்ல. மற்றவர்களையும் அழித்துவிடுகிறது. ஆகையால்தான் அச்சம் கொண்டிருப்பவர் போர்க்களம் செல்லத் தகுதியற்றவனர் என்கிறது பண்டைய போர் மரபு (காண். நீத 6-7).

தோமா இயல்பாகவே அச்சம் இல்லாதவர். ஆகையால்தான் இயேசுவின் பெத்தானியா பயணம் கேட்டு மற்ற சீடர்கள் அவரிடம், 'ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள். மீண்டும் அங்கு போகிறீரா?' என்று கேட்டபோது, தோமா, 'நாமும் அவரோடு செல்வோம். அவரோடு இறப்போம்' என்கிறார்.

தோமா அன்று தன் உடன்சீடர்களோடு இல்லை என்றால், வேறு எங்குதான் அவர் இருந்தார்?

யூதர்களோடா? எருசலேமின் தெருக்களிலா? பிலாத்துவின் அரண்மனை முற்றத்திலா? கல்வாரி மலையிலா? கல்லறைத் தோட்டத்திலா?

அவர் எங்கு இருந்தார்? என்ற கேள்விக்கு நற்செய்தியில் பதில் இல்லை. வாசகர்களாகிய நாம் தான் இதற்கு விடை காண வேண்டும்.

ஆ. அவரோடு தோமா

முதல் பகுதியில் அவர்களோடு இல்லாத தோமா, இரண்டாவது பகுதியில் அவரோடு இருக்கிறார். யாரோடு? இயேசுவோடு. எந்த அளவிற்கு? இயேசுவின் விரல்களைத் தன் விரல்களாலும், இயேசுவின் விலாவைத் தன் கையாலும் ஊடுருவும் அளவிற்கு நெருக்கம் அடைகின்றார். 

மற்ற சீடர்கள் இயேசுவைக் காண்கிறார்கள். அவ்வளவுதான்!

ஆனால் தோமா இயேசுவை ஊடுருவுகின்றார். இந்த நெருக்கம்தான், 'என் ஆண்டவரே, என் கடவுளே,' என இயேசுவிடம் சரணாகதி அடைய அவரைத் தூண்டுகிறது.

ஒருவேளை தோமா அவர்களோடு மட்டுமே இருந்திருந்தால் இந்த அனுபவத்தை அவர் பெற இயலாமல் போயிருக்கலாம்.

ஆக, அவர்களோடு இல்லாமல் அவரோடு இருப்பது என்பது நம் வாழ்வின் இரட்டிப்புத் தன்மைகளைத் களைந்துவிட்டு, இறைவனோடு ஒன்றிப்பு அடைவது.

இந்த நிலை சாத்தியமா?

சாத்தியம்தான் எனச் சொல்கிறது இன்றைய முதல் வாசகம் (காண். திப 2:42-47):

'நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்.'

அவர்களிடத்தில் எந்த ஒரு பிரிவும் இல்லை: ஆண்-பெண், உயர்ந்தவர்-தாழ்ந்தவர், இருப்பவர்-இல்லாதவர், ஏழை-பணக்காரார், தேவைகள் இல்லாதவர்-தேவைகள் உடையவர், பெற்றவர்-பெறாதவர், நிறைந்தவர்-வெற்றானவர் என பிளவுகள் இல்லை. அனைவரும் ஒன்றாயிருந்தனர்.

இவர்களை இந்த 'ஒன்று' நிலையில் கட்டி வைத்திருந்தது 'உயிர்த்த ஆண்டவரின் அனுபவம்.'

இயேசுவின் உயிர்ப்பை அவர்கள் வெறும் 'நிகழ்வாக' (இவென்ட்) பார்க்கவில்லை. மாறாக, அதை ஓர் அனுபவமாக (எக்ஸ்பிரியன்ஸ்) பார்க்கிறார்கள். ஆகையால்தான் அவர்கள் வாழ்வில் மாற்றம் பிறக்கிறது. இயேசுவின் உயிர்ப்புக்கு இதைவிட பெரிய சான்று இருக்கமுடியாது.

இன்று இயேசுவின் உயிர்ப்பு எனக்கு என்ன?

அது ஒரு நிகழ்வா?

அல்லது நான் விசுவாசப் பிரமாணத்தில் அறிக்கையிடும் ஒரு வரியா?

அல்லது அது என் வாழ்க்கை அனுபவமா?

மேலும், உயிர்ப்பு அனுபவம் அவர்களின் தனிநபர் அனுபவமாக மட்டும் இல்லாமல், அது அவர்களின் குழுவாழ்விலும் செயல்வடிவம் பெற்றது. ஆகையால்தான், 'திருத்தூதர் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும், அப்பம் பிடுவதிலும், இறைவேண்டலிலும் அவர்களால் உறுதியாய் நிலைத்திருக்கவும்,' 'எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தைப் பெறவும் முடிந்தது.'

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 பேதுரு 1:3-9) மற்றொரு இரட்டை நிலையைப் பார்க்கின்றோம். 

பேதுருவின் திருச்சபையில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. ஒரு பிரிவினர் இயேசு மற்றும் பேதுருவின் சமகாலத்தவர்கள். இவர்கள் இயேசுவை நேரடியாக பார்த்தவர்கள். அவரின் அருஞ்செயல்களைக் கண்டவர்கள். மற்ற பிரிவினர் இயேசு மற்றும் பேதுருவின் இரண்டாம் தலைமுறையினர். இவர்கள் இயேசுவை நேரடியாக பார்க்கவில்லை. அவரின் அருஞ்செயல்களைக் காணவில்லை. இவர்கள் முதல் தலைமுறையினரின் பிள்ளைகள். இப்போது இந்த இரண்டு குழுக்களுக்கிடையே ஒரு கருத்து வேறுபாடு: 'யாருடைய நம்பிக்கை பெரிது?' இயேசுவைக் கண்டவர்களின் நம்பிக்கையா? அல்லது அவரைக் காணாதவர்களின் நம்பிக்கையா? இரண்டாம் நம்பிக்கையைவிட முதல் நம்பிக்கை பெரியதா? அல்லது சிறியதா?

இப்படிப்பட்ட இறையியல் சிக்கலில் சிக்கித் தவித்த மக்களுக்கு கலங்கரை விளக்கமாக இருக்கின்றது பேதுருவின் கடிதம்: 'இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகை சோதனைகளால் துயருற வேண்டியிருப்பினும், அந்நாளில் பேருவகை கொள்வீர்கள் ... ... அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே நீங்கள் துயருறுகிறீர்கள் ... ... நீங்கள் அவரைப் பார்த்ததில்லை. எனினும் அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் அவரைக் கண்டதில்லை. எனினும் நம்பிக்கை கொண்டு, ஒப்பற்ற மகிழ்ச்சி அடைந்து பேருவகை கொள்கிறீர்கள்.'

இதே இரட்டை தலைமுறை நிலை யோவானின் திருச்சபையிலும் இருக்க, 'நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்' என இயேசுவே சொல்வதாகச் சொல்லி, 'பின்னவர்களை' 'முன்னவர்களை' விட மேலானவர்கள் என முன்வைத்து எளிதாக பிரச்சினையை சரிசெய்துவிடுகின்றார்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு முன்வைக்கும் வாழ்வியல் கேள்விகள் மூன்று:

1. நாம் யாரோடு? - அவர்களோடு? அல்லது அவரோடு?

'அவர்களோடு' இருப்பது என்பது கூட்டத்தில் ஒருவராக இருப்பது. அப்படி இருக்கும் நமக்கு தனியான அடையாளம் இல்லை. கூட்டத்தின் அடையாளமே நம் அடையாளம். அங்கே யாரும் யாரைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. எல்லோரும் அங்கே முகமூடிகள் அணிந்து கொள்ளலாம். ஒருவர் சொல்வதை இங்கே எல்லாரும் பின்பற்றுவர். ஆனால், 'அவரோடு' இருப்பது என்பது தனியாக இருப்பது. அப்படி நாம் இருப்பதற்கு நமக்குத் தனியான அடையாளம் தேவை. இங்கே முகமூடி கிழிக்கப்படும். உண்மையை நேருக்கு நேர் நாம் சந்திக்க வேண்டிய கட்டாயம் இங்கே இருக்கும். ஆகையால்தான், தோமா 'அவர்களோடு' இல்லாமல், 'அவரோடு' இருக்கின்றார். சில நேரங்களில் நம்மிடம் இந்த இரட்டைத்தன்மை ஒரே நேரத்தில் இருக்கலாம். 'அவர்களோடு' நிலையில் இருந்து, 'அவரோடு' நிலைக்கு என்னால் கடந்து செல்ல முடிகிறதா?

2. என் உள்ளுணர்வு என்ன?

உயிர்த்த ஆண்டவரின் அனுபவம் பெறுபவர்கள் மூன்றுவகை உணர்வுகளைப் பெறுகின்றனர்: (அ) சீடர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர், (ஆ) தோமா பேறுபெறுகின்றார், (இ) இந்நூலை வாசிக்கும் அனைவரும் வாழ்வு பெறுகின்றனர். 'மகிழ்ச்சி அடைதல்,' 'பேறுபெற்றவர் ஆகுதல்,' 'வாழ்வு பெறுதல்' என்பது இறையனுபவத்தின் படிக்கட்டுகள். மகிழ்ச்சியை அடைய ஒருவர் தன்னிறைவு பெற வேண்டும். தன்னிறைவு பெற்ற ஒருவர்தான் தன் அடையாளத்தை அழிக்கவும், தன் உடைமைகளையும், நேரத்தையும், ஆற்றலையும் மற்றவரோடு பகிர்ந்துகொள்ளவும் முடியும். 'வாழ்வு' என்பது இதுவே. தன்மையமான எல்லாவற்றையும், இறைமையமாகவும், பிறர்மையமாகவும் மாற்றுவதுதான் வாழ்வு. ஆகையால்தான், 'நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்' (யோவா 10:10) என்று இயேசு சொல்லுமிடத்தில், தன்மையத்திலிருந்து பிறர்மையத்தை நோக்கிய நகர்வு இருக்கின்றது.

3. அச்சம்-ஆனந்தம், ஐயம்-நம்பிக்கை, கண்டு-காணாமல்

சீடர்களின் அச்சம் நீங்கி ஆனந்தம் தருகின்றார் இயேசு. அவர்களுக்கு தன் அமைதியை உரித்தாக்குவதோடல்லாமல் அவர்களை 'அனுப்புகின்றார்.' சீடத்துவம் இரட்டைத்தன்மை கொண்டது. இங்கே 'அழைத்தலும்,' 'அனுப்புதலும்' இணைந்தே செல்கிறது. அச்சம் கொண்டிருப்பவர்கள் அனுப்பப்பட முடியாது. ஏனெனில் அவர்கள் மற்றவர்களின் உள்ளத்திலும் அச்சத்தை விதைத்துவிடுவர். அதுவே, ஆனந்தமாக மாறினால் அவர்களின் அனுப்பப்படுதல் எளிதாகும். ஐயம் நீங்கி நம்பிக்கை கொள்கின்றார் தோமா. இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்வதில் தோமாiவிட சீடர்கள் பெரியவர்கள் அல்லர். அவர்களும் இயேசுவைக் கண்டதால்தான் நம்புகின்றனர். நேரத்தாலும், இடத்தாலும் இயேசுவைவிட்டு மிக தூரமாக இருக்கும் நாம்தான் நம்பிக்கையில் பெரியவர்கள். ஏனெனில் நாம் காணாமலேயே நம்புகின்றோம்.

இறுதியாக,

'அவர்களோடு' இல்லாத தோமா தன்னையே 'அவரோடு' அறைந்துகொண்டார். அவரின் விரல்களில் தன் விரலையும், அவரின் விலாவில் தன் கைகளையும் பதித்துக்கொண்டார்.

இன்று 'அவர்களோடு' மற்றும் 'அவைகளோடு' இருக்கும் நம் இருப்பிலிருந்து 'அவரோடு' இருக்கும் இருப்பிற்குக் கடந்து செல்வோம்.ஏனெனில், 'அவர்களோடு' மற்றும் 'அவைகளோடு' என்பவை காண்பவை. காண்பவை நிலையவற்றவை. காணாதவவை நிலையானவை.

காணாத அவரே நிலையான அமைதியையும், ஆனந்தத்தையும் அருள வல்லவர். அவரோடு என்றும் நாம்!

Yesu Karunanidhi

ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா 16-04-2017

ஏப்ரல் 15, 2017

ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா 16-04-2017

மறையுரை 1: 'அவர் இங்கு இல்லை'

யாராவது ஒருவர் இறக்கும்போது கேட்கப்படுகின்ற பல கேள்விகளுள் ஒரு கேள்வி: அது நல்ல சாவா? கெட்ட சாவா? யூத மரபில் நல்ல மரணம் என்பதற்கு மூன்று காரணிகளை வகுத்திருந்தனர். ஒன்று, முதிர்ந்த வயதில் இறக்க வேண்டும். இரண்டு, தனக்குப் பின் சந்ததியை விட்டுச் செல்ல வேண்டும். மூன்று, தனக்கென்று சொந்தக் கல்லறை வைத்திருக்க வேண்டும். இயேசு இறந்தது முப்பத்து மூன்று வயதில் வாழ வேண்டிய வயது. இறப்பு சாதாரண இறப்பு அல்ல. சமூகப் புறக்கணிப்பு, சமயப் புறக்கணிப்பு, அரசியல் புறக்கணிப்பில் நிகழ்த்தப்பட்ட ஒரு படுகொலை. அவமானத்தின் சின்னமாகிய சிலுவையில் இறக்கின்றார். அவருக்கென்று சந்ததியும் இல்லை. தன் இறையாட்சியின் விழுதுகளாக அவர் கருதிய திருத்தூதர்களும், சீடர்களும் கூட கைவிட்டுவிட்ட ஓடிவிட்டனர். இறந்தபின் அடக்கம் செய்யப்பட்டது இரவல் கல்லறையில். இந்த மூன்று நிலைகளிலும் இயேசுவின் சாவு கெட்ட சாவுதான்.

இந்தக் கெட்ட சாவு இன்று உன்னத உயிர்ப்பாக மாறியிருப்பதைக் கொண்டாட வந்திருக்கின்றோம். 

நாம் பார்க்கின்ற கல்லறைகளில் R.I.P. என்று எழுதியிருப்பார்கள். இதன் பொருள்: Rest In Peace  என்பது. ஆனால் இயேசுவின் கல்லறையில் எழுதப்பட்ட இந்த RIP க்கு படைவீரர்கள் சொன்ன பொருள் Rise If Possible. மனித வரலாற்றிலேயே கல்லறைக்குக் காவல் இருந்தவர்கள் இவர்கள் தாம். ஆண்டவரின் உயிர்ப்பை யார் எதிர்பார்த்தது? அவருடன் உண்டு, உறங்கி, வழிநடந்து பயணம் செய்த சீடர்கள் அல்ல, மாறாக, அவருடைய எதிரிகள் தாம் எதிர்பார்த்திருந்தனர். பரிசேயர்கள். மறைநூல் அறிஞர்கள், பிலாத்து, தலைமைக்குருக்கள் ஆகியோர்தாம் எதிர்பார்த்தனர்.

ஆண்டவரின் உயிர்ப்பு நமக்கு மூன்று பாடங்களைக் கற்பிக்கின்றது:

1. இந்த நிலையும் கடந்து போய்விடும்

2. அவர் இங்கு இல்லை

3. நம் நம்பிக்கையின் மையம் உயிர்ப்பு

1. இந்த நிலையும் கடந்து போய்விடும்

அரசன் ஒருவன் எல்லா நிலையிலும் - இன்பத்திலும், துன்பத்திலும், வாழ்விலும், சாவிலும், சிரிப்பிலும், அழுகையிலும், வளமையிலும், வறுமையிலும் பயன்படும் ஒரு மந்திரத்தைக் கண்டுபிடிக்க நினைக்கிறான். அவனது கேள்விக்குப் பதிலாக புத்தர் கண்டுபிடித்ததுதான் இந்த மந்திரம் - 'இந்த நிலையும் கடந்து போகும்'. இயேசுவுக்குத் தெரிந்தது எல்லாம் கடந்து விடும் என்று. ஓசன்னா கடந்து விடும், குருத்தோலைகள் கடந்து விடும், கெத்சமேனி கடந்து விடும், பிலாத்தின் அரண்மனை கடந்து விடும், ஏரோதின் மாளிகை கடந்து விடும், சிலுவைப் பாடுகள் கடந்து விடும், எல்லாம் கடந்து விடும். இறப்பும் கடந்து விடும் என்று. இறப்பைக் கடத்தியது இயேசுவின் உயிர்ப்பு. நம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் நமக்கும் எல்லாம் கடந்து விடும் என்பதை நம் ஆண்டவரின் உயிர்ப்பு முதல் பாடமாக வைக்கின்றது.

2. அவர் இங்கு இல்லை. மனிதர்களின் கல்லறைகளிலும், மகாத்மாக்களின் கல்லறைகளிலும் கல்லறை வரிகள் எழுதி வைப்பது மரபு. 'ஆசிய ஜோதி இங்கே துயில் கொள்கின்றது' என்பது நேருவின் கல்லறை வரிகள். 'இவன் ஒரு தமிழ் மாணவன்' என்பது போப்பையரின் கல்லறை வரிகள். 'அவர் இங்கு இல்லை' என்பது இயேசுவின் கல்லறை வரிகள். அவர் இங்கு இல்லை என்றால் இன்று நம்மோடு இருக்கின்றார் என்று விளங்குகின்றது. இன்று நாம் தேட வேண்டிய ஆண்டவர் கல்லறையில் இல்லை நம் அருகில் இருக்கின்றார். கடவுள் நம்மோடு என்று மனநிலையைப் பெற உயிர்ப்பு நமக்குப் பாடம் கற்பிக்கின்றது.

3. உயிர்ப்பு நம் கிறிஸ்தவ நம்பிக்கையின் மையம். உயிர்ப்பு இல்லையென்றால் நம் விசுவாசம் இல்லை. வெற்றுக் கல்லறைதான் நம் அனைத்துக் கல்லறைகளுக்கும் பதில். உயிர்ப்பு நமக்கு புதுவாழ்வு தருகின்றது. 'பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது' (உரோ 5:20). 'இனி வாழ்பவன் நானல்ல, கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார்' (கலா 2:20) என்ற மனநிலையில் நாம் வாழ அழைக்கப்படுகின்றோம். ஆமென்.

மறையுரை 2: கிறிஸ்து உயிர்த்தெழவில்லையென்றால்;...!

1. இன்று நகைக்கடைகளிலும், வங்கிகளிலும் இருக்கும் இரகசியக் கேமராக்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசுவின் கல்லறையில் வைத்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அந்தச் சனிக்கிழமை இரவு கல்லறைக்குள் நடந்தது பதிவாகியிருக்காதா? இயேசு எழுந்தது, தன்னைச் சுற்றியிருந்த ஆடைகளைக் களைந்தது, பின் கல்லைப் புரட்டி வெளியே சென்றது என்று பதிவாகியிருக்குமா? அல்லது திடீரென்று தோன்றிய மின்னல் ஒளி! ஒரே வெளிச்சம்! ஒன்றுமே பதிவாகமல் வெறும் வெளிச்சம் மட்டும் பதிவாகியிருக்குமா? வானதூதர்களின் முகங்கள் நமக்குத் தெரிந்திருக்குமா? கல்லறையை மூடியிருந்த கல் புரட்டப்பட்டதன் நோக்கம் என்ன? இயேசுவை வெளியேற்றவா? மூடிய கதவுகளை ஊடுருவிய இயேசுவின் உடல் கல்லை ஊடுயிருக்கலாமே? அல்லது கல் புரட்டப்பட்டது காலையில் வரும் பெண்களை உள்ளே அனுமதிப்பதற்காகவா? 

2. வெற்றுக் கல்லறை இயேசுவின் உயிர்ப்பை எப்படிக் காட்ட முடியும்? 'மற்றச் சீடரும் உள்ளே சென்றார். கண்டார். நம்பினார்' (யோவா 20:8) என்று மட்டும் நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்கின்றது. அவர் நம்பினார், ஏனெனில் ஏற்கனவே இயேசுவின் வார்த்தைகளை அவர் நம்பியிருந்தார். இயேசுவின் உயிர்ப்பை நம்ப வேண்டுமெனில் அவரின் வார்த்தைகளை நம்புவது அவசியம். 

3. இயேசுவின் உயிர்ப்பு அவரின் வானகத் தந்தை அவரது இறப்பிற்குத் தந்த பதில். வெற்றுக் கல்லறை பூமிப்பந்தில் விழுந்த நிரந்தர அம்மைத் தளும்பு. இறைவனின் அன்பையும், உடனிருப்பையும் நமக்கு உணர்த்தும் ஒரு அடையாளம்.

4. 'உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?' (லூக் 24:5). யூதர்கள் இயேசுவைக் கல்லறைக்குள் அடைத்துவிட்டு தங்கள் பாஸ்காக் கொண்டாட்டங்களையும், பலிகளையும், ஏழைகளுக்கு உதவுதலையும், திருச்சட்டத்தின் மேலான வாதங்களையும் தொடரலாம் என்று சென்றபோது அங்கிருந்து புறப்படுகின்றார் இயேசு. இறைவனை எவரும் 'இப்படித்தான், அப்படித்தான்' என்று வரைமுறைகளுக்குள் அடக்கிவைத்துவிட முடியாது. அவர் அனைத்தையும் கடந்தவர் - அதானால்தான் அவர் கடவுள். அப்படியென்றால் கடவுள் நம்பிக்கை அடிப்படையில் ஏற்றத்தாழ்வு பாராட்டுவதும், எங்கள் சபைதான் உண்மையானது, உங்கள் சபை தப்பறையானது என்று ஒருவர் மற்றவரைப் பிரித்துப் பார்ப்பதும் இருந்ததென்றால் அந்தச் சபையும், சமூகமும் வெறும் கல்லறையே. அங்கே இயேசுவைத் தேடுவதில் அர்த்தம் இல்லை.

5. 'கலிலேயாவில் இருக்கும்போது அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்' (லூக் 24:6). இயேசுவைப் பற்றிய நினைவும், அவரது பணிகளைத் தொடர்ந்து செய்தலுமே புதிய உயிர்ப்பு அனுபவம். இயேசுவின் உயிர்ப்பை நாம் அனுபவிக்க வேண்டுமானால் கலிலேயாவை, அவரின் போதனைகளை, அவரின் பயணங்களை, அவரின் அற்புதங்களை நாம் நினைவிற்கொள்ளல் வேண்டும்.

6. 'வாரத்தின் முதல்நாள் விடியற்காலையில் வாசனைத் திரவியங்களோடு'. இயேசுவின் கல்லறையைச் சந்திக்கின்ற பெண்களிடம் இருந்தது அவர்களின் வேகமும், தயாரிப்பும். நம்பிக்கை என்பது நம் அன்றாட வேலைகளைச் செய்வது. அதிகாலை எழுவது. கல்லறை நோக்கி ஓடுவது. உயிர்ப்பிற்குச் சான்று பகர்வது. அன்றாட வாழ்க்கையில் பிரதிபலிக்காத எந்த ஆன்மீகமும் மாற்றத்தின் அடையாளமாக மாறமுடியாது.

7. கல்லறை முடிவன்று. கல்லறையையும் தாண்டி நம் வாழ்விற்கு அர்த்தம் உண்டு. இறப்பு நமக்கு ஒருபோதும் இறப்பல்ல. மறுவாழ்விற்கான வாசல். நேரம், இடம் என்ற வரைமுறைக்கு உட்பட்டு வாழும் நம்மை விடுவிக்கின்றது மரணம். இறப்பிற்குப் பின் நாம் யாதுமாகின்றோம்: மண், காற்று, நீர், ஆகாயம், நெருப்பு என அனைத்திலும் நாம் பிரசன்னமாகின்றோம். எந்தக் கதவோ, எந்தச் சுவரோ நம்மைத் தடுத்துவிட முடியாது. இறப்பு ஒரு விடுதலை.

8. அவர் இங்கு இல்லை. பின் எங்கே இருக்கின்றார்? நம் அருகில் இருக்கின்றார். மரியா மதலேனாளைப் போல நாம் அவரைக் கண்டுகொள்ளாமலோ, தவறாக தோட்டக்காரர் எனக் கண்டுகொண்டு இருக்கலாம். நம் பெற்றோரில், பிள்ளைகளில், பணியிடத்தில், பயணத்தில், தோல்வியில், வெற்றியில், நோயில், உடல்நலத்தில் நம் அருகில் இருக்கின்றார். 'ரபூணி' என்று நாம் கட்டிப்பிடிக்கும் தூரத்தில் நிற்கின்றார் நம் கடவுள்.

9. இதுவும் கடந்துவிடும். வாழ்வில் எதுவும் நிலையன்று. அனைத்தும் மாறிப்போகும். பிறப்பா? கடந்துவிடும். பயணமா? கடந்துவிடும். ஒலிவக் கிளை பவனியா? கடந்துவிடும். தண்டனைத் தீர்ப்பா? கடந்து விடும். முள்முடியா? கடந்துவிடும். சிலுவையா? கடந்துவிடும். கல்லறையா? கடந்துவிடும்!

மறையுரை 3: முடிவு என நினைத்தவருக்கு விடிவு

பழைய ஏற்பாட்டில் இஸ்ராயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து மோசே தலைமையில் விடுதலை பெற்றவர்களாய் செங்கடலைக் கடந்து சென்றதையும், புதிய ஏற்பாட்டில் இயேசு இறப்பைக் கடந்து பாவத்தை அழித்து உயிர்த்ததையும் ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால்: 'எல்லாம் முடிந்தது என்று நினைத்தவர்களுக்கு விடிந்தது!' என்று சொல்லலாம். 

பின்னால் பாரவோனின் படைவீரர்கள். முன்னால் செங்கடல். இரண்டு பக்கம் சென்றாலும் அழிவு நிச்சயம். இச்சூழலில் 'எங்களை அழிக்கவா இங்குக் கூட்டி வந்தீர்!' என்று மோசேயைப் பார்த்து இஸ்ரயேல் மக்கள் பயத்தால் அலறியபோது, எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்தபோது அங்கே விடியச் செய்கின்றார் இறைவன். கடல் பிரிகின்றது. பாதை தெரிகின்றது. பாதம் நனையாமல் கடந்து செல்கின்றனர்.

முப்பது வருடங்கள் தம்மையே தயாரித்து, மூன்று வருடங்கள் பன்னிரண்டு சீடர்களோடு பட்டிகள் தோறும் பயணம் செய்து நோய்களைக் குணமாக்கி, பேய் பிடித்தவர்களுக்கு நலம் தந்து 'இறையரசு நெருங்கி வந்துவிட்டது!' என அறிவித்த ஒருவர், 'தாவீதின் மகனுக்கு ஓசான்னா!' என்று நாம் வாழ்த்துப்பாடிய ஒருவர், 'மெசியா வந்துவிட்டார். நம் துன்பமெல்லாம் அழிந்துவிட்டது!' என நாம் கனவு கண்டுகொண்டிருக்க இதோ சிலுவையில் மிகக் கொடூரமாய் இறந்து போனாரே! என்று புலம்பிக் கொண்டிருந்த சீடர்களுக்கும் இன்று விடியல். இயேசுவின் சீடர்களை விட அவரின் எதிரிகளே அவரின் உயிர்ப்பின் மேல் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆகையால்தான் கல்லறைக்குக் காவல் வைக்கத் துணிகின்றனர்.

பழைய ஏற்பாட்டு மக்கள் கடந்ததற்கு ஒரே உதாரணம்: 'நனைந்த தரை'. புதிய ஏற்பாட்டில் இயேசு கடந்ததற்கு ஒரே உதாரணம்: 'வெற்றுக்கல்லறை'. 'அவர் இங்கு இல்லை!' - இதுதான் அவருடைய கல்லறையில் அவராய் எழுதி வைத்த வாசகம். 'சீடர்கள் கண்டார்கள், நம்பினார்கள்' என்று விவிலியம் சொல்லும்போதும் 'வெற்றுக் கல்லறையையே' குறிப்பிடுகின்றது.

இன்றும் நம்மைக் கட்டி வைக்கும் ஒரு வார்த்தை இதுதான்: 'எல்லாம் முடிந்துவிட்டது! இனி ஒன்றுமில்லை!' நம் வாழ்வில் இழப்புகள் வரும்போதும், நம் உடல்நலம் தளரும்போதும், நமக்கு நெருக்கமானவர்கள் நம்மைவிட்டுப் பிரியும்போதும், தொழிலில் நஷ்டம் வரும்போதும், குடும்பத்தில் பிரச்சினைகள் வரும்போதும், 'எல்லாம் முடிந்துவிட்டது!' எனப் புலம்புகின்றோம். இறைவனின் பார்வையில் முடிவு என்பதே இல்லை. எல்லாம் புதிய தொடக்கம்தான்.

இந்தப் புதிய தொடக்கத்தைக் காண முதலில் நமக்குப் புதிய கண்கள் வேண்டும். அந்தக் கண்களின் பெயர்தான் நம்பிக்கை. இயேசுவின் எதிரிகளும் அவருடைய கல்லறையை வந்து பார்த்திருக்கக் கூடும். அவர்களும் 'அவர் இங்கு இல்லை!' எனச் சொல்லியிருப்பார்கள். சீடர்கள் சொன்னதற்கும், அவர்கள் சொன்னதற்கும் வித்தியாசம் இதுதான்: 'நம்பிக்கை!'. கண்டார்கள். நம்பினார்கள். 'ஆண்டவராகிய கிறிஸ்து உயிர்த்தெழாவிட்டால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும், நாங்கள் அறிவிக்கும் நற்செய்தியும் வீண்!' என்கிறார் தூய பவுலடியார். இயேசுவின் உயிர்ப்பே நம் இறைநம்பிக்கையின் ஆணிவேர். அந்த நம்பிக்கைக்காக இன்று நன்றி கூறுவோம். இந்த நம்பிக்கை நமக்கு மனதளவிலும் வலுவூட்டுகிறது. 'அவர் கல்லறையில் இல்லை!' என்றால் எங்கே இருக்கிறார்? 'இதோ! நம் நடுவில் இருக்கின்றார்'. 'வாழ்பவரை இனி இறந்தோரிடம் தேடுவதேன்!' எங்கெல்லாம் வாழ்க்கை துளிர் விடுகின்றதோ, எங்கெல்லாம் மொட்டு விரிகின்றதோ, எங்கெல்லாம் உயிர் பிறக்கின்றதோ அங்கே அவர் இருக்கின்றார். அங்கே அவரைத் தேடுவோம்.

இதன் உட்பொருள் என்ன? நாம் கல்லறைகளாய் இருந்தால் இயேசு அங்கே இருப்பதில்லை. நாம் நம் பழைய கால வடுக்களையும், பாவங்களையும் பற்றிக்கொண்டு 'என் பாவமே! என் பாவமே!' எனப் புலம்பிக் கொண்டிருந்தால் அங்கே கடவுள் இருப்பதில்லை. நம் புன்சிரிப்பில் கடவுள் இருக்கிறார். பல நேரங்களில் உயிர்ப்பின் மகிழ்ச்சியைவிட வெள்ளியின் சிலுவைச் சோகத்தையே விரும்புகிறோம். இஸ்ரயேல் மக்களும் ஒரு கட்டத்தில் 'எகிப்தின் இறைச்சிப் பாத்திரங்கள் அருகே அமர்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!' எனத் தங்களின் இறந்தகாலத்தை நாடிச்செல்கின்றனர். அவர் உயிர்த்துவிட்டார். ஆகவே இனி நாம் பின்னால் பார்க்க வேண்டாம். முன்னால் பார்த்து நடப்போம்.

'இயேசுவின் உடலுக்கு நறுமணத்தைலம் பூச வந்த பெண்களும், சீடர்களும் உயிர்ப்பின் சான்றுகளாய் மாறுகின்றனர்'. அகுஸ்தினார் உயிர்ப்பைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: 'கல்லறையின் கல் புறட்டப்பட்டது இயேசுவை வெளியே கொண்டு வருவதற்கு அல்ல. மாறாக, சீடர்களை உள்ளே கொண்டு வருவதற்குத்தான்!' இன்றும் நாம் உயிர்த்த ஆண்டவரைப் பார்க்கும்போதெல்லாம் நமக்கு இதுதான் தோன்ற வேண்டும்: 'நாம் கண்டதை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும்'. இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின் சீடர்கள் புத்துயிர் பெறுகின்றனர். 'கடவுள் நம்மோடு' என்று இறங்கி வந்த இயேசு 'கடவுள் நமக்காக' என ஏறிச் செல்கின்றார். 

எல்லாம் கடந்து விடும். சவுக்கடி, மறுதலிப்பு, சிலுவைத் துன்பம், தனிமை, ஏமாற்றம், சோகம். எல்லாம் நொடிப்பொழுதில் மாறிவிடும். 'முடிந்தது என்று நினைக்கும் போது அங்கே விடியும்'. இரவில் மடிந்த சூரியன் காலையில் எழுகின்றான். கிழக்கில் உதித்த சூரியனாய் இயேசு இன்றும் நம் நடுவில்.

ஆண்டவரின் பாஸ்கா - நள்ளிரவு மற்றும் உயிர்ப்பு நாள்

உயிர்ப்பு என்னும் வியப்பு

பாஸ்கா இரவுத் திருப்பலியில், ஏழு முதல் ஏற்பாட்டு வாசகங்களும், ஒரு திருமுகமும், ஒரு நற்செய்தி வாசகமும் என மொத்தம் ஒன்பது வாசகங்கள் வாசிக்க வேண்டிய அறிவுறுத்தல் இருந்தாலும், இவற்றில் ஐந்து வாசகங்களையாவது வாசிக்க வேண்டியது கட்டாயம்.

ஒளி, இறைவார்த்தை, திருமுழுக்கு, நற்கருணை என இன்றைய வழிபாடு ரொம்ப கலர்ஃபுல்லாக இருக்கிறது. இந்த இரவு திருவிழிப்புதான் எல்லா திருவிழிப்புகளுக்கும் தாய் என்றும் அழைக்கப்படுகின்றது. முதல் ஏற்பாட்டு நிகழ்வான விடுதலைப்பயணத்தையும், இயேசுவின் உயிர்ப்பையும் இணைத்து இன்றைய வழிபாடு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (தொடக்கநூல்) 'இல்லாமையிலிருந்து' 'இருப்புக்கும்', 'குழப்பத்திலிருந்து,' 'தெளிவுக்கும்,' 'இருளிலிருந்து,' 'ஒளிக்கும்' உலகம் கடந்து வருகிறது. இதுதான் படைப்பு.

இரண்டாம் வாசகத்தில் (விடுதலைப்பயணம்) 'எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து,' 'வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கும்,' 'பாரவோனை அரசனாகக் கொண்டதிலிருந்து,' 'யாவேயை அரசனாகக் கொள்வதற்கும்,' 'வாக்குறுதிக்கான காத்திருப்பிலிருந்து,' 'வாக்குறுதியின் நிறைவேறுதலுக்கும்' கடந்து செல்கின்றனர் இஸ்ரயேல் மக்கள். இதுதான் விடுதலைப்பயணம்.

மூன்றாம் வாசகத்தில் (எசேக்கியேல்) 'உலர்ந்த நிலையிலிருந்து,' 'உயிர்பெற்ற நிலைக்கு' எலும்புகளும், 'நாடுகடத்தப்பட்ட நிலையிருந்து,' 'சொந்த நாடு திரும்பும் நிலைக்கு' இஸ்ரயேல் மக்களும் திரும்புகின்றனர். இது அவர்களுக்கு இரண்டாம் மீட்பு.

நான்காம் (உரோமையர்) மற்றும் ஐந்தாம் வாசகங்களில் (லூக்கா), இயேசுவின் உயிர்ப்பு மையமாக இருக்கின்றது. 'இறப்பிலிருந்து,' 'உயிர்ப்புக்கு' இயேசு கடந்து போனதை கிறிஸ்தவ வாழ்வின் உருவகமாக பவுலும், 'உயிரற்ற அவர்,' 'உயிரோடிருக்கும் நிலைக்கு' என நேரிடையாக லூக்காவும் சொல்கின்றனர்.

ஆக, மேற்காணும் இந்த ஐந்து நிலைகளிலும், முன்னால் இருந்தது இப்போது இல்லை.

முன்னால் இருந்த குழப்பம் இல்லை.

முன்னால் இருந்த அடிமைத்தனம் இல்லை.

முன்னால் இருந்த நாடுகடத்தல் இல்லை.

முன்னால் இருந்த பாவ இயல்பு இல்லை.

முன்னால் இருந்த இறப்பு இல்லை.

'முந்தைய நிலை' மாறிவிட்டது. அல்லது 'கடந்து விட்டது'. 

எதற்காக மனித மனம் இந்த கடத்தலை அல்லது மாற்றத்தை விரும்புகிறது? இந்த ஐந்து நிகழ்வுகளும் அறிவியல் கோட்பாட்டிற்கும், லாஜிக்கிற்கும் அப்பால் இருக்கின்றன. இருள் ஒளியாகிறது. தண்ணீர் வறண்ட நிலமாகிறது. எலும்பில் சதையும் உயிரும் பிறக்கிறது. பாவம் புதுவாழ்வாகிறது. உயிரற்ற உடல் உயிர் பெறுகிறது. 

இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு விட்டனர். பாதி வழி வந்துவிட்டனர். தங்களுக்கு முன்னால் செங்கடல். தங்களுக்குப் பின்னால் பாரவோனின் குதிரைப் படைகள். இரண்டு பக்கம் சென்றாலும் அழிவுதான் என நினைத்தவர்கள் கண்முன், செங்கடல் இரண்டாகப் பிளக்கின்றது. உலர்ந்து தரை உருவாகிறது. கால்கள் நனையாமல் கடந்து செல்கின்றனர்.

சிலுவை, இறப்பு, கல்லறை என்று எதுவும் இயேசுவைத் தன்னகத்தே வைத்துக்கொள்ள முடியவில்லை. சிலுவையை, இறப்பை, கல்லறையை வெறுமையாக்கி வெளியே வருகின்றார் இயேசு.

'உலர்ந்த தரை' முதல் ஏற்பாட்டு பாஸ்காவின் அடையாளம். 'வெற்றுக்கல்லறை' இரண்டாம் ஏற்பாட்டு பாஸ்காவின் அடையாளம்.

1. இயேசுவின் வார்த்தைகளும், வெற்றுக் கல்லறையும்

நடுவில் கல்லறை. இந்தப் பக்கம் இருந்து பெண்கள் சிலர் தங்கள் கைகளில் நறுமணப் பொருட்களை எடுத்துக்கொண்டு கல்லறை நோக்கிச் செல்கின்றனர். அந்தப் பக்கம் இருந்து வானதூதர்கள் இருவர் இறங்கி வந்துகொண்டிருக்கின்றனர். பெண்கள், 'இறந்துவிட்டார்' என நினைக்கின்றனர். வானதூதர்கள் 'உயிர்த்துவிட்டார்' என்கின்றனர். ஆபிரகாமைப் போல இருக்கிறார்கள் இந்தப் பெண்கள். ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கை மலைக்கு இந்தப் பக்கம் கூட்டிக் கொண்டு ஏறியபோது, மலைக்கு அந்தப் பக்கம் ஆண்டவர் ஆட்டுக்குட்டி ஒன்றை ஏற்றிக்கொண்டு வருகின்றார். ஆபிரகாம் நம்பினார். கடவுள் தன் மகனைத் திருப்பித் தருவார் என்று நம்பவில்லை. மாறாக, தன் வாக்குறுதியை அவர் நிறைவேற்றுவார் என நம்பினார். 

இயேசுவின் வார்த்தைகளில் இருந்து வாக்குறுதியை மேற்காணும் பெண்கள் புரிந்து கொள்ளவில்லை. அதை நம்பவும் இல்லை. ஆகையால்தான், வானதூதர்கள், 'கலிலேயாவில் இருக்கும்போது அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். மானிட மகன் பாவிகள் கையில் ஒப்புவிக்கப்பட்டுச் சிலுவையில் அறையப்பட வேண்டும். மூன்றாம் நாளில் உயிர்த்தெழ வேண்டும் என்று சொன்னாரோ' (லூக் 24:6-7) என அவர்களுக்கு நினைவுபடுத்துகின்றனர்.

ஆக, இயேசுவின் உயிர்ப்பை நம்ப வேண்டுமெனில், அவரின் வார்த்தைகளை நம்ப வேண்டும். இயேசுவின் உயிர்ப்பை அவருடைய பணிவாழ்வு மற்றும் இறப்பிலிருந்து பிரித்து தனியாகப் பார்க்க முடியாது. தனியாகப் பார்ப்பதால் பயன் ஒன்றும் இல்லை. ஏனெனில், இயேசுவின் வாழ்வில் உயிர்ப்பு அவரின் இறப்பின் மூன்றாம் நாள் நடந்த நிகழ்வு மட்டுமல்ல. அவரின் வாழ்வின் ஒவ்வொரு நாளும் உயிர்ப்பு நாளாக இருந்தது. 'அகிலத்தை படைத்த ஆண்டவர் எப்படி மனுவுருவாக முடியும்?' என்று நினைத்தபோது, மரியாளின் வயிற்றில் மனுவுரு ஏற்றார். 'எல்லாக் குழந்தைகளோடும் சேர்த்து இவரை அழித்தாயிற்று' என்று ஏரோது தன் நாற்காலியில் சாய்ந்து ஓய்ந்திருந்தபோது, தன் வளர்ப்புத் தந்தையின் பாதுகாவலில் எகிப்துக்குச் சென்றார். அலகையின் சோதனைகளை வென்றபோது, 'எங்களுக்கு அரசனாக இரும்!' என்று மக்கள் தந்த சோதனைகளை வென்றபோது, 'திராட்சை ரசம் தீர்ந்துவிட்டது,' 'மக்கள் பசியாக இருக்கிறார்கள்,' 'பேய் பிடித்திருக்கிறது,' 'முடக்குவாதம்,' 'தொழுநோய்,' 'விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்,' என எல்லாரும் தங்கள் வாழ்வு முடிந்து விட்டது என நினைத்தபோது, அவர்கள் வாழ்விலும் 'விடிவை' ஏற்படுத்துகிறார். மீன் வலைகளையும், சுங்கச் சாவடியையும் தாண்டிச் சிந்திக்கத் தெரியாத திருத்தூதர்களை தன்னகத்தே வைத்துக்கொண்டு, 'கடவுளை தந்தை' என்ற அழைக்கக் கற்றுக்கொடுத்தார். 'மன்னிப்பு,' 'இரக்கம்,' 'அமைதி' என மக்கள் கேட்டிராத, அனுபவித்திராத எல்லாவற்றையும் போதித்தார். ஒவ்வொரு நாளும் உயிர்ப்பு அனுபவம் பெற்றவருக்கு, இறப்புக்கு பின் நிகழ்வதும் உயிர்ப்பு அனுபவமே. இப்படி 'முடிவு என நினைத்த எல்லா நிகழ்வுகளிலும் விடிவு' என எழுந்தவர், இறப்பிலும் உயிர்த்தார் என நம்ப வேண்டுமெனில் இயேசுவின் வார்த்தைகளோடு இந்த வெற்றுக்கல்லறையைப் பார்க்க வேண்டும்.

2. 'உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? அவர் இங்கே இல்லை.' (24:5-6அ)

இரண்டு வாக்கியங்கள். முதல் வாக்கியம் ஒரு கேள்வியாகவும், அடுத்த வாக்கியம் ஒரு செய்தியாகவும் இருந்தாலும், இரண்டு வாக்கியங்களின் பொருள் ஒன்றுதான்: 'இயேசு கல்லறையில் இல்லை.' இயேசுவின் பிறப்பின்போது, வானதூதர் கபிரியேல் பெண் மரியாவுக்கு மங்கள வார்த்தை அறிவித்தார். அவர் இறந்தபின், வானதூதர் இருவர், பெண்கள் சிலருக்கு மங்கள வார்த்தை அறிவிக்கின்றனர். மரியாவும் தயக்கத்தில், 'இது எங்ஙணம் ஆகும்? நானோ கணவனை அறியேனே!' என்றார். இங்கே பெண்கள் தயக்கத்தில் தலைகுனிந்து நிற்கின்றனர். மரியாளிடமும் வானதூதர் இதை வாக்கியத்தைத்தான் சொல்லியிருப்பார்: 'அவரை இனி வானத்தில் தேடுவதேன்! அவர் அங்கு இல்லை. இதோ உன் வயிற்றில் இருக்கின்றார்.'

'அவர் இங்கு இல்லை' என பதிவு செய்கிறார் லூக்கா. இதை வாசிப்பவர்களுக்கு உடனே கேள்வி வரும். அப்படியென்றால், 'அவர் எங்கே இருக்கிறார்?' இந்தக் கேள்விக்கு விடையாக லூக்கா தொடர்ந்து இரண்டு நிகழ்வுகளைப் பதிவு செய்கின்றார்: (அ) எம்மாவு நிகழ்வு (24:13-35), (ஆ) இயேசு சீடர்களுக்குத் தோன்றும் நிகழ்வு (24:36-49). வேறு எந்த நிகழ்வுகளும் இதற்குப் பின் இல்லை. எம்மாவு நிகழ்வில் பயணம் செய்யும் சீடர்களோடு இயேசு பயணம் செய்கின்றார். ஒரே அறையில் கூடியிருந்த சீடர்களுக்குத் தோன்றி அவர்களைத் தேற்றுகின்றார். ஆக, கல்லறையில் இல்லாத இயேசு எங்கே இருக்கிறார்? நாம் பயணம் செய்யும் இடத்திலும், நாம் வாழும் இடத்திலும். நம் பயத்தில், குழப்பத்தில், அமைதியின்மையில், வெறுமையில், தயக்கத்தில் அவர் நம்மோடு வழிநடக்கின்றார். மரியாளின் தயக்கத்திற்கு வானதூதர்களின் வார்த்தைகள் மருந்திட்டதுபோல, நம் தயக்கத்திற்கும் இந்த இரண்டு வானதூதர்களின் வார்த்தைகள் மருந்திடட்டும்.

3. 'பேதுரு ஓடினார். கல்லறைக்குள் சென்றார். துணிகளை மட்டுமே கண்டார். நிகழ்ந்தவற்றைக் குறித்து வியப்புற்றார்.' (24:12)

'கல்லறையிலிருந்த கல் புரட்டப்பட்டது இயேசு வெளியே செல்வதற்காக அல்ல. சீடர்கள் உள்ளே செல்வதற்கே!' என்கிறார் அகுஸ்தினார். ஏனெனில், பூட்டிய அறைக்குள் நுழைந்த இயேசுவுக்கு, சீல் வைக்கப்பட்ட கல்லறையிலிருந்து வெளியே வருவது எளிதுதானே.

கல்லறைக்குள் சென்று, இயேசுவின் உடலைக் காணாமல், துணிகளை மட்டுமே கண்ட பேதுருவின் உள்ளுணர்வை, 'வியப்பு' என்று பதிவு செய்கின்றார் லூக்கா. ஆனால் யோவானோ, 'கண்டார், நம்பினார்' (20:8) என எழுதுகின்றார். மேலும், யோவான் நற்செய்தியில் பேதுரு தனியே கல்லறையை நோக்கி ஓடவில்லை. யோவானும் உடன் ஓடுகின்றார். ஆனால், லூக்காவில், பேதுரு தனியாக ஓடுகின்றார். இது எதற்காக? இறுதி இராவுணவின்போது பேதுருவிடம் தனியாக பேசும் லூக்காவின் இயேசு, 'சீமோனே, நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து' (22:32) என்கிறார். ஆக, இப்போது தன் கல்லறை அனுபவத்தால் உறுதிபெற்ற பேதுரு இனி தன் உடன் திருத்தூதர்களை உறுதிப்படுத்துவார்.

'வியப்படைதல்' என்னும் வினைச்சொல் இரண்டாம் ஏற்பாட்டு நூல்களில் மொத்தம் 43 முறையும், லூக்கா நற்செய்தியில் 13 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 13 முறைகளும் இறைவனின் ஆற்றல்மிகு செயல்களை நினைத்து கதைமாந்தரும் மக்களும் வியப்படைவதையே இது குறிக்கின்றது. சக்கரியா சிலேட்டில், 'இவன் பெயர் யோவான்' என எழுதியபோது (1:63), இயேசுவின் பிறப்பை இடையர்கள் கேட்டபோது (2:18), இயேசுவை அவருடைய பெற்றோர் எருசலேம் ஆலயத்தில் கண்டபோது (2:33), இயேசுவின் தொழுகைக்கூட உரையைக் கேட்டபோது (4:22) என மக்களின் வியப்பை இது குறித்தாலும், ஒரே ஒரு முறை 'இயேசு வியப்படைந்தார்' என பதிவு செய்கின்றார் லூக்கா. நூற்றுவர் தலைவனின் நம்பிக்கையை பாராட்டுகின்ற இயேசுவை இப்படி வர்ணிக்கின்றார் லூக்கா: 'இவற்றைக் கேட்ட இயேசு வியப்புற்றார்...மக்கள் கூட்டத்தைப் பார்த்து, 'இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை' என்றார்' (7:9). இயேசுவின் இறப்பின்போது இறுதி வார்த்தை பேசியது யார்? நூற்றுவர் தலைவன்தான் (23:47). நூற்றுவர் தலைவனின் நம்பிக்கை நிகழ்வை மறைமுகமாக இங்கே பதிவு செய்து, இயேசுவுக்கு தான் பயன்படுத்திய 'வியப்பு' என்ற வார்த்தையை 'பேதுருவுக்கு' பயன்படுத்துகின்றார் லூக்கா. இந்த இரண்டு நிகழ்வுகளையும் இணைத்துப் பார்த்தால் நமக்கு என்ன தெரிகிறது? நம்பிக்கைதான் வியப்பின் முதல் படி. நம்பிக்கை இல்லாமல் வியப்பு இல்லை. பேதுரு நம்பிக்கை கொண்டதலே வியப்படைகின்றார்.

வெற்றுச் சிலுவை இயேசுவின் இறப்பிற்கும், வெற்றுக் கல்லறை அவரின் உயிர்ப்பிற்கும், வெற்று ஆடைகள் அவரின் உடனிருப்புக்கும் சான்றாய் இருக்கின்றன.

ஆண்டவரை அவரின் வார்த்தைகள் மற்றும் வாக்குறுதிகளோடு இணைத்துப் பார்ப்பதும்,

அவரை நம் பயத்திலும், பயணத்திலும், வாழ்விடத்திலும் கண்டுகொள்வதும்,

வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நம்பிக்கையும், வியப்பும் கொண்டிருத்தலுமே உயிர்ப்பு அனுபவம்.

உயிர்ப்பு திருநாள் வாழ்த்துக்களும், செபங்களும்!

- Yesu Karunanidhi

ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு 09 ஏப்ரல் 2017

ஏப்ரல் 07, 2017

ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு 09 ஏப்ரல் 2017

I. எசாயா 50:4-7    II. பிலிப்பியர் 2:6-11     III. மத்தேயு 26:14-27:66

முரண்படு வாழ்வு

சென்னையின் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. ஏறக்குறைய 110 பேர் இந்த தொகுதியில் வேட்பாளர்களாக போராடுகின்றார்கள், போட்டியிடுகின்றார்கள். கட்சிகள் தங்கள் பெயர்கள் மற்றும் சின்னங்களை இழந்தது, புதிய கட்சிகள், புதிய சின்னங்கள், புதிய முகங்கள், புதிய வாக்குறுதிகள், புதிய வாகனங்கள், புதிய அன்பளிப்புகள் என எங்கும் கூட்டமாக இருக்கின்றது. ஒவ்வொரு தலைவரும் இந்தப் பகுதிக்குள் நுழையும்போது மக்கள் அளிக்கும் வரவேற்பு ஒவ்வொரு நிலையில் இருக்கிறது. மக்கள் கூட்டம் சில இடங்களில் தானாக சேர்கின்றது. பல இடங்களில் சேர்க்கப்படுகின்றது. பணம் இருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் என்ற நிலையில் ஆட்டமும், ஓட்டமுமாக இருக்கிறது ஆர்.கே. நகர்.

'என் பக்கம் இவ்வளவு மக்கள்' - என்று மற்றவருக்கு காட்டி வெற்றி பெறுவதுதான் ஜனநாயகத்தில் வெற்றி. ஆக, கூட்டம் கூடுவதன் நோக்கம் தன் பலம் என்ன என்பதை அறிந்துகொள்வது மட்டுமல்ல, மாறாக, தன் பலத்தை மற்றவர்களுக்கு நிரூபித்து அவர்களை கலங்கச் செய்யவே. பயத்திலும், கலக்கத்திலும் மக்கள் கூட்டம் கூடி தங்கள் தலைவர்கள் பின்னால் ஓடிக்கொண்டிருக்க, எதிர்நோக்கிலும், மகிழ்ச்சியிலும் ஒரு கூட்டம் எருசலேம் நகரில் ஒரு கழுதைக்குட்டியில் ஏறி வந்த தலைவர்மேல் ஓடிக்கொண்டிருந்ததை இன்று நாம் நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றோம்.

நம்மிடம் இன்று வரும் தலைவர்கள் வெற்றி பெற்றவுடன் தங்களிடம் வரமாட்டார்கள் எனவும், இவர்கள் விடும் தேர்தல் அறிக்கைகள் எல்லாம் வெறும் காகிதங்கள் எனவும், இவர்களின் பேச்சு வெறும் காற்று எனவும், இவர்கள் மனதில் இருப்பதல்லாம் பொய் எனவும் தெரிந்திருந்தாலும் ஏன் அவர்கள் பின் மக்கள்கூட்டம்? இம்முரண்களோடு வாழக் கற்றுக்கொண்டவர்கள் மக்கள். இந்த முரண்களுக்கு நடுவிலும் நம்பிக்கை என்ற ஒளியை அணையாமல் காத்துக்கொள்ளக்கூடியவர்கள்.

உரோமையர்களை நம்பினோம், ஆளுநர்களை நம்பினோம், தலைமைக்குருக்களை நம்பினோம் - ஒன்றும் நடக்கவில்லை. எல்லாம் அப்படியே இருக்கிறது. வறுமை, பசி, வாட்டம், அடிமைத்தனம் தலைவிரித்தாடுகின்றது என்று புலம்பிக்கொண்டிருந்த மக்களுக்கு ஒரு நம்பிக்கை கழுதையில் ஏறி வருகின்றது.

வாடகைக் கழுதையில் ஏறி வந்த இறுதி நம்பிக்கை தான் இயேசு.

ஒத்தமைவு நற்செய்திகளின்படி இயேசு மூன்று முறை எருசலேமுக்குள் நுழைகின்றார்: (அ) இயேசுவைக் கோவிலில் அர்ப்பணிக்க அவரது பெற்றோர் எருசலேமிற்கு அழைத்துவருகின்றனர் (லூக்கா 2:22-38), (ஆ) பாஸ்கா விழா கொண்டாட அவருடைய பெற்றோர்களுடன் இயேசு எருசலேமிற்குள் வருகின்றார் (லூக்கா 2:41-52), மற்றும் (இ) வெற்றி ஆர்ப்பரிப்போடு இயேசு எருசலேம் நுழைகின்றார் (லூக்கா 19:28-44). 

இயேசுவின் முதல் இரண்டு வருகைகளுக்கும், அவரின் மூன்றாம் எருசலேம் வருகைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன):

1. அப்போது ஆர்ப்பரிப்பு இல்லை. இப்போது எங்கும் ஆர்ப்பரிப்பு.

2. அப்போது அவருக்கு எந்த ஒரு பட்டமும் இல்லை. இப்போது 'தாவீதின் மகன்' என்ற பட்டம்.

3. அப்போது அவருக்கு எந்த ஆதரவாளரும் இல்லை. இப்போது சீடர்களும், மக்களும் கூட்டமாக பின்தொடர்கின்றனர்.

4 அப்போது எந்த தயாரிப்பும் இல்லை. இப்போது கழுதை, குருத்து, போர்வை என எல்லாம் தயாரிக்கப்படுகின்றது.

5. அப்போது இயேசு மீண்டும் தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். இப்போது அவர் திரும்ப முடியாது.

6. அப்போது எந்த வழி வந்தார் என்று எந்த பதிவும் இல்லை. இப்போது பெத்பதே வழியாகவும், ஒலிவ மலை வழியாகவும் வருகின்றார் (காண். மாற்கு 11:1-10). ஏனெனில் மெசியா இந்த வழியாகத்தான் வருவார் என்றுதான் மக்கள் எதிர்நோக்கியிருந்தார்கள்.

இயேசு எருசலேம் நகருக்குள் நுழைந்ததை நற்செய்தியாளர்களின் பதிவுகளின் பின்புலத்தில் கற்பனை செய்து பார்த்தால், 'மகிழ்ச்சி' என்ற ஒற்றை உணர்வுதான் மேலோங்கி இருக்கிறது. அந்த மகிழ்ச்சியில் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே நிறைய காரியங்கள் செய்கிறார்கள்: சிறியவர் முதல் பெரியவர் வரை குருத்தோலைகள் வெட்டி வருகின்றனர், பாதைகளில் துணிகளை விரிக்கின்றனர், உரத்த குரலில் கடவுளை புகழ்கின்றனர்: 'ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக! விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக' (லூக் 19:38). இயேசுவின் சமகாலத்தில் மெசியா எதிர்பார்ப்பு உச்சகட்டத்தில் இருந்தது. 'யாராவது ஒருவர் வந்து என்னைக் காப்பாற்றிவிடமாட்டாரா? என் நாடும், நகரமும் நலம் பெறாதா?' என்ற கவலையும், ஏக்கமும் நிறைய இருந்தது. இந்த நேரத்தில் இயேசு கழுதையின்மேல் ஏறி வருதல் மெசியாவின் வருகையின் அடையாளமாகக் கருதப்பட்டது. 

1. மகிழ்ச்சி

இன்றைய நாள் நமக்கு வைக்கும் முதல் பாடம் 'மகிழ்ச்சி.' இயேசுவோடு உடன் வந்த மக்கள் மட்டுமல்ல, இயேசுவும் மகிழ்ச்சியோடுதான் இருக்கிறார். ஆகையால்தான், 'போதகரே, உம் சீடர்களைக் கடிந்து கொள்ளும்' என்று பரிசேயர் சொன்னபோது, 'இவர்கள் பேசாதிருந்தால் கற்களே கத்தும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்' என பதில் சொல்கிறார். இயேசுவின் பிறப்பு மகிழ்ச்சியின் செய்தியாக அறிவிக்கப்பட்டதுபோலவே, அவருடைய எருசலேம் நுழைதலும் மகிழ்ச்சியின் செய்தியாக இருக்கிறது. ஆக, இன்று நாம் அழுகையின் அல்லது சோகத்தின் மக்களாக இருக்க வேண்டாம். விரக்திக்கும், சோர்வுக்கும் ஒருபோதும் இடம் கொடுத்துவிட வேண்டாம். நம் மகிழ்ச்சி அதிகம் பெற்றிருப்பதில் அல்ல. மாறாக, இயேசுவை நம் நடுவில் பெற்றிருப்பதில்தான் இருக்கின்றது. இவ்வளவு நாள்கள் இந்த மக்களிடம் குருத்தோலைகளும், கழுதைகளும், ஆடைகளும் இருந்தன. ஆனால், இன்று மட்டும் ஏன் அவர்கள் ஆர்ப்பரிக்க வேண்டும்? காரணம், இயேசு. இயேசு அவர்கள் நடுவே இருப்பதால் அவர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். இந்த நிகழ்விலிருந்து இயேசுவை நீக்கிவிட்டால் மகிழ்ச்சிக்கு இடம் இல்லை. அவரோடு இருக்கும்போது நாம் தனியாக இருப்பதில்லை. வாழ்க்கை கடினமானதாக இருந்தாலும், நம் வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளும், தடைகளும் தாண்ட முடியாதவைகளாகத் தெரியும்போதும் கவலை வேண்டாம். ஏனெனில், அவர் நம் நடுவில் இருக்கின்றார். நாம் அவரோடு நடப்போம், ஓடுவோம். அவர் நம்மோடு நடக்கிறார், நம்மையும் தன் கழுதைக்குட்டியில் ஏற்றிக்கொள்கிறார் என்று தளராமல் நம்புவோம். இதுதான் நாம் இந்த உலகிற்குத் தரும் மகிழ்ச்சி. இயேசுவின் பிரசன்னத்தில் எருசலேம் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை போல நம் நம்பிக்கையும் இருக்கட்டும்.

2. சிலுவை

ஏன், எப்படி இயேசு எருசலேமிற்குள் நுழைகின்றார்? மக்கள் கூட்டம் இயேசுவை 'அரசன்' என்கிறது. மற்ற இடங்களில் அந்த பட்டத்தை மறுத்த இயேசு இன்று அதை மறுக்கவில்லை. அவர்களை அமைதியாக இருக்குமாறு சொல்லவில்லை. எப்படிப்பட்ட அரசர் அவர்? அவர் ஏறிவருவது கழுதை. அவரைச் சுற்றி படைத்திரள் இல்லை. அவரிடம் அடக்குமுறை ஆயுதங்கள் இல்லை. அவரை வரவேற்க அமைச்சர்கள் இல்லை. அவர் வெறுங்கையராய் வருகின்றார். அவரை வரவேற்றவர்கள் சாதாரண மக்கள். ஆனால் அவர்களால் இயேசுவிடம் ஏதோ ஒன்றைக் காண முடியாதது. தாங்கள் தங்கள் கண்களால் பார்ப்பதைவிட ஏதோ ஒன்று அவரிடம் இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். அவர்களின் நம்பிக்கை, 'இவர்தான் மீட்பர்' என்று சொன்னது. அவர் மணிமகுடம் சூட்டிக்கொள்வதற்காக இங்கே நுழையவில்லை. இன்றைய முதல் வாசகம் சொல்வது போல (காண். எசாயா 50:6). 'அடிப்போருக்கு தன் முதுகை காட்டவும், தாடியை பிடுங்குவோருக்கு தாடியை ஒப்படைக்கவும், நிந்தனை செய்வோருக்கும் காரி உமிழ்வோருக்கும் தன் முகத்தைக் காட்டவும்' அவர் உள்ளே நுழைகின்றார். இயேசு எருசேலமிற்குள் நுழைவது சிலுவையில் அறையப்படுவதற்காக. முள்களை தன் மகுடமாகவும், சிலுவையைத் தன் அரியணையாகவும் ஆக்கிக்கொள்ள அவர் இங்கே வருகின்றார். எதற்காக அவர் சிலுவையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? சிலுவை தீமையின் அடையாளமாக நிற்கிறது. மனித வாழ்வின் சுயநலம், வெறுமை, வன்முறை ஆகிய அனைத்தையும் தன்மேல் ஏற்றிக்கொள்ளும் இயேசு தன் உயிர்ப்பால் அதை வெல்கின்றார். அன்பால் இயேசு தழுவிக்கொண்ட சிலுவை நம்மை மகிழ்ச்சிக்கு இட்டுச்செல்கிறது. ஏனெனில் இந்தச் சிலுவையால்தான் நமக்கு மீட்பு வந்தது.

3. முரண்படு வாழ்வு

கழுதையில் ஏறி வருவதும், காரில் ஏறி வருவதும் நடந்து வருவதை விட மேலானது. ஏன்? நடந்த வரும்போது நம்மால் பார்க்க முடியாதவைகள் எல்லாம் கழுதையில் ஏறி வரும்போதும், காரில் வரும்போதும் நன்றாகத் தெரிகிறது. பார்வை இன்னும் கொஞ்சம் முழுமை ஆகிறது.

ஆகையால்தான், (1) தன் பயணத்தில் குருத்தோலை ஏந்தியவர்கள் தன் காலை வாரி விடுவார்கள் என்றும்,

(2) தன்னைப் புகழ்ந்து 'ஓசான்னா' பாடியவர்கள் 'சிலுவையில் அறையும்' என கத்துவார்கள் என்றும்,

(3) தங்களது ஆடைகளை தன் முன் விரித்தவர்களே தன் ஆடைகளையே உரிப்பார்கள் என்றும்,

(4) 'போதகரே' என்று அழைத்தவர்கள் எல்லாம், 'ஒழிக' என ஆர்ப்பரிப்பார்கள் என்றும்,

(5) உடன் வந்த சீடர்கள் எல்லாம் ஓடிப்போவார்கள் என்றும், கட்டியணைத்தவர்கள் காட்டிக்கொடுப்பார்கள் என்றும், மறுதலிப்பார்கள் என்றும்

அவருக்குத் தெரிந்தது. தெரிந்திருந்தும் தான் அமைதியாய் இருக்கின்றார். இந்த அமைதி அவரிடம் குடிகொள்ளக்காரணம் அவரிடமிருந்து நம்பிக்கை. தன் தந்தை கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை. 

ஏன் இயேசுவுக்கு இத்தனை முரண்பாடுகள்?

இயேசுவிடம் அவர்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புக்களே இந்த முரண்பாடுகளுக்குக் காரணம். இயேசு அரசனாகிவிட்டால் தங்களுக்கு உணவுப் பஞ்சம் இல்லை, உடல் நல பஞ்சம் இல்லை, திராட்சை ரச பஞ்சம் இல்லை என நினைத்தவர்கள், அவர் சிலுவையைத் தழுவிக்கொண்டதால் அவரிடம் நம்பிக்கை இழக்கின்றனர்.

தங்கள் கண்களுக்குத் தெரிபவற்றில் அவர்கள் தங்கள் நம்பிக்கையைக் கட்டுகிறார்கள். ஆனால் இயேசுவோ அவர்கள் கண்களுக்குத் தெரியாதவற்றில் நம்பிக்கையைக் கட்டுகிறார்.

இறுதியாக,

நாம் ஒன்றை மட்டும் கருத்தில் கொள்வோம்.

மகிழ்ச்சி, சிலுவை என இந்த நாளின் சவால்கள் மேலோட்டமாக இருந்தாலும், இவைகளின் அடியில் தேங்கியிருப்பது முரண்பாடு. நம் வாழ்வு முரண் என்ற நூலால் பிண்ணப்பட்டுள்ளது. நொடிக்கு நொடி நாமும், நம் உணர்வுகளும், நம் உலகமும் மாறிக்கொண்டே இருக்கின்றது. 

இப்படி முரண்கள் வந்தாலும், கழுதையில் ஏறி கொண்டாடும் பொழுதுகளை அமைதியான மனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இயேசுவுக்கு என்று விருப்பு-வெறுப்புகள் இல்லை. அப்படி இருந்தால் அவர்கள் எருசலேமிற்குள் நுழைந்திருக்க மாட்டார். நம் வாழ்வின் விருப்பு-வெறுப்புகள்தாம் நம் வாழ்வின் முரண்பாடுகளோடு நாம் வாழக் கற்றுக்கொள்ள நமக்கு தடையாக இருக்கின்றன.

இன்று அவரோடு நாம் எருசலேமிற்குள்ளும், புனித வாரத்திற்குள்ளும் நுழைகின்றோம்.

நாம் வெளியே வரும்போது அவரோடு இணைந்து உயிர்ப்பவர்களாக வருவோம். 

ஏனெனில், எருசலேமும் கலிலேயாவும், பாடுகளும் ஆறுதலும், இறப்பும் உயிர்ப்பும் பிரிக்க முடியாதவை - நம் வாழ்வின் முரண்களைப் போல.

_________

Yesu Karunanidhi

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு 02 ஏப்ரல் 2017

ஏப்ரல் 01, 2017

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு 02 ஏப்ரல் 2017

I. எசே 37:12-14     II. உரோ 8:8-11    III. யோவா 11:1-45

கல்லறைகளைத் திறந்து

ஆப்பிரிக்காவின் வடக்கு நாடுகளிலிருந்து படகுகளிலும், கப்பல்களிலும் ஏறி இத்தாலி நாடு வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் தஞ்சம் புகும் கனவோடு புறப்பட்டவர்கள் பலருக்கு கடலே கல்லறை ஆகிவிட்டது என்பது கடந்த 4 மாதங்களுக்கு முன் நாம் அறிந்த செய்தி. இந்த செய்தியை வைத்து மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவர்களின் இந்தப் பயணத்தை நாடுகடத்துதலுக்கு ஒப்பிட்டு, அப்படி நாடுகடத்தப்பட்டவர்கள் இறந்தபோது எசேக்கியேல் இறைவாக்கினர் வாயிலாக கடவுள் வழங்கிய செய்தியைச் சுட்டிக்காட்டி நம்பிக்கை ஊட்டினார். அந்த இறைவாக்குப் பகுதியைத்தான் நாம் இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசே 37:12-14) வாசிக்கின்றோம்.

'என் மக்களே, நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். என் ஆவியை உங்கள் மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன்.'

இந்த இறைவாக்குப் பகுதி இஸ்ரயேல் மக்கள் இறப்பைப் பற்றி கொண்டிருந்த புரிதலையும் தெரிவிக்கிறது: அதாவது, இறப்பின் போது, உடல் இந்த உலகில் தங்கிவிடுகிறது. ஆவி அல்லது உயிர் கடவுளிடம் திரும்பிவிடுகிறது (காண். சபை உரையாளர் 12:5). கடவுள் ஆவியை மீண்டும் அந்த உடலுக்குத் தரும்போது உடல் மீண்டும் உயிர்பெறுகிறது.

கல்லறைகளை பொதுவாக யாரும் திறப்பதில்லை. ஏனெனில் கல்லறைக்குள் வைக்கப்பட்டவர் திரும்ப வருவார் என்று நாம் அவரை எதிர்பார்ப்பதில்லை. மேல், இதைப் பற்றி நாம் வருத்தப்படுவதும் இல்லை. ஏனெனில் இறப்பு என்பதும், இறந்தவர் உயிர்ப்பதில்லை என்பதும் எதார்த்தம் என நாம் ஏற்றுக்கொண்டுவிட்டோம்.

இந்த எதார்த்த ஏற்றுக்கொள்ளுதலை கேள்விக்கு உட்படுத்துகின்றன இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள். கடவுளின் பிரசன்னத்தின் முன் கல்லறைகள் திறப்பதும் சாத்தியமே.

ஒத்தமைவு நற்செய்திகள் (மத்தேயு, மாற்கு, லூக்கா) இயேசு இறந்தவர்களுக்கு உயிர் கொடுப்பதை பதிவு செய்திருந்தாலும், லாசர் உயிர் பெறுதலை அவர்கள் பதிவு செய்யவில்லை. அதற்கு எதிர்மாறாக, யோவான் லாசர் உயிர்ப்பை மட்டும் பதிவு செய்கிறார். மேலும், யோவான் மற்ற அற்புத நிகழ்வுகளைப் பதியும்போதெல்லாம், 'பிரச்சினை-தீர்வு-போதனை' என பதிவு செய்கிறார். எ.கா. பிறவியிலேயே பார்வை அற்றவர் பார்வை பெறுதல். ஆனால், இங்கே, 'போதனை-பிரச்சினை-தீர்வு' என தலைகீழாக இருக்கின்றது. இறந்தவர் உயிர்பெற்றவுடன் நிகழ்வை முடித்துவிடுகிறார் யோவான். 

உயிர்ப்பு, நம்பிக்கை, இறப்பு, யூதர்கள், இயேசுவின் கருணை என நிறைய இறையியல் கருத்துக்கள் ஒன்றோடொன்று பிண்ணிக்கிடக்கின்றன. 

கடவுளின் வலி கல்லறையைத் திறக்கிறது - இதை மட்டும் மையமாக வைத்து சிந்திப்போம்.

நோய், முதுமை, இறப்பு என்ற இன்றியமையாத கல்லறைகள் நம்மை அனுதினம் சூழ்ந்தாலும், தன்னம்பிக்கை இன்மை, சோம்பல், தாழ்வு மனப்பான்மை, ஒப்பீடு, பொறாமை, ஏற்றத்தாழ்வு, பொருளாதார சிக்கல்கள், அரசின் கண்டுகொள்ளாத்தன்மை, வன்முறை, எங்கும் மேலோங்கி நிற்கும் பிரச்சினைகள் என அன்றாடம் நாம் கல்லறைக்குள்ளேயே இருக்கின்றோம். இந்தக் கல்லறைகளிலிருந்து நாம் விடுவிக்கப்படும் நாளை நாம் எதிர்நோக்கியிருக்கிறோம்.

லாசரின் இறப்பு நிகழ்வில் லாசர் மட்டுமல்ல, இயேசுவைத் தவிர எல்லாக் கதைமாந்தர்களுமே கல்லறைக்குள்தான் இருக்கின்றனர்:

1. சீடர்கள் இயேசுவை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. இயேசுவை அவர்கள் புரிந்துகொள்ளும்போதெல்லாம் அதில் ஓர் அரைகுறைத்தனமும், அவசரமும் தெரிகிறது. அரைகுறைத்தனம் அவர்களின் கல்லறை.

2. யூதர்கள் இயேசுவை நம்பவே இல்லை. நம்பிக்கையின்மை அவர்களின் கல்லறை.

3. மார்த்தா இயேசுவை பாதி நம்புகிறார். 'ஆண்டவரே, நீர் இங்கு இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்' என்கிறார். ஆனால், கல்லறைக்கு அருகில் இயேசு சென்றபோது, 'ஐயோ, நாற்றம் அடிக்குமே' என அவரைத் தடுக்கின்றார். பாதி நம்பிக்கை அவரின் கல்லறை.

4. மரியா இயேசுவை நம்பினாலும், அவர் இன்னும் அழுது முடித்தபாடில்லை. தன் சகோதரனின் இழப்பு தந்த வெற்றிடத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த வெற்றிடத்தைக் கண்ணீர் வடித்து மூடிவிட நினைக்கின்றார். அழுகை அவரின் கல்லறை.

5. லாசர் இறந்துவிட்டார். இறப்பு அவரின் கல்லறை.

6. இயேசு யார்? இந்த அறியாமைதான் வாசகர் ஒவ்வொருவரின் கல்லறை.

இந்தக் கல்லறைகளிலிருந்து அனைவரும் விடுவிக்கப்படுவார்களா?

முதலில், இந்த நிகழ்வின் ஒரு சில சொல்லாடல்களைப் புரிந்துகொள்வோம்:

1. பெத்தானியா

நாசரேத்துக்குப் பின் இயேசு தனது இரண்டாம் இல்லமாக நினைத்தது பெத்தானியாவைத்தான். நான் புனித நாடுகளுக்குச் சென்ற போது, உண்மையாகவே இயேசு இங்கு இருந்த இடம் என நான் என் உள்ளுணர்வில் உணர்ந்தது பெத்தானியா மட்டும்தான். 10க்கு 10 பழமையான வீடு. அந்த இல்லத்திற்குள் சென்றவுடன், 'நானும் இங்கு இருந்திருக்கிறேன்' என்ற உணர்வை அந்த வீடு தருகிறது. இயேசுவும், லாசர், மார்த்தா, மரியாவும் பேசியதை, சிரித்ததை இந்தச் சுவர்கள் கண்டிப்பாக உள்வாங்கி இருக்கும். இந்தச் சுவர்களின்மேல் காதுகளை வைத்துக் கேட்டால் நாமும் அதை உணரலாம். 'நீங்க எப்படி பிறந்தீங்க? இடையர்கள், ஞானியர் எத்தனை பேர்? எகிப்துக்கு ஏன் ஓடிப்போனீங்க? அங்க இருந்த எப்ப வந்தீங்க? கோவிலில் ஏன் காணாமல் போனீர்கள்? அது என்ன? இது என்ன?' என இரண்டு சகோதரிகளும் இயேசுவை கேள்விகள் கேட்டு துளைத்திருப்பார்கள். லாசர் அப்போது மொளனமாகத்தான் இருந்திருக்க வேண்டும். இந்தப் பிள்ளைகளின் பெற்றோர் ஒருவேளை இவர்கள் பிறந்த சில ஆண்டுகளில் இறந்திருக்க, இவர்கள் மூவரும் துணைக்குத் துணையாக வளர்ந்திருக்கலாம். 

இப்படி இயேசு அன்பு கொண்டிருந்த ஓர் இடத்தில் இழப்பு வந்துவிடுகிறது. லாசர் இறந்துவிடுகிறார். இனி இயேசு இந்த இல்லத்திற்குள் வந்தால் அவரை வரவேற்கும் மூன்று உயிர்களில், ஒரு உயிர் மறைந்துவிடுகிறது.

'உன் நண்பன் நோயுற்றிருக்கிறான்' என்று இயேசுவுக்கு தூதர்களை அனுப்புகின்றனர் மார்த்தாவும் மரியாவும். தூது அனுப்பும் அளவிற்கு இருக்கிறார்கள் என்றால், ஓரளவு பணக்காரர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும். அல்லது ஏழைகளாக இருந்து எப்பாடுபட்டாவது இயேசுவுக்கு செய்தி அனுப்பி இருக்க வேண்டும். செய்தி கேட்டவுடன் இயேசு புறப்படவில்லை. 'இந்த நோய் இறப்பில் போய் முடியாது' என்று சொல்லிவிட்டு லாசர் இறக்கும்வரை காத்திருக்கின்றார். கானாவில் இரசம் தீர்ந்தபோதும் இயேசு இப்படித்தான் தள்ளிப்போடுகின்றார். 

2. தூக்கம்

'லாசர் இறந்துவிட்டதை,' 'லாசர் தூங்குகிறார்' எனச் சொல்கிறார் இயேசு (காண். மத் 27:52, 1 கொரி 7:39, 11:30, 15:6, 1 தெச 4:13-15). 'இறப்பை' தூக்கத்திற்கு உருவகிப்பது மற்ற இலக்கியங்களிலும் காண்கிறோம். 'உறங்கி விழிப்பது போல சாக்காடு' என்கிறார் வள்ளுவர். 'தூக்கம் என்பது குறுகிய சாவு, சாவு என்பது நீண்ட தூக்கம்' என்கிறார் ஷேக்ஸ்பியர். இயேசு சொல்வதை அப்படியே எடுத்துக்கொள்கின்றனர் சீடர்கள். ஆகையால்தான், 'ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார்' என்று பதில் சொல்கின்றனர்.

3. என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பு

பிறவியிலேயே பார்வை அற்றவர் பார்வை பெறும் நிகழ்விலும், 'இவர் இப்படி பிறந்தது கடவுளின் மாட்சி வெளிப்படவே' (யோவா 9:3) என்கிறார் இயேசு. தான் கையாளவேண்டிய இழப்பு என்னும் எதிர்மறை நிகழ்வை ஒரு பிரச்சினையாகப் பார்க்காமல், ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறார் இயேசு. இலாசர் உயிர்பெறும் நிகழ்வின் இறுதியில், 'மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்' எனப் பதிவு செய்கிறார் யோவான். ஆக, கடவுளின் மாட்சி வெளிப்படுகிறது. அந்த வெளிப்படுத்துதலுக்கு மனிதர்கள் தரும் பதில்தான் நம்பிக்கை.

4. கல்லறையில் வைத்து நான்கு நாள்

இலாசர் இறந்து கல்லறையில் வைத்து நான்கு நாள்கள் ஆயிற்று என்பது இரண்டு இடங்களில் (11:17, 39) பதிவு செய்யப்படுகிறது. யூதர்களின் நம்பிக்கை என்னவென்றால், ஒருவர் இறந்த பின் அவருடைய ஆன்மா மூன்று நாள்கள் கல்லறையைச் சுற்றி வரும். நான்காம் நாளில் இறந்தவரின் முகம் மாற ஆரம்பிக்கும்போது அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் வேறு எங்காவது சென்றுவிடும். ஆக, 'நான்காம் நாள்' என்பது இலாசரின் ஆன்மா அங்கு இல்லை என்பதை உருவகப்படுத்துகிறது. மேலும், ஒன்றுமில்லாமையில் தான் இயேசுவின் அற்புதம் நிகழ்கிறது என்பதையும் இங்கே யோவான் உள்ளிடுகிறார். மார்த்தா இயேசுவிடம், 'நான்கு நாள் ஆயிற்றே. நாற்றம் அடிக்குமே' என்கிறார். இயேசுவின் சமகாலத்தில் எகிப்தியர்கள் மட்டுமே இறந்த உடலை அதிக நாள்கள் பத்திரப்படுத்தும் வகை அறிந்திருந்தனர். யூதர்கள் வெறும் நறுமணத்தைலத்தை மட்டுமே பயன்படுத்தக் கற்றிருந்தனர். அவர்கள் இறந்தவர்களின் உடலில் பயன்படுத்தும் வாசனை திரவியங்களின் நறுமணம் மூன்று நாள்கள் மட்டுமே தாங்கக்கூடியவை. நான்காம் நாளிலிருந்து உடல் வெளிப்படுத்தும் கெட்ட வாசத்திற்கு அவைகளால் ஈடுகொடுக்க முடியாது. 

5. இறுதிநாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான்

தானியேல் 12:2 காலத்திலிருந்தே 'இறந்தவர் உயிர்ப்பு,' 'இறுதிநாள்' போன்ற புரிதல்கள் யூதர்கள் நடுவில் இருந்தன (காண். திப 23:6-8, மாற் 12:18-27). மார்த்தாவும் இதே புரிதலைக் கொண்டிருக்கிறார். அந்த நாளில் எல்லாரும் உயிர்ப்பதுபோல இலாசரும் உயிர்ப்பார் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றார். 'ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்' என்று மார்த்தா அளவற்ற நம்பிக்கை கொண்டிருந்தாலும், 'இறந்தவரை இயேசு என்ன செய்ய முடியும்?' என்ற சந்தேகமும் கொண்டிருக்கின்றார்.

6. மரியா அவர் காலில் விழுந்து

மார்த்தா இயேசுவைத் தேடி ஓடியதுபோல மரியா ஓடவில்லை. பாவம் குழந்தை! இன்னும் அழுது முடிக்கவில்லை. மார்த்தா இதற்கிடையில், 'ஆம் ஆண்டவரே, நீரே மெசியா, நீரே இறைமகன், நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்' என நம்பிக்கை அறிக்கை செய்கின்றார். ஆனால், மரியாவோ எதுவும் பேசாமல் அதே நம்பிக்கை அறிக்கையை ஒரே ஒரு செயலால் செய்துவிடுகின்றார்: 'இயேசுவின் காலில் அவர் விழுகின்றார்.' 

7. வந்து பாரும்

'அவனை எங்கே வைத்தீர்கள்?' என்ற கேள்விக்கு, 'வந்து பாரும்' என்கின்றனர் மார்த்தாவும், மரியாவும். தன் முதற்சீடர்களிடம், 'வந்து பாரும்' என்று இயேசு சொன்னது இங்கே இயேசுவுக்கே சொல்லப்படுகிறது. 'வந்து பாரும்' என்பதை நாம் பல அர்த்தங்களில் எடுத்துக்கொள்ளலாம்: 'வந்து பாரும் உன் நண்பனை,' 'வந்து பாரும் எம் சகோதரனை,' 'வந்து பாரும் கல்லறையை,' 'வந்து பாரும் மனுக்குலத்தின் காயத்தை,' 'வந்து பாரும் எங்கள் கண்ணீரை.' வானத்திலிருந்து இறங்கி நம்மை 'வந்து பார்த்தவருக்கு,' கல்லறைக்கு 'வந்து பார்ப்பது' ஒன்றும் பெரிதல்லவே. ஆகையால், வேகமாக உடன் செல்கின்றார்.

8. இயேசு கண்ணீர்விட்டு அழுதார்

கிரேக்க பதம் உள்ளபடியே மொழிபெயர்க்கப்பட்டால், 'இயேசு கோபப்பட்டார் அல்லது நொந்துகொண்டார்' என்றுதான் இருக்க வேண்டும். 'கண்ணீர்விட்டு அழுதார்' என்பது அவரின் உணர்வை ரொமான்டிசைஸ் பண்ணுவதுபோல இருக்கிறது. இறப்பு வரும்போது கண்ணீர் வருவது இயல்பு. ஆனால் சில நேரங்களில் நமக்கு கோபம் வரும். வழக்கமாக நமக்கு கடவுளின்மேல் தான் கோபம் வரும். இங்கே இயேசுவுக்கு இறப்பின் மேலும், பாவத்தின் மேலும், தன்னை நம்பாத மனிதர்கள்மேலும் கோபம் வருகிறது. 

9. அது ஒரு குகை

பெத்தானியாவிற்கு திருப்பயணம் செல்பவர்களை லாசர் கல்லறைக்கும் அழைத்துச் செல்வார்கள். பெரிய கிணறு போல இருக்கும் இந்த இடம். இதனுள்ளே இறங்கிச் செல்லலாம். இவ்வளவு ஆழத்தில் வைத்துவிட்டு மேலே ஒரு கல்லைப் புரட்டி வைத்திருப்பார்கள். இவ்வளவு ஆழத்திலிருந்து லாசர் எப்படி மேலே வந்தார் என்பதும், அவருடைய கால்களும், கைகளும் கட்டப்பட்டிருந்தாலும் அவர் எப்படி மேலே வந்தார் என்பதும் இயற்பியல் விதிக்கு மாறாக இருக்கின்றன. ஆனால், இதுவே அற்புதம். 'கல்லை அகற்றியது' மனிதர்கள்தாம் என்றாலும், லாசரை வெளியே கொண்டுவந்தவர் கடவுளே.

கல்லறைகளைத் திறந்து என்பதை இன்று நாம் எப்படி நம் வாழ்வோடு பொருத்திப்பார்ப்பது?

1. இறப்பு என்னும் எதார்த்தம்

அழுகை, கண்ணீர், சோகம், இறப்பு இல்லாத உலகத்தைக் கற்பனை செய்து பார்ப்பது என்பது மனித இயல்புக்கே முரணானது. மனித இயல்பு தன்னிலேயே குறைகளைக் கொண்டது. இங்கே அழுகை, அழுகல், கண்ணீர், கசப்பு, கருணை எல்லாம் சேர்ந்து இருக்கும். இவற்றில் ஒன்றை மற்றொன்றிலிருந்து பிரித்துப் பார்ப்பது தவறு. உயிர்ப்பு மட்டும்தான் மேன்மை என நினைக்கக்கூடாது. ஏனெனில் இலாசரின் உயிர்ப்பு அவரின் கொலைக்கு வித்திடுகிறது. ஏனெனில், 'தலைமைக் குருக்கள் இலாசரையும் (இயேசுவோடு சேர்த்துக்) கொன்றுவிட திட்டமிடுகிறார்கள்' (12:10). ஆக, இயேசு இலாசருக்கு உயிர் தந்தாரே ஒழிய, அழியா வாழ்வைத்தரவில்லை. யாயிரின் மகள், லாசர், நயீன் நகரத்து இளைஞன் இவர்கள் மூவரும் வாழ்க்கையை இரண்டாம் முறை வாழ (ரெசுசிடேஷன்) வாய்ப்பு பெற்றார்களே தவிர, அழியா வாழ்வை (ரெசுரெக்ஷன்) பெறவில்லை. மேலும், இன்று இறப்பே இல்லாத மனிதர்களை உருவாக்க அறிவியல் முயற்சி செய்தாலும், விபத்து, வன்முறை போன்றவற்றால் மனிதர்களின் உயிர் போகும் ஆபத்து உள்ளது என்பதை அறிவியல் ஏற்றுக்கொள்கிறது. ஆக, நாம் நம் அன்றாட இறப்பை - ஒவ்வொரு நாளும் நாம் இறந்துகொண்டே இருக்கிறோம். நம் உடலின் செல்கள் இறந்து கொண்டே இருக்கின்றன - சாதாரண எதார்த்தமாக எடுத்துக்கொள்வதே சால்பு. 'எனக்கு கல்லறையே கிடையாது' என மறுப்பதை விட, அல்லது மறுதலிப்பதை விட, 'என் வாழ்வின் கல்லறை இதுதான்' என நம் அன்றாட இறப்புக்களையும், இறுதி இறப்பையும் ஏற்றுக்கொள்வதே ஞானம்.

2. உடனிருப்பு

இயேசு பெத்தானியாவிலிருந்து தூரத்தில் இருக்கிறார். பெத்தானியாவுக்கு வருகிறார். பின் ஊரின் நடுவில் நிற்கின்றார். பின் கல்லறைக்கு அருகில் வருகின்றார். ஆக, இவ்வாறாக இயேசுவின் நெருக்கம் கூடிக்கொண்டே வருகின்றது. ஆக, நம் வாழ்வின் கல்லறைக்கு வெகுதூரத்தில் அவர் நிற்பது போல தோன்றலாம். அல்லது சில நேரங்களில் நம் அருகில் வருவதற்கு அவரே காலம் தாழ்த்தலாம். ஆனால், கண்டிப்பாக அவர் வருவார். நம் கல்லறைகள் நாற்றம் அடித்தாலும் அவர் துணிந்து அங்கே நிற்பார்.

3. கல்லறைகளைத் திறந்து

இயேசு நிகழ்த்தும் புதுமை மூன்று நிலைகளில் நடக்கின்றது:

அ. யாராவது ஒருவர் கல்லை அப்புறப்படுத்த வேண்டும்

ஆ. இறந்தவர் உயிர்பெற்று வெளியே வர வேண்டும்

இ. யாராவது ஒருவர் கட்டுக்களை அவிழ்க்க வேண்டும்

ஆக, கடவுள் கல்லறைகளைத் திறந்தாலும் நமக்கு மனிதர்களின் துணை தேவைப்படுகிறது. இன்று கடவுள் மற்றவர்களை கல்லறையிலிருந்து விடுவிக்கும்போது நாமும் அங்கே உடனிருந்து அந்த அற்புதம் நிகழ உதவி செய்ய வேண்டும்.

இன்று என் வாழ்வில் நான் திறந்து வெளியேற வேண்டும் என நினைக்கும் கல்லறை எது?

வாழ்வு என்ற வெளிச்சம் என்னுள் புகாதவாறு என் குறுக்கே நிற்கும் கல் எது?

கல்லறைக்கு உள்ளே நாம் உச்சகட்ட வலுவின்மையில் இருப்போம். அங்கே வெளிச்சம் இருக்காது. காற்று இருக்காது. மண் நம் உடலை அரிக்க ஆரம்பிக்கும். புழுக்கள் நெளியும். நாமே கையை நீட்டி அவற்றை விரட்ட முடியாது. ஆனாலும், அந்த இடத்தில் உள்ள ஒரே நம்பிக்கை கல்லுக்கு வெளியே நம் கடவுள் காத்திருக்கிறார் என்பதும், அவர் நமக்காக கண்ணீர் வடிக்கிறார் என்பதும்தான்.

இறுதியாக,

இன்றைய இரண்டாம் வாசகத்துடன் (உரோ 8:8-11) நிறைவு செய்வோம். 'இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார்.' இறந்தவர்கள் உயிர்பெற்று வருவர் என்பதும், நம் உடல்களும் உயிர்பெறும் என்பதும் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை.

நம்பிக்கை என்பது நம் உடல் உயிர்க்கும் என்பதில் அல்ல. மாறாக, கடவுள் அத்தகைய வல்லமை கொண்டிருக்கிறார் என்பதில்தான் இருக்க வேண்டும். 'உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே, என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்' என்னும் இயேசுவைக் குறித்த நம் நம்பிக்கை இறப்பின்போது மட்டுமல்ல. மாறாக, நம் வாழ்வின் எல்லா தளங்களிலும், சூழலிலும் இருக்க வேண்டும்.

நாம் பாவத்தால் இறக்கின்ற பொழுதும்,

நம் வலுவின்மையில் தவறும்போதும்,

நம் கைகளைமீறி நிகழ்வுகள் நடக்கும்போதும்,

நம் உள்ளத்தில் இது ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும்: 

'அவர் என் உயிர்த்தெழுதல். அவர் என் வாழ்வு.'

என் கல்லறைகளைத் திறந்து எனக்கு உயிர்கொடுக்க அவர் வல்லவர்.

__________

Yesu Karunanidhi

சமீபத்திய கட்டுரை
பாஸ்க்கா காலம் 2வது வாரம் வெள்ளிக்கிழமை 28-04-2017
உயிர்ப்புக் காலம் மூன்றாம் ஞாயிறு 30 ஏப்ரல் 2017
பாஸ்க்கா காலம் 2வது வாரம் வியாழக்கிழமை 27-04-2017
பாஸ்காகாலம் 2வது வாரம் செவ்வாய்க்கிழமை 25-04-2017
பாஸ்கா காலம் 2வது வாரம் திங்கட்கிழமை 24-04-2017
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனைப்பாடல்கள்00:00 - 01:00
விழிப்புணர்வு பாடல்கள்01:00 - 02:00
பொது பக்திப் பாடல்கள்02:00 - 03:00
ஆராதனை பாடல்கள் 03:00 - 04:00
மாதா பாடல்கள்04:00 - 05:00
அருங்கொடைப் பாடல்கள் 05:00 - 06:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 06:00 - 07:00
உலகச் செய்திகள் 07:00 - 07:10
திருச்சபை செய்திகள்07:10 - 07:20
அருள் அலைகள் 07:20 - 08:00
திருதந்தையின் குரல்08:00 - 09:00
இறையும் இயற்கையும்09:00 - 10:00
அறிவுப்பெட்டி 10:00 - 11:00
கதைகள் 11:00 - 12:00
உலகச் செய்திகள் 12:00 - 12:10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
அருள் அலைகள் 12:20 - 13:00
தினம் ஒரு திருப்பாடல் 13:00 - 14:00
ஆராதனை பாடல்கள் 14:00 - 15:00
இறை இரக்க ஜெபமாலை 15:00 - 16:00
சிறுவர்கள் பாடல்கள் 16:00 - 17:00
அறிவுப்பெட்டி17:00 - 18:00
இறையும் இயற்கையும்18:00 - 19:00
திருதந்தையின் குரல்19:00 - 20:00
உலகச் செய்திகள்20:00 - 20:10
திருச்சபை செய்திகள் 20:10 - 20:20
அருள் அலைகள் 20:20 - 21:00
கதைகள் 21:00 - 22:00
தினம் ஒரு திருப்பாடல் 22:00 - 23:00
விழிப்புணர்வு பாடல்கள்23:00 - 24:00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter