பாஸ்க்கா காலம் 2வது வாரம் வெள்ளிக்கிழமை 28-04-2017

ஏப்ரல் 27, 2017

பாஸ்க்கா காலம் 2வது வாரம் வெள்ளிக்கிழமை 28-04-2017

முதல் வாசகம்
இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால், மகிழ்ச்சியோடு வெளியே சென்றார்கள். 
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 34-42
அந்நாள்களில் கமாலியேல் என்னும் பெயருடைய பரிசேயர் ஒருவர் தலைமைச் சங்கத்தில் எழுந்து நின்றார். இவர் மக்கள் அனைவராலும் மதிக்கப்பட்ட திருச்சட்ட ஆசிரியர். திருத்தூதரைச் சிறிது நேரம் வெளியே போகும்படி ஆணையிட்டு, அவர் சங்கத்தாரை நோக்கிக் கூறியது: ``இஸ்ரயேல் மக்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்ய எண்ணியுள்ளதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். சிறிது காலத்திற்கு முன்பு தெயுதா என்பவன் தோன்றி, தான் பெரியவன் என்று கூறிக்கொண்டு, ஏறத்தாழ நானூறு பேரைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டான். ஆனால், அவன் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறிப் போகவே, அந்த இயக்கம் ஒன்றுமில்லாமல் போயிற்று. இவற்றுக்குப் பின்பு மக்கள் தொகை கணக்கிடப்பட்ட நாள்களில் கலிலேயனான யூதா என்பவன் தோன்றித் தன்னோடு சேர்ந்து கிளர்ச்சி செய்யும்படி மக்களைத் தூண்டினான். அவனும் அழிந்தான்; அவனைப் பின்பற்றிய மக்கள் அனைவரும் சிதறிப்போயினர். ஆகவே இப்போது நீங்கள் இம்மனிதர்களை விட்டுவிடுங்கள் என நான் உங்களுக்குக் கூறுகிறேன். இவர்கள் காரியத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது; நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்.'' அவர் கூறியதைச் சங்கத்தார் ஏற்றுக்கொண்டனர். பின்பு அவர்கள் திருத்தூதர்களை அழைத்து அவர்களை நையப் புடைத்து, இயேசுவைப் பற்றிப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு விடுதலை செய்தனர். இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள். அவர்கள் நாள்தோறும் கோவிலிலும் வீடுகளிலும் தொடர்ந்து கற்பித்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து வந்தார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்
ஆண்டவரின் இல்லத்தில் நான் குடியிருக்க வேண்டும். 
திருப்பாடல் 27: 1. 4. 13-14
1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி 

4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும்; ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். பல்லவி 

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் அல்லேலூயா 

நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-15
அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடலைக் கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, ``இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?'' என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். பிலிப்பு மறுமொழியாக, ``இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே'' என்றார். அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, ``இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?'' என்றார். இயேசு, ``மக்களை அமரச் செய்யுங்கள்'' என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக் குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், ``ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்'' என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், ``உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே'' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்'' (யோவான் 6:13)

அப்பம் பலுகிய நிகழ்ச்சிக்கும் நற்கருணையை இயேசு ஏற்படுத்தியதற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளதையும் யோவான் காட்டுகிறார். ''இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், 'ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்' என்று தம் சீடரிடம் கூறினார்'' (யோவா 6:11-12) என்று யோவான் குறிப்பிடுகிறார். இங்கே இயேசு அப்பத்தை ''எடுத்தார்'' எனவும், கடவுளுக்கு ''நன்றிசெலுத்தினார்'' எனவும், ''பகிர்ந்தளித்தார்'' எனவும், மக்களுக்கு ''வேண்டிய மட்டும் இருந்தது'' எனவும், ''எஞ்சிய துண்டுகள் சேர்த்துவைக்கப்பட்டன'' எனவும் வருகின்ற சொற்றொடர்களை நாம் கருதலாம். இச்சொற்றொடர்கள் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய பிற நற்செய்தி நூல்களில் இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்ச்சி தொடர்பாக வருகின்ற தகவல்களை உள்ளடக்கியவை என நாம் அறிகிறோம். 

உணவு உண்ணும்போது தட்டிலோ இலையிலோ மீதி வைக்கக் கூடாது எனவும் உணவை வீணடிக்கக் கூடாது எனவும் குழந்தைகளுக்குப் பெற்றோர் கற்றுக்கொடுப்பர். ஆனால் இன்றும் பல இடங்களில் பலர் உணவைத் தூர எறிந்து வீணடிப்பது வழக்கமாயுள்ளது. இயேசு ஐயாயிரத்திற்கு மேலான மக்களுக்கு அதிசயமான விதத்தில் உணவளித்தபின் ''பன்னிரு கூடை'' நிறைய அப்பம் எஞ்சியது. பன்னிரண்டு என்னும் எண் பன்னிரு குலங்களை உள்ளடக்கிய இஸ்ரயேல் மக்களைக் குறித்ததால் இங்கே எல்லா மக்களுக்கும் பயன்படும் வண்ணம் உணவு சேமிக்கப்படுவதை யோவான் குறிப்பிடுகிறார். எஞ்சியிருந்த அப்பம் ஏழைகளுக்கு உணவாக மாறும். நாம் உண்டோம், நிறைவடைந்தோம் என்றிராமல் பிறருடைய பசியை ஆற்றுவதற்கு நாம் அப்பத்தைச் சேர்க்க வேண்டும். கடவுள் தருகின்ற எந்தக் கொடையும் மக்களின் பயன்பாட்டுக்கு உரியதே ஒழிய வீணடிக்கப்படுவதற்கு அல்ல. இயேசு தம்மையே உணவாகத் தருகின்ற நற்கருணையும் இந்த உலகத்தின் பசியைப் போக்க நமக்குத் தூண்டுதலாக அமைய வேண்டும். 

மன்றாட்டு:
இறைவா, மக்களின் பசியை ஆற்றிட நீர் வழங்கும் கொடைகளை நாங்கள் வீணடிக்காமல் பயன்படுத்த அருள்தாரும்.

உயிர்ப்புக் காலம் மூன்றாம் ஞாயிறு 30 ஏப்ரல் 2017

ஏப்ரல் 27, 2017

உயிர்ப்புக் காலம் மூன்றாம் ஞாயிறு 30 ஏப்ரல் 2017

I. திப 2:14, 22-33     II. 1 பேதுரு 1:17-21    III. லூக் 24:13-35

என் வாழ்வின் எம்மாவு

'வாரத்தின் முதல் நாள் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அந்த ஊரின் பெயர் எம்மாவு' எனத் தொடங்குகிறது இன்றைய நற்செய்தி. இந்தச் சீடர்கள் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்கள் அல்லர். ஒருவேளை இயேசு தனக்கு முன் இருவர் இருவராய் அனுப்பிய 72 அல்லது 70 சீடர்களில் இருவராக இவர்கள் இருக்கலாம். அல்லது இயேசுவின் போதனைகளைக் கேட்டு அவரை மனதளவில் ஏற்றுக்கொண்ட நிக்கதேம், அரிமத்தியா நகர் யோசேப்பு போன்றவர்களாக இருக்கலாம். இந்த இருவரில் ஒருவர் பெயரை மட்டும் கிளயோப்பா என பதிவு செய்கிறார் லூக்கா. இருவர்தாம் சென்றார்களா அல்லது இருவர் சாட்சிக்குத் தேவை என்பதால் இருவரை லூக்கா தேர்ந்தெடுக்கிறாரா என்பது பற்றிய தெளிவு இல்லை.

ஆனால், ஒன்று மட்டும் தெளிவாக இருக்கின்றது. தங்கள் சொந்த ஊரான எருசலேமை விட்டு அகன்று 11 கிமீ தூரமுள்ள எம்மாவு நோக்கி வேகமாக செல்கின்றனர். வாரத்தின் முதல் நாள் காலையில் கல்லறைக்குச் சென்ற பெண்கள் திரும்பி வந்து கல்லறையில் இயேசு இல்லை என்ற செய்தியைச் சொல்கின்றனர். இந்த செய்தி படிப்படியாகப் பரவி இவர்கள் காதுக்கு வர எப்படியும் காலை 8 அல்லது 9 மணி ஆகியிருக்கும். அப்போது எருசலேமை விட்டு புறப்படுகிறார்கள். மாலை 6 மணிக்கு எம்மாவு வந்துவிடுகிறார்கள். 9 மணி நேரத்திற்குள் 11 கிமீ தூரத்தைக் கடக்கிறார்கள் என்றால் அவர்கள் வேகமாகவும், பதற்றமாகவும் நடந்திருப்பார்கள் என்பதை நாம் ஊகிக்க முடிகிறது. ஏன் இந்த வேகம்? ஏன் இந்த பதற்றம்? ஏன் இந்த கலக்கம்?

தங்கள் சொந்த ஊரை, எருசலேமை, இவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை? தங்கள் தலைவரை அது சிலுவையில் அறைந்து கொன்றதலா? அல்லது தங்களையும் தேடி அது வருவதாலா? அல்லது உயிர்ப்பு பற்றிய செய்தியை ஏற்றுக்கொள்வதில் தயக்கமா? 

இவை எல்லாம்கூட காரணமாக இருந்திருக்கலாம். 

நம் வாழ்விலும் சில நேரங்களில் நாம் நம் வாழ்வின் எருசலேமை நோக்கி தப்பி ஓடுகிறோம். எம்மாவு என்பது ஒரு தற்காலிக ஆறுதல். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்ற நேரத்தில் மொபைல், டிவி என எல்லாவற்றையும் அணைத்தவிட்டு தலையனையை நனைத்துக்கொண்டே அல்லது தலையணையை இறுக்கிப் பிடித்துக்கொண்டே தூங்கத் துணியும் தருணம்தான் எம்மாவு. 

வேகமாக நடந்து செல்லும் இந்த இரு இளவல்களும் தங்களுக்குள் ரொம்ப சீரியஸா ஏதோ பேசிக்கொண்டே செல்கிறார்கள். இவர்களின் பயணம் இலகுவாக அமைய ஒருவர் மற்றவரின் உடனிருப்பும் இவர்களுக்கு உதவியிருக்கும். வாழ்க்கை என்ற பயணத்திலும் ஒருவர் மற்றவரின் துணை அவசியம் என்பதற்காகத்தான் சபை உரையாளரும், 'ஒருவர் தனியாக இருப்பதைவிட இன்னொருவரோடு சேர்ந்திருப்பது நல்லது' என்று சொல்கிறார். இவர்கள் எந்த அளவிற்கு தங்கள் உரையாடலில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்றால், அருகில் ஒருவர் நடந்து வருவதைக்கூட அவர்கள் கவனிக்கவே இல்லை.

நம் வாழ்க்கையிலும் அப்படித்தான். அன்றாட கவலைகளில் மூழ்கியிருக்கும் நாம் அந்த நேரங்களில் கடவுள் நம்மோடு வருகிறார் என்பதைக்கூட பார்க்கத் தவறிவிடுகிறோம். 'வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?' எனக் கேட்கின்றார் இயேசு என்ற மூன்றாம் நபர். இயேசுவின் உரையாடல் ரொம்ப நேரிடையாக இருக்கிறது. 'நீங்க யாரு? என்ன? எங்க போறீங்க? எங்கிருந்த வர்றீங்க?' என்ற எந்த ஃபார்மாலிட்டியும் இல்லாம, 'நேரிடையாக' இருக்கிறது இயேசுவின் கேள்வி. 'நாங்க என்ன பேசினா உனக்க என்ன?' என்று சொல்லியிருக்கலாம் அவர்கள். ஆனால், தங்கள் துன்பத்தை யாரிடமாவது பகிர்ந்து கொண்டால் நலமாக இருக்கும் என எண்ணியதால் அவர்கள் இயேசுவிடம் மனம் திறந்து பேசுகின்றனர்.

சில நேரங்களில் சிலர் நம்மிடம் தங்கள் மனத்தைத் திறந்து பேசுவார்கள். ஆச்சர்யமாக இருக்கும். முன்பின் தெரியதா என்னிடம் அவர்கள் ஏன் இதைச் சொல்கிறார்கள்? என்று நினைப்போம். ஆனால், சில நேரங்களில் நாம் முன்பின் தெரியாத நபராவது நாம் சொல்வதைக் கேட்கமாட்டாரா என நினைத்து அவர்களிடம் மனம் திறக்கிறோம்.

அந்த இரு சீடர்களின் உள்ளுணர்வுகளை மூன்று வார்த்தைகளில் பதிவு செய்கின்றார் லூக்கா:

அ. முகவாட்டம்

ஆ. ஏமாற்றம்

இ. மலைப்பு அல்லது வியப்பு

அ. முகவாட்டம்

தன் சகோதரன் ஆபேலின் காணிக்கை ஏற்கப்பட்டு, தன் காணிக்கை நிராகரிக்கப்பட்டபோது முகவாட்டத்தோடு நிற்கிறார் காயின். மனதின் சோகத்தின் காணக்கூடிய வடிவம் முகவாட்டம். மனதின் கவலை, இயலாமை முகவாட்டமாக வெளிப்படுகிறது. முகவாட்டத்தின் எதிர்ப்பதம் முகமலர்ச்சி. நிறைவு இருக்கும் போது முகம் மலர்கிறது. குறை இருக்கும் போது முகம் வாடுகிறது. தாவரம் போலத்தான் மனமும். தண்ணீர் நிறைவாக இருந்தால் மலரும் செடி, தண்ணீர் குறையும் போது வாடுகிறது. எம்மாவு இளவல்களின் வாழ்வில் நம்பிக்கை தந்த இயேசு இன்று குறைந்துவிட்டதால் இவர்கள் முகம் வாடிவிடுகிறது.

ஆ. ஏமாற்றம்

'அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும், ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்து சிலுவையில் அறைந்தார்கள்.' அவர் அப்படி இருப்பார், இப்படி இருப்பார், அப்படி வருவார், இப்படி வருவார் என எதிர்பார்த்தோம். ஆனால் இப்படி ஒரு தோல்வியாக இறந்துவிட்டாரே என ஏமாந்துவிட்டனர் சீடர்கள். திருவிளையாடல் ஸ்டைலில், 'பிரிக்க முடியாதது எது?' என்று கேட்டால், 'எதிர்பார்ப்பு - ஏமாற்றம்' எனச் சொல்லிவிடலாம்.

இ. மலைப்பு

'ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர். அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள். அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை' என ஒரே மூச்சில் சொல்லி முடிக்கின்றார் கிளயோப்பா. செய்வதற்கு நம் முன் நிறைய வேலைகள் கிடந்தால், அல்லது நெடுந்தூர பயணத்திற்கு தயாரிக்க வேண்டியிருந்தால், அல்லது ஒரு வீட்டைக் காலி செய்து அடுத்து வீட்டிற்கு இடமாற்றம் செய்வதாக இருந்தால் நம்மில் எழும் உணர்வு மலைப்பு. இயேசு உயிர்த்துவிட்டதைக்கூட நம்பிவிடலாம். ஆனால், பெண்கள் சொல்லி நம்புவதா என்பதுதான் சீடர்களுக்கு மலைப்பாக இருக்கின்றது.

இந்த மூன்று உணர்வுகளையும் கொண்டிருந்த சீடர்கள் மேல் பரிதாபப்படாமல், 'அறிவிலிகளே' எனச் சாடுகின்றார் இயேசு. நம்ம வீட்டிற்கு வருகிற ஒருவர், நம் சோகக் கதைகளை எல்லாம் கேட்டுவிட்டு, 'நீ ஒரு முட்டாள்' என்று நம்மிடம் சொன்னால் நமக்கு எவ்வளவு கோபம் வரும்? இயேசு அவர்களின் அறியாமையை எடுத்துச் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், மறைநூல் (சட்டநூல்கள் மற்றும் இறைவாக்கு நூல்களின் துணைகொண்டு) மெசியா நிலை பற்றிய விளக்கமும் தருகிறார்.

இப்படி விளக்கிச் சொன்ன இயேசுவை இருவருக்கும் ரொம்ப பிடித்துவிடுகிறது: 'எங்களோடு தங்கும். ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று. பொழுதும் போயிற்று' என்று கூறி கட்டாயப்படுத்தி இணங்க வைக்கின்றனர்.

'எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்கு மட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!' என வியக்கின்ற சீடர்கள், 'எம்மாவிலும் எங்களோடு தங்கும்!' எனச் சொல்கின்றனர். அதாவது, எங்கள் துன்பத்தில் எங்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைத் தந்த நீர் இப்போது இந்த ஆறுதலான இடத்திலும் தங்கும் எனச் சொல்கின்றனர்.

இங்கே லூக்காவின் இலக்கியத்திறத்தைப் பாராட்ட வேண்டும். ஏன்?

இயேசு தன்னை அப்பம் பிட்குதலில் வெளிப்படுத்தியவுடன், இச்சீடர்கள் திரும்பவும் எருசலேம் நோக்கி புறப்படுகின்றனர். தன் சக வழிப்போக்கனிடம், 'ஐயோ, போகாதீங்க, இருட்டாயிடுச்சு, பொழுது சாஞ்சிடுச்சு' என்று தடுத்தவர்கள் தாங்களே இரவோடு இரவாக புறப்பட்டுச் செல்கின்றனர். இப்படியாக ஒரே நாளில் ஏறக்குறைய 20 மணி நேரங்கள் நடக்கின்றனர்.

இவர்களுக்கு இனி இரவு பற்றிய பயம் இல்லை.

மேலும், அவர்கள் எருசலேம் நோக்கி மீண்டும் செல்கின்றனர். அப்படி என்றால் எருசேலம் பற்றியும், எருசலேம் தரும் துன்பம் மற்றும் கொடுமை பற்றியும் இவர்களுக்குப் பயமில்லை.

இயேசுவை இவர்கள் எப்படி கண்டுகொள்கின்றனர்?

'அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்' - இந்த மூன்று வார்த்தைகளைக் கொண்டுதான் லூக்கா நற்செய்தியாளர் இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்வை வர்ணிக்கின்றார். இயேசு இறுதி இராவுணவில் - வியாழன் அன்று - நற்கருணையை ஏற்படுத்தியது எல்லா சீடர்கள் மத்தியிலும் வேகமாக பரவி இருக்கின்றது. ஆகையால்தான், 'அப்பம் எடுத்தல், கடவுளைப் போற்றுதல், அவர்களுக்குக் கொடுத்தல்' என்னும் செயல்களை இயேசுவோடு பொருத்திப்பார்க்கின்றனர். இச்சீடர்கள் அறிவிலிகள் அல்லர். மாறாக, இயேசு என்றால் யார்? அவர் என்ன செய்தார்? அவர் எப்படி நினைவுகூறப்படுகின்றார்? என எல்லாவற்றையும் அறிந்திருக்கின்றனர்.

அவர்களின் கண்கள் திறந்தவுடன் அவர் மறைந்துவிடுகின்றார். இதுதான் கடவுளின் திருவிளையாடல். அவர் இன்னும் கண்களுக்குப் புலப்பட்டுக்கொண்டிருந்தால் அவர் கடவுள் அல்லர். காண்பவை எல்லாம் மனிதநிலை சார்ந்தவை. காணாதவை அனைத்தும் இறையியல்பு சார்ந்தவை. ஆகையால்தான், காண்பவற்றைவிட காணாதவற்றை நம் மனதில் பதிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றார் தூய பவுல்.

இச்சீடர்கள் தாங்கள் சொந்த ஊர் திரும்பியது மட்டுமல்லாமல் தங்களுக்கு நிகழ்ந்ததை அடுத்தவர்முன் எடுத்துரைக்கிறார்கள். இயேசுவின் உயிர்ப்புக்கு சான்றும் பகர்கின்றனர்.

முகவாட்டம், ஏமாற்றம், மலைப்பு என இருந்தவர்கள் இப்போது சான்று பகரும் துணிச்சல் பெறுகின்றனர். 

இவர்கள் பெற்ற உயிர்ப்பு அனுபவமே இவர்களின் இந்த மாற்றத்திற்குக் காரணமாக இருக்கிறது. இப்படிப்பட்ட உயிர்ப்பு அனுபவம் பெற்ற பேதுரு எருசலேமில் துணிந்து நின்று, எருசலேம் மக்களை நோக்கிப் பேசுவதை இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 2:14, 22-33) வாசிக்கின்றோம்.

தாவீதின் கல்லறை மற்றும் இயேசுவின் கல்லறை ஆகியவற்றை ஒப்பீடு செய்து, தாவீதின் கல்லறை இன்றுவரை நம்மிடம் இருக்கிறது. அவருடைய உடல் பாதாளத்தின் அழிவைக் கண்டது. ஆனால், இயேசுவின் கல்லறை வெற்றுக் கல்லறையாக இருந்துது. அவருடைய உடல் பாதாளத்தின் அழிவைக் காணவில்லை. 

உயிர்ப்புக்கு பெரிய சான்று சீடர்களின் மாறிய வாழ்வு மட்டுமே.

ஆக, உயிர்ப்பை நாம் ஓர் அனுபவமாக மட்டுமே பார்க்க வேண்டும். உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்தவர்களும், உயிர்ப்பு அனுபவம் பெற்றவர்கள் முன்மாதிரியே இருக்க முடியாது. அவர்கள் மாறித்தான் ஆகவேண்டும். அப்படி மாறாமல் இருக்கிறவர்கள் உயிர்ப்பு அனுபவம் பெறவில்லை என்றே பொருள். ஆகையால்தான், தூய பவுலடியார், 'கிறிஸ்துவையும் அவரின் உயிர்ப்பின் ஆற்றலையும் நான் அறிய விரும்புகிறேன்' (பிலி 3:10) என்கிறார். 

இந்த அனுபவத்தையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 பேதுரு 1:17-21) பதிவு செய்யும் பேதுரு, 'இறந்த அவரை கடவுள் உயிர்த்தெழச் செய்து பெருமைப்படுத்தியுள்ளார். இதனால் நீங்கள் கடவுளிடம் நம்பிக்கை கொண்டு அவரை எதிர்நோக்கி இருக்கவே இவ்வாறு செய்தார்' என எழுதுகின்றார். ஆக, இயேசுவின் உயிர்ப்பு மற்றவர்களின் நம்பிக்கைக்கு விதையாகவும் அமைகின்றது.

மொத்தத்தில், உயிர்ப்பு என்பது ஒரு அனுபவம். அதை அனுபவிப்பவரின் வாழ்வில் அது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எருசலேமிலிருந்து தப்பித்து எம்மாவு சென்ற சீடர்கள் மீண்டும் எருசேலம் திரும்புகின்றனர். யூதர்களுக்கு அஞ்சி அறையில் ஒடுங்கிக் கிடந்த பேதுருவும் உடன் திருத்தூதர்களும் தெருக்களில் வந்து போதிக்கின்றனர். திருத்தூதர்கள் வழியாக இயேசுவைப் பற்றி அறிந்துகொண்டவர்கள் அவர்மேல் நம்பிக்கை கொண்டு கடவுளை நோக்கி திரும்பி வருகின்றனர். 

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால்கள் மூன்று:

1. வழியில் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?

லூக்கா நற்செய்தியாளரின் இயேசு 'வழியில்' நடக்கின்றார். லூக்கா நற்செய்தி எருசலேமில் தொடங்கி எருசலேமில் முடிகிறது. லூக்கா நற்செய்தியாளரில் வரும் அனைவருமே பயணம் செய்கின்றனர்: சக்கரியா, எலிசபெத்து, மரியா, இயேசு, நல்ல சமாரியன், ஊதாரி மகன். இன்று நாம் காணும் எம்மாவு சீடர்களும் வழியில் தான் இயேசுவைச் சந்திக்கின்றனர். வழி எதைக் குறிக்கிறது? வழி வாழ்க்கைக்கான ஒரு உருவகம். வாழ்வில் நாம் பயணியர்கள், வழிப்போக்கர்கள். எந்நேரமும் நாம் எதையாவது ஒன்றை நோக்கிச் சென்று கொண்டே இருக்கின்றோம். எருசலேமிலிருந்து எம்மாவு நோக்கிச் செல்கின்றனர் சீடர்கள். எருசலேம் துன்பத்தின் உருவகம். தன் தலைவர் அழிக்கப்பட்டுவிட்டார், தங்களையும் அழித்து விடுவார்கள் என்று பயந்து ஓடுகின்றனரா? அல்லது 'எல்லாம் முடிந்து விட்டது. இனி ஒன்றும் இல்லை' என விரக்தியில் நடக்கிறார்களா? விரக்தியில் நடக்கும் போது நம்மையறியாமலேயே நம் நடை சுருங்கி விடுகிறது. இந்தச் சீடர்களும் அப்படித்தான் சுருங்க நடந்திருக்க வேண்டும். விரக்தி, பயம், குழப்பம், கவலை. இனி என்ன நடக்கும்? இயேசு உயிர்த்துவிட்டாரா? பெண்கள் சொல்வதை நம்பலாமா? இப்படிக் கேள்விகளோடும், ஆச்சர்யங்களோடும் நடந்தவர்களைச் சந்திக்கின்றார் இயேசு ஒரு வழிப்போக்கன் போல. நம் வாழ்விலும் கேள்விகள், ஆச்சர்யங்கள் வரும்போது அங்கேயும் இயேசு ஒரு வழிப்போக்கனாக நடந்து வருகிறார். இயேசு சீடர்களைப் பார்த்துக் கேட்கும் கேள்வி: 'நீங்கள் ஒருவரோடு ஒருவர் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?' இதற்கு விடையாக சீடர்கள் எருசலேமில் நடந்தவற்றையெல்லாம் சொல்கின்றனர். இயேசுவும் அவர்களுக்கு இறைவாக்குகளை எடுத்துரைக்கின்றார். 

இந்தக் கேள்விக்கு மூன்று பரிமாணங்கள் உண்டு: (அ) நீங்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? (ஆ) அவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? (இ) அவர் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்?

நாம் வாழும் இந்தச் செல்லுலார் உலகத்தில் அன்றாடம் 'பேச்சு' வழியாக பல டேட்டாக்கள் பரிமாறப்படுகின்றன. இந்த நொடி எவ்வளவோ பேர் பேசிக்கொண்டிருப்பார்கள்: தொலைபேசிப் பேச்சு, நேருக்கு நேர் பேச்சு, நமக்குள் நாமே பேசும் மொளனப் பேச்சு, வலியின் முணகல், போரின் சத்தம், அலைகளின் சத்தம், மேடைப் பேச்சு, சினிமா, பாடல் என நம்மைச் சுற்றி பேச்சு இருந்து கொண்டே இருக்கின்றது. முதலில் நாம் கேட்க வேண்டியது: 'அவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள்?' அதாவது இன்று உலகம் என்ன பேசிக் கொண்டிருக்கிறது. பேஸ்புக், ஸ்கைப், டுவிட்டர், வாட்ஸ்ஆப் என எல்லாத் தளங்களிலும் மக்கள் இன்று பேசிக்கொள்கிறார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள்? நாம் டிவியை ஆன் செய்தால் யார் யாரோ வந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாம் பார்க்கும் விளம்பரங்கள், சினிமாக்கள், மெகாசீரியல்கள் என எல்லாவற்றிலும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இன்று அவர்கள் நமக்குச் சொல்வது என்ன? இன்றைய உலகம் கருத்தடை, கருக்கலைப்பு, பிளாஸ்டிக், புவிவெப்பமயம், நாகரீகம் பற்றிப் பேசுகின்றது. கடவுள் இல்லை எனவும் 'நம்மால் எல்லாம் முடியும்!' என்று சொல்கின்றது. இன்றைய உலகம் பேசும் பல நம் செவிகளுக்கு இனிமையாய் இருக்கின்றன. ஆனால் அவற்றால் காலப்போக்கில் நமக்குத் துன்பமும், விரக்தியுமே மிஞ்சுகின்றது. இரண்டாவதாக, சீடர்களாகிய நாம் இன்று எதைப் பேசிக் கொண்டிருக்கிறோம்? நம் பேச்சு உலகின் பேச்சு போலவே இருக்கின்றதா? நம் பேச்சு உலகின் பேச்சுக்கு நடுவில் மறைந்து போகின்றதா? இன்று நம் கண்முன் அநீதி, வன்முறை, ஏற்றத்தாழ்வு இருக்கும்போது அதை எதிர்த்து நம்மால் பேச முடிகிறதா? நாம் பேசுவதற்குத் தடையாக இருப்பது என்ன? நம் பயமா? நம் கவலையா? நம் விரக்தியா? நம் நடையும் சுருங்கிப் போய் இருக்கின்றதா? மூன்றாவதாக, அவர் இன்று என்ன பேசுகிறார்? இயேசு எதைப் பற்றி நம்மிடம் உரையாடுகின்றார்? இயேசுவின் உரையாடல் எப்போதும் நம்பிக்கை தருவதாகவே இருக்கின்றது. நம் அறியாமையைக் கண்டு சில நேரங்களில் 'மந்தப் புத்தி உள்ளவர்களே!' என்று இயேசு நம்மையும் சாடுகின்றார். துன்பங்கள் வழியே மீட்பு எனச் சொல்கின்றார் இயேசு. 'கண்களுக்குக்        களிப்பூட்டுவதாகவும், செவிகளுக்கு இனிமையாய் இருப்பவை எல்லாம் நல்லது என நினைத்து விடாதீர்கள்' என்கிறார்.

2. இல்லாமையே இறைமை

இயேசு இன்னும் நடப்பது போல காட்டிக் கொள்கின்றார். 'எங்களோடு தங்கும்!' என்கின்றனர் சீடர்கள். முன்பின் தெரியாத ஒருவரைத் தங்களோடு தங்கிக் கொள்! என்று சொல்லும் சீடர்கள் மிக எளிமையானவர்கள். தாராள உள்ளத்தினர். இந்தத் தாராள உள்ளம் நம்மிடம் இருக்கின்றதா? நாம் யாரையாவது சந்திக்கும்போது, 'இவன் எப்படா போவான்?' என நினைக்கிறோம். பிறரை நம் தனித்தன்மைக்கு எதிரானவர்களாகப் பார்க்கிறோம். கடவுளையும் சில நேரங்களில் எதிரியாகப் பார்க்கத் தொடங்கி விடுகிறோம். அப்பம் பிட்குதலில் இயேசுவைக் காண்கின்றனர் சீடர்கள். அவர் மறைந்தவுடன் தான் அவர் யார் எனத் தெரிகின்றது அவர்களுக்கு. கடவுளின் 'இல்லாமையே' அவரின் இருத்தலை நமக்குக் காட்டுகின்றது. இறைவார்த்தையிலும், இறைவுணவிலும் இன்றும் இயேசு நம்மோடு வருகின்றார். அவர் பேசுவதை நாம் கேட்போம். அவர் நம்மோடு தங்கட்டும். அவரைச் சந்தித்தபின் எந்த எருசலேமும் நமக்குத் துன்பமில்லை. எந்த நிலையிலும் நமக்கு இறப்பில்லை, விரக்தியில்லை, பயமில்லை, கவலையில்லை.

3. என் வாழ்வின் எம்மாவு எது?

என் வாழ்வில் இன்று நான் அனுபவிக்கும் எருசலேம் எது? என் வாழ்வில் முகவாட்டம், ஏமாற்றம், மலைப்பு தருவது எது? எம்மாவு சீடர்களின் வாழ்வு நமக்கு ஒரு அழகிய இறைத்தேடலை முன்வைக்கின்றது. எந்த அளவிற்கு இயேசுவை இவர்களுக்குப் பிடித்திருந்தால் அவர்கள் இவ்வளவு சோகமாக மாறியிருப்பார்கள்? 'என் இறைவன் என்னோடு இல்லை' என்ற உணர்வு அவர்களை இந்த நிலைக்குத் தள்ளிவிடுகிறது. இறைவன் என்னோடு இல்லாத நேரத்தை நான் எப்படி உணர்கிறேன்? இறைவனை நான் வேண்டுமென்றே என் வாழ்வை விட்டு வெளியேற்றிவிடுகிறேனா?

இறுதியாக, என் வாழ்வின் எருசலேம் எது? நான் எதிலிருந்து தப்பி ஓட நினைக்கிறேன்.

தற்காலிகமான ஆறுதல் எம்மாவு கூட இயேசுவின் பிரசன்னத்தால் நிரந்த ஆறுதலாகிறது. ஏனெனில் அவர் நிரந்தரமானவர். 

நம்மோடு வழிநடக்கும் இறைவனைக் கண்டுகொள்தலே ஆறுதல் - அதுவே என் வாழ்வின் எம்மாவு!

- Yesu Karunanidhi

பாஸ்க்கா காலம் 2வது வாரம் வியாழக்கிழமை 27-04-2017

ஏப்ரல் 26, 2017

பாஸ்க்கா காலம் 2வது வாரம் வியாழக்கிழமை 27-04-2017

முதல் வாசகம்
நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். 
திருத்தூதர்பணி நூலிலிருந்து வாசகம் 5:27-33
27 அழைத்து வந்தவர்களை அவர்கள் யூதத் தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். தலைமைக் குரு அவர்களை நோக்கி, 28 "நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக் கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப் பார்க்கிறீர்களே!" என்றார். 29 அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, "மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? 30 நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். 31 இஸ்ரயேல் மக்களுக்கு மனம் மாற்றத்தையும் பாவமன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். 32 இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்" என்றனர். 33 இவற்றைக் கேட்ட தலைமைச் சங்கத்தார் கொதித்தெழுந்து, திருத்தூதர்களைக் கொல்லத் திட்டமிட்டனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்
இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார் 
திருப்பாடல்கள் 34:2,9:17-20
2 நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். 9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது. 

17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். 18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். 19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். 20 அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தை மகன் மேல் அன்பு கூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். அல்லேலூயா 

நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3:31-36
31 மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர். மண்ணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர். மண்ணுலகு சார்ந்தவை பற்றியே அவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து வருபவர், அனைவருக்கும் மேலானவர். 32 தாம் கண்டதையும் கேட்டதையும்பற்றியே அவர் சான்று பகர்கிறார். எனினும் அவர் தரும் சான்றை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. 33 அவர் தரும் சான்றை ஏற்றுக் கொள்பவர் கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார். 34 கடவுளால் அனுப்பப் பெற்றவர் கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார். கடவுள் அவருக்குத் தம் ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிக் கொடுக்கிறார். 35 தந்தை மகன் மேல் அன்பு கூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். 36 மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
"நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர்"

ஐயோ பாவம்; கை இல்லையே என்று கவலைப்படுவோர் தங்களிடம் 'நம்பிக்கை' இ;ல்லை என்று அல்லவா கவலைப்பட வேண்டும். நம்பிக்கை, கையைவிட மிகவும் அவசியமானது. அதிலும் ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டோருக்கு எந்த குறையுமிருக்காது. தன்மீது நம்பிக்கைக் கொண்டோரை அவர் கைவிடுவதில்லை. 

கூரையைப் பிறித்து இறக்கிய முடக்குவாதமுற்ற மனிதனைக் குணப்படுத்தியது அவர்களின் நம்பிக்கை. பார்வையற்ற இருவரும் மீண்டும் பார்வை பெற்றது அவர்களது நம்பிக்கையாலே.(மத் 9:28) " நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்" (மாற்9:23) நம்பிக்கையின் வலிமைக்கு இயேசு தரும் சாட்சியம். நம் இறைவன் இயேசுவை நம்புகிறவர்களுக்கு எந்த நன்மைகளுக்கும் குறையிருக்காது. நிலையான வாழ்வைப் பெறுவார்கள். எல்லா நலன்களும் அவர்களுக்குக் கிடைக்கும். செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்கள். 

கடவுள் மீது நம்பிக்கை இழந்தோர் வாழ்வை இழப்பது உறுதி. வாழ்கைச் சிக்கலில் இறைவன் இயேசுவின் மீது நம்பிக்கை இழந்த காரணத்தால் தன்னம்பிக்கையை இழக்கின்றனர். தொடர்ந்து பொன் பொருளை இழக்கின்றனர். பணம் கரைந்ததும் நட்பும் உறவும் ஓடிவிடும். எல்லாம் இழந்த நிலையில் தன் உயிரையும் இழப்பதற்கு தயாராகிறான். ஆனால் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்வோம் இச்சூழலிலும் வானிலிருந்து உதவியைப் பெறுவர். அவர்கள் வாழ்வு பெறுவர்.

மன்றாட்டு:
இறைவா, உம் திருமகனை நம்பிக்கையோடு ஏற்றிட எங்களுக்கு அருள்தாரும்.

பாஸ்காகாலம் 2வது வாரம் செவ்வாய்க்கிழமை 25-04-2017

ஏப்ரல் 24, 2017

பாஸ்காகாலம் 2வது வாரம் செவ்வாய்க்கிழமை 25-04-2017

புனித மாற்கு - நற்செய்தியாளர் விழா

முதல் வாசகம்
என் மகன் மாற்குவும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றார். 
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5b-14
அன்பிற்குரியவர்களே, ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில், ``செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்.'' ஆகையால், கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார். உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள்மேல் கவலை கொண்டுள்ளார். அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம் போலத் தேடித் திரிகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா? எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப் பின் அவர் உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார். அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. ஆமென். நம்பிக்கைக்குரிய சகோதரன் என நான் கருதும் சில்வான் வழியாகச் சுருக்கமாக உங்களுக்கு எழுதியுள்ளேன். உங்களை ஊக்குவிக்கவும் கடவுளுடைய மெய்யான அருளைப் பற்றிச் சான்று பகரவுமே எழுதினேன். இந்த அருளில் நிலைத்திருங்கள். உங்களைப் போலவே தேர்ந்துகொள்ளப்பட்ட பாபிலோன் சபையாரும், என் மகன் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். அன்பு முத்தம் கொடுத்து நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழும் உங்கள் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி


பதிலுரைப் பாடல்
ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன். 
திருப்பாடல்89: 1-2. 5-6. 15-16
1 ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். 2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. பல்லவி 

5 ஆண்டவரே, வானங்கள் உம் வியத்தகு செயல்களைப் புகழ்கின்றன; தூயவர் குழுவினில் உமது உண்மை விளங்கும். 6 வான்வெளியில் ஆண்டவருக்கு நிகரானவர் யார்? தெய்வ மைந்தர் குழுவில் ஆண்டவருக்கு இணையானவர் யார்? பல்லவி 

15 விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள். 16 அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். பல்லவி 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம். அவர் கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார் அல்லேலூயா 

நற்செய்தி வாசகம்
+மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-20
அக்காலத்தில் இயேசு பதினொருவருக்கும் தோன்றி, ``உலகெங்கும் சென்று படைப்பிற் கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்'' என்று கூறினார். இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''இயேசு சீடர்களை நோக்கி, 'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்' என்றார் (மாற்கு 16:15)

இயேசு கொணர்ந்த நற்செய்தி என்ன? கடவுள் நம்மை அன்புசெய்கிறார்; நாம் கடவுளின் பிள்ளைகளாக இருப்பதால் கடவுள் காட்டும் வழியில் நடந்து சென்று அவரிடத்தில் நிலையான அமைதியையும் மகிழ்ச்சியையும் கண்டுகொள்ள வேண்டும்; கடவுள் உலகின்மீது கொண்ட எல்லையற்ற அன்பினால் தன் ஒரே மகனை (இயேசுவை) நமக்கு மீட்பராக அளித்தார்; அவரிடத்தில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். - இதுவே இயேசு கொணர்ந்த நற்செய்தியின் சுருக்கம். இச்செய்தியை இயேசு ஒருசில மனிதர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்படவேண்டிய இரகசியமாகக் கருதவில்லை. மாறாக, உலகில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் இந்நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பதே இயேசுவின் பார்வை. ஆகவே, அவர் தம் சீடர்களுக்கு ஒரு முக்கிய கட்டளை தருகிறார்: ''உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்'' என்பதே இக்கட்டளை. இதை மத்தேயு இன்னும் விரிவாகத் தருகிறார் (காண்க: மத் 28:16-20). இயேசுவின் சீடர்கள் ஆற்ற வேண்டிய முக்கிய பணி ''நற்செய்தி அறிவித்தல்'' ஆகும். இது வெறும் வார்த்தைகளால் நடைபெறுகின்ற நிகழ்வு அல்ல. மாறாக, நற்செய்தி என்பது ஒரு வாழ்க்கை முறை. இயேசுவின் போதனையை உள்ளத்தில் ஏற்று, அதை வாழ்வில் கடைப்பிடிப்பதே நற்செய்தி அறிவிப்பின் முக்கிய அம்சம். இதையே நாம் ''சான்று பகர்தல்'' என்கிறோம். 

இவ்வாறு நாம் நற்செய்திக்கு நம் வாழ்வின் வழியாகச் சான்று பகர்ந்தால் உலக மக்கள் நற்செய்தியை அன்னியமாகப் பார்க்கமாட்டார்கள். மேலும், இயேசுவின் போதனை மனிதரை ஓர் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் வழியாக உள்ளது. இவ்வுலகத்தோடு எல்லாமே முடிந்துபோகும் என்றில்லாமல், கடவுளின் ஆட்சி நிறைவுறும் காலம் இவ்வுலகைக் கடந்தது என கிறிஸ்தவ நம்பிக்கை நமக்கு அறிவுறுத்துகிறது. அதே நேரத்தில் இவ்வுலகை அன்பு நிலவும் ஓர் இடமாக, நீதி தவழ்கின்ற தளமாக மாற்றியமைத்திட நாம் உழைக்க வேண்டும் என்பதும் நற்செய்தி அறிவிப்பின் முக்கிய அம்சம் ஆகும். இவ்வாறு, இயேசுவைப் பின்செல்வோர் அவருடைய ஆவியால் உந்தப்பட்டு நற்செய்தியின் தூதுவர்களாக மாறினால் இவ்வுலகில் கடவுளின் ஆட்சி இன்னும் தெளிவாகத் துலங்கும். நற்செய்தியை அறிவிப்போர் கிறிஸ்துவையே உலகுக்குக் கொண்டுசெல்கின்ற கருவிகளாகச் செயல்படுவர். நற்செய்தியின் ஆற்றல் இவ்வுலகை உருமாற்றும் திறன் கொண்டது என நாம் உணர்ந்தால் நம் வாழ்வு அனைத்துமே நற்செய்தியில் தோய்ந்ததாக மாறும்.

மன்றாட்டு:
இறைவா, உம் மகன் வெளிப்படுத்திய நற்செய்தியால் நாங்கள் உருமாற்றம் அடைய அருள்தாரும்.

பாஸ்கா காலம் 2வது வாரம் திங்கட்கிழமை 24-04-2017

ஏப்ரல் 23, 2017

பாஸ்கா  காலம் 2வது வாரம் திங்கட்கிழமை 24-04-2017

முதல் வாசகம்
அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய்க் கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர். 
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 23-31
அந்நாள்களில் விடுதலை பெற்ற சீடர்கள், தங்களைச் சேர்ந்தவர்களிடம் வந்து, தலைமைக் குருக்களும் மூப்பர்களும் தங்களுக்குக் கூறிய யாவற்றையும் அறிவித்தார்கள். இவற்றைக் கேட்ட யாவரும் ஒரே மனத்துடன் தங்கள் குரலைக் கடவுள்பால் எழுப்பி, பின்வருமாறு மன்றாடினர்: ``ஆண்டவரே, `விண்ணுலகையும் மண்ணுலகையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்தவர் நீரே'. எங்கள் தந்தையும் உம் ஊழியருமாகிய தாவீது வாயிலாகத் தூய ஆவி மூலம் `வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்? பூவுலகின் அரசர்களும் தலைவர்களும் ஆண்டவருக்கும் அவர்தம் மெசியாவுக்கும் எதிராக அணிவகுத்து நின்றனர்' என்று உரைத்தீர். அதன்படியே இந்நகரில் உம்மால் அருள்பொழிவு பெற்ற உம் தூய ஊழியராகிய இயேசுவுக்கு எதிராக ஏரோதும் பொந்தியு பிலாத்தும் பிற இனத்தவரோடும் இஸ்ரயேல் மக்களோடும் ஒன்றுதிரண்டனர். உமது கைவன்மையும் உமது திட்டமும் முன்குறித்த அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தனர். இப்போது கூட ஆண்டவரே, அவர்கள் அச்சுறுத்துவதைப் பாரும். உம் அடியார் முழுத் துணிவுடன் உமது வார்த்தைகளை எடுத்துக் கூற அருள் தாரும். உமது தூய ஊழியர் இயேசுவின் பெயரால் உமது கையை நீட்டி நோயுற்றோருக்கு நலமளியும்; அடையாளங்களும் அருஞ்செயல்களும் நடைபெறச் செய்யும். '' இவ்வாறு மன்றாடியவுடன் அவர்கள் கூடியிருந்த இடம் அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய்க் கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி


பதிலுரைப் பாடல்
ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் பேறுபெற்றோர். 
திருப்பாடல் 2: 1-3. 4-6. 7-9
1 வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்? 2 ஆண்டவர்க்கும் அவர்தம் அருள்பொழிவு பெற்றவர்க்கும் எதிராகப் பூவுலகின் அரசர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள்; ஆள்வோர் ஒன்றுகூடிச் சதிசெய்கின்றார்கள்; 3 `அவர்கள் பூட்டிய தளைகளைத் தகர்ப்போம்; அவர்கள் வைத்த கண்ணிகளை நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்' என்கின்றார்கள். பல்லவி 

4 விண்ணுலகில் வீற்றிருப்பவர் எள்ளி நகைக்கின்றார்; என் தலைவர் அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கின்றார். 5 அவர் சினமுற்று அவர்களை மிரட்டுகின்றார்; கடுஞ்சினத்தால் அவர்களைக் கலங்கடிக்கின்றார்; 6 `என் திருமலையாகிய சீயோனில் நானே என் அரசரைத் திருநிலைப்படுத்தினேன். பல்லவி 

7 ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை நான் அறிவிக்கின்றேன்: `நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன். 8 நீர் விரும்புவதை என்னிடம் கேளும்; பிற நாடுகளை உமக்கு உரிமைச் சொத்தாக்குவேன்; பூவுலகை அதன் கடையெல்லைவரை உமக்கு உடைமையாக்குவேன். 9 இருப்புக் கோலால் நீர் அவர்களைத் தாக்குவீர்; குயவன் கலத்தைப்போல அவர்களை நொறுக்குவீர்'. பல்லவி 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார் அல்லேலூயா 

நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-8
அக்காலத்தில் பரிசேயர் ஒருவர் இருந்தார்; அவர் பெயர் நிக்கதேம். அவர் யூதத் தலைவர்களுள் ஒருவர். அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, ``ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது'' என்றார். இயேசு அவரைப் பார்த்து, ``மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதி யாக உமக்குச் சொல்கிறேன்'' என்றார். நிக்கதேம் அவரை நோக்கி, ``வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா?'' என்று கேட்டார். இயேசு அவரைப் பார்த்து, ``ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன். மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர். நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம். காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

இன்றைய சிந்தனை
''இயேசு நிக்கதேமைப் பார்த்து, 'காற்று எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்' என்றார்'' (யோவான் 3:8)

இரவு நேரத்தில் இயேசுவைத் தேடிவந்த மனிதர் நிக்கதேம். அவர் யூதத் தலைவர்களுள் ஒருவர்; பரிசேயர். இயேசுவைப் பற்றியும் அவர் புரிந்த அருஞ்செயல்கள் பற்றியும் கேள்விப்பட்ட நிக்கதேம் ''இரவில்'' வந்தார் என யோவான் குறிப்பிடுவது கவனிக்கத் தக்கது (யோவா 3:2). ''இரவு'' என்பது யோவான் நற்செய்தியில் ''நம்பிக்கையின்மை''யைக் குறிப்பதுண்டு; கடவுளிடமிருந்து அகன்றிருக்கின்ற நிலையையும் சுட்டுவதுண்டு. நிக்கதேம் இயேசுவின் போதனையாலும் சாதனையாலும் கவரப்பட்டார். அவருடைய உள்ளத்தில் நம்பிக்கை தளிர்விடத் தொடங்கியிருந்தது என்றாலும் அது நிறைவான நம்பிக்கையாக இன்னும் தழைக்காமலே இருந்தது. அந்நிலையில் நிக்கதேம் இயேசுவிடம் சில கேள்விகள் கேட்டு அதற்கான பதிலைத் தெரிந்துகொள்கிறார். ''மறுபடியும் பிறந்தாலன்றி இறையாட்சியைக் காண இயலாது'' (யோவா 3:3) என இயேசு கூறிதை நிக்கதேம் புரிந்துகொள்ளத் திணறினார். அப்போது இயேசு கடவுளின் செயலை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது என நிக்கதேமுக்குக் கற்பிக்கிறார். நம்மைச் சூழ்ந்திருக்கின்ற காற்று மண்டலத்தில் வீசுகின்ற காற்றை நாம் கண்களால் காணாவிட்டாலும் அது நம் உடலைத் தழுவும்போது நன்றாகவே உணர்கிறோம். காற்றைச் சுவாசிப்பதை நிறுத்திவிட்டால் நம் உயிரே நம்மை விட்டுப் பிரிந்துபோகும். எனவேதான் இறத்தலை ''இறுதிமூச்சு விடுதல்'' என்கிறோம். 

இயேசு காற்று பற்றியும் தூய ஆவி பற்றியும் ஒரே ''மூச்சில்'' ஏன் பேசுகிறார் என நமக்கு வியப்பாக இருக்கலாம். எபிரேயத்திலும் கிரேக்கத்திலும் ''காற்று'' என்பதும் ''ஆவி'' என்பதும் ஒரே சொல்லால் குறிக்கப்படுகின்றன (எபிரேயம்: சரயர் கிரேக்கம்: pநெரஅய). ''உயிர் மூச்சு'' என்னும் பொருளும் அதில் அடங்கும். தமிழிலும் இத்தொடர்பு உள்ளதை நாம் காணலாம். எனவே, ''காற்று எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது'' என்பது நமக்குப் புரியாத புதிராக உள்ளதுபோல, தூய ஆவி நமக்குப் ''புதுப்பிறப்பு'' அளிக்கிறார் என்பதும் நம் குறுகிய அறிவுக்கு அப்பாற்பட்டது என இயேசு சிலேடையாகக் கூறுவதை இவண் நாம் படித்து மகிழலாம். ஆவியே நம் ''உயிராக'' உள்ளார்; நம் சுவாசமாகவும் நம்மை உயிர்ப்பிக்கின்ற காற்றாகவும் செயல்படுகிறார்.

மன்றாட்டு:
இறைவா, உம்மால் உயிர்பெறும் நாங்கள் உமக்காகவே உயிர் வாழ்ந்திட எங்களுக்கு ஆவியின் ஆற்றலைத் தந்தருளும்.

சமீபத்திய கட்டுரை
பாஸ்க்கா காலம் 2வது வாரம் வெள்ளிக்கிழமை 28-04-2017
உயிர்ப்புக் காலம் மூன்றாம் ஞாயிறு 30 ஏப்ரல் 2017
பாஸ்க்கா காலம் 2வது வாரம் வியாழக்கிழமை 27-04-2017
பாஸ்காகாலம் 2வது வாரம் செவ்வாய்க்கிழமை 25-04-2017
பாஸ்கா காலம் 2வது வாரம் திங்கட்கிழமை 24-04-2017
சமீபத்திய கருத்துக்கள்
மின்னஞ்சல் பதிவு
பின்தொடரவும்:
பஜனைப்பாடல்கள்00:00 - 01:00
விழிப்புணர்வு பாடல்கள்01:00 - 02:00
பொது பக்திப் பாடல்கள்02:00 - 03:00
ஆராதனை பாடல்கள் 03:00 - 04:00
மாதா பாடல்கள்04:00 - 05:00
அருங்கொடைப் பாடல்கள் 05:00 - 06:00
வேளாங்கண்ணி மாதா மன்றாட்டு மாலை 06:00 - 07:00
உலகச் செய்திகள் 07:00 - 07:10
திருச்சபை செய்திகள்07:10 - 07:20
அருள் அலைகள் 07:20 - 08:00
திருதந்தையின் குரல்08:00 - 09:00
இறையும் இயற்கையும்09:00 - 10:00
அறிவுப்பெட்டி 10:00 - 11:00
கதைகள் 11:00 - 12:00
உலகச் செய்திகள் 12:00 - 12:10
திருச்சபை செய்திகள் 12:10 - 12:20
அருள் அலைகள் 12:20 - 13:00
தினம் ஒரு திருப்பாடல் 13:00 - 14:00
ஆராதனை பாடல்கள் 14:00 - 15:00
இறை இரக்க ஜெபமாலை 15:00 - 16:00
சிறுவர்கள் பாடல்கள் 16:00 - 17:00
அறிவுப்பெட்டி17:00 - 18:00
இறையும் இயற்கையும்18:00 - 19:00
திருதந்தையின் குரல்19:00 - 20:00
உலகச் செய்திகள்20:00 - 20:10
திருச்சபை செய்திகள் 20:10 - 20:20
அருள் அலைகள் 20:20 - 21:00
கதைகள் 21:00 - 22:00
தினம் ஒரு திருப்பாடல் 22:00 - 23:00
விழிப்புணர்வு பாடல்கள்23:00 - 24:00

பங்கிடு

Facebook Google+ Linkedin Twitter